லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

புத்துயிர்ப்பு: உங்கள் கரம் எனக்குத் தேவையில்லை!

புத்துயிர்ப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
புத்துயிர்ப்பு

மார்க்ரெட்

ளர்ந்த உடலோடும் உடைந்த இதயத்தோடும் தனிமையில் கிடந்து அரற்றுகிறான் டாக்டர் ஃபௌஸ்ட்.

உலகிலுள்ள அறிவையெல்லாம் தேடித் தேடித் திரட்டிக்கொண்டிருந்த நான், உலகின் இன்பங்களையெல்லாம் அள்ளி அள்ளிப் பருகிக்கொண்டிருந்த நான் இன்று காய்ந்த சருகு போல விழுந்துகிடக்கிறேன். அழகைக் காண இயலாது என்றாகிவிட்ட நிலையில் எனக்கு எதற்கு இனி கண்கள்? இன்பத்தை அனுபவிக்கமுடியாத இந்த உடல் இருந்தென்ன லாபம்? சோர்ந்துகிடக்கும் இந்த மூளைக்குள் இனி அறிவின் ஒளி புகுமா? ஓ, கடவுளே! என்னை ஏன் இப்படி நீங்கா இருளில் தள்ளினாய்? ஏன் வயோதிகத்தையும் பிணியையும் என்மீது திணித்தாய்?

வெறுத்துப்போன ஃபௌஸ்ட் நஞ்சிடம் சரணடையத் துணிகிறான். அந்த நேரம் பார்த்து தோன்றுகிறது மெஃபிஸ்டோபெலஸ் என்னும் வேதாளம். `கடவுள் கைவிட்டால் என்ன, நான் உன்னை மீட்டெடுக்கிறேன் வா' என்று பற்களைக் காட்டி இளிக்கிறது வேதாளம். `உனக்கு அந்த ஆற்றல் இருக்கிறதா...' என்று ஃபௌஸ்ட் கேட்க, `அதிலென்ன சந்தேகம்... உனக்கு என்ன வேண்டும் சொல்' என்கிறது வேதாளம். `என் இளமையை மீட்டுத் தா' என்கிறான் ஃபௌஸ்ட். வேதாளத்தின் விரலசைப்பில் ஃபௌஸ்ட் இளைஞனாக மாறுகிறான். உலக உல்லாசங்களிலெல்லாம் திளைக்கிறான். நிழலாகப் பின்தொடரும் வேதாளம் குறிப்பிட்ட காலம் நிறைவடைந்ததும் ஃபௌஸ்டை நரகத்துக்கு இழுத்துச் சென்று விடுகிறது.

வாய்மொழிக் கதை, பாடல், கவிதை, பொம்ம லாட்டம், மேடை என்று ஃபௌஸ்ட்டின் கதை 16-ம் நூற்றாண்டு தொடங்கி இன்றுவரை பல வடிவங்களில் செழிந்து வளர்ந்து வந்திருக்கிறது. அவற்றுள் புகழ்பெற்றது 19-ம் நூற்றாண்டு ஜெர்மானிய இலக்கியவாதியான கதே இயற்றிய மாபெரும் காவியமான ‘ஃபெளஸ்ட்’. இதன் முதல் பாகம் 1808-ம் ஆண்டும் இரண்டாம் பாகம் கதேயின் மரணத்துக்குப் பிறகு 1832-ம் ஆண்டும் வெளிவந்தன.

தனது காவிய நாயகனைப் போலவே அறிவையும் அழகையும் இரு கண்கள் போல வழிபட்டவர் கதே. தள்ளாடும் வயதிலும் இளம்பெண்கள்மீது காதல் வயப்பட்டுக்கொண்டே இருந்தார் அவர். `மூச்சு இருக்கும்வரை காதலிப்பேன். காதலிக்கும்வரைதான் எனக்கு மூச்சு இருக்கும்' என்பார். இப்படிப்பட்ட கதே ஃபௌஸ்டின் கதையை எழுதினால் அதில் ஓர் இளம் பெண் இல்லாமல் போவாரா?

புத்துயிர்ப்பு: உங்கள் கரம் எனக்குத் தேவையில்லை!

வழக்கமாகத்தான் தொடங்குகிறார் கதே. தற்கொலைக்குத் துணியும் ஃபௌஸ்டின் முயற்சியைத் தடுத்து நிறுத்தி அவனை இளைஞனாக மாற்றுகிறது மெஃபிஸ்டோபெலஸ் என்னும் வேதாளம். ஓர் ஒப்பந்தத்தையும் போட்டுக்கொள்கிறது. அதன்படி ஆரம்பத்தில் வேதாளம் ஃபௌஸ்டின் ஏவலாளியாக இருக்கும். வாழ்வின் இன்பங்களையெல்லாம் அனுபவித்து முடித்த பிறகு வேதாளத்துக்குத் தன் ஆன்மாவை ஃபௌஸ்ட் விற்றுவிட வேண்டும். ஃபௌஸ்ட் ஒப்புக்கொள்கிறான்.

உடனே இன்ப உலகின் கதவுகள் அவனுக்காகத் திறக்கின்றன. ஒரு நாள் விருந்தொன்றில் கலந்துகொள்ளும்போது மார்க்ரெட் (இன்னொரு பெயர் கிரெட்ச்சென்) எனும் இளம்பெண்ணைக் கண்டு காதலில் விழுகிறான் ஃபௌஸ்ட். `வேதாளமே, இவள்தான் என் வாழ்க்கை. எனக்கு இவளைக் கொடு' என்று கட்டளையிடுகிறான் ஃபௌஸ்ட். `ஹாஹா, உலகைக் கரைத்துக் குடித்த மேதாவியான உனக்கு ஒரு பெண்ணை மயக்கத் தெரியாதா என்ன...' என்று ஏளனம் செய்கிறது வேதாளம். சரி, நாமே முயற்சி செய்வோம் என்று தனிமையிலிருக்கும் மார்க்ரெட்டை நெருங்குகிறான் ஃபௌஸ்ட். அவள் வீட்டுக்குக் கிளம்பும் நேரம் அது. ஒரு கணவானைப் போல ஒய்யாரமாகத் தன் கரத்தை நீட்டுகிறான் ஃபௌஸ்ட். ‘அழகிய பதுமையே, நான் வேண்டுமானால் உன்னை அழைத்துச் செல்லட்டுமா?’

எங்கள் வீடு சிறியது. சிறியது என்றாலும் கவனித்துக்கொள்ள வேண்டும் அல்லவா... வீட்டு வேலை செய்ய ஒருவரும் இல்லை. நான்தான் சமைக்க வேண்டும். நான்தான் துடைத்து, சுத்தப்படுத்த வேண்டும். துவைப்பது, துணி தைப்பது எல்லாமே நான்தான். பரபரப்பாக ஓடிக்கொண்டிருப்பேன்.

‘நான் பதுமையும் இல்லை. வெளியில் செல்ல எனக்கு உதவியும் தேவைப்படாது’ என்று ஃபௌஸ்டின் நீட்டிய கரத்தைத் தீண்டாமல் கடந்து செல்கிறாள் மார்க்ரெட். ஏமாற்றமடைந்த ஃபௌஸ்ட் வேதாளத்தை அதட்டுகிறான். வேதாளம் மார்க்ரெட்டை மந்திரம் போட்டு மயக்குகிறது. அடுத்த சந்திப்பில் ஃபௌஸ்டோடு நெருங்கிவிடுகிறாள் மார்க்ரெட். உற்சாகமடைந்த ஃபௌஸ்ட், ‘வீட்டில் தனியாகத்தான் இருக்கிறாயா அழகியே?’ என்று கிறங்குகிறான்.

‘ஆமாம். எங்கள் வீடு சிறியது. சிறியது என்றாலும் கவனித்துக்கொள்ள வேண்டும் அல்லவா... வீட்டு வேலை செய்ய ஒருவரும் இல்லை. நான்தான் சமைக்க வேண்டும். நான்தான் துடைத்து, சுத்தப்படுத்த வேண்டும். துவைப்பது, துணி தைப்பது எல்லாமே நான்தான். பரபரப்பாக ஓடிக்கொண்டிருப்பேன். அம்மா விரட்டிக்கொண்டே இருப்பார். சகோதரன் போருக்குப் போய்விட்டான். தங்கை சிறு வயதில் இறந்துவிட்டாள். இப்போது வீடு அமைதியாக இருக்கிறது. நான் தனியாகவே இருக்கிறேன்.’

ஃபௌஸ்டின் காதுகளில் எதுவும் விழுவதாக இல்லை. ‘நீ ஒரு தேவதை, மார்க்ரெட்’ என்று அவன் முனகுகிறான். ‘என் தங்கை பிறக்கும்போதே அப்பா தவறிவிட்டார். மெள்ளதான் மீளமுடிந்தது அம்மாவால். நான்தான் என் தங்கையைக் குழந்தையைப் போல் கவனித்துக்கொண்டேன். கையில் வைத்து தாலாட்டுவேன். அவளைத் திரும்பப் பெறுவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வேன்.’

புத்துயிர்ப்பு: உங்கள் கரம் எனக்குத் தேவையில்லை!

காதலியின் உதடுகள் அழகாக அசைவதை மட்டுமே ஃபௌஸ்ட் காண்கிறான். ‘மகிழ்ச்சி என்றால் நீதான் மார்க்ரெட்’ என்கிறான். ‘என் வாழ்வில் வருத்தமான பொழுதுகளே அதிகம்’ என்கிறாள் மார்க்ரெட். அதற்குப்பிறகு கதை எங்கெங்கோ போகிறது, என்னென்னவோ நடக்கிறது. `இந்தா இதை உன் அம்மாவுக்குக் கொடு. இதை அருந்தினால் அவள் உறங்கிவிடுவாள்' என்று சொல்லி ஒரு சீசாவை அளிக்கிறான் ஃபௌஸ்ட். மார்க்ரெட் அவ்வாறே செய்கிறாள்.

அவர்கள் தினமும் சந்தித்துக் கொள்கிறார்கள். புது வாழ்வைத் தொடங்குவோம் என்று மார்க்ரெட் நினைக்கும்போதே அவள் கனவு கொடூரமாகக் கலைக்கப்படுகிறது.

மார்க்ரெட் கர்ப்பமடைகிறாள். மயக்கமூட்டுவதற்குப் பதில் ஒரு நாள் மருந்து அம்மாவைக் கொன்றுவிடுகிறது. போரிலிருந்து திரும்பும் சகோதரனோடு மோதும் ஃபௌஸ்ட் வேதாளத்தின் உதவியோடு அவனை வீழ்த்துகிறான். தான் உண்டாக்கிய குழப்பங்களைக் கண்டு அஞ்சி மார்க்ரெட்டைப் பிரிந்து ஓடி மறைகிறான்.

திருமணத்துக்கு முன்பு ஆடவரோடு பழகுவது குற்றமென மார்க்ரெட் ஊர் மக்களால் ஒதுக்கப்படுகிறாள். குழந்தை என்னவோ நல்லவிதமாகத்தான் பிறக்கிறது என்றாலும், மார்க்ரெட்டின் மனம் சிதைந்துபோகிறது. இந்த மோசமான உலகில் என் குழந்தை தனியாக வாழ்ந்து என்ன செய்யப்போகிறது என்று அள்ளி எடுத்துக்கொண்டு போய் தூய்மைப் படுத்துகிறேன் என்று சொல்லி புனித நீருக்குள் முக்கி முக்கியெடுக்க, குழந்தை இறந்துவிடுகிறது. மார்க்ரெட் சிறையில் தள்ளப்படுகிறாள்.

எங்கோ உள்ள ஃபெளஸ்ட் செய்தி கேட்டதும் வேதாளத்தின் உதவியோடு மந்திர சாவியைப் பெற்றுக்கொண்டு விரைந்து வருகிறான். கம்பிகளுக்குப் பின்னால் சுரண்டுகிடக்கும் மார்க்ரெட்டைப் பார்க்கும்போது தன் காதல் எப்படியெல்லாம் அவளைச் சீரழித்திருக்கிறது என்பது ஃபௌஸ்டுக்குப் புரிகிறது. விரைந்து வா அன்பே நாம் தப்பிடுவோம் என்று தன் கரத்தை நீட்டுகிறான். எனக்கான தண்டனையை நான் பெறுவேன் என்று சொல்லி ஃபௌஸ்டின் உதவியை மறுத்துவிடுகிறாள் மார்க்ரெட். அவளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. கடவுள் வேதாளத்தின் பிடியிலிருந்து ஃபௌஸ்ட்டை விடுவிக்கிறார். இறுதிக் காட்சியில் மார்க்ரெட்டும் தேவதைகளால் மீட்டெடுக்கப்படுகிறார். அவள்மீதான பழி மறைகிறது.

விரிந்து விரிந்துசெல்லும் கிளைச் சம்பவங் களையெல்லாம் கடந்துவிட்டோமானால் அடிப்படைக் கதை இதுதான். கதே திட்டமிட்டு இதைச் செய்தாரா என்று தெரியவில்லை. ஆனால், அவர் காவியத்தில் எல்லாவிதங்களிலும் ஃபௌஸ்டைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மார்க்ரெட் பல மடங்கு உயர்ந்து நிற்கிறாள். கதாநாயகன் என்றாலும் ஆரம்பம் முதல் இறுதிவரை ஃபௌஸ்ட் செயலற்றவனாகவே இருக்கிறான். நேருக்கு நேர் சவால் விடும் ஓர் இளைஞனோடு போரிடுவதற்கு மட்டுமல்ல, ஒரு பெண்ணைக் காதலிப்பதற்கும்கூட அவனுக்கு வேதாளத்தின் உதவி தேவைப்படுகிறது.

உலக அறிவையெல்லாம் கரைத்துக் குடித்த அதிமேதாவி இப்படியென்றால் எளிமையான, கல்லாத கிராமத்துப் பெண்ணான மார்க்ரெட்டோ சுயமாகச் சிந்திக்கக்கூடியவளாகவும் செயலாற்றக் கூடியவளாகவும் இருக்கிறாள்.

`உங்கள் காதல் கரம் தேவையில்லை' என்று முதல் சந்திப்பில் மறுத்ததைப் போலவே, `நீங்கள் அளிக்கும் மீட்சி தேவையில்லை' என்று இறுதிச் சந்திப்பிலும் அவளால் ஃபௌஸ்டின் கரங்களைத் தட்டிவிடமுடிகிறது.

எது என்னை மயக்கத்தில் தள்ளியதோ அதுவேதான் என்னைக் கொன்று கொண்டிருக்கிறது. காதல் என்னும் வலைக்குள் சிக்குண்டிருப்பதும் வேதாளத்தின் சிறகுகளுக்குள் அடைபட்டுக்கிடப்பதும் ஒன்றுதான். என்னைப் பொறுத்தவரை ஃபௌஸ்டும் வேதாளமும் வெவ்வேறான வர்கள் அல்லர். எனக்கு அப்பாற்பட்ட உலகின்மீது, என்னால் கட்டுப்படுத்த இயலாத சக்திகளின்மீது பழியைப் போட்டு தப்பித்துக்கொள்ள நான் விரும்பவில்லை. என் செயல்களுக்கு நானே பொறுப்பு. இன்பம் வரும்போது எப்படி ஏற்கிறேனோ அவ்வாறே துன்பத்தையும் நான் துணிந்து ஏற்கிறேன்.

ஃபௌஸ்டைப் போல மார்க்ரெட்டைக் கைவிடுவதற்கு மனமில்லை கதேவுக்கு. இறைவனின் கதகதப்பூட்டும் கரங்களுக்குள் அவளை அவர் அனுப்பிவைக்கிறார். மரபுப்படி நரகத்துக்குச் செல்லவேண்டிய ஃபௌஸ்டையும் அல்லவா கதே மீட்டெடுத்திருக்கிறார். அது ஏன் என்பதற்கான விடையை யூகிப்பது எளிது.

தன் ஆன்மாவை விற்க மறுத்த, இறுதிவரை சமரசம் செய்துகொள்ளாத ஒரு வலுவான பெண்ணின் காதலைத் தகிடுதத்தங்கள் செய்தேனும் கண நேரங்கள் வென்றெடுத்தான் அல்லவா?

அதுதான் ஃபௌஸ்டின் சாபங்களைக் கரைத்திருக்கிறது. மார்க்ரெட் மட்டும் இல்லாமல் போயிருந்தால் வேதாளம் அவனை நரகத்தின் படுகுழிகளுக்குள் கொண்டு சென்றிருக்கும். நமக்கொரு காவியம் கிடைத்திருக்காது.