22 தங்கப் பெண்கள்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

சொன்ன சொல்லைக் காப்பாற்றணும்!

ப்ரியா ஸ்ரீதர்
பிரீமியம் ஸ்டோரி
News
ப்ரியா ஸ்ரீதர்

வெற்றிக் களம்

வீட்டுக்குள் நுழைந்ததும் ‘தி வுமன் ஹூ ரூல் இந்தியா’ என்ற புத்தகம் வரவேற்கிறது. அறைகொள்ளாமல் அலங்கரிக்கின்றன சான்றிதழ்களும் அங்கீகாரங்களும். இவையே ப்ரியாவை அறிமுகம் செய்துவிடுகின்றன... அவரைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. ரியல் எஸ்டேட் துறையில் அரிதினும் அரிதாக நாம் காண்கிற பெண் முகங்களில் ஒருவர் ப்ரியா. 55 வயதில் அவரின் சுறுசுறுப்பும் வேலையின் மீதான நேசமும் பிரமிக்கவைக்கின்றன.

``வைஸாக்ல பி.காம் முடிச்சிட்டு, சி.ஏ பண்ணிட்டிருந்தேன். காலேஜ் டாப்பர், ஒரு கம்பெனியில ஆர்ட்டிகிள்ஷிப் பண்ணிட்டிருந்தேன். குடும்பச் சூழல் காரணமா திடீர்னு எனக்குக் கல்யாணம் பண்ணிவெச்சிட்டாங்க. என் கணவர், என் அம்மாவின் தம்பி. கல்யாணத்துக்குப் பிறகு குடும்பம், உறவினர்களைப் பார்த்துக்கிறது, குழந்தைகள்னு வேற மாதிரியான பொறுப்புகள் வந்தன. தற்காலிகமா என் கரியர் கனவுகளைத் தள்ளிவைக்க வேண்டிய நிர்பந்தம். என் கணவர் அட்வர்ட்டைசிங் துறையில் இருந்தார். சில வருஷங்கள் கழிச்சு என் கணவரின் பிசினஸில் அப்பப்போ சின்னச்சின்ன உதவிகளைப் பண்ண ஆரம்பிச்சேன். அவருடைய பிசினஸ் தொடர்பா இளைஞர்களுக்கு நான் சாஃப்ட் ஸ்கில்ஸிலும் சேல்ஸிலும் டிரெயினிங் கொடுப்பேன். பத்து வருஷங்கள் இப்படியே கடந்தன. ஒரு மீட்டிங்ல ஒரு ரியல் எஸ்டேட் புரோக்கர் கம்பெனியின் அறிமுகம் கிடைச்சது. ‘நீங்க ஏன் ரியல் எஸ்டேட் பிசினஸ் ட்ரை பண்ணக் கூடாது’ன்னு கேட்டாங்க. புதுசா, சுவாரஸ்யமா தெரிஞ்சது. ‘உன்னால முடியும்... தைரியமா பண்ணு’ன்னு சொல்லி ஊக்கம் தந்தார் கணவர், நான் பிசினஸுக்குள்ள அடியெடுத்துவெச்சபோது பெரிய பையனுக்கு பத்து வயசு, சின்னவனுக்கு ஏழு வயசு...’’ - பாதியில் நின்றுபோன உயர்கல்வி, கலையக் காத்திருந்த கனவுகள், இல்லத்தரசிகளுக்கே உரித்தான எழுதப்படாத குடும்பச் சுமைகள்... இப்படி எல்லாவற்றையும் கடந்து பிசினஸில் வலதுகால் வைத்த ப்ரியா, இன்றுவரை அதிலிருந்து பின்வாங்கவில்லை!

``புரொஃபஷனல் ரியல் எஸ்டேட் என்பது வெளியில நீங்க கேள்விப்பட்ட ரியல் எஸ்டேட் பிசினஸ்லேருந்து முற்றிலும் வேறுபட்டது, யார் வேணா புரோக்கர்னு சொல்லிக்கலாம். புரொஃபஷனல் புரோக்கராகணும்னா அதுக்கு நிறைய படிக்கணும், பயிற்சிகள் எடுக்கணும். பத்தாயிரம் ரூபாய்க்கு ஒரு வீட்டை வாடகைக்குப் பிடிக்கிறதா இருந்தாலும் அதுக்குன்னு சில நடைமுறைகள் உண்டு. அந்த புராஜெக்ட்டை எப்படித் தொடங்கணும், உரிமையாளர், குடியிருப்போர்னு ரெண்டு தரப்பினரையும் எப்படி நடத்தணும், எந்தெந்த விஷயங்களை எப்படிப் பதிவு பண்ணணும்னு ஏகப்பட்ட விஷயங்களை ஆராயணும். இவற்றையெல்லாம் ஒழுங்கா செய்தால்தான் அந்த உரிமையாளருக்கும் நமக்குமான அந்த பந்தம் வாழ்நாள் முழுக்க தொடரும். எதிர்காலத்தில் அவர் ரியல் எஸ்டேட் தொடர்பான எந்த முயற்சி எடுத்தாலும் நம் பெயர்தான் நினைவுக்கு வரும். அப்படியோர் உறவை ஏற்படுத்தறது பெரிய சவால். ரியல் எஸ்டேட் புரோக்கருக்கான முதல் தகுதி டிரான்ஸ்பரன்ட் கம்யூனிகேஷன். ஏதாவது ஒரு விஷயம் உறுத்தலா இருந்தா, அதைச் சம்பந்தப்பட்டவருக்குத் தெரியப்படுத்தி சரி செய்யற பொறுப்பும் எங்களுக்கு உண்டு...’’ - அடிப்படையான, அவசியமான தகுதிகள் பகிர்பவர், தன் 35-வது வயதிலேயே இந்தத் துறையில் மாதம் 10 லட்சம் ரூபாய்க்கும் மேல் சம்பாதித்ததைப் பெருமையுடன் சொல்கிறார்.

``நான் இந்தத் துறைக்குள் வந்தபோது பெண்களின் பங்களிப்பு ரொம்பக் கம்மி. இன்னிக்கு என் நட்பு வட்டத்திலேயே 25-க்கும் மேலான பெண்கள் இருக்காங்க, அவர்களில் பலரும் மாசம் 5 லட்ச ரூபாய்வரை சம்பாதிக்கிறாங்க. கிளையன்ட்டிடம் கமிஷன் வாங்கறது முக்கியமில்லை... புரோக்கருடனான அவங்களுடைய அனுபவங்களைக் குறிப்பிடும் டெஸ்ட்டிமோனியல்ஸ் வாங்கறதுதான் எங்க வேலையை நாங்க ஒழுங்கா செய்திருக்கோம் என்பதற்கான சாட்சி’’ - தவிர்க்கக்கூடாத டிப்ஸ் தருபவர், தன் வேலையின் தன்மை விளக்குகிறார்,

``நண்பர்கள், உறவினர்கள், பள்ளி, கல்லூரிகாலத்து நண்பர்கள்னு என் வட்டம் பெருசு. யார் எந்த மாநிலத்தில், எந்த நாட்டில் வீடோ, நிலமோ கேட்டாலும் அந்தந்த இடங்களில் உள்ளவங்க மூலமா அலசி ஆராய்ந்து அங்குள்ள என் துறை சார்ந்த புரோக்கர்களைத் தொடர்புகொண்டு ஏற்பாடு செய்துகொடுக்க என்னால முடியும். ஒவ்வொரு வருஷமும் நடக்கும் `நேஷனல் அசோசியேஷன் ஆஃப் ரியல்டர்ஸ் கான்ஃபரென்ஸி'ல் தவறாமல் கலந்துப்பேன். மற்ற மாநில, மற்ற நாடுகளின் புரோக்கர்களைச் சந்திக்கிற வாய்ப்பை இது ஏற்படுத்தித்தரும்’' - வேலை நுணுக்கங்களுடன் வேதனையையும் சொல்கிறார் ப்ரியா.

சொன்ன சொல்லைக் காப்பாற்றணும்!

``நாங்க சென்னை ரியல்ட்டர்ஸ் அசோசியேஷனில் உறுப்பினர்களா இருக்கோம். விதிகளை மீறினால் பதில்சொல்லக் கடமைப்பட்டிருக்கோம். இவ்வளவு கஷ்டப்பட்டு, விதிகளைப் பின்பற்றி வேலை செய்யற நாங்களும், எந்த விதிகளையும் பின்பற்றாம வெறும் கமிஷனுக்காக மட்டுமே வேலை பார்க்கிற சாதாரண மனிதர்களும் ஒண்ணுங்கிற நிலைமையிலதான் இருக்கோம். ரியல் எஸ்டேட் புரோக்கிங் சம்பந்தப்பட்ட சட்டங்கள் இந்தியாவில் வலுவின்றி இருக்கு...’’ - புரோக்கர் என்ற வார்த்தையைத் தயக்கமின்றி உச்சரிப்பவரிடம் அதையே கேள்வியாக்கினோம்,

புரோக்கர் என்ற அடையாளத்தை, ஒரு பெண்ணாக அதைச் சுமப்பதை இவர் எப்படிப் பார்க்கிறார்?

``ஒரு பெண் கர்ப்பமா இருக்காங்க... டெலிவரி பார்க்க ஆண், பெண் ரெண்டு பேர்ல எந்த மருத்துவரைத் தேர்ந்தெடுப்பாங்க... பெரும்பாலும் லேடி டாக்டராகத்தானே இருப்பாங்க. அது அப்படித்தான் அமையும். ஆனா, என்னுடைய மகப்பேறு மருத்துவர் ஓர் ஆண். அவருக்கு அனுபவம் அதிகம். எனக்குத் தேவை அனுபவமுள்ள ஒரு டாக்டர். அவர் ஆணா, பெண்ணாங்கிறதைவிடவும் என் குழந்தை நல்லபடியா பிறக்கணும் என்பதுதான் எனக்கு முக்கியம். டாக்டர் புரொஃபஷன் மாதிரிதான் புரோக்கர் தொழிலும். திறமையும் அனுபவமும்தான் அங்கே முக்கியம். ஈசிஆருக்கு இடம் காட்ட கிளையன்ட்டோடு நான் தனியா போறேன்னு வெச்சுப்போம். என் கேரக்டர் அந்த இடத்தில் ரொம்ப முக்கியம். நான் எப்படி நடந்துக்கிறேன் என்பது முக்கியம். ஹாய்... ஹலோவோடு நிறுத்திக்கணும். அந்தக் கோட்டைத் தாண்டி பர்சனலா ஒரு வார்த்தைகூடப் பேசக் கூடாது. அந்தக் கட்டுப்பாடு எனக்கு வேணும். அதைமீறி யாரும் நம்மகிட்ட தப்பா நடந்துக்க முடியாது. இத்தனை வருஷங்களில் எனக்கு சின்னதாகூட கசப்பான அனுபவம் எதுவும் நடந்ததில்லை. ஆண்/பெண் வித்தியாசம் தேவையில்லாத துறை இது. ஆண் புரோக்கரால் செய்ய முடியாத பல விஷயங்களை, பெண் புரோக்கரால் செய்ய முடியும். நான் அதையெல்லாம் சாதிச்சிருக்கேன். இன்னிக்கு லேடி புரோக்கர்தான் வேணும்னு கேட்கற அளவுக்கு மக்களுக்குத் தெளிவு வந்திருக்கு’’ - கம்பீரமாகச் சொல்பவர் ‘புரோக்கர்ஸ் எக்ஸ்கியூஸ்’ காலத்திலும் புரோக்கர்கள் ஏன் முக்கியமானவர்கள் என்பதை விளக்குகிறார்,

`` டபுள் டாகுமென்ட்டேஷன், குடும்பத் தகராறு காரணமா இடத்தை விற்பதில் பிரச்னை... இப்படி ஒரு பிராப்பர்ட்டியில் மறைமுக வில்லங்கங்கள் நிறைய இருக்கலாம். ஒரு நல்ல புரோக்கரால்தான் இவற்றையெல்லாம் கண்டுபிடிக்க முடியும்.

கமிஷனுக்கு பயந்துக்கிட்டு புரோக்கர் இல்லாம ஓர் இடத்தை வாங்கவோ, வாடகைக்குப் பிடிக்கவோ நினைக்கிறவங்க இந்த ரிஸ்க்கையெல்லாம் கவனத்துல வெச்சுக்கணும்.’’

பெண்களுக்கு ஏற்ற துறைகளில் இதுவும் ஒன்று என்பதை அழுத்தமாக நம்புகிறார் ப்ரியா.

‘’இந்தத் துறையில் நேரம் உங்கள் வசமிருக்கும், குடும்பத்தையும் பார்த்துக்கிட்டு பிசினஸையும் பார்க்கலாம். உங்களுக்கான வருமானத்தை நீங்க தீர்மானிக்கலாம். அதுக்கேத்த அளவுக்கு உழைச்சா போதும். அதே நேரம் கமிட்மென்ட் ரொம்ப முக்கியம். சொன்னா சொன்ன வார்த்தையைக் காப்பாற்றத் தெரியணும். போலி வாக்குறுதிகளைத் தரக்கூடாது. டிரைவிங் பயிற்சி, நல்ல பேச்சுத் திறமை, கனிவான அணுகுமுறை இருக்கும் யாரும் இதில் ஜெயிச்சிடலாம்’’ - நம்பிக்கையளிப்பவர், நாளைய வெற்றி யாளர்களுக்காக விரைவில் இந்தத் துறையில் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கும் திட்டத்திலிருக்கிறார்!