22 தங்கப் பெண்கள்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

மனதில் உறுதி வேண்டும்!

Jothi
பிரீமியம் ஸ்டோரி
News
Jothi

அர்ப்பணிப்பு

பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் ஜோதி. இவர் 10 வயதில் இருந்தபோது தாயும் நான்கு மூத்த சகோதரிகளும் மனநல பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து குடும்பத்தில் ஏற்பட்ட வறுமை, துயரங்கள், போராட்டங்கள் என அனைத்தையும் தனியொருத்தியாகச் சமாளித்துவருகிறார்.

ஜோதியின் குடும்பம், ஒருகாலத்தில் சாயப்பட்டறைகள் வைத்து நடத்திக்கொண்டிருந்த வசதியான குடும்பம். ஒருகட்டத்தில் அவரது வீட்டில் ஒவ்வொருவராக மனநல பாதிப்புக்கு உள்ளாகி யிருக்கிறார்கள். பில்லி சூனியம் என அச்சத்தில் பரிகாரங்கள் செய்திருக்கிறார் ஜோதியின் அப்பா. மருத்துவம் பார்த்திருக்கிறார்கள். எதுவுமே பலனளிக்கவில்லை. குடும்பச்சூழலால் ஜோதியின் அப்பாவால் தொழிலை சரிவர கவனிக்கமுடியாமல் போகவே பெரிய நஷ்டங்களைச் சந்தித்திருக்கிறார். கடைசியில் கடன்சுமையால் நடுத்தெருவுக்கே வந்திருக்கிறது ஜோதியின் குடும்பம்.

``நான் சின்ன வயசா இருந்தப்ப இரண்டாவது அக்காவுக்குக் காய்ச்சல் வந்து, அதுல குணமடைஞ்சதும் மனநலப் பிரச்னையால அவதிப்பட்டாங்க. எப்போதும் தற்கொலை மனநிலையிலேயே இருந்ததால் அவங்களை வீட்டுக்குள்ளேயே வெச்சுப் பாதுகாத்தோம். ஒரு வருடத்துக்குப் பிறகு மூத்த அக்காவுக்கும் அதே போல காய்ச்சல் ஏற்பட்டு மனநலம் பாதிச்சுருச்சு. எங்கப்பா வெளியிலேயே போகாமல் அம்மாவோடு சேர்ந்து அக்காக்களைப் பார்த்துக்கிட்டாங்க. கொஞ்ச நாளில் மூணாவது அக்காவுக்கும் மனநலப் பிரச்னை வந்திருச்சு. வேற வழியில்லாமல், வருமானத்துக்காக அண்ணன், படிப்பை நிறுத்திட்டு கொத்தனார் வேலைக்குப் போக ஆரம்பிச்சாங்க. நான் ஏழாவது படிக்கிறப்ப, அம்மாவுக்கும் மனநல பாதிப்பு ஏற்பட்டுடுச்சு.

ஜோதி
ஜோதி

அப்பாதான் எல்லாரையும் தனியாளா பார்த்துக் கிட்டார். வீட்டில் வறுமை தாண்டவமாட, சொந்த வீட்டை விற்றோம். அக்காக்கள் பிரச்னையால மூணு மாசத்துக்கு ஒரு தடவை வீடு தேடி அலைய ஆரம்பிச்சோம்.

நான் எட்டாவது படிக்கும்போது எங்கம்மா இறந்துட்டாங்க. அடுத்தடுத்து இரண்டு அக்காவும் இறக்க, நான் நொறுங்கிப் போயிட்டேன். அண்ணன் கல்யாணத்துக்கு அப்புறம் தனியா போயிட்டார். ஸ்கூல் போகாம வீட்டுலேயே முடங்கியிருந்த என்னை என் டீச்சர்ஸ்தான் மீட்டெடுத்தாங்க. ஸ்கூல் படிக்கிறப்ப டியூசன் எடுத்த வருமானத்தை வெச்சு வீட்டை சமாளிச்சேன்.

ஒருவழியா, எம்.எஸ்ஸி வரை படிச்ச நான் இப்ப கம்ப்யூட்டர் ஆபரேட்டரா வேலை செய்றேன். மாசம் 5,000 ரூபாய் சம்பளம் கிடைக்குது. இப்போதைக்கு அக்காக்களையும் அப்பாவையும் பத்திரமா பார்த்துக்கறதில் கவனமா இருக்கேன். சீக்கிரத்திலேயே அக்காக்களை நல்ல ஆஸ்பத்திரி யில் சேர்த்துக் குணமாக்கணும்’’ - படபடவெனப் பேசுகிற ஜோதியின் கண்களில் நீர் துளிர்க்கிறது.