திருமணாகிவிட்டாலும் பெற்றோருக்கு மகள் என்பவர் மகள்தான் என்ற அதிரடி தீர்ப்பை கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் சார்பு அட்டையைப் பெற, திருமணமான மகள்களுக்கு உரிமை கிடையாது என்ற முன்னாள் ராணுவ வீரர்கள் நலவாரியத்தின் (சைனிக் வெல்ஃபேர் போர்டு) விதியை தடை செய்து வெளியிட்ட தீர்ப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ராணுவ வீரரான சுபேதார் ரமேஷ் கந்தப்பா என்பவரின் 31 வயது மகள் தொடுத்த மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி எம்.நாகப்பிரசன்னா, இந்தத் தீர்ப்பை அளித்துள்ளார்.
தீர்ப்பின்படி,``திருமணமானாலும் ஆகாவிட்டாலும் எப்படி மகன் மகனாக நீடிக்கிறாரோ, அதே முறையில் மகளும் திருமணமானாலும் ஆகாவிட்டாலும் மகளாகவே நீடிப்பார். திருமணம் செய்து கொள்ளும் செயல் என்பது எப்படி மகன் என்ற நிலையை மாற்றாதோ, அதே போல மகளின் நிலையையும் மாற்றாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ராணுவ வீரர்கள் என்பதை ஆங்கிலத்தில் ex-servicemen என்று குறிப்பிடுவதையும் மாற்ற வேண்டும். அது ஆண்பாலினத்தைக் குறிக்கும் சொல்லாக இருக்கிறது. எனவே, பாலின பேதமற்ற பெயரைத் தேர்வுசெய்து குறிப்பிட வேண்டும் என்று மத்திய அரசை உயர்நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தகக்கது.