Published:Updated:

“கடல் எனக்கு சொல்லிக் கொடுத்தது ஏராளம்!” - சர்ஃபிங் வீராங்கனை விலாசினி

விலாசினி
பிரீமியம் ஸ்டோரி
விலாசினி

அலைமகள்

“கடல் எனக்கு சொல்லிக் கொடுத்தது ஏராளம்!” - சர்ஃபிங் வீராங்கனை விலாசினி

அலைமகள்

Published:Updated:
விலாசினி
பிரீமியம் ஸ்டோரி
விலாசினி

கடல்... பார்க்கப் பார்க்க சலிக்காதது. சீறிப் பாய்ந்து வந்து... திரும்பி ஓடும் அலைகளை கரையில் நின்று மணிக்கணக்கில் ரசிக்கலாம். கால்கள் நனைத்துக் குதூகலிக்கலாம். ஆனால், அச்சுறுத்தும் ராட்சத அலைகளில் சறுக்கி விளையாடுவது என்பது மிகவும் சவாலான விஷயம். சாகச விளையாட்டான சர்ஃபிங்கில் (நீர்சறுக்கு விளையாட்டு) கோலோச்சிக்கொண்டிருக்கும் சென்னையைச் சேர்ந்த விலாசினிக்கோ அது சர்வ சாதாரணம்.

பெண்கள் அதிகம் கலந்துகொள்ளாத விளையாட்டான சர்ஃபிங்கில் இருமுறை ஆசிய அளவிலான போட்டிகளில் பங்குபெற்று அதில் ஒருமுறை ஃபைனல் வரை சென்று 'தேர்டு ரன்னர்-அப்' விருதை வென்று தனித்து மிளிரும் விலாசினியிடம் பேசினோம்.

 “கடல் எனக்கு சொல்லிக் கொடுத்தது ஏராளம்!” - சர்ஃபிங் வீராங்கனை விலாசினி

“நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைதான். அப்பா சுந்தர், அம்மா சுதா. நான் ஒரே பொண்ணு. சர்ஃபிங்கில் நான் சக்சஸ் ஆகி இப்போ உங்ககிட்ட பேசிக்கிட்டிருக்கேன்னா அதுக்கு முழு முதல் காரணம் என் அம்மாதான். அவங்க சின்ன வயசுல வாலிபால் பிளேயரா இருந்ததால ஒருவர் மனதளவிலும் உடலளவிலும் வலிமை பெற ஸ்போர்ட்ஸ் எவ்வளவு முக்கியம்னு சொல் வாங்க. அதனால ‘தன் பொண்ணு நிச்சயமா ஏதாவதொரு ஸ்போர்ட்ஸ் கத்துக்கணும்’னு நான் பொறந்ததுமே முடிவு பண்ணிட்டாங்க. அந்த முடிவுக்கு உயிர் கொடுத்தது என் அப்பாவோட நெருங்கிய நண்பரான வைத்தி அங்கிள்தான்.

சென்னை மெரினாவுல உள்ள நீச்சல் குளத்துக்கு வீக் எண்டு ஸ்விம்மிங் போறது வைத்தி அங்கிளோட வழக்கம். அப்படி அவர் போகும்போது என்னையும் கூட்டிட்டுப் போவார். நான் நல்லா ஸ்விம் பண்றதைப் பார்த்ததும் என்னை ஸ்விம்மிங் பிளேயராதான் ஆக்கணும்னு என் அம்மாவும் முடிவு பண்ணிட்டாங்க. செட்டிநாடு வித்யாஷ்ரம் ஸ்கூல்ல நீச்சல் சொல்லித் தருவதைக் கேள்விப்பட்டு என்னை அந்த ஸ்கூல்ல சேர்த்துவிட்டாங்க. ஸ்கூல்ல நான் சாம்பியன் ஆனேன். அதற்கடுத்து மாநிலங்களுக்கு இடையேயான பல போட்டிகள்ல கலந்துகிட்டு சாம்பியன் ஆனேன். 2007-ல் என் பத்தாவது வயசுல நேஷனல்ஸ்ல சில்வர் வாங்கிட்டேன்” என்று உற்சாகம் அலையடிக்க முன்னுரை கொடுத்து நிறுத்துகிறார் விலாசினி.

“நான் எட்டு மாசக் குழந்தையா இருந்தபோதே என்னை ஸ்விம் பண்ண கூட்டிட்டுப் போயிட்டாங்க. என் அப்பாதான் ஆரம்பத்துல கொஞ்சம் பயந்தார். ஆனா என் அம்மா தைரியமா அனுப்பினாங்க. பெங்களூருல தங்கி, நேஷனல் ஸ்விம்மிங் கோச் பிரதீப்குமார் சாரிடம் பயிற்சி எடுத்ததால 9-ம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்பு வரை நான் ஸ்கூலுக்குப் போகலை. வீட்டிலிருந்து படிச்சேன். ப்ளஸ் டூ படிப்புக்காக மறுபடி சென்னை வந்தேன். ப்ளஸ் டூ முடிச்சதும் சி.ஏ சேர்த்துவிட்டுட்டாங்க. பிசிக்கல் ஆக்டிவிட்டியே இல்லாம 12 மணி நேரம் கோச்சிங் சென்டர்லயே உட்கார்ந்திருக்க என்னால் முடியலை. அந்த நேரத்துல வேற ஏதாவது பண்ணணும்னு நினைச்சேன். அப்போதான் கோவளம் பீச்ல நிறைய பேர் சர்ஃபிங் போறாங்கன்ற தகவல் ஞாபகம் வந்துச்சு. நாம ஏன் சர்ஃபிங் கத்துக்கக் கூடாதுன்னு தோணுச்சு. அம்மா உடனே ஓகே சொல்லிட்டாங்க’’ - விலாசினியின் வார்த்தைகளில் மனவலிமை நிரம்பி வழிகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிறு வயதில் நடிகை சரண்யாவுடன்...
சிறு வயதில் நடிகை சரண்யாவுடன்...

``ஆரம்பத்துல சர்ஃப் போர்டுல நிறைய அடிபடும். கடலுக்குள்ள இருக்கிற பாறைகளில் அடிபடும். நான் தினமும் சின்னச் சின்ன காயங்களோட வர்றதைப் பார்த்துட்டு என் அம்மாவும் லேசா பயந்தாங்க. ஆனா, எனக்கு சர்ஃபிங் த்ரில்லிங்கான அனுபவத்தைக் கொடுத்துச்சு. கடல்... ஒவ்வொரு நாளும் புதுசுதான். இன்னிக்கு கடல் இப்படித்தான் இருக்கும்னு யாராலயும் கணிக்க முடியாது. ஒரு கட்டத்துல என்னால எனக்கு ஒத்துவராத சி.ஏ படிப்பைத் தொடர முடியாதுன்னு எனக்கு தெரிஞ்சுருச்சு. என் அக்கவுன்ட்ஸ் சார் சரவணன் என்னைக் கூப்பிட்டு, ‘பணம் சம்பாதிக்கிறதுக்காக ஒரு துறையைத் தேர்ந்தெடுக்காதே, உன் பேஷனை ஃபாலோ பண்ணு’ன்னு சொன்னார். அந்த நேரத்துலதான் நாட்டிலேயே முதல் முறையா சென்னை ராமச்சந்திரா மெடிக்கல் காலேஜ்ல ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் படிப்பை அறிமுகம் பண்ணாங்க. உடனே சி.ஏ படிப்பை டிஸ்கன்டினியூ பண்ணிட்டு அதில் சேர்ந்தேன்.

2015-ல் சர்ஃபிங் போட்டிகளில் கலந்துக்க ஆம்பிச்சேன். அப்பவே நேஷனல் லெவல்ல ஃபைனல்ஸ் போயிட்டேன். அந்த வருஷமே ஏஷியன் சர்ஃபிங் சாம்பியன்ஷிப் போட்டிகளும் நடந்தன. நேஷனல் லெவல் போட்டிகள்ல ஃபைனல் போன எல்லோருக்குமே ஏஷியன் சாம்பியன்ஷிப் போட்டிகள்ல சான்ஸ் கிடைச்சது. அந்தப் போட்டிகள்ல கலந்துக்கும்போதுதான் ஓர் உண்மை தெரிஞ்சது. இந்தியா சார்பாகக் கலந்துகிட்ட பெண்கள் மொத்தமே நான்கு பேர்தான். அதிலும் தமிழ்நாட்டிலிருந்து நான் மட்டும்தான். அப்போதான் நான் சர்ஃபிங்ல இந்திய அளவுல சிறந்து விளங்கும் கோவளம் பகுதியைக் கவனிச்சேன். அந்தப் பகுதிகள்ல பசங்க மட்டும்தான் சர்ஃபிங் பண்றாங்க.

 “கடல் எனக்கு சொல்லிக் கொடுத்தது ஏராளம்!” - சர்ஃபிங் வீராங்கனை விலாசினி

ஒரு பொண்ணுகூட சர்ஃபிங் பண்றது இல்லை. எனக்கு அதிர்ச்சியா இருந்துச்சு. இங்க உள்ள பசங்கள்லாம் இவ்வளவு பிரமாதமா சர்ஃபிங் பண்றீங்க. ஆனா, ஏன் ஒரு பொண்ணுகூட சர்ஃபிங் பண்றதில்லைன்னு கேட்டேன். `எங்க சமுதாய வழக்கப்படி பொண்ணுங்க கடலுக்குள்ல போகக் கூடாது. அதனாலதான் இங்க பொண்ணுங்க யாரும் சர்ஃபிங் பண்றதில்ல. நாங்க என்னதான் சொன்னாலும் பெரியவங்க கேட்க மாட்டாங்க. எங்களோட அடுத்த தலைமுறை பெண்களுக்கு நிச்சயம் சர்ஃபிங் சொல்லித்தருவோம்’னு சொன்னாங்க.

நகரங்கள்ல நிலைமை வேற மாதிரியா இருந்துச்சு. சின்ன வயசுல சர்ஃபிங் கத்துக்க அனுமதிக்கப்படுற பெண்களில் பலர் 19, 20 வயசுக்கு மேல சர்ஃபிங் பண்ண அனுமதிக்கப்படுறது இல்லை. அவங்களும் ஒரு கட்டத்துக்கு மேல போறதில்லை. இவை யெல்லாம் தெரிய வந்த பிறகு, எப்படியாவது இதுல நாம சாதிச்சுக் காட்டணும்னு தோணுச்சு. 2019-ல் நடந்த ஏஷியன் சர்க்யூட் போட்டியில் ஃபைனல் வரை சென்று 'தேர்டு ரன்னர் அப்' ஆக வந்தேன். சர்ஃபிங்கின் இன்னொரு பிரிவான பேடலிங்கும் கத்துகிட்டு 2017-ல் ஸ்டாண்ட் அப் பேடலிங்கில் சாம்பியன் ஆனேன். கடல் எனக்கு ஏராளமான விஷயங்களைக் கத்துக்கொடுத்திருக்கு. அலை யாருக்காகவும் எதற்காகவும் ஓய்வதே இல்லை. அப்படித்தான் பெண்களும் யாருக்காகவும் எதற்காகவும் முடங்கிடக் கூடாது. உங்க கனவுகளை நோக்கிய பயணத்தை யாருக்காகவும் எதற்காகவும் நிறுத்தாதீங்க” என்றார் நிறைவாக.