Published:Updated:

சைக்கிளில் இரவு ரோந்து, வடசென்னை சவால்கள், பெண்களுக்கான விழிப்புணர்வு...

ரம்யாபாரதி
பிரீமியம் ஸ்டோரி
ரம்யாபாரதி

- களத்தில் அசத்தும் காவல்துறை இணை ஆணையர் ரம்யாபாரதி

சைக்கிளில் இரவு ரோந்து, வடசென்னை சவால்கள், பெண்களுக்கான விழிப்புணர்வு...

- களத்தில் அசத்தும் காவல்துறை இணை ஆணையர் ரம்யாபாரதி

Published:Updated:
ரம்யாபாரதி
பிரீமியம் ஸ்டோரி
ரம்யாபாரதி

வடசென்னை... பேரைச் சொல்லும்போதே ஒரு பயம் வரும். ரௌடியிசம், தாதாக்கள் ராஜ்ஜியம், கடத்தல்காரர்கள் மற்றும் போதைப் பொருள் விற்பனையாளர் களுக்கான ஒரு சந்தை என சட்டம் ஒழுங்குக்கு சவால் விடும் பகுதியாகத் தான் வடசென்னை எப்போதுமே அறியப்படுகிறது. இந்தப் பகுதிக்கு (மாநகர காவல்துறை - வட சென்னை மண்டலம்) புதிய இணை ஆணையராகப் பொறுப்பேற்றிருக் கிறார் ஆர்.வி.ரம்யாபாரதி. இங்கே இணை ஆணையர் பொறுப்புக்கு ஒரு பெண் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.

சவால்கள் நிறைந்த பகுதியில் களமிறங்கியிருக்கும் ரம்யாபாரதி, நிறைய திட்டங்களோடும் கனவுகளோடும் பணியைத் தொடங்கியிருக்கிறார். முதல் முயற்சியே, முதல்வர் மு.க.ஸ்டாலினின் பாராட்டைப் பெற்றுத் தந்துள்ளது.

தண்டையார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் அவரைச் சந்திக்கக் காத்திருந்த வேளையில் கண்களில் தென்பட்டது அந்த அறிவிப்பு. ‘இணை ஆணையரைச் சந்திக்க வரும் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தை யுடன் உள்ள பெண்கள் மாடி ஏற வேண்டாம். கீழேயே காத்திருக்கவும். ஆணையர் கீழே வருவார்’ - பிரமிப்பு அகலாமலேயே அவருடனான உரையாடல் ஆரம்பமானது.

சைக்கிளில் இரவு ரோந்து, வடசென்னை சவால்கள், பெண்களுக்கான விழிப்புணர்வு...

“சவால்கள் நிறைந்த வடசென்னையில் முதல் பெண் இணை ஆணையராகப் பதவியேற்றபோது எப்படி உணர்ந்தீர்கள்?”

“வடசென்னை என்பது, ஓர் அதிகாரிக்குக் கண்டிப்பாக சவாலான பகுதிதான். பொருளா தாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ள மக்கள் அதிகமாக உள்ள பகுதி என்பதால், இங்கே சேவை செய்வதற்கான வாய்ப்பும் அதிகம். நடுத்தரவர்க்கமும், உயர் வருவாயுள்ள வர்க்கமும் வசிக்கும் சென்னையின் மற்ற பகுதி மக்கள், அரசை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இந்த மாதிரி பகுதிகளில் உள்ள மக்கள்தான் அரசாங்கம், காவல்துறை போன்றவற்றின்மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பார்கள். அவர்களுக்குச் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. எனவே இதை ஒரு நல்ல வாய்ப்பாகத்தான் நான் கருதுகிறேன்!”

“இப்பகுதியில் குற்றங்களைக் குறைப்பதற்கு நீங்கள் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் என்னென்ன?”

“இப்பகுதியின் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் மனுதாரராக நிறைய பெண்கள் வருவார்கள். பெரும்பாலும் குடும்பம் சார்ந்த பிரச்னைகளோடுதான் வருவார்கள். சிலரின் மனுக்களின் மீது எஃப்.ஐ.ஆர் போடுதல் போன்ற நடவடிக்கை எடுப்போம். ஆனால், பாதிக்கப்பட்ட அந்த மனுதாரரின் வாழ்வில் அடுத்த கட்டம் என்பது பெரும்பாலும் கேள்விக்குறியாக இருக்கும். இந்த நிலையை மாற்றுவதற்காக, மகளிர் காவல் நிலையங்கள் அனைத்தையும் ஒரு குழுவாக இணைத்து, ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் ‘டை -அப்’ வைத் துள்ளோம். காவல்நிலையத்துக்கு புகார் அளிக்க வரும் பெண்களுக்கு வழிகாட்டு கிறோம். வேலைவாய்ப்பு, கல்வி, குழந்தை களைப் பார்த்துக்கொள்வது, பொருளாதார வசதி போன்ற எந்தப் பிரச்னைக்கும் உதவு கிறோம். அதாவது மனுதாரரின் மனுவின் மேல் நடவடிக்கை எடுப்பதுடன் மட்டும் நிறுத்திவிடாமல், அந்த மனுதாரரின் வாழ்வில் சிறிய முன்னேற்றத்தைக் கொண்டு வரும் முயற்சிதான் இது.. அவர்களின் பிள்ளை களுடைய படிப்புக்கும் உதவுகிறோம்.

நேரடியாக மாணவர்களுடன் தொடர்பு கொண்டு பேசுகிறோம். பெண்களுக்கு எதிரான குற்றங்கள், அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிற விஷயங்கள், அவை எப்படி நடக்கின்றன என்பது போன்ற விஷயங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். முக்கிய மாக பாலியல் குற்றங்களில் இருந்து பாது காத்துக்கொள்ளுதல், போதைப் பொருள் களுக்கு அடிமையாகாமல் இருத்தல் போன்றவை பற்றி வலியுறுத்துகிறோம்.

பேருந்துகளில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டே வருவது பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கிறோம். இவை தவிர, போதைப்பொருள் கடத்தலைத் தவிர்க்கவும் சிறப்புப் படை வைத்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்” – உற்சாகமாகத் தன் பணிகளை விவரித்தார் இணை ஆணையர்.சமீபத்தில் ஒரு நாள் இரவில் சைக்கிளில் வட சென்னையில் கிட்டத்தட்ட 9 கி.மீ தூரம் இவர் ரோந்து போனது வைரல் ஆகி, முதல் வரிடம் பாராட்டு பெற்றுள்ளார் ரம்யாபாரதி. அது குறித்து கேட்டோம்.

“இரவு ரோந்து என்பது காவல்துறைக்கு அடிப்படையான கடமை. இரவு ரோந்தைத் திட்டமிட்டு, ஒழுங்காகச் செய்தால், பகலில் நடக்கும் பல குற்றங்கள்கூடத் தடுக்கப்படும். ஓர் அதிகாரியாக காரில் போகும்போது லோக்கல் ஏரியாவைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியாது. இப்படிப் போவதால், இரவில் பணி செய்யும் காவலருக்கு என்னென்ன சிரமங்கள் இருக்கின்றன, இரவு ரோந்தில் அவர்களின் பங்களிப்பு என்ன என்பன போன்ற விவரங்களை நேரடியாகத் தெரிந்து கொள்ளலாம். எனவே வாரம் ஒருமுறை இதைத் தொடரலாம் என்றிருக்கிறேன்.”

சைக்கிளில் இரவு ரோந்து, வடசென்னை சவால்கள், பெண்களுக்கான விழிப்புணர்வு...

“சமீபகாலமாக மொபைலில் வீடியோ எடுத்து பெண்களைச் சீரழிக்கும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றனவே..!”

“வருமுன் காப்பதே இந்த விஷயத்தில் 100 சதவிகிதம் தீர்வாகும். பெண்களுக்குச் சொல்வது இதுதான். தப்பித்தவறி அப்படி ஒரு விஷயம் நடந்துவிட்டாலும் தைரியமாக இருங்கள். ஒருவன் உங்களை மிரட்டுகிறான் என்றால் நீங்கள் தைரியத்துடன் வெளியே சொல்ல வேண்டும். அதைத் தனக்குள்ளே போட்டு மூடி, தற்கொலை போன்ற தவறான முடிவுகளுக்குப் போகக் கூடாது. பிரச்னை களில் மாட்டிக்கொள்ளும் பெண்கள், உடனடியாக காவல்துறைக்கோ, வீட்டு நபர்களிடமோ சொல்ல வேண்டும். இந்த விழிப்புணர்வுக்காகவே ‘அச்சமில்லை’ என்றொரு நிகழ்வை விரைவில் தொடங்கத் திட்டமிட்டுள்ளேன்.”

“ஐ.பி.எஸ் அதிகாரியாவதற்கு உங்களுக்கு இன்ஸ்பிரேஷன் யார்?”

“என் அப்பா பி.ஏ. ராமையா, ஐ.ஏ.எஸ் அதிகாரி. 1981 பேட்ச். சேலம் ஜில்லா கலெக்டராக இருந்தவர். எனக்கும் என் அண்ணனுக்கும் சிறு வயதிலிருந்தே சிவில் சர்வீஸ்தான் கனவு. முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று, 22 வயதிலேயே ஐ.பி.எஸ் முடித்து பணியில் சேர்ந்தேன். என் சகோதரர் ஐ.ஆர்.எஸ் முடித்து, வருமான வரித்துறை யில் கூடுதல் ஆணையராக இருக்கிறார்.

என் கணவர் ஸ்வரூப் உதயகுமாரும் ஐ.ஏ.எஸ் அதிகாரிதான். கொல்கத்தாவில் பணி செய்கிறார். நானும் இரண்டு வருடங்கள் மேற்கு வங்கத்தில் டெபுடேஷனில் பணி செய்துவிட்டுத்தான் இங்கே வந்தேன். மனதில் உறுதியாக ஒன்றை நினைத்து, உறுதியோடு அதை நோக்கி முயன்றால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்பதற்கு நானே உதாரணம்”

- சிரித்தபடி சொல்லும் ரம்யாபாரதி தற்போது சென்னை பல்கலையில் அஞ்சல் வழியில் ‘சைபர் ஃபாரன்சிக்ஸ்’ படித்து வருகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism