Published:Updated:

``ஐ.பி.எஸ் ஆகணும்னு ஓட ஆரம்பிச்சேன். இப்ப 4 மெடல்!" - தேசிய போட்டிகளில் சாதித்த கூலித்தொழிலாளி மகள்

தங்கப் பதக்கம் வென்ற லிஃபோனா றோசிலின் ஜின்
News
தங்கப் பதக்கம் வென்ற லிஃபோனா றோசிலின் ஜின்

"குடும்பத்தோட டிவி-யில ஒரு சினிமா பார்த்தோம். அதில ஐ.பி.எஸ் அதிகாரியா ஒரு பெண் நடிச்சிருந்தாங்க. அதைப் பார்த்ததும் நானும் இதுபோல அதிகாரியா வர என்ன செய்யணும்னு லிஃபோனா றோசிலின் ஜின் கேட்டா."

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே பாலாமடம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சர்ஜின். இவர் கோழிக்கடையில் இறைச்சி வெட்டுவது போன்ற பல வேலைகளுக்குப் போகிறார். சர்ஜினின் மகள் லிஃபோனா றோசிலின் ஜின். 15 வயதான லிஃபோனா றோசிலின் ஜின் வாவறை பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் புனித பிரான்சிஸ் மேல்நிலைபள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். ஓட்டப்பந்தய போட்டியில் தேசிய அளவில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். அடுத்ததாக, வரும் 21-ம் தேதி பஞ்சாபில் நடக்கும் தேசிய தடகள போட்டியில் கலந்துகொள்ள உள்ளார் லிஃபோனா றோசிலின் ஜின். அதற்காக கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ள லிஃபோனா றோசிலின் ஜின்னிடம் பேசினோம்.

"நான் வளர்ந்த பிறகு ஐ.பி.எஸ் ஆகணும்னு ஆசைப்பட்டேன். அதற்கு என்ன செய்யணும்னு அப்பாகிட்ட கேட்டேன். படிக்கிறதோட விளையாட்டில் சாம்பியன் வாங்கினா ஈசியா ஐ.பி.எஸ் ஆகலாம்னு சொன்னாங்க. சரி எனக்கு பயிற்சி கொடுங்கன்னு அப்பாகிட்ட சொன்னேன்.

பதக்கம் பெறும் லிஃபோனா றோசிலின் ஜின்
பதக்கம் பெறும் லிஃபோனா றோசிலின் ஜின்

என் ஆசையை நிறைவேற்றுவதற்காக அப்பாவே எனக்கு பயிற்சியும் கொடுத்தாங்க. என்கிட்ட வேகமாக ஓடும் திறமை இருந்ததைக் கண்டுபிடிசக்சு அப்பாதான் ஊக்குவிச்சாங்க. அதுமட்டுமல்லாம விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற பள்ளி எதுன்னு தேடிப் பார்த்து, வாவறை பள்ளியைத் தேர்ந்தெடுத்து என்னை அங்க படிக்கச் சேர்த்தாங்க.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பள்ளியில உடற்கல்வி ஆசிரியர் லாறன்ஸ் எனக்கு அதிகாலை 5.30 மணியில இருந்து காலை 8 மணி வரைக்கும், மாலை 4 மணி முதல் 7 மணி வரைக்கும் பயிற்சி தர்றாங்க. நான் 7-ம் வகுப்பு படித்த சமயத்தில் மாவட்ட அளவிலான தடகள போட்டியில கலந்துகிட்டு தங்க பதக்கம் வாங்கினேன். அதுதான் என் முதல் தங்க பதக்கம். அதுக்குப் பிறகு பல ஓட்டப்பந்தய போட்டிகளில் கலந்துகிட்டு பரிசு வாங்கினேன். மாவட்ட அளவில் அதிக முறை குறுகிய காலத்தில் தங்க பதக்கங்கள் வென்ற மாணவிங்கிற பெயரை வாங்கினேன். அடுத்ததா 11 வயசுல தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துக்கிற வாய்ப்புக் கிடைச்சது.

ஐ.பி.எஸ் ஆகும் ஆசையில் பயிற்சி மேற்கொள்ளும் லிஃபோனா றோசிலின் ஜின்
ஐ.பி.எஸ் ஆகும் ஆசையில் பயிற்சி மேற்கொள்ளும் லிஃபோனா றோசிலின் ஜின்

தேசிய அளவில முதல் முறையாக மும்பையில் நடந்த 400 மீட்டர் ஓட்டப் போட்டியில தங்கம் வென்று சாதனை படைச்சேன். தொடர்ந்து டெல்லியில் நடந்த 1,000 மீட்டர் போட்டியிலயும் தங்க பதக்கத்தை வசப்படுத்தினேன். அடுத்ததா கோவாவில் நடந்த ஒரே போட்டியில 400 மீட்டர் மற்றும் 600 மீட்டர் ஓட்டப் போட்டியில கலந்து கொண்டு இரண்டு தங்க பதக்கங்களை வென்றேன். தொடர்ச்சியா நாலு முறை தங்கப் பதக்கம் வின் பண்ணினது சந்தோஷமா இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த நேரத்துல துபாயில் சர்வதேச அளவிலான போட்டியில கலந்துக்கிற வாய்ப்பு கிட்டியது. அதுல பங்குபெற மும்பை வரைக்கும் போனேன். அந்த சமயத்துல திடீர்னு உடல்நலக்குறைவு ஏற்பட்டு போட்டியில் பங்கேற்க முடியாமல் வீடு திரும்பினேன். அப்ப ரொம்ப வருத்தமா இருந்தது. அப்புறம் கொரோனா பரவல் காரணமா ஒரு வருஷம் எந்தப் போட்டியிலயும் கலந்துக்க முடியல. லாக்டெளனுக்குப் பிறகு மீண்டும் தீவிர பயிற்சி எடுத்துவர்றேன். வரும் 21-ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற இருக்கிற தேசிய அளவிலான தடகள போட்டியில கலந்துக்கப் போறேன்" என்றார் மகிழ்ச்சியுடன்.

லிஃபோனா றோசிலின் ஜின்
லிஃபோனா றோசிலின் ஜின்

லிஃபோனா றோசிலின் ஜினின் அப்பா சர்ஜின் பேசினார். "எங்க மக அப்போ நாலாம் கிளாஸ் படிச்சிட்டு இருந்தான்னு நினைக்கிறேன். அப்ப குடும்பத்தோட டிவி-யில ஒரு சினிமா பார்த்தோம். அதுல ஐ.பி.எஸ் அதிகாரியா ஒரு பெண் நடிச்சிருந்தாங்க. அதைப் பார்த்ததும் 'நானும் இதுபோல அதிகாரியா வர என்ன செய்யணும்?'னு லிஃபோனா றோசிலின் ஜின் கேட்டா. அதுக்கு, நல்லா படிக்கிறதோட விளையாட்டு போட்டிகளில் கலந்து வெற்றிபெறணும்னு நான் சொன்னேன். அதில் இருந்து விளையாட்டுல ஏற்பட்ட ஆர்வம் என் மகளை இன்னைக்கு பதக்கங்கள் வாங்க வெச்சிருக்கு. அதே சமயம் படிப்பிலும் நல்லா கவனம் செலுத்துறா. ஆசிரியர்களும் நல்லா சப்போர்ட் பண்ணுறாங்க" என்றார்.

ஓட்டப் போட்டியில் பல தங்கங்கள் பெற்று ஐ.பி.எஸ் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற கனவு லிஃபோனா றோசிலின் ஜின்னின் கண்களில் மிளிர்கின்றது.