Published:Updated:

''விகடனை ஆயுசுக்கும் மறக்கமாட்டேன்!" - விகடன் செய்தி பெற்றுத் தந்த உதவிகளால் நெகிழ்ந்த பொன்மணி #FollowUp

துரை.வேம்பையன்
நா.ராஜமுருகன்

''இதெல்லாம் கனவா நனவானு தெரியல. விகடனுக்கு எப்படி நன்றி சொல்றதுனு தெரியல'' - நெகிழ்ச்சி ததும்பப் பேசுகிறார், பொன்மணி.

குழந்தைகளோடு பொன்மணி
குழந்தைகளோடு பொன்மணி ( நா.ராஜமுருகன் )

பொன்மணியின் கணவர், சிறு குடும்பப் பிரச்னை காரணமாக ஒரு வருடத்துக்கு முன்பு தற்கொலைசெய்துகொள்ள, 25 வயதில் மூன்று குழந்தைகளுடன் எதிர்காலத்தை நினைத்து விம்மிக்கொண்டிருந்த பொன்மணி பற்றி விகடன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். நம் செய்தி பலரையும் சென்றுசேர, அரசு மற்றும் தனியார் அமைப்புகளிடம் இருந்து எண்ணற்ற உதவிகள் கிடைக்கத் தொடங்கியுள்ளன அவருக்கு. இருட்டில் தத்தளித்த தனது வாழ்க்கையில் வெளிச்சம் பிறந்துள்ளதாக மகிழ்ந்துபோயிருக்கிறார், பொன்மணி.

குழந்தைகளோடு பொன்மணி
குழந்தைகளோடு பொன்மணி
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியத்தில் இருக்கும் பொய்யாமணி கிராமத்தைச் சேர்ந்தவர். இவரின் கணவர் விஜயகுமார், சிறு குடும்பச் சண்டையில் மனமுடைந்து, கடந்த வருடம் தற்கொலை செய்துகொண்டார். 25 வயதே நிரம்பிய பொன்மணி, இரண்டாம் வகுப்பு படித்த மகள் தனுஸ்ரீ, ஒன்றாம் வகுப்பு படித்த மகள் தாரணி மற்றும் ஒன்றரை வருட ஆண்குழந்தை பெரியசாமி என மூன்று பிள்ளைகளை எப்படிக் கரைசேர்ப்பது என்று விக்கித்து நின்றார். வருமானத்துக்கு வழியில்லாமல் போக, ரேஷன் அரிசியையும் தன் தாய் அவ்வப்போது தரும் கொஞ்சம் பணத்தையும் கொண்டும் காலம் கடத்திவந்தார்.

விஜயகுமார் (பொன்மணி கணவர்)
விஜயகுமார் (பொன்மணி கணவர்)
நா.ராஜமுருகன்
'இனி எப்படியும் இந்தப் பயங்காட்டும் வாழ்க்கையை வாழ்ந்துடலாம்; பிள்ளைகளைக்த கரைசேர்த்திடலாம்'ங்கிற புது நம்பிக்கை பிறந்திருக்கு.
பொன்மணி வீட்டில் வருவாய்த்துறை அதிகாரிகள்
பொன்மணி வீட்டில் வருவாய்த்துறை அதிகாரிகள்
நா.ராஜமுருகன்

பொன்மணியின் பரிதாப நிலையைக் கேள்விப்பட்ட நாம், அவரின் வலி நிறைந்த வாழ்வை விகடன் இணையளத்தில் கட்டுரையாகப் பதிவுசெய்தோம். இந்த ஜுலை 11-ம் தேதி வெளியான அந்தக் கட்டுரை, ' "பிரச்னைனா பேசி சரி பண்ணுங்க... தற்கொலை வேண்டாம்!" - நிர்க்கதியான ஒரு இளம்பெண்ணின் சோகம்' என்ற தலைப்பில் வெளியாகியிருந்தது. இந்தக் கட்டுரை பலரையும் மனம் கனக்கச் செய்ய, பொன்மணிக்கு பலரும் உதவ முன்வந்தனர். நமது செய்தியைப் படித்த கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ், பொன்மணிக்கு அரசுரீதியான உதவிகளைச் செய்தார். தன் கணவர் இறந்த நாள் முதல் விதவைச் சான்று கேட்டும் விதவை உதவித்தொகை கேட்டும் விஏஓ, தாசில்தார் என நடையாய் நடந்திருக்கிறார். ஆனால், அரசு இயந்திரம் இவரை அலையவைத்ததே தவிர, தேவையான உதவிகளைச் செய்து தரவில்லை. இதனையறிந்த சூர்யபிரகாஷ், குளித்தலை ஆர்டிஒ லியாக்கத் அலியிடம், "பொன்மணிக்கு உடனே விதவைச் சான்றிதழ், விதவை உதவித்தொகை கிடைக்க வழிவகை பண்ணணும், இன்னைக்கே கிடைக்கணும். நான் வந்து வழங்குவேன்' என்று சொல்லி வேலையைத் துரிதப்படுத்தினார்.

``பிரச்னைனா பேசி சரி பண்ணுங்க... தற்கொலை வேண்டாம்!'' - நிர்க்கதியான ஒரு இளம்பெண்ணின் சோகம்

லியாக்கத் அலி, சமூக நலத்துறை தாசில்தார் புகழேந்தியை அனுப்ப, உள்ளூர் ஆர்ஐ, விஏஒ உதவியுடன் பொன்மணி வீட்டுக்கே சென்றார் புகழேந்தி. தகுந்த சான்றிதழ்களை பொன்மணியிடம் வாங்கிய அவர்கள், விதவைச் சான்று, விதவை உதவித்தொகை கிடைப்பதற்கான ஏற்பாட்டை உடனடியாக நிறைவேற்றுவதற்கு உரிய வழிமுறைகளைச் செய்தனர். 'நடப்பவை எல்லாம் நிஜம்தானா' என்று நம்பாமல் பார்த்துக்கொண்டிருந்தார் பொன்மணி. கடந்த 12-ம் தேதி, பொன்மணி வீட்டுக்கு அதிகாரிகளுடன் சென்ற டிஆர்ஒ சூர்யபிரகாஷ், பொன்மணிக்கு விதவைச் சான்றிதழையும் விதவை உதவித்தொகை வழங்குவதற்கான ஆணையையும் வழங்கினார். அதோடு, அதுவரை 16 கிலோ அரிசி மட்டுமே கிடைக்கும்வகையில் இருந்த பொன்மணியின் ரேஷன் கார்டை, 35 கிலோ வரை அரிசி கிடைக்கும் AAY அட்டையாக மாற்ற நடவடிக்கை எடுக்கவும் வழிவகை செய்தார். இந்த உதவிகளால் பொன்மணி நெக்குருகிப்போனார்.

பொன்மணிக்கு உதவிய டி.ஆர்.ஓ சூர்யபிரகாஷ்
பொன்மணிக்கு உதவிய டி.ஆர்.ஓ சூர்யபிரகாஷ்
நா.ராஜமுருகன்

உதவிகளால் நெகிழ்ந்துபோயிருக்கும் பொன்மணியிடம் பேசினோம். "அண்ணே என்னால நம்பவே முடியல. எல்லாம் கனவுபோல இருக்கு. சினிமாவுல வர்ற மாதிரி அதிகாரிங்க எல்லாம் வீட்டுக்கு வர்றாங்க. சின்னப் பிரச்னைக்காக என் கணவர் விஷத்தைக் குடிச்சு தற்கொலை பண்ணிக்கிட்டு அவர்பாட்டுக்கு போய் சேர்ந்துட்டார். ஆனா, நான் தினம் தினம் குழந்தைகளோட எதிர்காலத்தை நினைச்சு பயந்துக்கிட்டு இருந்தேன். திக்கத்து நின்ன எங்க நாலு உசுருக்கும் விகடன் மூலமா ஒளி கிடைச்சிருக்கு. யார் யாரோ முகம், பெயர் தெரியாதவங்களெல்லாம் எங்களுக்காகப் பரிதாபப்படுறாங்க, உதவுறாங்க.

பொன்மணி
பொன்மணி
நா.ராஜமுருகன்

விதவைச் சான்றிதழ், விதவை உதவித்தொகை கேட்டு பல தடவை நாயா அலைஞ்சிருப்பேன். கிடைக்கவேயில்ல. ஆனா, இப்போ வீடுதேடி வந்து கொடுத்திருக்காங்க. எங்க ஊரு பள்ளிகூடத்துலேயே எனக்கு தற்காலிகமா வேலை கிடைச்சிருக்கு. வீட்டுக்குத் தேவையான மளிகைச் சாமான், காய்கறி மாதாமாதம் கிடைக்க உதவி கிடைச்சிருக்கு. இனி எப்படியும் இந்த பயங்காட்டும் வாழ்க்கையை வாழ்ந்துடலாம், பிள்ளைகளைக் கரைசேர்த்திடலாம்ங்கிற புதுநம்பிக்கை பிறந்திருக்கு. இத்தனை உதவிகளையும் செஞ்ச அத்தனை பேருக்கும் என் வாழ்நாளைக்கும் கடமைப்பட்டிருக்கேன். இத்தனை உதவிகளும் எங்களைத் தேடிவர காரணமா இருந்த விகடன் பத்திரிகையை என் ஆயுசுக்கும் மறக்க மாட்டேன்ணே!"

கண்களில் எட்டிப்பார்க்கிறது ஆனந்தக் கண்ணீர்!