22 தங்கப் பெண்கள்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

பெண்ணால் முடியும் பெண்ணே!

சென்னை ஐ.ஐ.டி-யின் முன்னாள் மாணவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
சென்னை ஐ.ஐ.டி-யின் முன்னாள் மாணவர்கள்

வாய்ப்புகள் ஆயிரம்

சாமான்யர்களாலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்துக் கொண்டிருக்கும் கிராமப்புற சாதனைப் பெண்களைச் சிறப்பிக்கும் வகையில், சமீபத்தில் சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவின் ஒருபகுதியாக, சென்னை ஐ.ஐ.டி-யின் முன்னாள் மாணவர்கள் தொகுத்த சிறு குறு தொழில்களில் சாதித்த நடுத்தர குடும்பத்துப் பெண்களின் தொழில் பயணங்களை விவரிக்கும் வகையில் `Muscle to the Mind’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. அந்தப் புத்தகத்தில், ஐ.ஐ.டி-யில் தொழில்முனைவோர் பயிற்சிபெற்ற ஐவர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த அவர்களுடனான பூஸ்ட்அப் சந்திப்பிலிருந்து...

உணவு... உபசரிப்பு... உயர்வு!

உணவகத் தொழில் நடத்திவரும் வசந்தி, 23 வயதிலேயே கணவரை இழந்தவர். சிங்கிள் பேரன்ட்டாக குடும்ப நிர்வாகம் செய்பவர்.

54 வயதில் தொழில்முனைவோராகவும் வெற்றிபெற்று, நம்பிக்கையுடன் பயணித்துக்கொண்டிருக்கிறார். “விபத்தில் கணவர் இறந்தப்போ, மூன்றரை வயசு கைக்குழந்தை, வயித்துல ஒரு குழந்தையோட தவிச்சுப்போய் நின்னேன். கூலி வேலை, காய்கறிக்கடை வேலைன்னு பல இடங்கள்ல உழைச்சேன். மகளிர் சுய உதவிக்குழு மூலம் கடன் பெற்று, தள்ளுவண்டியில் இட்லி கடை வெச்சேன். பத்து விரல்கள்தாம் எப்போதும் எனக்கு மூலதனம். நிறைய கஷ்டங்களைக் கடந்து, படிப்படியா உயர்ந்தேன். பி.காம் படிச்சிருக்கிற மூத்த பொண்ணை நல்லபடியா கல்யாணம் செய்துகொடுத்துட்டேன். சின்னவ என்கூடவே தொழிலைக் கவனிச்சுக்கிறா. அவளுக்குத் தனியா ஹோட்டல் வெச்சுக்கொடுக்கணும்.

பெண்ணால் முடியும் பெண்ணே!

உணவு தீர்ந்துட்டாலும், என்னை தேடிவருபவர்களுக்கு ஏதாச்சும் சமைச்சுக்கொடுத்து பசியைப் போக்குவேன். சமீபத்துலதான், ‘ஸ்விகி’யில என் கடையைப் பதிவு செஞ்சேன். என் தெருக்கடையை சீக்கிரமே ஹோட்டலாக மாத்தணும்னு ஆசைப்படறேன். தினமும் 350 பேருக்கு மேல என் உணவகத்தால் பசியாறுறாங்க. மாதம் 30,000 ரூபாய் சம்பாதிக்கிறேன்” என்று பெருமிதத்துடன் கூறும் வசந்தி, ஆறு பெண்களுக்கு முதலாளி!

பால்... பால் பொருள்கள்... பலம்!

காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரங் களிலுள்ள 32 கிராமங்களிலிருந்து பாலை கொள்முதல் செய்து, மதிப்புக்கூட்டல் தொழிலில் சாதித்துவருகிறார், 53 வயதாகும் சாந்தி.

பெண்ணால் முடியும் பெண்ணே!

``ஐஐடி - ஹேண்டு இன் ஹேண்டு அமைப்பின் மூலம் பண்ணை மேம்பாடு மற்றும் கால்நடை வளர்ப்புப் பயிற்சிகளைப் பெற்றேன். இப்போ வீட்டுத் தேவைகளுக்கும் ஐஸ்க்ரீம் தயாரிப்பு நிறுவனத்துக்கும் பால் விற்பனை செய்றேன். தயிர், நெய், பனீர் உட்பட மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களையும் விற்பனை செய்றேன். பெரிய அளவில் பால் பண்ணை அமைக்கணும்கிற லட்சியத்துடன் உழைச்சுக்கிட்டிருக்கேன். உழைப்பு நிச்சயம் உயர்வைத் தரும்னு அனுபவத்தில் சொல்றேன்” என்று உத்வேகத்துடன் கூறுகிறார் சாந்தி.

கேட்டரிங்... ஈவன்ட்... கனவுகள்!

கேட்டரிங் மற்றும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் தொழில் செய்துவருகிறார், சத்யா. ``இன்றைக்கு ஈவென்ட் மேனேஜ்மென்ட் தொழிலுக்கு அதிக வரவேற்பு இருக்கு. பிறந்தநாள் விழா, காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா, திருமண விழான்னு மாதத்துக்கு குறைந்தபட்சம் ஐந்து ஆர்டர்களாவது கிடைச்சுடும். ஈவென்ட் ஆர்டர் இல்லாதப்போ, கேட்டரிங் ஆர்டர்களால் மாதம்தோறும் வேலை இருந்துட்டே இருக்கும். வாழை மரம் கட்டுறதுல இருந்து, சாப்பாடு பரிமாறுவது, தாம்பூலப்பை வழங்குற வரை எல்லா வேலைகளையும் செய்வேன். நல்ல வருமானம் கிடைக்குது. திருமண மண்டபம் கட்டுறது, ஹோட்டல் தொழில் செய்றதுன்னு நிறைய கனவுகள் இருக்கு” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் சத்யா.

துணி... மணி... தன்னம்பிக்கை!

5,000 ரூபாய் முதலீட்டில் வீட்டிலிருந்தபடியே துணி விற்பனையைத் தொடங்கிய காயத்ரி அசோக், இன்று இரண்டு துணிக்கடைகளுக்குச் சொந்தக்காரர். ``குடும்பத்தாரின் ஆதரவு கிடைக்குமான்னு, தொழில் தொடங்கிறப்போ நானும் தயங்கினேன். ஒருகட்டத்துல, நமக்கு நாமதான் பக்கபலம்னு துணிஞ்சு தொழிலைத் தொடங்கினேன். படிப்படியா வெற்றியுடன், குடும்பத்தினரின் ஆதரவும் கிடைச்சுது. குடும்பப் பெண்கள் மற்றும் கல்லூரிப் பெண்கள்னு, இன்னிக்கு 50-க்கும் மேற்பட்ட முகவர்கள் எனக்கு இருக்காங்க. வருமானம், மதிப்பு, தன்னம்பிக்கைனு சுயதொழில்தான் எல்லோருக்கும் அதிக உயர்வைத் தரும்” என்கிறார் மகிழ்ச்சியுடன்.

பெண்ணால் முடியும் பெண்ணே!

உழைப்பு... நம்பிக்கை... அழகு!

பியூட்டி பார்லர் நடத்திவரும் வசந்தி கலையரசன், ``சுயதொழில் செய்ய நினைச்சப்போ நிறைய பயம், பதற்றம் இருந்துச்சு. நம்பிக்கையுடன் களத்தில் இறங்கினேன். தூரத்துல இருந்து பார்த்தா, எல்லாமே சின்னதாதான் தெரியும். அதுபோல, பிரச்னைகளையும் அணுகினா, எதுக்குமே கவலைப்படவேண்டிய அவசியம் ஏற்படாது. இதை அனுபவத்துல உணர்ந்தப்போ, சுயதொழில் ரொம்பவே பிடிச்சுப்போச்சு. இன்னைக்கு போதுமான வருமானம் கிடைச்சாலும், கடுமையா உழைச்சு பெரிய நிலைக்கு உயரணும்” என்று நம்பிக்கை பொங்க கூறுகிறார், வசந்தி.

வாழ்த்துகள் பெண்களே!