Published:Updated:

“உதவுற மனம் இருந்தா போதும்... திசையெங்கும் மகிழ்ச்சியைப் பரப்பலாம்!”

ரம்யா நாகேஸ்வரன்
பிரீமியம் ஸ்டோரி
ரம்யா நாகேஸ்வரன்

ரம்யா நாகேஸ்வரனின் அன்பு பாலம்

“உதவுற மனம் இருந்தா போதும்... திசையெங்கும் மகிழ்ச்சியைப் பரப்பலாம்!”

ரம்யா நாகேஸ்வரனின் அன்பு பாலம்

Published:Updated:
ரம்யா நாகேஸ்வரன்
பிரீமியம் ஸ்டோரி
ரம்யா நாகேஸ்வரன்

“இந்தச் சமூகத்துல உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம்னு அத்தியாவசியத் தேவைகள்கூட சரிவர கிடைக்காம சிரமப்படுற எத்தனையோ நபர்களைச் சந்திக்கிறோம். அவங்களுக்கு பணமாகவோ, பொருளாகவோதான் உதவி செய்யணும்னு அவசியமில்லை. மனசுக்கு இதமளிக்கிற வார்த்தைகளை உள்ளன்புடன் பேசுறது, கல்வி போதிக்கிறதுனு நம்மால இயன்ற சின்னச் சின்ன விஷயங்கள்கூட பலருக்கும் பேருதவியா அமையலாம்!”

இயலாமையில் இருப்பவர்களின் வாழ்க்கை யில் புது விடியலை ஏற்படுத்துவதற்கான நல் வாய்ப்புகளை, உள்ளத்தின் ஆழத்திலிருந்து கூறுகிறார் ரம்யா நாகேஸ்வரன். மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரனின் மனைவியான ரம்யாவின் பூர்வீகம், சென்னை. சட்டப்படிப்பு முடித்து, சுவிட்சர்லாந்தில் வங்கி மேலாளராகப் பணியாற்றியவர். தன் குழந்தைகளின் நலனுக் காக வேலையிலிருந்து விலகி, சிங்கப்பூரில் குடியேறியவர், ‘மனம் இருந்தால் மார்க்கம் உண்டு’ என்பதற்கு உதாரணமாய், சமூக பொறுப்புணர்வுள்ள மனங்களை இணைக்கும் பணியைச் செய்துவருகிறார். சமீபத்தில் சென்னை வந்திருந்த ரம்யாவைச் சந்தித்துப் பேசினோம்.

“உதவுற மனம் இருந்தா போதும்... திசையெங்கும் மகிழ்ச்சியைப் பரப்பலாம்!”

“20 வருஷங்களுக்கு முன்னாடி, 25 நண்பர் களுடன் இணைஞ்சு ‘கிவிங் சர்கிள்’ கான் செப்டுல ஒரு குழுவை ஆரம்பிச்சோம். நாங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாசமும் குறைந்தபட்சம் 20 டாலர்கள் கொடுப்போம். இந்தச் சேமிப்பை, இந்தியா மற்றும் சிங்கப் பூர்ல இருக்கும் பல்வேறு தொண்டு நிறுவனங்களின் பயனுள்ள செயல்பாடு களுக்குக் கொடுத்திட்டிருந்தோம். 15 வருஷங் கள்ல 300-க்கும் அதிகமானவங்க எங்கக் குழுவுல இணைஞ்சாங்க. மனசுக்கு நிறைவான ஏராளமான பணிகளை எங்களால செய்ய முடிஞ்சது” - சிறு விதையாகத் தொடங்கிய இந்த அறப்பணி, இப்போது கிளைகள் விரித்து, பெரிய மாற்றங்களை உருவாக்கி யிருக்கிறது.

விழிச்சவால் உடையவர்கள் சுயதொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்குவது, ஆதரவற்ற பிள்ளைகளின் அவசியத் தேவைகளுக்கு உதவுவது போன்ற பல்வேறு பணிகளையும் இந்தக் குழுவினர் மேற்கொண்டுள்ளனர். ஒருகட்டத்தில் அந்தக் குழு கலைக்கப்பட்டதும், தன் தோழிகள் ஷோபா மற்றும் தமயந்தியுடன் இணைந்து ரம்யா தொடங்கிய புது முயற்சிதான், ‘பிரிட்ஜபிள்’ இயக்கம். நேரம் ஒதுக்க முடியாவிட்டாலும், நிதியுதவி செய்ய விருப்பமுள்ளவர்களையும், அவர்கள் உதவி செய்ய விருப்பப்படும் துறை சார்ந்த தொண்டு நிறுவனங்களையும் இணைக்கும் பாலமாகச் செயல்படுவதுதான் இந்த இயக்கத்தின் நோக்கம்.

“உதவுற மனம் இருந்தா போதும்... திசையெங்கும் மகிழ்ச்சியைப் பரப்பலாம்!”

“வாழுற நாட்டுக்கும் பிறந்த நாட்டுக்கும் ஒருங்கிணைந்த சேவைப் பணிகளைச் செய்யணும்ங்கிற எங்க விருப்பத்துக்கு, சிங்கப்பூர்ல வசிக்கிற இந்தியர்கள் பலரும் தன்னார்வலர்களா கரம் கொடுத்து பலம் சேர்த்தாங்க. தர்மபுரி மாவட்டத்துல செயல்படுற ‘சிட்லிங்கி இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு’ங்கிற அமைப்பு, பழங்குடி மக்களை இயற்கை விவசாயம் செய்ய ஊக்கப்படுத்தி, அவங்களோட விளைபொருள்களை உரிய விலைகொடுத்து கொள்முதல் செய்யுது. மகாராஷ்டிராவுல இயங்குற ஓர் அமைப்பு, பெற்றோரைப் பிரிஞ்சு ரயில் மூலமா வெளியூர்களுக்குத் திசைமாறிப் போகிற குழந்தைகளை மீட்டு நல்வழிப்படுத்துற வேலையைச் செய்யுது. இதுபோன்ற பல அமைப்புகளுடன் இணைஞ்சும், சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஆதரவுடனும் எங்களோட அன்பு பாலத்தை விரிவுபடுத்திகிட்டிருக்கோம்” என்கிறார் மன மகிழ்ச்சியுடன்.

வளர்ந்த நாடான சிங்கப்பூரில் மூத்த குடிமக்கள் பலரும் தனியாக வசிக்கின்றனர். அவர்களில் வேலைக்குச் செல்ல முடியாமல், பொருளாதார ரீதியாகச் சிரமப்படுபவர் களுக்கு, அந்த நாட்டின் அரசாங்கத்தால், மளிகை மற்றும் மருந்துப் பொருள்கள் வழங்கப்படுகின்றன. இந்த உதவியைப் பயனாளர்களிடம் கொண்டு சேர்க்கும் தன்னார்வப் பணியையும், ரம்யாவின் குழுவினர் செய்துவருகின்றனர். மேலும், மூத்த குடிமக்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, மனம்விட்டுப் பேசி அவர்களின் மன பாரங்களைப் போக்குவது, ‘Fair for all’ என்ற முன்னெடுப்பின் மூலம் தொண்டு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் கைவினைப் பொருள்களை விற்பனை செய்வது உள்ளிட்ட செயல்பாடுகளின் மூலம் நல்ல உள்ளங்களை இணைக்கும் பணிகளையும் செய்துவருகிறது ‘பிரிட்ஜபிள்’ இயக்கம்.

 திருவண்ணாமலையைச் சேர்ந்த `வைல்டு ஐடியாஸ்' அமைப்பின் குழுவினருடன் ரம்யா நாகேஸ்வரன்...
திருவண்ணாமலையைச் சேர்ந்த `வைல்டு ஐடியாஸ்' அமைப்பின் குழுவினருடன் ரம்யா நாகேஸ்வரன்...

கூட்டு முயற்சியால் இல்லாமை மற்றும் இயலாமையைப் போக்க முடியும் என்று அக்கறையுடன் கூறும் ரம்யா, “சிங்கப்பூர்ல இருக்கிற ஒரு கோயில்ல பக்தர்கள் காணிக்கையா கொடுக்கிற துணிகளை, கோயில் நிர்வாகம் எங்ககிட்ட கொடுப்பாங்க. அதுல காட்டன், கதர் ஆடைகளைப் பிரிச்சு, சிங்கப்பூர்லயும் தமிழ்நாட்டுலயும் செயல்படுற சில தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்புவோம். அவங்க மூலமா, சிறப்புக் குழந்தைகள் மற்றும் கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரியில பிறக்கும் பச்சிளம் குழந்தைகளோட தேவைகளுக்கு அந்த ஆடைகள் கொடுக்கப்படுது. இது மாதிரியான பயன்பாட்டுக்கு ஜரிகை துணிகள் உதவுறதில்லை.

எனவே, காணிக்கையாவும் பரிசாவும் கொடுக்க, ஜரிகை அல்லாத காட்டன் மற்றும் கதர் ஆடைகளைப் பயன்படுத்தினா, அது பலருக்கும் உதவும். தவிர, நாம பயன்படுத்தின பழைய புக்ஸ், டிரஸ், அலங்காரப் பொருள்கள், கம்பளி, ஷூ... இதுமாதிரியான பழைய பொருள்கள் பலவுமே நிறைய பேருக்குப் பயன்தரும்.

நம்ம சக்திக்கு ஏத்த மாதிரி, பணமோ பொருளோ கொடுத்து கஷ்டப்படுறவங்களுக்கு உதவுறதை வழக்கப்படுத்திக்கலாம். சமயத் துல நாம செலவிடுற நேரம்கூட சிலருக்கு மதிப்புமிக்கதா அமையலாம். காப்பகங்கள்ல வாழுற ஆதரவற்ற குழந்தைகள், பெரியவர்கள், மூத்த குடிமக்கள்னு பலர்கிட்டயும் நாம நேரம் ஒதுக்கி, அன்போடு பேசுறது மூலமா அவங்களோட பிரச்னைகளைப் போக்க முடியும். உதவுற மனம் இருந்தாலே போதும், பலருடைய வாழ்க்கையைப் புதுப்பிக்கலாம்” - எல்லோருக்கும் சாத்தியமான நற்பண்புகளை வலியுறுத்தி முடிக்கிறார் ரம்யா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism