Published:Updated:

2K kids: பெண்களுக்கு எதிரான கொடுமைகள்... முன்னேறிக்கொண்டே பின்னோக்கிச் செல்கிறோமா?!

கொடுமைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
கொடுமைகள்

அ.சாலிஹா பதூல்

இந்த நூற்றாண்டில் பெண்களின் வளர்ச்சி பல துறைகளிலும் அதிகரித்து வருகிறது. பணிக்குச் செல்லும் பெண்களின் பிரச்னைகள், ஆண்களுக்கு சமமான ஊதியம், மாதவிடாய் விடுமுறை, குழந்தை வேண்டுமா, வேண்டாமா என்ற முடிவை பெண் எடுக்கும் கருப்பை உரிமை, ஆடைக் கட்டுப்பாடுகளை உடைத்தெறியும் கலந்துரையாடல்கள் என்று, நவீனகாலப் பெண்களின் பிரச்னைகளைக் களையப் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த நேரத்தில், பெண் சிசுக்கொலைகள், குழந்தைத் திருமணங்கள், வரதட்சணைக் கொடுமைகள் குறித்த செய்திகளையும் பார்க்கும்போது, உண்மை யில் பெண் விடுதலையில் இந்தச் சமூகம் இன்னும் 100 ஆண்டுகள் பின்னோக்கித்தான் நின்று கொண்டிருக்கிறது என்ற உண்மை மனதில் அறைகிறது.

‘அதெல்லாம் அங்கங்க நடக்குற பிரச்னைகள்’ என்று இவற்றைப் புறந்தள்ள முடியுமா? அவையெல்லாம் ஆங்காங்கு நடப்பதை இன்னமும் பார்த்துக்கொண்டும், பங்கெடுத்துக்கொண்டும் இருக்கும் சமுதாயத்தை, எப்படி முன்னேறிய சமுதாய மாக நாம் சொல்ல முடியும்? ‘பெண் முன்னேற்றம்’ என்பதைப் பாடங்கள் முதல் `வுமன் சென்ட்ரிக்' திரைப் படங்கள் வரை இந்த உலகம் எனக்குக் காட்டிக் கொண்டிருந்தது. உண்மையில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றிய செய்திகள் தந்த அதிர்ச்சியையும் சோர்வையும் கல்லூரி மாணவியான என் அனுபவமாக இங்கே பதிவு செய்கிறேன்.

vikatan
vikatan

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உசிலம்பட்டியில், பிறந்து ஏழு நாளே ஆன பெண் குழந்தை கொலை செய்யப்பட்டது. அந்தக் குழந்தையின் பெற்றோருக்கு, ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் இருந்த நிலையில், மூன்றாவதாகப் பெண் குழந்தை பிறந்ததால், குழந்தையின் மூச்சை நிறுத்தி உயிரைப் பறித்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் மட்டும் கடந்த ஒரு வருடத்தில் நான்கு பெண் சிசுக்கொலைகள் நடைபெற்றுள்ளன. ஒரு சிசு, பெண்குழந்தை என்ற ஒரே காரணத்துக்காக, பிறந்த உடனேயே கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும்போது, சி.இ.ஓ பொறுப்புகளில் பெண்கள் அமரும் வெற்றியை எப்படி நம்மால் முழுமையாகக் கொண்டாட முடியும்?

பிழைத்து வரும் பெண் குழந்தைகளை வதைக்கத்தான், அடுத்தடுத்து இந்தச் சமூகம்தான் எத்தனைக் கொடுமைகளை வைத்திருக்கிறது? இந்த லாக்டௌன் சூழலில், குழந்தைத் திருமணங்கள் இந்தியா முழுக்க அதிகரித்திருக்கின்றன. மகாராஷ்டிராவில் மட்டும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை 560 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. நிறுத்தப்படாத திருமணங்கள் எத்தனையோ? தமிழகத்தில், கொரோனா காலத்தில் திண்டுக்கல், சேலம், ராமநாதபுரம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பழங்குடியின கிராமங்களில் மட்டும் 318 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளன. பதிவுக்கு வராத திருமணங்கள் இதைவிட அதிகமாக இருக்கும்.

‘சுதந்திர இந்தியாவின் 75-ம் வருடத்திலும், குழந்தைத் திருமணத்தில் இருந்து எங்களை நீங்கள் விடுவிக்க வில்லையே...’ எனும் இந்தச் சிறுமிகளின் கண்ணீருக்கும் கதறலுக்கும், அரசு இயந்திரத்தின் பதில் என்ன? அந்தப் பெண் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்தாலே மனம் பதைபதைக்கிறது. சொல்லப்போனால், எதிர்காலம் என்ற ஒன்று இவர்களுக்கு இனி இருக்கிறதா என்ன?

பெண் சிசுக்கொலை, குழந்தைத் திருமணம் வன்முறைகளில் இருந்தெல்லாம் விடுபட்டு, கல்வி பெற்று, திருமண உறவுக்குள் வரும் பெண்களின் நிலை என்ன? சுயசம்பாத்தியம் இருந்தாலும் சுயமரியாதை என்ற ஒன்றை அவர்கள் எதிர்பார்க்கக் கூடாது என்ற ஒடுக்கப்பட்ட நிலை. இன்னொரு பக்கம், இன்னும் நம் குடும்பங்களில் புகைந்துகொண்டே இருக்கும் வரதட்சணை அவலம். ஒரு காலத்தில் வெடித்த கெரசின் ஸ்டவ்கள் இன்னும் ஓயவில்லை. இந்தியாவில் வரதட்சணை வன்முறையால் கொலை செய்யப்பட்டு, அல்லது தற்கொலை செய்து ஒரு நாளில் சராசரியாக 20 பெண்கள் உயிரிழக்கிறார்கள் என்பது, 2021-ன் தரவு என்கிறது ஓர் ஆய்வு முடிவு. இதற்கு சமுதாயமும் குடும்பங்களும், அரசும் தலைகுனிய வேண்டும்.

இந்தச் சமூகக் குற்றங்களுக்கு எல்லாம் சட்டத்தால் மட்டும் மாற்றத்தைக் கொண்டு வர முடியுமா என்றால், இல்லை என்பதையே இன்றும் தொடரும் இந்த அவலங்கள் நமக்கு உணர்த்துகின்றன. மக்களின் மனதில் மாற்றம் ஏற்படுவதே இதற்கான உண்மையான தீர்வு. அதற்கு, நூற்றாண்டுகளாகக் காத்திருக்கிறோம் பெண் பிள்ளைகள்.

இன்னும் எத்தனை நூற்றாண்டுகளோ?!