Published:Updated:

நாங்களும் உயிரும் உணர்வுகளும் உள்ள மனுஷங்கதான்!

ஸோயா தாமஸ் லோபோ
பிரீமியம் ஸ்டோரி
News
ஸோயா தாமஸ் லோபோ

- இந்தியாவின் முதல் திருநங்கை போட்டோ ஜர்னலிஸ்ட் ஸோயா தாமஸ் லோபோ

நெற்றியை நிறைக்கும் பெரிய குங்குமப் பொட்டும், நேர்த்தியாக உடுத்திய சேலையும், மையிட்ட விழிகளுமாக வலம் வரும் ஸோயா தாமஸ் லோபோவை மும்பையின் லோக்கல் டிரெயின் பயணிகள் அனைவரும் அறிவர். டிரெயினுக்குள் யாசகம் கேட்டுப் பிழைக்கும் திருநங்கையர்கள் சிலரில் அவரும் ஒருவர். ஆனால், டிரெயினை விட்டு இறங்கிவிட்டால், ஸோயாவின் முகமே வேறு. கழுத்தில் மாட்டிய கேமராவும் கண்களில் தேடலுமாக மற்ற நேரத்தில் அவர் பரபரப்பான போட்டோ ஜர்னலிஸ்ட். இந்தியாவின் முதல் திருநங்கை போட்டோ ஜர்னலிஸ்ட் என்ற பெருமையும் உண்டு இவருக்கு.

``ஒரு அசைன்மென்ட்டுல இருக்கேன். முடிச்சிட்டுப் பேசட்டுமா....’’ பணிவோடு பேசியவர், பத்திரிகையாள ருக்கே உண்டான பொறுப்புடன் சொன்னமாதிரியே அழைத்தார்.

நாங்களும் உயிரும் உணர்வுகளும் உள்ள மனுஷங்கதான்!


``தமிழ்ல எனக்கு இது முதல் இன்டர்வியூ. சந்தோஷமா இருக்கு...’’ என்பவரின் ஆங்கிலம் அட்சர சுத்தம். ``மும்பையில பிறந்து வளர்ந்தேன். எனக்கு ஓர் அக்கா. நாங்க குழந்தைங்களா இருந்த போதே அப்பா தவறிட்டார். அம்மாதான் குடும்பத்தைப் பார்த்துக்கிட்டாங்க. என் 11 வயசுல உடம்புலயும் உணர்வுகள்லயும் இனம் புரியாத மாற்றங்கள். பாய்ஸ் ஸ்கூல்ல படிச்சிட்டிருந்த என் கிட்ட பெண்மை உணர்வு ஆக்கிரமிச்சதை உணர்ந்தேன். பசங்களோடு சகஜமா பேசி, பழக முடியலை. சக மாணவர்கள் என்னை கிண்டல், கேலி பண்ணினாங்க. அவங்ககிட்டருந்து ஒதுங்கியும் பதுங்கி யும் சில நாள்களைக் கழிச்சேன். என்னை மாதிரியே உணர்வுள்ள ஒரு ஜீவனை 17 வயசுல சந்திச்சேன். நாங்க நண்பர்களானோம்.

‘நீயும் என் இனம்தான்’னு அவங்க என்னை ஏத்துக்கிட்டு, திருநங்கை சமூகத்துக்கு அறிமுகப் படுத்தினாங்க. திருநங்கை சமூகம்னா எப்படி யிருக்கும், எப்படிப் பேசணும், எப்படி நடந்துக் கணும்னு எல்லா விஷயங்களையும் எனக்கு சொல்லிக்கொடுத்து, ஒரு செட் சல்வார் கமீஸ், கொஞ்சம் மேக்கப் அயிட்டங்களைக் கொடுத்து, ‘ஸோயா’னு அழகான பெயரையும் சூட்டி,என்னை அவங்கள்ல ஒருத்தியா ஏத்துக் கிட்டாங்க. அன்னிக்கு எனக்கு சிறகுகள் விரிஞ்ச மாதிரி இருந்தது....’’ அறிமுகம் சொல்லும் ஸோயாவின் வார்த்தைகளில் வலிகளைக் கடந்த கம்பீரம்.

நாங்களும் உயிரும் உணர்வுகளும் உள்ள மனுஷங்கதான்!

``எனக்குள்ள இருந்த குழப்பங்கள் நீங்கி, நான் யாருங்கிற தெளிவு வந்திருச்சு. ஆனா அடுத்தென்னங்கிற கேள்வி எழுந்தது. திருநங்கை சமூகத்தைச் சேர்ந்தவங்க கைதட்டி யாசகம் கேட்கறது, பாலியல் தொழிலுக்குள்ள போறதுன்னு பிழைப்புக்காக வழக்கமான சில விஷயங்களைப் பண்ணிட்டிருக்காங்க. எனக்கு முன்னாடியும் அந்த சாய்ஸ்தான் இருந்தது. நான் லோக்கல் டிரெயின்ல யாசகம் கேட்கறதுன்னு முடிவு செய்தேன். என்னை திருநங்கையா ஏத்துக்கிறதுல எங்கம்மாவுக்குப் பெரிய தயக்கம் இருந்தது. டிரெயின்ல யாசகம் கேட்கப்போன அந்த முதல் நாள் எனக்கு இன்னும் மறக்கலை. என்னை திருநங்கையா ஏத்துக்கிறதுல எங்கம்மாவுக்குப் பெரிய தயக்கம் இருந்தது. ஆனாலும் அந்த முதல் நாள் எங்கம்மா `நானும் உன்கூட டிரெயின்ல வருவேன்’னு கிளம்பினாங்க. நான் வழிதவறி, பாலியல் தொழிலுக்குப் போயிடுவேன்னு அவங் களுக்கு பயம். கிட்டத்தட்ட ஒரு மாசம் என்கூடவே டிரெயின்ல வந்து என்னை கவனிச்சு, என்மேல நம்பிக்கை வந்த பிறகுதான் என்னைத் தனியா போக அனுமதிச்சாங்க.

ஒருமுறை டிரெயின்ல யாசகம் கேட்டுப் போனபோது ஒரு பெண், ‘என்கிட்ட வராதே... என்னைத் தொடாதே’ன்னு என்னை விரட்டி னாங்க. எனக்கு எங்கிருந்துதான் அவ்வளவு தைரியம் வந்துச்சோ... ‘நாங்களும் உங்களை மாதிரி மனு ஷங்கதான். உங்களை மாதிரி மனுஷங் களுக்குப் பிறந்தவங்கதான். உங்களை மாதிரியான ஆட்கள் எங்களை ஏத்துக்க மறுப்பதாலதான் நாங்க இப்படியெல்லாம் பிழைக்க வேண்டி யிருக்கு. இனி எந்தத் திருநங்கையையும் இப்படிப் பேசாதீங்க’னு சொன்னேன். டிரெயின்ல இருந்த அத்தனை பயணிகளும் எனக்கு ஆதரவா நின்னாங்க...’’ தன் இனத்தாரின் மனக்குரலை அழுத்தமாக அங்கே பதிய வைத்து, பயணிகள் மத்தியில் பிரபலமாகியிருக்கிறார் ஸோயா.

நாங்களும் உயிரும் உணர்வுகளும் உள்ள மனுஷங்கதான்!

``எனக்கு போட்டோகிராபின்னா ரொம்ப பிடிக்கும். ஆனா கேமரா வாங்கக்கூட அப்போ வசதியில்லை. அந்த நேரம் யூடியூப்ல ‘ஹிர்ஜா ஷாப் கி வர்தான்’னு ஒரு ஷார்ட் ஃபிலிம் பார்த்தேன். திருநங்கைகளை பற்றிய அந்தப் படத்துல எனக்கு உறுத்தலா இருந்த விஷயங்களை கமென்ட் செக்‌ஷன்ல போட்டிருந்தேன். அதைப் பார்த்துட்டு அந்த டைரக்டர் என்னைக் கூப்பிட்டார். அதைத் தொடர்ந்து அந்தப் படத்தோட அடுத்த பார்ட்டுல நடிக்க எனக்கு வாய்ப்பும் கொடுத்தார். 6.2 மில்லியன் வியூஸை பெற்ற அந்தப் படம் எனக்கு சிறந்த நடிப்புக்கான விருதையும் வாங்கிக் கொடுத்தது. திரு நங்கைகளா நடிக்கிறதே இவ்வளவு கஷ்டம்னா, 24 மணி நேரமும் திருநங்கையா வாழறது எப்படிப்பட்ட போராட்டமா இருக்கும்னு நினைச்சுப் பாருங்கனு எங்களுடைய வாழ்க்கையைப் பத்தி அந்த அவார்ட் ஃபங்ஷன்ல நான் பேசினது வைரலாச்சு. அந்த ஃபங்ஷனுக்கு வந்திருந்த பத்திரிகை யாளர் ஒருத்தரும் என் பேச்சுல இன்ஸ்பையராகி, அவங்க மீடியாவுக்கு என்னை ஒரு பேட்டி எடுக் கணும்னு வரச்சொன்னார். நான் போனபோது எனக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந் தது. அவங்க மீடியாவில் பார்ட் டைம் ஜர்னலிஸ்ட்டா வேலை பார்க்குறதுக்கான ஐடி கார்டை கொடுத்தார்.

என் தைரியத்துக்குக் கிடைச்ச பரிசா நினைச்சு, பார்ட் டைம் ரிப்போர்ட்டர் வேலையோடு, டிரெ யின்ல யாசகம் கேட்கறதையும் தொடர்ந்திட்டிருந்தேன். அப்படி சேர்த்துவெச்ச பணத்துல செகண்ட் ஹேண்டு டிஎஸ்எல்ஆர் கேமரா வாங்கினேன். என் கையில் கேமரா வரும்வரை போட்டோ ஜர்னலிசம்னா என்னங்கிறதோ, அதுல பணம் சம்பாதிக்கலாம்னோ தெரியாது.

நாங்களும் உயிரும் உணர்வுகளும் உள்ள மனுஷங்கதான்!

மும்பையில திருநங்கைகள் தங்கள் உரிமைகளுக்காக போராட்டம் நடத்தின பிங்க் ரேலியில சீனியர் போட்டோகிராபர் ஒருவரின் அறிமுகம் கிடைச்சது. அவர்தான் எனக்கு போட்டோகிராபியின் நுணுக்கங் களைக் கத்துக்கொடுத்தார். கொரோனா காலத்துல நிறைய படங்கள் எடுத்திருக்கேன். என்னைப் பார்த் தாலே ஒதுங்கிப்போன, அவமானப்படுத்தின மக்கள், இன்னிக்கு என்னை மரியாதையா பார்க்குறாங்க.

ஃப்ரீலான்சரா வொர்க் பண்ணிட்டே, டிரெயின்ல யாசகம் கேட்கறதையும் தொடர்ந்திட்டுதான் இருக்கேன். ஏதாவது ஒரு பிரபல மீடியா ஹவுஸ்ல முழுநேர போட்டோ ஜர்னலிஸ்ட் வேலைக்காக வெயிட் பண்ணிட்டிருக்கேன். அதுக்காக என்னைத் தயார்படுத்திட்டிருக்கேன். என் ஒருத்தியோட வாழ்க்கை மாறினா போதுமா... மக்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். திருநங்கை, திருநம்பிகளை வேற்று கிரகவாசிகளைப் போல பார்க்காதீங்க. அவங்களும் உங்களைப்போல உயிரும் உணர்வுகளும் உள்ள மனுஷங்கதான். அவங்களுக்கு உதவ முடியலைனாலும் பரவாயில்லை, உதாசீனப்படுத்தாதீங்க...’’

- ஸோயாவின் கம்பீர குரல் உடைந்து நெகிழ்கிறது. நம்மையும் நெகிழவைக்கிறது.