கையில் உள்ள ஃபைலில் பழுப்பேறிப்போன காகிதங்களைப் புரட்டிக் காட்டிக்கொண்டிருக்கிறார் ஜெயந்தி ரமேஷ். “இதெல்லாம் எங்கப்பா அவர் கைப்பட ஒற்றை விரலால் டைப் பண்ணினது” என்று சொல்லியபடி தட்டச்சிய எழுத்துகளை விரல்களால் வருடிப் பார்க்கிறார். “மீனாம்மாவை நான் பார்த்ததுகூட இல்லை, தெரியுமா? ஆனால், குடும்பத்தில் உள்ள அனைவரும் அவரைப் பற்றி கொஞ்சம் தெரிந்துவைத்திருக்கிறோம். அவரது மகள் கலாம்மாவுடன் கொஞ்ச காலம் நெருக்கமாக இருந்ததால் இந்தத் தலைமுறையினருக்கு அவரை ஓரளவுக்குத் தெரிந்திருக்கிறது. கூடிய விரைவில் அவரைப் பற்றியும், எங்கள் குடும்பத்து உறுப்பினர்கள் பற்றியும் ஒரு புத்தகம் வெளியிட வேண்டும் என்பது எங்கள் ஆசை” என்று சொல்கிறார்.

இவர்களது குடும்பத்தின் நட்சத்திர உறுப்பினர்கள்... உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி சர் சி.வி.ராமனின் மனைவி லோகசுந்தரி ராமன், 1940-களில் ஆங்கிலேயரால் பிரிவினைவாத சக்தி என்று முத்திரை குத்தப்பட்டு, தேடப்பட்டு வந்த பிரபல கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் எம்.ஆர்.வெங்கட்ராமன் மற்றும் நாட்டின் முதல் பெண் ஒலிப் பொறியாளர் மீனா நாராயணன்.

சிவகங்கை மாவட்டத்தில் 1905-ம் ஆண்டு வாக்கில் பர்வதவர்த்தினி, சீதாராம ஐயரின் மகளாகப் பிறந்தார் மீனா. தந்தை சீதாராம ஐயர் சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளராகப் பணியாற்றியவர். தம்பதியின் ஒரே மகள் மீனா. இனிய குரல்வளம் கொண்ட சிறுமி இசையில் மிளிர்ந்தார். கூர்ந்து நோக்கும் கண்கள், திருத்தமான அமைதி தவழும் முகம் என்று பேரழகியாகவே இருந்தார். உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த மீனாவுக்கு அன்றைய வழக்கப்படி சிறுவயதிலேயே திருமணம் செய்துவைக்கப்பட்டது.

கணவர் நாராயணன் அனந்தநாராயணன் சிவகங்கைப் பகுதியைச் சேர்ந்தவர். ரகுபதி சூரிய பிரகாஷ் இயக்கிய ‘பீஷ்ம பிரதிக்ஞா’ என்ற திரைப்படத்தில் கிருஷ்ணர் வேடம் தரித்து நடித்தவர்; திரைப்பட இயக்குநர்; திரைக்கதை எழுத்தாளர். சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்திருந்த நாராயணனுக்கு சினிமாவின் மீது தீராத காதல். இந்தத் தம்பதிக்கு கலாவதி, ஸ்ரீனிவாசன் என்ற இரு குழந்தைகள் அடுத்தடுத்து பிறந்தன. குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்து வந்தார் மீனா.

பெண்கள் நுழையத் தயங்கிய சினிமாத்துறையில், சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே புயலாக நுழைந்து, ஆண்களே தடுமாறிய தொழில்நுட்பப் பிரிவில் வெற்றிகரமாக இயங்கிவந்த சாதனைப் பெண் மீனா!

‘எக்சிபிட்டர் பிலிம் சர்வீசஸ்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கிய நாராயணன், இந்திய மற்றும் வெளிநாட்டுப் படங்களின் உரிமை பெற்று அவற்றை தென்னிந்திய அரங்குகளில் திரையிடும் தொழில் செய்து வந்தார். மதுரை, கோழிக்கோடு போன்ற நகரங்களில் திரையரங்குகளை குத்தகைக்கு எடுத்தும் வெற்றிகரமாக நடத்தி வந்தார். பிரபல ஹிந்திப் படத் தயாரிப்பாளரான ஆர்தேஷிர் இரானியின் `அனார்கலி' திரைப்படத்தை ஹாலிவுட்டுக்கு எடுத்துச் சென்றார் நாராயணன். அதற்கு அவர் கையாண்ட உத்தி குறித்து இப்போதும் மீனாவின் வழித்தோன்றல்கள் விவரித்துச் சிரிக்கிறார்கள். அலங்கார தலைப்பாகை, மன்னர் போல ஆடை அணிந்த நாராயணன், மனைவி மீனாவை மகாராணி போல ஒப்பனை செய்து அவருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படங்களுடனும் படப்பெட்டியுடனும் அமெரிக்கா பயணமானார்.

அங்கு அதே மன்னர் கெட்டப்பில் பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்களைச் சந்தித்து அனார்கலி திரைப்படத்தை 1930-களில் ‘மார்க்கெட்டிங்’ செய்தார். அவரது மன்னர் போன்ற உடையும், மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படமும் கண்டு மயங்கி நின்றது ஹாலிவுட். டக்ளஸ் ஃபேர்பாங்க்ஸ், செசில் டிமில், ஜான் பேரிமோர், ராபர்ட் ஃப்ளஹெர்டி என்று ஹாலிவுட் பிரபலங்கள் இவரை ஓர் இந்திய மன்னர் என்றே நினைத்து நட்புப் பாராட்டினார்கள்!

கோலிவுட்டில் மௌனப்படங்கள் மட்டுமே வெளிவந்துகொண்டிருந்த காலத்தில், முதன்முறையாக துணிவுடன் ‘சவுண்டு ஸ்டூடியோ’ ஒன்றை சென்னை சேத்துப்பட்டு - கீழ்ப்பாக்கம் பகுதியின் பூந்தமல்லி சாலையில் அமைந்த நாடார் தோட்டம் என்ற இடத்தில் அமைத்தார் நாராயணன். 1934 ஏப்ரல் 1

அன்று தொடங்கப்பட்ட ஸ்ரீனிவாசா சினிடோன் அல்லது சவுண்டு சிட்டி என்கிற அந்த ரிக்கார்டிங் ஸ்டூடியோதான் தென்னிந்தியாவின் முதல் டாக்கி திரைப்பட ஒலிப்பதிவு ஸ்டூடியோ!

அதுவரை திரைப்படங்கள், ஒலிப்பதிவு ஸ்டூடியோக்கள் இருந்த புனே, கோலாப்பூர், மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் மட்டுமே தயாரிக்கப்பட்டன. மும்பையிலிருந்து பொத்தார் என்ற ஒலிப்பதிவுக் கலைஞரை ஸ்ரீனிவாசா சினிடோனில் பணியாற்ற சென்னைக்கு அழைத்துவந்தார் நாராயணன்.

பொத்தாரின் ஒலிப்பதிவுப் பணிக்கு உதவியாளர் தேவைப்பட, நாராயணன் மனத்தில் முதலில் தோன்றியவர் மனைவி மீனாதான். 90 ஆண்டுகளுக்கு முன்பே, பெண்கள் அடுப்படி தாண்டி வர முடியாத காலகட்டத்தில் தன் மனைவியை இந்தப் பணியைச் செய்ய ஊக்குவித்தார் நாராயணன். பொத்தாருடன் மனைவி மீனாவை உதவிக்கு அமர்த்தி `ஸ்ரீனிவாச கல்யாணம்' என்ற திரைப்படத்தைத் தயாரித்து இயக்கினார். 90 நாள்களில் 60,000 ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் கிரவுன் மற்றும் பிராட்வே திரையரங்குகளில் வெளியானது.

ஒலிப்பதிவு உதவியாளரான மீனா, மடிசார் கட்டிக்கொண்டு கன்சோல் மிக்சரில் அமர்ந்து பணியாற்றத் தொடங்கினார். ஒலிப்பதிவின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். வெறும் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த பெண், எந்தத் தொழில்நுட்பப் பின்புலமும் இல்லாமல் ஒலிப்பதிவைக் கற்றுத் தேர்ந்தார். 1936-ம் ஆண்டு, பொத்தார் விலகிவிட, மனைவி மீனாவையே ஸ்ரீனிவாசா சினிடோனின் ஒலிப்பதிவாளராக நியமித்தார் நாராயணன். கணவர் நாராயணன் இயக்கிய `விஸ்வாமித்திரா' என்ற திரைப்படத்தில் முதன்முறையாக தனியே ஒலிப்பதிவுப் பணியை வெற்றிகரமாகச் செய்து முடித்தார் மீனா.

1936 ஜூலை 19 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழுக்கு நாராயணன் குடும்பம் பேட்டியளித்தது. `ஒரு படம் வெற்றிகரமாக இருப்பதற்கும், மோசமாக இருப்பதற்கும் பட முதலாளிகள்தான் காரணம் என்ற அபிப்ராயம் எங்கும் இருந்துவருவதை நான் அறிவேன். சென்னை ராஜதானியில் மருந்துக்குக்கூட ஒரு உயர்தர சினிமா நடிகர் கிடையாது; இதை நான் பயப்படாமல் கூறுகிறேன். நடிப்பில் தேர்ச்சிபெற்ற நடிகர்கள் நம் ஊரில் வெகு குறைவு' என்று துணிவுடன் அன்றைய மோசமான நிலையை விளக்கியிருக்கிறார் நாராயணன். கூடவே `விஸ்வாமித்திரா' படத்தில் லட்சுமணனாக நடித்த தன் மகன் ஸ்ரீனிவாசன், ஆனந்த விகடனை ஒரு வரி விடாமல் படித்து விடுவதாகவும் சொல்கிறார்.

பேட்டி எடுப்பவர் மீனாவிடம் ஒலிப்பதிவு அனுபவம் குறித்துக் கேட்க, `ஏதோ எனக்குத் தெரிந்த வரையில் ரிக்கார்டிங் செய்திருக்கிறேன்' என்று பணிவாகச் சொல்லியிருக்கிறார் மீனா. `தமிழ்மொழியும், இசையின்போக்கும் அறியாதவர்கள் ஒலிப்பதிவு செய்வதால் ஒலிப்பதிவில் நிறைய சிக்கல்கள் ஏற்படுகின்றன. நிறைய தமிழ்ப் படங்கள் மோசமாக இருப்பதற்கு இதுவே காரணம். அந்தக் குறையைப் போக்க வேண்டும் என்கிற எண்ணம் எனக்குத் தோன்றியதால், ஒலிப்பதிவில் சற்று சிரத்தையுடன் கவனம் செலுத்தினேன்; இரண்டே ஆண்டுகளில் அந்தத் துறையில் தேவையான அனுபவம் கிடைத்து விட்டது' என்றும் கூறுகிறார்.

1937-ம் ஆண்டு கிருஷ்ண துலாபாரம், அதே ஆண்டு விக்கிரம ஸ்த்ரீ சாகசம், 1938-ம் ஆண்டு துளசி பிருந்தா, போர் வீரன் மனைவி, மட சாம்பிராணி, ஸ்ரீராமானுஜன், விப்ர நாராயணா என்று தொடர்ச்சியாக கணவர் நாராயணன் தயாரித்து இயக்கிய திரைப்படங்களில் ஒலிப்பதிவுக் கலைஞராகப் பணியாற்றினார் மீனா. இந்தப் படங்கள் அனைத்தும் `பி டி சவுண்டு சிஸ்டம்' மூலம் ஒலிப்பதிவு செய்யப்பட்டவை. இவை தவிர, சென்னை தீவுத் திடலில் நடைபெற்ற போப் வருகையை ஒட்டிய யூகெரிஸ்டிக் காங்கிரஸ் என்ற விழாவை விவரிக்கும் குறும்படம் ஒன்றை யும் மீனா இயக்கியதாகக் கூடுதல் தகவல் அளிக்கிறார் வரலாற்று ஆய்வாளர் தியோடர் பாஸ்கரன்.

1939-ம் ஆண்டு நாராயணன் தன் 39-வது வயதில் திடீரென்று மரணமடைய, நிலைகுலைந்து போகிறது குடும்பம். மகள் கலாவதி மருத்துவப் படிப்பு முடித்து இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற இடங்களில் பணியாற்றினார்; சென்னை திரும்பி ராய் புற்றுநோய் மையத்தில் பணியாற்றினார். அவருடன் வாழ்க்கை முழுக்கத் துணை நின்றவர் தம்பி ஸ்ரீனிவாசன். தாமதமாகத் திருமணம் செய்துகொண்ட ஸ்ரீனிவாசன், மாம்பலத்தில் சினிமா போஸ்டர்கள் வரையும் பணியைச் செய்து வந்தார். கலாவதியோ திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்தார்.

கணவரை இழந்த பிறகு தியாகராய நகர் நடேசன் பூங்காவை ஒட்டிய வீட்டில் வாழ்ந்துவந்தார் மீனா. திரைப்படங்கள் குறித்து சிந்திக்கக்கூட முடியாமல் போனது. இதயநோயாளியுமானார். தன் இறுதிக் காலத்தை கெங்கேரியில் உள்ள சர் சி.வி. ராமனின் இல்லத்தில் அவர் மனைவியும் தன் சித்தியுமான லோகசுந்தரியின் வீட்டில் கழித்தார். 1954-ம் ஆண்டு, கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற மீனா, மாரடைப்பு காரணமாக அங்கு காலமானார்.

பெண்கள் நுழைய தயங்கிய சினிமாத் துறையில், சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே புயலாக நுழைந்து, ஆண்களே தடுமாறிய தொழில்நுட்பப் பிரிவில் வெற்றிகரமாக இயங்கிவந்த சாதனைப் பெண் மீனா!

தகவல் உதவி: ஜெயந்தி ரமேஷ், மோகன் வி ராமன், தியோடர் பாஸ்கரன்