Published:Updated:

அறுபதிலும் அசத்தும் புல்லட் தம்பதி!

புல்லட் தம்பதி
பிரீமியம் ஸ்டோரி
புல்லட் தம்பதி

இளமை இதோ இதோ

அறுபதிலும் அசத்தும் புல்லட் தம்பதி!

இளமை இதோ இதோ

Published:Updated:
புல்லட் தம்பதி
பிரீமியம் ஸ்டோரி
புல்லட் தம்பதி

ஜான் சுதாகர், சுலேகா சுதாகர் ஜோடியைப் பார்க்கும்போது ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் சிம்பு, மஞ்சிமா மோகனை வயதான கெட்டப்பில் பார்ப்பது போலிருக்கிறது. 68 வயது சுதாகருக்கும் 66 வயது சுலேகாவுக்கும் விருப்பமான பொழுதுபோக்கு என்ன தெரியுமா?

புல்லட்டில் பயணம் செல்வது. பொழுதுபோக்கையே தொழிலாக வும் மாற்றிக்கொண்ட அதிர்ஷ்டசாலிகள் இவர்கள். மிகப்பிடித்த புல்லட்டுகளை கஸ்டமைஸ் செய்து தருவதுதான் இவர்களது வேலையே. சென்னை, பள்ளிக்கரணையில் உள்ள தங்கள் ‘தி புல்லட் ஃபேக்டரி' நிறுவனத்தின் மூலம் புல்லட்டுகளை கஸ்டமைஸ் செய்து தருவது, இன்ன பிற சர்வீஸ்களைச் செய்வது என இந்த வயதிலும் இருவரும் செம பிஸி. வயதானவர்களை வீட்டிலேயே இருக்கச் சொல்கிறது பெருந்தொற்றுக்காலம். ஊரடங்கில் வாழ்வாதாரம் இழந்து இள வயதினரும் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் இந்த நேரத்தில், சுதாகர் - சுலேகா ஜோடியோ வழக்கத்தைவிடவும் பிஸி.

‘‘சின்ன வயசுலேருந்தே மோட்டார் சைக்கிள்ஸ் மேல அப்படியொரு காதல். பழைய பைக்கைப் பார்த்தா, உடனே அதைப் புதுப்பிச்சு ஓட்டினா நல்லாருக்குமேனு யோசிப்பேன். ஸ்கூல் காலேஜ்ல அந்தக் கனவு நனவாகலை. சி.ஏ படிச்சிட்டு ஒரு கம்பெனியில வேலை செய்திட்டிருந்தேன். கல்யாணத்துக்குப் பிறகு, ராணுவ ஏலத்துல 2,600 ரூபாய்க்கு ராயல் என்ஃபீல்டு பைக் வாங்கினோம்.

அறுபதிலும் அசத்தும் புல்லட் தம்பதி!

பல வருஷங்களா ராயல் என்ஃபீல்டு பைக் ஒரே மாதிரி இருந்தது. எனக்கு அது ரொம்ப பிரமாண்டமான வண்டியா தெரிஞ்சது.

அதே நேரம் வேற சாதாரண பைக் வாங்கவும் விருப்பமில்லை. வாங்கின பைக்கை மெக்கானிக்கை வெச்சு கஸ்டமைஸ் பண்ணினோம். கிட்டத்தட்ட எட்டு மாசம் ஆச்சு. முடிச்சதும் 17 நாள், 3,000 கிலோமீட்டர் தென்னிந்தியா முழுக்க ஒரு டிரிப் போனோம். மறக்க முடியாத அனுபவம் அது’’

- அருகிலிருந்த மனைவியைக் காதலோடு பார்த்தபடி ஆரம்பிக்கிறார் சுதாகர்.

‘`என்னைப் பொறுத்தவரை அது ஹனிமூன் மாதிரிதான். அந்த டிரிப் முழுக்க பல ஊர்கள்லேருந்து பல நண்பர்கள் எங்ககூட இணைஞ்சாங்க. பைக் ரைடெல்லாம் அவ்வளவா பிரபலமாகாத அந்தக் காலத்துல ஊரெல்லாம் வேடிக்கை பார்க்க, வெட்கத்தோடு அவர் பின்னாடி உட்கார்ந்தபடி டிராவல் பண்ணினேன். இத்தனை வருஷங்களுக்குப் பிறகும் நானும் அவரும் சேர்ந்து போற பைக் டிராவல்னா மனசு றெக்கைகட்டிப் பறக்க ஆரம்பிச்சிடும்’’

- தூய நரையிலும் காதல் மலர்கிறது சுலேகாவுக்கு.

``ஏதோ ஒரு சூழல்ல அந்த வண்டியை விற்க வேண்டியதாயிடுச்சு. அதுக்குப் பிறகு, எந்த புல்லட்டை ஓட்டினாலும் என் பழைய வண்டியை ஓட்டின ஃபீல் கிடைக்கலை. இனிமே புல்லட்டையே தொட மாட்டேன்னு முடிவெடுத்தேன். 62 வயசுல மறுபடி புல்லட் காதல் துளிர்த்தது. ஒரு புல்லட்டை எடுத்து கஸ்டமைஸ் பண்ணலாம்னு ஆசை வந்தது. புல்லட் வாங்கி, ஒரு மெக்கானிக்கையும் வேலைக்கு வெச்சோம். ஆறு மாசங்கள்ல கையில இருந்த பணமெல்லாம் காலியாயிடுச்சு. வேற வழியில்லாம இதை கமர்ஷியலா பண்ண வேண்டியதாச்சு. 2015-ல ‘தி புல்லட் ஃபேக்டரி’ ஆரம்பிச்சோம்’’

அறுபதிலும் அசத்தும் புல்லட் தம்பதி!

- ஓய்வுக்காலத்தில் வேகமெடுத்திருக்கும் வாழ்க்கைப் பயணக் கதையின் தொடக்கம் சொல்கிறார் சுதாகர். அதை ரசனையாக மாற்றும் வித்தை பகிர்கிறார் சுலேகா.

‘`80-90களில் கஸ்டமைசேஷன் என்பது அவ்வளவு பிரபல மாகலை. தனியா பைக்ல டூர் போறவங்களுடைய எண்ணிக்கை அதிகமாக ஆரம்பிச்ச பிறகு, வாகனங்களை கஸ்டமைஸ் பண்றதும் பிரபலமாக ஆரம்பிச்சது. கஸ்டமைஸ் பண்ணப்போற வண்டிக்கான ஐடியா தோணும்போது அது விஷுவலா எங்க கண்முன்னாடி தெரியும். உடனே அதை டிராயிங்கா வரைஞ்சோ, மனசுல ஓட்டிப்பார்த்தோ ஒரு வடிவத்தைக் கொண்டு வந்துடுவோம். அப்புறம் டிங்க்கரிங், ஆல்ட்டரேஷன், கஸ்டமைசேஷன்னு அடுத்த வேலைகள் நடக்கும். அப்புறம் இன்ஜினை சரிபார்த்து, கலர் பண்ணிட்டு, ஃபைனல் டச் கொடுத்துட்டா வண்டி ரெடி. எல்லா விஷயங்களிலும் தனிச்சுத் தெரியணும்னு நினைக்கிற மக்கள் இன்னிக்கு அதிகம். புல்லட் விஷயத்திலும் தங்களோட வண்டி தனியா தெரியணும்னு நினைச்சுதான் கஸ்டமைஸ் பண்ண வர்றாங்க. நாங்க பிரதானமா பார்க்கிற ரெண்டு விஷயங்கள், ஓட்டுறவங்களுக்கு வசதியா இருக்கணும், பாதுகாப்பா இருக்கணும்’’

- சுலேகாவின் பேச்சில் அக்கறையும் அன்பும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘`கஸ்டமைசேஷன் பண்றதுக்காக எங்களை அணுகறவங்க அவங்களுக்கான ஐடியாவோடு வருவாங்க. அதைக் கேட்டுட்டு எது சாத்தியம், எது சாத்தியமில்லைனு புரியவெச்சு நாங்க எங்க ஐடியாஸையும் சொல்வோம். அதை ஸ்கெட்ச்சா போட்டுக் காட்டி, வேலையை ஆரம்பிப்போம். சிலர் அசாதாரணமான எதிர்பார்ப்புகளோடு வருவாங்க. உதாரணத்துக்கு தங்களோட பைக்கை ஹார்லி டேவிட்சன் மாதிரி மாத்திக்கொடுக்கச் சொல்லிக் கேட்பாங்க. ஹார்லி டேவிட்சன் பைக் ரொம்ப ஹெவியான வாகனம். ரெண்டு சிலிண்டர் இருக்கும். இன்ஜின் அடர்த்தியும் அதிகம். அதனால நம்ம வண்டியை ஹார்லி டேவிட்சன் மாதிரி மாத்த நினைக்கிறது தப்பு. வேணும்னா ஹார்லி டேவிட்சன்னை நம்ம வண்டி மாதிரி மாத்தலாம். ராயல் என்ஃபீல்டு கேரக்டர்ஸுக்குள்ள மட்டும்தான் நாங்க கஸ்டமைஸ் பண்ணுவோம். அமெரிக்கன் ஸ்டைல்ல வேணும்னு கேட்கிறவங்களும் பின் பக்க டயரை அளவுக்கதிகமான அகலத்துல உள்ள மாதிரி மாத்திக்கொடுக்கும்படி கேட்கிறவங்களும் இருக்காங்க. அதெல்லாம் ஓட்டுறவங்களுக்குப் பாதுகாப்பான விஷயங்கள் இல்லைங்கிறதால நாங்க மறுத்துடுவோம். வண்டி ஓட்டும் மக்கள் தங்களை பொது வெளியில மக்கள் கவனிக்கணும், திரும்பிப் பார்க்கணும்னு நினைப்பாங்க. அதுக்காக அவங்க ஹேண்டில்பாரை வித்தியாசமா மாத்தவும், சத்தத்தின் மூலமா கவனிக்க வைக்க சைலன்ஸரை மாத்தவும் நினைக்கிறாங்க. ஆனா, அதிக சத்தம் எழுப்பும் சைலன்ஸர், இன்ஜினுக்கு நல்லதில்லைங்கிறதால நாங்க அதை என்கரேஜ் பண்றதில்லை’’ என்று கஸ்டமைசேஷனில் உள்ள சவால்களை விளக்குகிறார் சுதாகர்.

அறுபதிலும் அசத்தும் புல்லட் தம்பதி!

‘`எனக்கும் பைக் ஓட்டணும்னு ஆசைதான். ஆனா, நான் அஞ்சடிதான் இருக்கேன். அதனால பெரிய பைக் ஓட்டுறதையெல்லாம் டிரை பண்றதில்லை. ஆனா, அவர் ஓட்ட, நான் பின்னாடி உட்கார்ந்து ஊரைச் சுத்தற சுகம் வேற லெவல். சில வருஷங்களுக்கு முன்னாடி பைக் வாங்க ஸ்கூட்டர்லயே மதுரைக்குப் போனோம். அங்கிருந்து சென்னைக்குக் கிளம்பும்போது செம மழை. நான் ஸ்கூட்டரை ஓட்ட, அவர் புல்லட் ஓட்டிட்டு வந்தார். பாதி வழியில இருட்டிடுச்சு. இடையில நிறுத்தி ரெஸ்ட்டாரன்ட்ல தங்கிட்டு, அடுத்தநாள் சென்னை வந்தோம். ஹம்பிக்குக் கிளம்பினோம். வழியில் தெலங்கானாவில் ஸ்டிரைக். எல்லா வழிகளையும் அடைச் சிட்டாங்க. வயல்வெளி, முள்ளுக்காடு, ஆற்றுப்படுகைகள் வழியா திருப்பிவிட்டாங்க. வழியில எங்கேயும் பெட்ரோல் பங்கும் ஏடிஎம்மும் இல்லை. அரை லிட்டர் பெட்ரோலும், 75 ரூபாயும்தான் இருந்தது. ஆனாலும் அந்த டிரிப் எங்களுக்கு போரடிக்கலை. நாங்க ரெண்டு பேர் மட்டுமே போற பைக் ரைடு எப்பவும் எங்களுக்கு ஸ்பெஷல்தான்’’ என்பவர்கள் லாக் டௌனுக்குப் பிறகான அடுத்த டிரிப்புக்கும் இப்போதே ரெடி.

‘`கோவிட் 19 சூழ்நிலை கொஞ்சம் சரியானதும் ஹம்பிக்கு இன்னொரு டிரிப் போகணும். ராஜஸ்தான்ல உள்ள அழகான இடங்களை போட்டோ எடுக்கணும். இந்தியா முழுக்க டிராவல் பண்ணணும். 1954, 55, 56 மாடல் மோட்டார்சைக்கிள்ஸ் வெச்சிருக்கோம். அதுல ஒண்ணுலதான் இந்த டிரிப்’’ என்று பிளான் சொல்லும் ஜோடியிடம், 1975 மாடிஃபைடு கஃபே ரேசர், லைட்டனிங் 535 மாடல் பைக்குகளும் இருக்கின்றன.

பறக்கும் ராசாளியே... ராசாளியே...