`ஒரே எதிரி நமக்கு

விரட்டுவோம் அதை இணைந்து;

அதுவின்றி இல்லை வேறெதுவும்,

தேடு; மனதில் சிந்தி;

கவனமாகக் கேள்...

அதன் பெயர் - அறிவின்மை!’

- சாவித்ரிபாயின் `அஞான்’ என்ற தலைப்பிட்ட கவிதை, காவ்ய புலே, 1934.

இந்தியப் பெண்களின் வழிகாட்டியாக, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியாக என்றும் நினைவுகூரப்படுபவர் சாவித்ரிபாய் புலே. மாடுகளைக் கொட்டடியில் அடைத்துவைப்பது போல பெண்களை வீடுகளுக்குள் அடக்கிவைத்திருந்த காலத்தில் முதல் ஆசிரியராக வலம்வந்த பெண்; பாலின சமத்துவம் குறித்து 150 ஆண்டுகளுக்கு முன்பே குரல் உயர்த்திய பெண் என்று சாவித்ரியின் சிறப்புகள் எண்ணிலடங்காதவை.

1831 ஜனவரி 3 அன்று மகாராஷ்டிர மாநிலம் சதாரா பகுதியின் நைகாவ்ன் பகுதியில் கந்தோஜி படீல் மற்றும் லக்ஷ்மி தம்பதிக்கு மகளாகப் பிறந்தார் சாவித்ரி. தோட்ட வேலை செய்யும் `மாலி’ என்ற வகுப்பைச் சேர்ந்தவர்கள் சாவித்ரியின் பெற்றோர். 1840 ஏப்ரல் 11 அன்று, ஒன்பதே வயதான சாவித்ரியை ஜோதிராவ் புலே என்ற 13 வயது சிறுவனுக்கு அன்றைய வழக்கப்படி, இளம் வயதிலேயே மணம் செய்து கொடுத்தார்கள் பெற்றோர். திருமணமாகி கணவர் வீட்டுக்கு வந்த சாவித்ரி, தன்னுடன் கொண்டுவந்த சொத்து கிறிஸ்துவ போதகர் ஒருவர் தந்த புத்தகம் மட்டுமே!

ஜோதிராவின் உறவினரான சகுணாபாய், ஆங்கிலேய அதிகாரி ஒருவரது மகனுக்கு ஆயாவாக வேலை பார்த்தார். ஆங்கிலச் சொற்களை அவர் எளிதாகப் பயன்படுத்து வதைப் பார்த்து கல்வி மீது ஆசை கொண்டார்கள் ஜோதிராவ் தம்பதி.

அன்றைய காலகட்டத்தில் ஒடுக்கப்பட்ட சாதியினர் கல்வி கற்க உயர் சாதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். ஜோதிராவின் கல்வி தடைப்பட்டது. ஆனாலும், கஃபர் பேக் முன்ஷி என்ற பாரசீகர் மற்றும் லிசித் சாஹிபு என்ற ஆங்கிலேயர் ஆகியோரின் உதவியுடன் ஸ்காட்டிஷ் மிஷனரி பள்ளி ஒன்றில் கல்வியைத் தொடர்ந்தார் ஜோதிராவ். மனைவிக்கு வீட்டில் பாடம் சொல்லித் தந்தார். மூன்றாம் மற்றும் நான்காம் வகுப்பு தேர்வுகளை 1846-47-ம் ஆண்டுகளில் எழுதி வெற்றிபெற்றார் சாவித்ரி.

கற்ற கல்வி தங்களுக்குள் புதைந்து போகக் கூடாது என்று எண்ணிய தம்பதி, பள்ளி ஒன்றைத் தொடங்க வேண்டுமென்று ஆர்வம் கொண்டனர். ஆசிரியப் பணிபுரிய தகுந்த பயிற்சி பெற வேண்டும் என்று எண்ணிய சாவித்ரி, அஹமதுநகரில் உள்ள சிந்தியா ஃபரார் என்ற ஆங்கிலேயப் பெண்ணின் பள்ளியிலும், புனே நகரில் மிஷைல் பள்ளியிலும் ஆசிரியப் பயிற்சி பெற்றார். மஹர்வாடா பகுதியில் 1847-ம் ஆண்டு சுகுணாபாயுடன் இணைந்து பெண்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார் சாவித்ரி. அதன்பின் 1848 ஜனவரி 1 அன்று முதல் பெண்கள் பள்ளியை புனேயின் பிடேவாடா பகுதியில் தொடங்கினர் ஜோதிராவ் சாவித்ரி தம்பதி.

அப்போது உயர்சாதி ஆசிரியர்களைக் கொண்டு வேதங்களும் சாஸ்திரங்களும் மட்டுமே இந்தியர்களின் பள்ளிகளில் கற்பிக்கப்பட்டு வந்தன. அதற்கு நேரெதிராக கணிதம், அறிவியல், ஆங்கிலம் என்று நவீன கல்விமுறையையும் பாடத் திட்டங்களையும் அறிமுகம் செய்தது புலே பள்ளி.

பள்ளியின் ஆசிரியை மற்றும் முதல்வர் சாவித்ரியேதான். அடுத்தடுத்து புனேயின் பிற பகுதிகளிலும் பள்ளிகள் தொடங்கப்பட்டன.

1851-ம் ஆண்டு, மூன்று பெண்கள் பள்ளிகளைத் திறந்து, அவற்றில் கிட்டத்தட்ட 150 மாணவிகளுக்குக் கல்வியறிவை ஊட்டத்தொடங்கியிருந்தார்கள் சாவித்ரி மற்றும் ஜோதிராவ்.

ஒடுக்கப்பட்ட மக்கள், அதிலும் குறிப்பாக பெண்களுக்கான பள்ளிகளை உயர்சாதியினர் உதவி எதுவுமின்றி ஒரு பெண் நடத்துவதா? பெண் வெறுப்பும், ஆதிக்க சாதியின் வெறியாட்டமும் தொடங்கின. தினமும் சாவித்ரி பள்ளிக்குச் செல்லும் வழியில் அவர் மேல் கற்கள் வீசப்பட்டன; மாட்டுச் சாணம் கரைத்து ஊற்றப்பட்டது. பையில் உடுமாற்று சேலை ஒன்றை எடுத்துக்கொண்டு பள்ளி செல்வதை வாடிக்கையாக்கிக்கொண்டார் சாவித்ரி. அழுக்கான புடவையைப் பள்ளியில் மாற்றிக் கொள்வார்.

ஒடுக்குமுறைக்கு எதிராக இந்தியாவில் எழுந்த முதல் பெண்ணின் கலகக் குரல் சாவித்ரியின் குரலே. `விழி; எழு; கற்பி, தளைகளை உடை; விடுவி' என்ற அவரது போர்க்குரல் 150 ஆண்டுகள் தாண்டியும் இன்றும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது!

1849-ம் ஆண்டு ஆதிக்க சாதியினரின் அச்சுறுத்தலுக்குப் பயந்து சொந்த வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்டனர் ஜோதிராவ் தம்பதி. ஆதரவு தேடி அவர்கள் சென்றது, ஜோதிராவின் நண்பரான உஸ்மான் ஷேக் வீட்டுக்கு. ஆதரவின்றி நின்ற அந்த ஜோடியை அரவணைத்துக்கொண்டது உஸ்மான் ஷேக்கின் குடும்பம். அவரது வீட்டில் தம்பதிக்கு தங்க இடமும் அளித்து, அங்கேயே அவர்கள் பள்ளியைத் தொடர்ந்து நடத்தவும் ஊக்கம் தந்தார் உஸ்மான். துணை நின்றவர் அவர் தங்கை ஃபாத்திமா ஷேக். வீட்டில் அண்ணனிடம் கல்விபெற்ற ஃபாத்திமாவும் புலே தம்பதியுடன் இணைந்துகொள்ள, பள்ளி வழக்கம் போல செயல்படத் தொடங்கியது. இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் இவர்களுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்த, யாரையும் சட்டை செய்யாமல் தங்கள் பணியைச் செய்தனர் புலே தம்பதி, சகுணாபாய் மற்றும் ஃபாத்திமா.

இந்தப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய ஃபாத்திமா, `இந்தியாவின் முதல் இஸ்லாமிய ஆசிரியை' என்கிற பெருமையும் பெற்றார். `நேட்டிவ் ஃபீமேல் ஸ்கூல்’ மற்றும் `மஹர், மாங் இனத்தவருக்கான கல்வி மேம்பாட்டு சங்கம்’ என்ற இரு அமைப்புகளைத் தொடங்கி அவற்றின் மூலம் பள்ளிகளை நிர்வகித்து வந்தார்கள் சாவித்ரிபாய் மற்றும் ஃபாத்திமா.

1852 ஜனவரி 14 அன்று மகிளா சேவா மண்டல் என்ற அமைப்பை நிறுவி, அது ஏற்பாடு செய்த தில்-குல் நிகழ்ச்சியில் கணவருடன் கலந்துகொண்டார் சாவித்ரி. இந்த அமைப்பின் கூட்டங்களில் சாதி பேதம் எதுவும் இன்றி அனைத்துப் பெண்களும் பாய்களில் ஒன்றாக அமர்ந்து விவாதித்து வந்தனர். கல்வித் தொண்டாற்றிய தம்பதியைப் பாராட்டியதோடு நில்லாமல், 1852-ம் ஆண்டுக்கான சிறந்த ஆசிரியர் விருதும் வழங்கி சாவித்ரியை கௌரவித்தது ஆங்கிலேய அரசு. பள்ளிக்கு ஒருமுறை ரெவின்யூ கமிஷனர் மேற்பார்வைக்கு வர, பாடம் நடத்திக்கொண்டிருந்த சாவித்ரியின் அர்ப்பணிப்பைக் கண்டு பாராட்டினார். அவரிடம் ஆங்கிலத்திலும் சாவித்ரி பேச, பெரும் ஆச்சர்யம்கொண்டார் அவர்!

1854-ம் ஆண்டு சாவித்ரி எழுதிய கவிதைகளின் தொகுப்பான `காவ்ய புலே’ வெளியானது. கல்வி, சாதியக் கொடுமை, பாலின சமத்துவம், குழந்தை நலம் என பல்வேறு பரந்துபட்ட வெளிகளில் பயணித்தன கவிதைகள். `பவன் காஷி சுபோத் ரத்னாகர்’ என்ற அவரது கவிதைத் தொகுப்பு 1892-ம் ஆண்டு வெளிவந்தது.

1855-ம் ஆண்டு தன் பணியின் வெற்றியை ருசிக்க ஆரம்பித்தார் சாவித்ரி. 11 வயதான முக்தாபாய் என்ற இவருடைய மாணவியின் கட்டுரை ஒன்று `தியானோதயா’ என்ற இதழில் வெளியானது. `மாங் மஹரச்ய துக்விசாயி’ என்ற அந்தக் கட்டுரை, ஒடுக்கப்பட்ட மஹர் மற்றும் மாங் இன மக்களுக்கு எதிராக அன்றைய சமூகம் இழைத்த கொடுமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியது. தன் உழைப்பு பயன் தருவதை உணர்ந்தார் சாவித்ரி. குழந்தைகளுக்குக் கல்வியின் முக்கியத்துவம் புரிய வேண்டும் என்றால் பெற்றோருக்கும் கல்வியறிவு இருத்தல் வேண்டும் என்று எண்ணிய தம்பதி, பெரியவர்களுக்கான பள்ளி ஒன்றையும் வீட்டில் தொடங்கினர்.

விதவைப் பெண்களின் தலைகளை மொட்டையடிக்கும் வழக்கம் அப்போது இருந்தது. அதை எதிர்த்து சிகை திருத்துபவர்கள் விதவைகளுக்கு மொட்டை அடிக்க மறுக்க, அவர்களுக்குத் தன் ஆதரவைத் தந்தார் சாவித்ரி.

ஜோதிராவின் நண்பரான கோவந்தே என்பவரின் வீட்டில் வேலை செய்துவந்த பணிப்பெண் காஷிபாய். அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டான் உயர்சாதி ஆண் ஒருவன். கருவுற்ற அந்தப் பெண் வேறு வழியின்றி குழந்தை பிறந்ததும் அதைக் கொல்ல, கொலைக்குற்றம் சாட்டப்பட்டு அந்தமானின் காலாபானி சிறைக்கு அனுப்பப்பட்டாள் அந்த அபலை. இந்த செய்தி அறிந்து மிகுந்த மனவருத்தம் கொண்டார் சாவித்ரி.

அதன் விளைவாக, பெண் சிசுக்கொலையைத் தடுக்க கஞ்ச் பேத்தில் உள்ள தன் வீட்டிலேயே கைவிடப்பட்ட சிசுக்களுக்கு `பால்ஹத்தியா பிரதிபந்தக் கிருஹம்’ என்ற இல்லம் ஒன்றை அமைத்தார். தங்களுக்குக் குழந்தை இல்லாத காரணத்தால், அதே இல்லத்தில் கைவிடப்பட்ட யஷ்வந்த் என்ற குழந்தையைத் தத்தெடுத்தனர் தம்பதி. ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம் என்று உயர்சாதியினர் சங்கங்கள் அமைக்கத் தொடங்கிய காலகட்டத்தில் சத்யசோதக சமாஜம் என்ற அமைப்பை 1873 செப்டம்பர் 24 அன்று ஒடுக்கப்பட்ட சாதியினர் நலனுக்காகத் தொடங்கினர் தம்பதி.

இந்த அமைப்பின் மூலம் அந்தணர் உதவியின்றி, வரதட்சணையின்றி புரட்சிகரத் திருமணங்களை நடத்தினர். `கடவுளின் முன் அனைவரும் சமம்; கடவுளைத் தொழ நடுவே பூசாரியோ குருவோ தேவையில்லை' என்று அறிவித்தது சத்யசோதக சமாஜம். அவ்வாறு மணம் செய்துவைக்கப்பட்ட முதல் ஜோடி சாவித்ரியின் தோழி பாஜுபாயின் மகள் ராதா மற்றும் சீதாராம் ஜபஜி ஆல்ஹத். மகன் யஷ்வந்த்துக்கும் இதே அமைப்பின் மூலம் திருமணம் செய்வித்தனர்.

1877-ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தில் கடும் பஞ்சம் நிலவியது. வட்டிக்குக் கடன் தருபவர்கள் கொழுக்க, ஏழைகளோ உண்ண உணவின்றி மடிந்தனர். கணவருக்கு மிகுந்த வருத்தத்துடன் கடிதம் எழுதினார் உடல்நிலை சரியில்லாமல் தம்பி வீட்டில் ஓய்வில் இருந்த சாவித்ரி. சத்யசோதக அமைப்பினர் தங்களால் முடிந்த உணவுப் பொருள்களை மக்களைச் சந்தித்து வழங்கிவந்தனர். ஒரு நேரத்தில் இவர்களில் 50 பேரை கலகக்காரர்கள் என்று அரசு பிடித்துவைக்க, அன்றைய கலெக்டரிடம் நேரில் சென்று போராடி அவர்களை மீட்டார் சாவித்ரி. தங்கவாடி பகுதியில் பசியால் வாடிய மக்களுக்கு உணவளிக்க விக்டோரியா பாலாசிரமம் என்ற அமைப்பையும் உருவாக்கினர் இந்தத் தம்பதி.

1890-ம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு இறந்தார் ஜோதிராவ். அவரது சிதைக்கு யார் தீ மூட்டுவது, தத்துப் பிள்ளையா அல்லது குடும்பத்தில் வேறு ஒருவரா என்கிற விவாதம் இடுகாட்டில் நடைபெற்றுக்கொண்டிருந் தது. எதையும் சட்டை செய்யாத சாவித்ரி, கொள்ளியைக் கையில் எடுத்து, தன் கணவரின் சிதைக்கு தானே தீ மூட்டினார். கூடியிருந்த மக்கள் அனைவரும் அதிர்ந்து போயினர். அவர்கள் அனைவரையும்விட, ஜோதிராவின் மனைவியான தனக்கே உரிமை அதிகம் என்று மட்டும் பதில் சொல்லி அங்கிருந்து அகன்றார் சாவித்ரி. அதன்பின் நடைபெற்ற சத்யசோதக சமாஜத்தின் கூட்டங்கள் அனைத்தும் சாவித்ரியின் தலைமையில் நடைபெற்றன. தன் சொந்த சோகம் சமூகப் பணியை எந்த விதத்திலும் பாதிக்காமல் பார்த்துக்கொண்டார் சாவித்ரி.

1897-ம் ஆண்டு கொடிய பிளேக் நோய் மகாராஷ்டிரத்தைத் தாக்கியது. இரண்டு ஆண்டுகள் நோய் மீட்புப் பணியைச் செய்து வந்தார் சாவித்ரி. அவரின் மகன் யஷ்வந்த் மருத்துவமனை ஒன்றை நிறுவி பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சையளித்து வந்தார். பாண்டுரங்க பாபாஜி கெயிக்வாட் என்பவரின் பிஞ்சுக் குழந்தைக்கு பிளேக் நோய் தாக்கியிருக்கிறது என்ற செய்தி சாவித்ரியை அடைந்தது. முந்த்வா நகரின் மஹர் இனமக்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று அந்தக் குழந்தையைத் தோளில் தூக்கிக்கொண்டு மகன் யஷ்வந்த் நடத்திய மருத்துவமனைக்கு வந்தார் சாவித்ரி. அவரையும் பிளேக் நோய் இறுகப் பற்றிக்கொண்டது. சிகிச்சை பலனின்றி 1897-ம் ஆண்டு மார்ச் 10 அன்று மரணமடைந்தார் சாவித்ரி.