22 தங்கப் பெண்கள்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

பாலு அண்ணாவுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்!

எஸ்.பி.சைலஜா
பிரீமியம் ஸ்டோரி
News
எஸ்.பி.சைலஜா

சோலைக்குயிலே...

குயிலுக்கு நடனம் தெரியாது; மயிலுக்கு கானம் வராது. 70-களின் இறுதியில் திரைக்கு முன்னாலும் பின்னாலும் அறிமுகமான எஸ்.பி.சைலஜா, கானமும் நடனமும் கைவரப்பெற்ற ஓர் அபூர்வம். ‘சலங்கை ஒலி’யின் க்ளைமாக்ஸில் வரும் ‘வேதம்... அணுவிலும் ஒரு நாதம்...’ பாடலில் நடனமும் சைலஜாதான். பாடலின் பாதியிலிருந்து ‘எனையாளும் குருவென்ற தெய்வம்’ என்று ஒலிக்க ஆரம்பிக்கும் தித்திப்புக் குரலுக்குச் சொந்தக்காரரும் இவர்தான்.இப்போது சின்னத்திரை ரியாலிட்டி ஷோவில் வளரும் குயில்களை அடையாளம் கண்டுகொண்டிருக்கும் எஸ்.பி.சைலஜாவைச் சந்தித்தோம்.

‘`ஒரு பாட்டுக்கு வாய்ப்பு கொடுத்து, அப்புறம் ‘அட, இந்தக் குரல் ரொம்ப நல்லாயிருக்கே’ன்னு தொடர்ந்து எங்களை பாடகர்களாகவும் பாடகிகளாகவும் வளர்த்தெடுத்த பொற்காலத்துல வாழ்ந்தவங்க நாங்க’’ என்கிற சந்தோஷ வார்த்தைகளுடன் பேச ஆரம்பித்த சைலஜாவிடம் அவருடைய குழந்தைப் பருவத்தைப் பற்றி விவரிக்கச் சொன்னோம்.

‘`என்னோட இனிஷியல்ல இருந்தே சொல்றேன். ‘ஸ்ரீபதி பண்டித்தாராஜுலா’ன்னு எங்க வம்சத்துல ஒரு மகான் இருந்தார். அவர் பெயரோட முதல் எழுத்துகளான எஸ்.பி-யை எங்க வம்சத்துல பிறந்தவங்களுக்கு இனிஷியலா வைப்பாங்க. அப்பா சாம்பமூர்த்தி ஹரிகதை சொல்றதுல தேர்ந்தவர். அம்மா சகுந்தலா குடும்பத்தலைவி. நாங்க அஞ்சுப் பொண்ணுங்க, ரெண்டு பசங்க.

 மகன், கணவருடன்...
மகன், கணவருடன்...

அப்பாவைப் பத்தி சொல்லணும்னா, ரொம்ப ஜோவியல்; படிக்கிறதுல ஆர்வம் அதிகம். நானு, பாலு அண்ணான்னு எங்க வீட்ல எல்லோருக்குமே புத்தகம் வாசிக்கிறதுல ஆர்வம் அதிகம். அப்பாவைப் பார்த்துதான் அந்த இயல்பு வந்ததுன்னு நினைக்கிறேன். அவர் ரொம்ப மென்மையானவர். எங்களைத் திட்டவே மாட்டார். எப்பவாவது அவருடைய குரல் லேசா உயர்ந்தாலும் நாங்க பயந்துடுவோம். சினிமாவைப் பொறுத்தவரை `சங்கராபரணம்' மாதிரி செலக்டிவாத்தான் பார்ப்பார். அப்போ, அவர்கூட எங்கள்ல யாரு இருக்கிறாங்களோ அவங்களுக்கு லக் அடிச்சிடும். ஏன்னா, அப்பாவுடன் படத்துக்குப் போனா, இடைவேளையில் தியேட்டரில் விற்கிற தின்பண்டங்கள் அத்தனையும் வாங்கிக் கொடுத்திடுவார். அதனால, அப்பாவுடன் யார் சினிமாவுக் குப் போறதுன்னு நானும் தங்கச்சியும் சண்டை போடுவோம்” என்கிற சைலஜா, வீட்டுக்கு ஆறாவது பெண்.

“அப்பாவோட முதல் மனைவி, இறந்துட்டாங்க. அவங்களுக்கு ஒரு மகள் இருக்காங்க. அதுக்கப்புறம் எங்கம்மாவை கல்யாணம் பண்ணிக்கிட்டார் அப்பா. அந்த வகையில எஸ்.பி.பி அண்ணாதான் அம்மாவுக்கு முதல் குழந்தை. ஆனா, மூத்த அக்கா, பெரியம்மாவோட பொண்ணுங்கிறதெல்லாம் தெரியவே தெரியாது. அந்தளவுக்கு எந்த வித்தியாசமும் காட்டாம வளர்த்தாங்க எங்கம்மா” என்கிறவர், தன் அண்ணனின் சினிமா என்ட்ரியைப் பற்றி குறிப்பிடுகையில், `அப்பாவுக்கு அதில் விருப்பமில்லை' என்கிறார்.

“அண்ணாதான் வீட்டுக்கு மூத்தப் பையன்கிறதால, ‘நமக்குப் பிறகு அவன்தானே வீட்டைப் பார்த்துக்கப் போறவன். அதனால, அவன் நல்லா படிக் கணும்’னு அப்பா அடிக்கடி சொல்வாரு. அண்ணாவும் அப்பா மனசு கோணாம இன்ஜினீயரிங் படிச்சாரு. ஆனா, வாய்ப்பு கிடைச்சு அண்ணா சினிமாவுல முதல் பாட்டைப் பாடினப்போ அப்பாவுக்கு அதுல பெருசா விருப்பமில்ல. ஆனா, மகனோட விருப்பத்துக்கு அவர் தடையும் போடலை. ‘படிப்புலேயும் கவனம் வெச்சுக்கோ’ன்னு சொன்னதோட சரி. ஆனா, அண்ணா இந்தளவுக்கு ஓஹோன்னு வருவார்னு அப்போ வீட்ல யாருமே நினைச்சுப் பார்க்கலை” என்கிற சைலஜா, தான் சினிமாவில் பின்னணி பாட வந்ததை விவரிக்க ஆரம்பித்தார்.

“அம்மா நல்லா பாடுவாங்க. அதனால, எங்க வீட்ல நாங்க எல்லாருமே மியூசிக் கத்துக்கிட்டோம். அம்மாவுக்கு ஒரு பொண்ணாவது ஸ்டேஜ்ல பாடணும்னு ஆசை. அப்பாவோ, படிப்பைத் தாண்டி தன் பொண்ணுங்க யாரும் வெளியே போகக் கூடாதுங்கிறதுல ரொம்ப கண்டிப்பா இருந்தார். ஒரு கட்டத்துல அம்மாவுக்காக அப்பா கொஞ்சம் இறங்கிவர, நானும் என் தங்கையும் பள்ளிக்கூட பாட்டுப் போட்டிகள்ல கலந்துக்க ஆரம்பிச்சோம். அப்படியே நான் மெள்ள மெள்ள கச்சேரிகள் பண்ண ஆரம்பிச்சேன். நான் கச்சேரிக்குப் போயிட்டு வந்தா ரெண்டு நாள் உம்முனு இருப்பார் அப்பா. ‘பொம்பளைப் பிள்ளைக்கு படிப்புதான் மொதல்ல’ன்னு சொல்வார். ஆனா, நான் நல்லா படிக்கிறதால அப்பாவே மனசிரங்கி வந்தாரு” என்கிறவர், முதல் சினிமா வாய்ப்பு பற்றி சொல்கிறார்.

“தெலுங்குல சக்ரவர்த்தின்னு ரொம்பப் பெரிய மியூசிக் டைரக்டர். அவர் என் கச்சேரியைக் கேட்டுட்டு ஒரு குழந்தை கதாபாத்திரத்துக்குப் பின்னணி பாடற வாய்ப்பு கொடுத்தார். 1977-ல் `மாற்ப்பு' என்கிற அந்தப் படம் வெளிவந்துச்சு. அடுத்து, தமிழ்ல ‘மனிதர்களில் இத்தனை நிறங்களா!’ படத்துல ஷ்யாம் சார் இசையில் ‘மழை தருமோ என் மேகம்’னு ஒரு பாட்டு வரும். அதுல ஹம்மிங் மட்டும் பாடினேன். அடுத்து, இளையராஜா சார் இசையில் ‘சோலைக்குயிலே... காலைக்கதிரே...’ பாடினேன்” என்கிறவர், சன்னமான குரலில் முதலிரண்டு வரிகளைப் பாட, ‘பொண்ணு ஊருக்குப் புதுசு’ சரிதா, நம் மனசுக்குள் சைக்கிள் மிதித்தபடி செல்ல ஆரம்பித்தார். இதன் பிறகு, `ஆசையைக் காத்துல தூது விட்டு', `ராசாவே உன்னை நான் எண்ணித்தான்' என்று சைலஜா பாடியதெல்லாம் ஹிட் லிஸ்ட்!

“தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தின்னு அஞ்சு மொழிகள்ல பாடியிருக்கேன். தெலுங்கு தவிர வேற எந்த மொழியில பாடினாலும் வரிகளை தெலுங்குல எழுதிப்பேன். தெலுங்குல ‘ழ’ கிடையாது. ‘ல’ போட்டு அதுக்கு மேலே ‘இசட்’ போட்டுப்பேன். மலையாளத்துல விதவிதமான ‘ன’ இருக்கும். அவற்றுக்கும் இங்கிலீஷ்ல ஒவ்வோர் அடையாளம் வெச்சிட்டு பாடிடுவேன். அந்தக் காலத்துல ஒரு பாட்டை ரிக்கார்டு பண்றப்போ அதை எழுதினவரும் அங்கே இருப்பார். அவர்கிட்டே பாட்டோட அர்த்தம் கேட்டுப்பேன். அப்புறம் பாட்டோட சிச்சுவேஷன், யாருக்குப் பாடணும்னு எல்லா தகவல்களையும் சொல்வாங்க. அதனால மொத்த ஃபீலிங்கும் கிடைச்சுடும். மொழி நமக்குதானே... இசைக்குக் கிடையாதில்லையா” என்கிறவரின் வார்த்தைகளில் ஏகப்பட்ட அழுத்தமும் அர்த்தமும் நிறைந்து கிடக்கிறது. பேச்சு, சைலஜா நடித்த ஒரேயொரு படத்தின் பக்கம் திரும்பியது.

“எனக்கு பரத நாட்டியம் தெரியும். என் அரங்கேற்ற போட்டோக்களை டைரக்டர் கே.விஸ்வநாத் சார் பார்த்துட்டு, இந்தப் பொண்ணை ‘சாகர சங்கம’த்தில் நடிக்க வைக்கலாமேன்னு கேட்டார். நான் மாட்டவே மாட்டேன்னுட்டேன். அவர் எனக்கு அண்ணா முறை வேணும். அதனால, அவர் நேரா அப்பாகிட்டே வந்துட்டார். ‘சித்தப்பா சங்கராபரணம் பார்த்தீங்கள்ல... அந்த மாதிரி இன்னொரு படம் எடுக்கப் போறேன். அதுல சைலஜாவுக்கு நல்ல கேரக்டர் இருக்கு. நான் சைலஜாவைப் பார்த்துக்கிறேன்’னு அப்பாவை கன்வின்ஸ் பண்ணிட்டார். அதுக்கப்புறம் தப்பிக்கிறதுக்கு வழியே தெரியலை. அப்படித்தான் சாகர சங்கமத்துல நடிச்சேன். அது தமிழ்ல `சலங்கை ஒலி'யா வந்துச்சு.

அந்தப் படத்துல கமல், ஜெயப்பிரதா, சரத்பாபுன்னு எல்லாரும் சீனியர்ஸ். நடிப்பை விடுங்க; கமல் சார் முன்னாடி நான் டான்ஸ் ஆடணும்கிறதை நினைச்சுப் பாருங்க. ‘ஓம் நமச்சிவாய’ பாடலை ஹைதராபாத்ல ஒரு ஸ்டேஜ்ல ஷூட் பண்ணாங்க. முதல் ஷாட்டுக்கு மேக்கப் போட்டுட்டு வெளியே வந்தா கமல் சார் முன்வரிசையில உட்கார்ந்துட்டிருக்கார். நான் அப்படியே திரும்பி உள்ளே போயிட்டேன். ‘என்னால கமல் சார் முன்னாடி டான்ஸ் பண்ண முடியாது. பயம்’னு புரொடியூசர்கிட்ட சொல்லிட்டேன். அவர் டைரக்டர்கிட்டே சொல்ல, அவர் என்னை சமாதானம் செய்ய வந்தார். ‘பாடி நல்ல பெயர் வாங்கிட்டிருக்கேன். இப்ப டான்ஸ் ஆடி ஜனங்க யாராவது என்னை கேலி பண்ணிட்டா, ரொம்ப அசிங்கமாகிடும்’னு நடிக்க மறுத்துட்டேன். உடனே விஸ்வநாத் சார், ‘நீ முதல் ஷாட்டுக்கு ஆடு. இங்கே இருக்கிற ஆடியன்ஸ் உன்னைப் பாராட்டி கைதட்டலைன்னா, நான் வேற நடிகையை புக் பண்ணிக்கிறேன்’னு சொன்னார்.

பாலு அண்ணாவுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்!

ஒருவழியா சமாதானமாகி முதல் ஷாட்டுக்கு டான்ஸ் ஆடி முடிச்சேன். உடனே எல்லோரும் கைதட்டினாங்க. ‘இந்தப் படம் வந்தா, இந்தப் பொண்ணுக்குப் பாட மட்டுமில்ல ஆடவும் தெரியணும்னு எல்லாரும் பாராட்டுவாங்க’ன்னு சொன்னார் டைரக்டர். அவர் சொன்னது அப்படியே நடந்துச்சு. தவிர, அந்தப்படத்துல அழகான பாடல்களும் பாடியிருக்கேன். இப்போ திரும்பிப் பார்த்தா, அந்தப் படத்தை எனக்குக் கிடைச்ச பெரிய கிஃப்ட்டாதான் நினைக்கிறேன்’’ என்கிறவர், ரகசியம் ஒன்றையும் பகிர்கிறார்.

‘`க்ளைமாக்ஸ் பாடலுக்கு நான் டான்ஸ் ஆடுவேன். அப்போ, கமல் சார் எனக்கு டான்ஸ் சொல்லித்தரும்போது என் கால் அவர் மேலே படறதை நினைச்சுப் பார்க்கணும். அந்த சீன் எடுக்கிறப்போ ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். ஆடிக்கிட்டே வர்றப்போ என் கால் அவர் மேலே படணும். ஆனா, கமல் சார்கிட்டே வர்றப்போ டக்குனு கால் நின்னுடும். நிறைய ரீடேக் வாங்கினேன். கமல் சார்கூட ‘பரவாயில்லமா’ன்னு சொன்னார். விஸ்வநாதன் சார்,

‘உனக்குப் பிடிக்காத மாஸ்டர் அவர். அவரைவிட உனக்கு ஜாஸ்தி தெரியும்னு நினைக்கிற கேரக்டர் உன்னோடது. நீ அவரை கமல்ஹாசனா பார்க்காதே. அவன் யாரோன்னு பாரு’ன்னு சொன்னார். இப்பவும் அந்த சீனை நீங்க உத்துப்பார்த்தீங்கன்னா, என் முகத்துல இருக்கிற பயத்தை நீங்க பார்க்கலாம்’’ என்று சிரிக்கிறவர், அடுத்து கூறும் ஒரு சம்பவம், எஸ்.பி.பி மேல் அவருக்குள்ள அளவுகடந்த மரியாதைக்கு அடையாளம்.

‘`கல்யாண பேச்சையெடுத்தாலே நான் பயந்திருக்கேன். ‘நாம சினி ஃபீல்டுல இருக்கோம். கச்சேரி, ரிக்கார்டிங் முடிச்சிட்டு ராத்திரி லேட்டா வருவோம். இதையெல்லாம் புகுந்த வீட்டுல ஒப்புப்பாங்களான்னு யோசிச்சிருக்கேன். ஆனா, சினிமாவோட கஷ்டம், நஷ்டம் புரிஞ்ச சுபலேகா சுதாகர் கணவரா வந்தார். அண்ணாதான் அவரை எனக்காக செலக்ட் பண்ணார். ஒரு வருஷம் இவரை கவனிச்சு, இந்தப் பையன் நம்ம சைலஜாவுக்குப் பொருத்தமா இருப்பான்னு முடிவு செய்தாராம். அண்ணா யாரை செலெக்ட் பண்ணாலும் நான் கல்யாணம் பண்ணிக்கிட்டிருப்பேன்.

என் கணவர் ரொம்ப சாஃப்ட். நாங்க ரெண்டு பேருமே ஃபிரெண்ட்ஸ் மாதிரிதான் எப்பவும் பழகுவோம். எங்க அம்மா வீட்ல நான் எப்படி எந்த பயமும் இல்லாம சுதந்திரமா இருந்தேனோ அப்படித்தான் இங்கேயும் இருக்கேன். இவரை எனக்குக் கணவரா செலெக்ட் பண்ண அண்ணாவுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்’’ - சொல்லும்போதே சைலஜாவின் குரல் நெகிழ்ந்து, அண்ணன் மீதான அன்பு வழிகிறது.

ஐந்து மொழிகள்... 6,000 பாடல்கள்... ஜாம்பவான்களின் இசையில்... பி. சுசீலா, எஸ்.ஜானகி, வாணி ஜெயராம், எல்.ஆர்.ஈஸ்வரி, டி.எம்.எஸ்., சீர்காழி,

பி.பி. சீனிவாசன், மலேசியா வாசுதேவன், எஸ்.பி.பி என தன் காலத்துக் குயில்களுடன் இணைந்து இசைத்தது என 360 டிகிரியில் வலம்வந்திருக்கிறார் சைலஜா.

60 படங்களில் தபு, அமலா, சோனாலி, ஸ்ரீதேவி, ராதிகா என முன்னணி நாயகி களுக்கு டப்பிங்கும் செய்திருக்கிறார்.

எஸ்.பி.பி-யின் தங்கை என்பதாலேயே எதிர்பார்ப்பு அதிகம் இருந்திருக்குமே..?

‘`யெஸ், இருந்துச்சு. அதைத் தாண்டி நான் நின்னேன்னா அது கடவுளோட அனுகிரகம்தான்’’ என்கிறவரின் மகன் மீடியா மேனேஜ்மென்ட் படித்திருக்கிறார். ``அவனுக்கும் சினிமா பிடிக்கும்; நல்லா பாடுவான். ஃபீல்டுக்கு வருவானாங்கிறது தெரியலை’’ என்கிறார்.

குழந்தைகளை ஆடிஷன் செய்கிற ஜட்ஜ் அனுபவம் எப்படியிருக்கிறது?

‘`ஆடிஷனப்போ குழந்தைகள் ‘நான் செலக்ட் ஆகிட்டேன்னா’ன்னு என்னைப் பார்க்கிறப்போ ‘நீ ரிஜக்டட்’னு என்னால சொல்லவே முடியாது. நாசுக்கா சொன்னாலும் அங்கேயே அழ ஆரம்பிச்சிடுவாங்க. அவங்களை சமாதானம் செஞ்சுதான் அனுப்பி வைப்பேன்’’ என்கிறவர், கச்சேரிகள், பயணங்கள், புத்தக வாசிப்பு, தியானம் என வாழ்க்கை நிம்மதியா போகுது என்கிறார் நிறைவாக!