லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

இந்த வார்த்தைகளைவிட மிகப்பெரிய விருது உண்டா? - இளையராணி

இளையராணி
பிரீமியம் ஸ்டோரி
News
இளையராணி

நம்ம ஊர் நைட்டிங்கேல்

ந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு துறையைத் தேர்ந்தெடுப்பவர் களைவிட, சிறுவயதிலிருந்தே அதையே தன் இலக்காக நிர்ணயித்து தங்கள் எதிர்காலத்தை நிறுவியவர்களின் ஆர்வம், அதில் கூடுதலாகவே இருக்கும்.

ஏதோ வேலை செய்தோம், மாதா மாதம் சம்பளம் வாங்குகிறோம் என்றில்லாமல், தன் இன்ப துன்பங்களை மறந்து வேலைசெய்யும் அர்ப்பணிப்பு இரண்டாவது வகையினரிடம் நிச்சயம் இருக்கும்.

கொரோனாவால் உலகமே கட்டுண்டு இருக்கையில் அதை எதிர்த்துப் போராடும் லட்சக்கணக்கான மருத்துவப் பணியாளர்களில் இளையராணியும் ஒருவர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். தன் மூத்த சகோதரி செவிலியராகப் பணியாற்றியதைப் பார்த்து, அந்தத் துறையின்பால் ஈர்க்கப்பட்டவர் இளையராணி.

 இளையராணி
இளையராணி

“அக்காவைப் பார்த்துதான் இதைத் தேர்ந்தெடுத்தேன். வேலைக்குச் சேர்ந்ததுமே செவிலியப் பணி மீதான பற்றும் ஆர்வமும் அதிகரிக்கத் தொடங்கியது. அதனால்தான் கொரோனா வார்டு பணி வழங்கப்பட்டபோது கொஞ்சமும் தயங்காமல் ஏற்றுக்கொண்டேன்” எனும் இளையராணிக்கு ஏழு வயதிலும், இரண்டரை வயதிலும் இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். இரண்டு குழந்தைகளும் சிறுநீரகம் சார்ந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கின்றனர் என்பது துயரம். குழந்தைகள் தொடர் சிகிச்சையிலிருக்கும் சூழலிலும், அவர்களைத் தன் சகோதரியிடம் ஒப்படைத்துவிட்டு, கொரோனா வார்டு பணிக்குச் சென்றிருக்கிறார் இளையராணி.

‘கணவர் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வார்தானே...’ என்றதும், “அவருக்கு நாட்டைப் பார்த்துக் கொள்ளவே நேரம் போதவில்லை” என்று சிரித்தபடியே சொல்கிறவர், ‘`கணவர் ராணுவத்தில் பணிபுரிகிறார். இரண்டு குழந்தைகளையும் இந்த நிலையில் விட்டுவிட்டு கொரோனா பணிக்குச் செல்ல வேண்டுமே என்று நினைத்தபோது, ‘கண்ணுக்குத் தெரியும் எதிரிகளுடன் நான் நாட்டு எல்லையில் களம் காண்கிறேன். கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் நீ மருத்துவமனையில் போராடப் போகிறாய். இதுபோன்ற வாய்ப்பு யாருக்குக் கிடைக்கும்... தைரியமாகத் துணிந்து கொரோனா வார்டு பணிக்குச் செல். நம் குழந்தைகள் பத்திரமாக இருப்பார்கள்’ என்று என்னை உற்சாகப்படுத்தினார்.

 இளையராணி
இளையராணி

கொரோனா வார்டில் பணியிலிருந்த போதும், க்வாரன்டீனில் இருந்தபோதும் என 21 நாள்கள் என் குழந்தைகளை நான் பார்க்கவில்லை. வீடியோ காலில்தான் பேசுவேன். பேசும்போதெல்லாம், நான் எப்போது வீட்டுக்கு வருவேன் என்பதே அவர்கள் கேள்வியாக இருக்கும். தினமும் அவர்களிடம் ‘நாளைக்கு வந்திருவேன்டா!’ என்கிற ஒரே பதிலைத்தான் சொல்வேன்'' என்கிற இளையராணி, கொரோனா வார்டில் ஒரு வாரம் பணியாற்றிவிட்டு இப்போது, கொரோனா பாதிப்பு சந்தேகத்தில் நோயாளிகள் அனுமதிக்கப்படும் வார்டில் செயல்படுகிறார்.

“கொரோனா பாசிட்டிவ்வான முதியோர் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள் களைக்கூட குடும்பத்தினர் கொடுத்து விடுவதில்லை. அலைபேசியில் அழைத்துக் கேட்டால், ‘ராங் நம்பர்’ என்று சொல்லி அழைப்பைத் துண்டிப்பவர்கள்கூட இருக்கிறார்கள். அந்தப் பெரியவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்து கவனித்துக்கொள்கிறேன்” என்கிறவர், கொரோனா வார்டில் தனக்குக் கிடைத்த மறக்க முடியாத அனுபவத்தையும் பகிர்கிறார்.

“ஒன்றரை வயதுப் பெண் குழந்தைக்கு இட்லி ஊட்டியபோது புரையேறி, இட்லி உணவுக்குழாய்க்குள் செல்லாமல் தவறி நுரையீரலுக்குள் சென்றிருக்கிறது. அதனால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. பெற்றோர், குழந்தைக்கு என்ன ஆனது என்று தெரியாமல் தவித்துப்போய் மருத்துவமனைக்கு ஓடிவந்தனர். மூச்சுத்திணறல் அதிகமாக இருந்ததால் கொரோனா அறிகுறியாக இருக்கலாம் என்று நினைத்து குழந்தையை கொரோனா வார்டில் அனுமதித்துவிட்டனர்.

எனக்கு அந்தக் குழந்தையைப் பார்க்கும்போதெல்லாம் என் குழந்தை போன்றே தோன்றியது. குழந்தைக்கு வேறு ஏதோ பிரச்னைதான் இருக்கிறது என்றும் தோன்றியது. சந்தேகத்தின் பேரில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அங்கே இருக்கும் கொரோனா பாசிட்டிவ் நோயாளிகளிடமிருந்து நோய் குழந்தைக்குப் பரவிவிட வாய்ப்புள்ளதே என்று பதறி, குழந்தையை அந்த வார்டிலேயே தனியாக வைத்துக்கொண்டேன். வேறு யாரையும் குழந்தையின் பக்கம் நெருங்கவிடவில்லை.

குழந்தைக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சைகளை துரிதப்படுத்தினேன். குழந்தைநல மருத்துவர்களும் ஒத்துழைப்பு கொடுத்ததால், நுரையீரலில் இட்லி சென்று சிக்கிக்கொண்டிருந்தது சீக்கிரமே கண்டறியப்பட்டது. குழந்தை வேறு வார்டுக்கு மாற்றப்பட்டு, சிக்கியிருந்த இட்லித் துண்டு வெளியே எடுக்கப்பட்டது.

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் அந்தக் குழந்தையின் தாய் என்னைத் தேடிவந்து, ‘உங்க பேர் என்ன... பிபிஇ போட்டிருக்கிறதால எல்லாரும் ஒரே மாதிரி இருக்கீங்க... அதான் உங்களை ஞாபகம் வெச்சுக்கிறதுக்காகக் கேட்டேன்’ என்றார். ‘பெயர் எல்லாம் தெரிய அவசியமில்லை. உங்கள் குழந்தை குணமடைந்துவிட்டதே மகிழ்ச்சி’ என்றேன். கையெடுத்துக் கும்பிட்டு, ‘உங்க பிள்ளை மாதிரி என் மகளைக் கவனிச்சுக்கிட்டீங்க. நீங்க எப்பவும் நல்லாயிருக்கணும்’ எனக் கண்களில் நீர் வழிய வாழ்த்திச் சென்றார்.

நான் விரும்பி ஏற்ற செவிலியர் பணிக்கு இந்த வார்த்தைகளைவிட மிகப்பெரிய விருது உண்டா?” - புன்னகைக்கிறார் இளையராணி.