Published:Updated:

`2,245 சடலங்களை எரியூட்டியுள்ளேன்; பெண்ணாக இப்பணி எனக்குப் பெருமை!'- ‘ஒளவையார் விருது’ பெற்ற கண்ணகி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
முதல்வரிடம் விருது பெற்ற கண்ணகி
முதல்வரிடம் விருது பெற்ற கண்ணகி

'2013-ம் ஆண்டு முதல் இதுவரை 2,245 சடலங்களை எரியூட்டியுள்ளேன். ஒரு பெண்ணாக இருந்து இந்தப் பணியைச் செய்வது எனக்குப் பெருமையாக உள்ளது' என்று கூறுகிறார் ‘ஒளவையார் விருது’ பெற்ற கண்ணகி.

சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாசாரம், பத்திரிகை போன்ற துறைகளில் தொண்டாற்றும் பெண்களை கௌரவப்படுத்தும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் இந்தத் துறையில் சிறப்பாகப் பணியாற்றும் பெண்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவருக்கு மகளிர் தினத்தின்போது ‘ஒளவையார் விருது’ என்னும் உயரிய விருது வழங்கப்படும். அதோடு, இந்த விருதைப் பெறுவோருக்கு 1 லட்சம் ரூபாயும், 8 கிராம் தங்கப்பதக்கமும் வழங்கி கௌரவிக்கப்படும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி, 2012-ம் ஆண்டு முதல் சர்வதேச மகளிர் தினத்தில் ‘ஒளவையார் விருது’ வழங்கப்பட்டுவருகிறது. இந்த ஆண்டுக்கான விருதை, திருவண்ணாமலையைச் சேர்ந்த ‘கண்ணகி’க்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார்.

`2,245 சடலங்களை எரியூட்டியுள்ளேன்; பெண்ணாக இப்பணி எனக்குப் பெருமை!'-  ‘ஒளவையார் விருது’ பெற்ற கண்ணகி

திருவண்ணாமலையைச் சேர்ந்த கண்ணகி, 1992-ம் ஆண்டுமுதல், சமூகப் பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு தொண்டாற்றிவருகிறார். 350-க்கும் மேற்பட்ட குடிசைகளை ஓட்டுவீடாக மாற்றியுள்ளார். 12 ஆண்டுகளாக திருவண்ணாமலை நகராட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கி, தற்போது 528 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஒருங்கிணைப்பாளராக இருந்துவருகிறார்.

மாவட்ட அளவில், 2016-ம் ஆண்டின் மகளிர் தின விருது, 2018-ம் ஆண்டு குடியரசு தின விருது, அதே 2018-ம் ஆண்டில், சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார். ஆண்களால் மட்டுமே தகன மேடைகளில் சடலங்களை எரியூட்ட முடியும் என்ற நிலையைத் தகர்த்தெறிந்து, பெண்களாலும் அந்தப் பணியைச் செய்ய முடியும் என்று நிரூபித்துக் காட்டியுள்ளார் கண்ணகி.

‘ஒளவையார்’ விருது வாங்கியது எனக்கு முகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த விருது, என்னுடைய பணிக்கு ஊக்குவிப்பாக உள்ளது.
கண்ணகி

இதுகுறித்து கண்ணகி கூறுகையில், “ 2013-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி முதல் திருவண்ணாமலை நகராட்சி சார்பில், தகன மேடையில் எரியூட்டும் பணி மற்றும் பராமரிப்புப் பணிகளைத் தீபம் அறக்கட்டளையிடம் நகராட்சி ஒப்படைத்தது. அந்த அறக்கட்டளை சார்பில், தகன மேடையின் பொறுப்பாளராக நான் பொறுப்பேற்றுக்கொண்டேன். எனக்குக் கீழ் இரண்டு பெண் உதவியாளர்கள் இருக்கிறார்கள். இதுவரை 2,245 சடலங்களை எரியூட்டியுள்ளேன். ஒரு பெண்ணாக இருந்து இந்தப் பணியைச் செய்வது எனக்குப் பெருமையாக உள்ளது. முதல்வர் கையால் ‘ஒளவையார்’ விருது வாங்கியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த விருது, என்னுடைய பணிக்கு ஊக்குவிப்பாக உள்ளது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு