Published:Updated:

ஜெயலலிதாவின் காரில் ஒலித்த தேனிசைக் குரல்கள்! - ஏ.எம்.ராஜா – ஜிக்கி - ஹேமலதா

ஹேமலதா குடும்பத்தினர்...
பிரீமியம் ஸ்டோரி
News
ஹேமலதா குடும்பத்தினர்...

அந்த நாள் ஞாபகம்

தென்னிந்திய திரையிசை முன்னோடிகளில் முக்கியமானவர்கள் ஏ.எம்.ராஜா – ஜிக்கி தம்பதி. 1950-களில் திரை வானில் ஜொலித்தவர்கள், காலப்போக்கில் கண்டுகொள்ளப்படாதது வருத்தத்துக்குரியது.

இருப்பினும் இவர்களின் பாடல்கள் இன்றளவும் தேனிசையாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இந்தத் தம்பதியின் புதல்வி ஹேமலதா, மேடைப் பாடகி. ஜிக்கியின் சாயலில் அப்படியே பாடுபவர், தமிழகம் மற்றும் கர்நாடகாவில் நடைபெறும் மேடை இசை நிகழ்ச்சிகளில் பழைய கிளாஸிக் பாடல்களை மட்டுமே அதிக அளவில் பாடுவதுடன், பெற்றோரின் புகழையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்கிறார். பெங்களூருவில் வசிப்பவர், பெற்றோரின் நினைவுகள் குறித்துப் புன்னகையுடன் பகிர்கிறார்.

“அம்மாவின் இயற்பெயர் கிருஷ்ணவேணி. குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பிச்சு, பின்னணிப் பாடல்கள் பாடவும் செய்தாங்க. அதனால அம்மாவால் படிப்பைத் தொடர முடியலை. கேள்வி ஞானத்துலயே சிறப்பா பாடுவாங்க. ‘மந்திரி குமாரி’ படத்தின் மூலம் பிரபலமானார். எஸ்.எஸ்.வாசன் இயக்கித் தயாரிச்ச ‘மிஸ்டர் சம்பத்’ இந்திப் படத்துல அம்மாவைப் பாடவெச்சார். பின்னர் அம்மாவுக்கு நிறைய பாடல் வாய்ப்புகள் கிடைச்சுது.

‘யாரடி நீ மோகினி’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘கண்ணும் கண்ணும் கலந்து’, ‘நாடகமெல்லாம் கண்டேன்’, ‘வாராய் நீ வாராய்’ உட்பட பல ஆயிரம் வெற்றிப் பாடல்களை தென்னிந்திய மொழிகளில் பாடி முன்னணிப் பாடகியானாங்க.

எம்.ஜி.ஆர் தனது சொந்தப் படங்களில் அம்மாவைத் தவறாமல் பாட வெச்சார். அம்மா பாடின பாடல்கள் தொடர்ந்து ஹிட்டாகின. அதனால, ‘ஜிக்கி லக்கி’ன்னு அப்பா செல்லமாகக் கூப்பிட, ‘ஜிக்கி’ங்கிற பெயர் அடையாளமாகிடுச்சு.

 அம்மா ஜிக்கி - அப்பா ஏ.எம்.ராஜா
அம்மா ஜிக்கி - அப்பா ஏ.எம்.ராஜா

அப்பா முறைப்படி இசையைக் கத்துக்கிட்டார். பின்னர் சென்னை பச்சையப்பன் காலேஜ்ல பி.ஏ படிச்சுக்கிட்டே, அகில இந்திய வானொலியிலும் பாடினார். அதன் மூலம் அப்பாவைப் பற்றித் தெரிஞ்சுக்கிட்ட எஸ்.எஸ்.வாசன், ‘சம்சாரம்’ படத்துல அப்பாவை பின்னணிப் பாடகரா அறிமுகப்படுத்தினார். ‘பாட்டுப் பாடவா’, ‘தென்றல் உறங்கிய போதும்’, ‘ஓஹோ எந்்தன் பேபி’, ‘வாராயோ வெண்ணிலாவே’, ‘தனிமையிலே இனிமை காண முடியுமா’ உட்பட ஆயிரக்கணக்கான ஹிட் பாடல்களைப் பாடி அப்பாவும் முன்னணிப் பாடகரானார். தென்னிந்திய மொழி சூப்பர் ஸ்டார்களுக்கு அப்பா அதிகம் பாடினார். நடிகர் ஜெமினி கணேசனுக்கு நிறைய பாடல்கள் பாடி அவை பெரிய ஹிட்டானதால், ‘ஜெமினியின் தேன் குரல் பாடகர்’னு அப்பாவைப் பாராட்டுவாங்க.

‘மயக்கும் மாலை பொழுதே நீ’, ‘இன்பமே பொங்குமே’, ‘வாசமிகும் மலர் சோலையிலே’, ‘அன்பே எந்தன் முன்னாலே’ உட்பட பல்வேறு டூயட் பாடல்களைப் பெற்றோர் இணைந்து பாடியிருக்காங்க. அதனால் ஏற்பட்ட நட்பு காதலாகி, 1958-ல் இருவரும் கல்யாணம் செய்துகிட்டாங்க. பல லாரிகளில் பழங்கள் கொண்டுவந்து, பூக்களுக்குப் பதிலாக பழங்களினால் கல்யாணப் பந்தல் அமைச்சிருக்காங்க. பிரமாண்டமாக நடந்த அந்தக் கல்யாணத்துல, எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி உட்பட ஒட்டுமொத்த திரையுலகமும் திரண்டு வந்திருக்கு. இதுக்கிடையே, 1953-ல் ‘அவன்’ படப் பாடல் பதிவுக்குப் பெற்றோர் மும்பை போனாங்க. அதுவரை பாடல் பதிவுக்குத் தென்னிந்தியாவில் இருந்து எந்தப் பாடகரும் மும்பை போனதில்லை. தமிழ், தெலுங்கில் அம்மா பாடின ‘கல்யாண ஊர்வலம் வரும்’ பாடலை, இந்தியில் லதா மங்கேஷ்கர் பாடியிருக்காங்க. அப்போ லதாஜி, அம்மாவின் குரலை வெகுவாகப் பாராட்டியிருக்கார்.

‘கல்யாணப் பரிசு’, ‘தேன் நிலவு’ உட்பட பல படங்களுக்கு இசையமைத்திருக்கும் அப்பாதான், தமிழ் சினிமாவில் வெஸ்டர்ன் இசையை அறிமுகப்படுத்தினார். இசையமைப்பு, பின்னணிப் பாடகர்னு ஒரே நேரத்தில் ரெண்டு தளங்களிலும் புகழ் பெற்றார். அப்பா ரொம்பவே கண்டிப்பானவர். பாடல் வரிகளிலும், தன்னோட வேலையிலும் சமரசம் செய்துக்க மாட்டார். அதனால திரையுலகினருடன் அப்பாவுக்கு மனஸ்தாபங்கள் ஏற்பட்டன. ‘கல்யாணப் பரிசு’ வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் ஶ்ரீதரின் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்துலயும் இசையமைப்பாளராக வேலை செய்யும் வாய்ப்பு அப்பாவுக்குக் கிடைச்சிருக்கு. ஆனா, அதை மறுத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அந்த வாய்ப்பு கிடைக்க காரணமானார். அதன் பிறகு இசையமைக்கிற வேலையை நிறுத்திக் கிட்டார். எம்.ஜி.ஆர், சிவாஜி உட்பட பலரும் வலியுறுத்தியும்கூட அப்பா தன் முடிவை மாத்திக்கவேயில்லை. அதேநேரம் தனி இசைக்குழுவைத் தொடங்கி, பல ஊர்கள்லயும் இசை நிகழ்ச்சி நடத்தினார். அப்பாவின் விருப்பப்படி அம்மாவும் சினிமாவில் பாடுறதைக் குறைச்சுக்கிட்டு, அப்பாவின் இசைக்குழுவில் பாடினாங்க.

 அம்மாவுடன் ஹேமலதா...
அம்மாவுடன் ஹேமலதா...

ஜெயலலிதாவின் அம்மா சந்தியாவுக்குப் பல தெலுங்குப் படங்கள்ல அம்மா பின்னணிப் பாடியிருக்காங்க. அதனால ஜெயலலிதாவுக்கு அம்மாமேல தனி அன்பு இருந்துச்சு. ‘உங்க பெற்றோரின் பெரிய ரசிகை நான். அவங்க பாடல்களை அடிக்கடி கேட்பேன். என் கார்ல இருவரின் டூயட் பாடல் கேசட்டுகள் எப்போதும் இருக்கும்’னு என் அண்ணன்கிட்ட ஜெயலலிதாவே சொல்லியிருக்காங்க.

அப்பாவின் திடீர் மறைவால் குடும்பத்தில் பொருளாதாரப் பாதிப்புகள் ஏற்பட்டதா?

திருநெல்வேலி மாவட்டத்துல ஒரு கோயில் கச்சேரியில் கலந்துகொள்ள தங்கள் இசைக்குழுவுடன் பெற்றோர் போயிருந்தாங்க. வல்லியூர் ரயில் நிலையத்தில் அவங்க பயணம் செஞ்ச ரயில் நின்னிருக்கு. இசைக்கருவி ஒண்ணு வரலைனு அப்பா கீழ இறங்கியிருக்கார். மறுபடியும் ஏறும்போது கை நழுவி கீழ விழுந்துட்டார். பெரிசா அடிபடலைனு சொல்லப்பட்டாலும், ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோகும் வழியிலேயே இறந்துட்டார். அப்போதைய முதல்வர் கருணாநிதி உதவியால் அப்பாவின் நல்லடக்கப் பணிகள் முறையா நடந்தது. அதன் பிறகு, மற்ற இசைக்குழுக்களிலும் அம்மா அதிகம் பாடினாங்க. அதனால குடும்பத்தில் பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்படலை. அந்த நேரத்துல இளையராஜா, தேவா உட்பட சில இசையமைப்பாளர்களிடம் அம்மா பின்னணிப் பாடல்களும் பாடினாங்க.

ஹேமலதா குடும்பத்தினர்...
ஹேமலதா குடும்பத்தினர்...

உடல்நிலைப் பாதிப்புடன் தொடர்ந்து பாடிய அம்மாவின் இறுதிக்கால நினைவுகள் பற்றி...

அப்பாவின் விருப்பத்தை ஏற்று, 1960-களுக்குப் பிறகு அம்மா சினிமாவில் பாடுவதை வெகுவாகக் குறைச்சுகிட்டாங்க. ஒருவேளை அம்மா தொடர்ந்து பாடியிருந்தா, இன்னும் பெரிய உயரத்துக்குப் போயிருப்பாங்க. ஆனாலும், ஆக்டிவாக பாடிய 10 வருஷத்து லேயே 10,000 பாடல்கள் பாடி சாதனை செய்திருக்காங்க. அம்மாவுக்கு இசைதான் உலகம். வீட்டுல எப்போதும் பாடிட்டே இருப்பாங்க. அப்பாவின் மறைவுக்குப் பிறகு, நிறைய வெளிநாட்டுக் கச்சேரிகளிலும் பாடினாங்க. புற்றுநோய் பாதிப்பால் சில வருஷம் ரொம்பவே சிரமப்பட்டாங்க. அப்பகூட கச்சேரிகளில் ஆர்வத்துடன் பாடினாங்க. நோய் பாதிப்பிலிருந்து மீண்டு வந்து தொடர்ந்து பாட ஆசைப்பட்டாலும், 2004-ல் இறந்துட்டாங்க. 1990-களில் ஒருமுறை தூர்தர்ஷன்ல அம்மாவை நடிகை ரூபிணி பேட்டி எடுக்க இருந்த நிலையில், கடைசியில் நான்தான் பேட்டி எடுத்தேன். என் வாழ்வில் மறக்க முடியாத தருணம் அது.

பெரிதாக அங்கீகாரம் கிடைக்காத ஆதங்கம் பெற்றோருக்கு இருந்ததா?

சினிமா இசைத்துறையில் அம்மாவும் அப்பாவும் 10 வருஷங்கள்தாம் வேலை செய்தாங்க. அதுக்குள்ளேயே அவங்க செய்த சாதனைகள் ஏராளம். அதெல்லாம் காலப்போக்கில் அடுத்தடுத்த தலைமுறைக்குத் தெரியாமல் போயிடுச்சு. தங்கள் திறமைக்கும் உழைப்புக்கும் எந்த அங்கீகாரமும் கிடைக்காத வருத்தம் அவங்களுக்கு அதிக அளவில் இருந்தது. அதை என்னிடம்கூட சொல்லியிருக்காங்க. அம்மா தெலுங்கில்தான் அதிக பாடல்கள் பாடினாங்க. ஆந்திராவில் இப்போவரை அம்மாவின் பாடல்கள் ஒலிச்சுட்டே இருப்பதால், தமிழ்நாட்டை ஒப்பிடும்போது அங்கதான் அம்மாவைப் பத்தி ஓரளவுக்குப் பேசுறாங்க.

1960-களுக்குப் பிறகு புகழ்பெற்ற பல பின்னணிப் பாடகர்களுக்கும் அப்பாவின் இசையில் பின்னணிப் பாடியிருக்காங்க. அவங்களுக்கு என் பெற்றோர் பெரிய ஊக்கமாக இருந்திருக்காங்க. அதை, மூத்த பாடகர்கள் பலரும் என்னிடம் பெருமையா சொல்லியிருக்காங்க. பி.சுசீலா, எஸ்.ஜானகி உட்பட பலரும் அடிக்கடி எங்க வீட்டுக்கு வந்து மரியாதை நிமித்தமா பெற்றோரைச் சந்திச்சுட்டுப் போவாங்க. அவங்க இப்போவரை என்மீதும் அன்பு செலுத்தறாங்க.

நீங்க மேடைப் பாடகியானது எப்படி?

பெற்றோருக்கு ஆறு பிள்ளைகள். மூத்த பையனான அண்ணன் ஆரம்பத்திலிருந்தே அம்மாவுடன் சேர்ந்து கச்சேரிகளில் பாடுவார். கடைக்குட்டியான நான் அப்பாகிட்ட ஓரளவுக்குக் கத்துக்கிட்டேன். நானும் சின்ன வயசுல அம்மாவுடன் கச்சேரிகளில் பாடினேன். காலேஜ் முடிச்சதும் எனக்குக் கல்யாணமாகி பெங்களூருவில் குடியேறிட்டேன். பின்னர், பல வருஷம் என்னால பாட முடியலை.

அம்மாவின் மறைவுக்குப் பிறகு, இசையை மறுபடியும் கத்துக்கிட்டு மேடைப் பாடகியா செயல்பட ஆரம்பிச்சேன். கூடவே இசை வகுப்புகளும் எடுக்கறேன். கணவர் ரேடியாலஜி துறை டாக்டர். மகள் இறுதியாண்டு எம்.பி.பி.எஸ் படிக்கிறாள். ஏழாவது படிக்கும் மகனும் என்னுடன் கச்சேரிகளில் பாடுறான். குடும்பத்தைக் கவனிச்சுகிட்டே என் இசைப் பயணத்தையும் தொடர்கிறேன். அதுக்கு பி.சுசீலா அம்மாவின் ஊக்கம் அதிகமிருக்கு.

தமிழ்நாடு, கர்நாடகாவில் நடைபெறும் இசைக் கச்சேரிகளில் கிளாஸிக் மற்றும் பக்திப் பாடல்களை மட்டுமே பாடுறேன். நூற்றுக்கணக்கான மேடைகளில் பாடியிருக்கேன். பெற்றோரின் புகழ் மற்றும் பாடல்களை இந்தக் காலத் தலைமுறைக்குக் கொண்டுபோகணும். அந்த நோக்கத்தோடு தொடர்ந்து பாடுவேன்!”