Published:Updated:

`உலகமெங்கும் போகுது என் ஊறுகாய்!’ - 86 வயது எனர்ஜி புயல்

அலமேலு அம்மாள்
பிரீமியம் ஸ்டோரி
அலமேலு அம்மாள்

#Motivation

`உலகமெங்கும் போகுது என் ஊறுகாய்!’ - 86 வயது எனர்ஜி புயல்

#Motivation

Published:Updated:
அலமேலு அம்மாள்
பிரீமியம் ஸ்டோரி
அலமேலு அம்மாள்

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அதைத் தொடர்ந்த ஊரடங்கு பலரது வாழ்வாதாரத்தைக் கேள்விக் குறி ஆக்கியுள்ளது. கொரோனாவால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் ஒருபக்கம் என்றால், அதன் தாக்கத்தால் முடங்கிப்போனவர்களும் அதிகம். ஆனால், இந்தக் காலகட்டத்தில்தான், கேரளாவைச் சேர்ந்த 86 வயது அலமேலு அம்மாள் தன் ஊறுகாய் தொழிலில் மளமளவென படிகள் ஏறியுள்ளார். யாரின் உதவியும் இல்லாமல் தனி ஒருவராக ஊறுகாய் போட்டு, தன் கைப்பக்குவத்தால் அதை இந்தியா முழுக்கக் கொண்டு சேர்த்துக்கொண்டிருக்கிறார். ஒரு நாளைக்கு 10 கிலோ வரை ஊறுகாய் விற்கிறார் என்றால் நம்பமுடிகிறதா?!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கல்பாத்தி பகுதியைச் சேர்ந்தவர் அலமேலு அம்மாள். ‘பொண்ணு மாமி’, ‘ஆச்சார் மாமி’ என்று அன்புடன் அழைக்கிறார்கள் உள்ளூர் மக்கள். அவரது ஊறுகாய்க்கு தென்னிந்தியாவை கடந்து, வட இந்தியாவிலும் சுவைஞர் கூட்டம் உள்ளது. “இப்ப கொரோனா ஜாஸ்தியா இருக்கே, கொஞ்ச நாள் கூட போட்டும். இல்ல போன்லேயே பேசிக்கலாமா...” என்று பாலக்காட்டுத் தமிழில் பேச ஆரம்பித்தார்.

“எனக்கு சொந்த ஊர் பாலக்காடு. எங்க வீட்ல மொத்தம் பத்துக் குட்டிகள் (உடன்பிறந்தவர்கள்). நான் பத்தாம் கிளாஸ் படிச்சிட்டு இருக்கும்போதே என்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டாங்க. அவர் பேரு சுப்பிர மணியம். கண்ணூர்ல, புகுந்த வீட்டுல கூட்டுக் குடும்பம். குறுமிளகு, கொப்பரைனு தோட்டத்தை பார்த்துட்டு இருந்தோம். என் அம்மா, மாமியார் ஊறுகாய் போடுறதை பார்த்துப் பழகியிருந்ததால, நானும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஊறுகாய் போடுவேன்.

`உலகமெங்கும் போகுது என் ஊறுகாய்!’ - 86 வயது எனர்ஜி புயல்

எங்களுக்குக் குழந்தை இல்லை. கொழுந்தனும் அவர் சம்சாரமும் அடுத்தடுத்து இறந்துட்டதால, அதுக்கு அப்புறம் அவங்க குழந்தைகளை நாங்கதான் வளர்த்தோம். 30 வருஷம் கண்ணூர்ல மகிழ்ச்சியா போனது. ஆத்துல இருந்த பெரியவா எல்லாம் இறந்துட்டா. குட்டிகளும் வேலைக்குப் போயாச்சு. என்ன தேவைனாலும், 16 மைல் தூரம் வரணும். தோட்ட வேலைகளையும் பார்க்க முடியல. அதனால நானும் அவரும் பாலக்காடு கல்பாத்திக்கு வந்துட்டோம்’’ என்றவர், அதன்பின்தான் ஊறுகாய் தொழிலில் இறங்கியிருக்கிறார்.

‘`கண்ணூர்ல நிறைய வேலை இருக்கும். இங்க வேலையே இல்லை. வீட்டு வாசல்லயே கடுகு மாங்காய் விக்க வரும். குட்டி குட்டி மாங்காயைக் கொத்து கொத்தா கொண்டு வருவா. அதை வாங்கி ஊறுகாய் போட்டு குப்பியில போட்டு விப்பேன்” என்று பேசிக் கொண்டிருக்கும்போது, ஊறுகாய் வாங்க வாடிக்கை யாளர்கள் வந்துவிட்டனர். அவர்களை அனுப்பிவிட்டு வந்து தொடர்ந்தார்.

“மாமா 85 வயசு வரைக்கும் நல்லார்ந்தா. பத்து வருஷத்துக்கு முன்ன உடம்பு முடியாம போய்ட்டார். அதுக்கப்புறம் வேலை இன்னும் குறைய, நிறைய ஊறுகாய் போட ஆரம்பிச்சேன். போடுற ஊறுகாயை பரண்ல ஸ்டோர் பண்ணிப்பேன். அதைக் கொஞ்சம் கொஞ்சமா கீழ எடுத்துட்டு வந்து பேக்கிங் பண்ணி விப்பேன். கொரோனா நேரத்துல, ஊறுகாய்லாம் விக்காம தேங்கிடுச்சு. அந்த நேரம் பார்த்து சில மீடியால இருந்து வந்து என்னைப் பத்தி நியூஸ்ல போட்டா. ரெண்டாவது நாள்ல இருந்து நிலைமை தலைகீழ். 50 கி.மீ தூரத்துல இருந்து எல்லாம் வந்து ஊறுகாய் வாங்கிட்டுப் போய்ட்டு இருக்கா. கோயம்புத்தூர், சென்னை, பெங் களூரு, புனே, மும்பை, டெல்லி, கல்ஃப், துபாய்னு பல இடங்களுக்கும் போயிண்டிருக்கு என் ஊறுகாய்’’ என்றவர்... ஊறுகாய் விலை பற்றிப் பகிர்ந்தார்.

‘`பாலக்காட்டு மாங்காய் நல்ல டேஸ்ட், அப்படி மணமணக்கும். அதுல போடுற ஊறுகாய்ல நான் எந்த கெமிக்கலும் சேர்க்க மாட்டேன். அதனாலதான் 10 வருஷமா, என் ஊறுகாய்க்காக வீடு தேடி வந்துண்டு இருக்கா. ஒரு நாளுக்கு பத்து குப்பி விக்கும். கடுகு மாங்காய், மாகாளி, மாவடு, எலுமிச்சை, ஆவக்காய், நார்த்தங்காய், அடை மாங்காய் (மாங்கா வத்தல்)னு நிறைய ஊறுகாய் போடுவேன். அப்ப மாங்காய் ஒரு கிலோ 30 ரூபாய். அன்னிக்கு ஒரு குப்பி மாங்காய் 30 ரூபாய்னு வித்துட்டு இருந்தேன். மாசத்துக்கு 10,000 ரூபாய் முதல் போட்டுட்டு இருந்தேன். விலை ஏற ஏற முதல் அதிகமாகிடுச்சு. இப்ப குப்பிக்கு பதிலா பாக்கெட்டுக்கு மாத்திட்டேன். ஒரு நாளுக்கு 20 பாக்கெட்டுகள் விக்கும். அரை கிலோ கடுகு மாங்காய் ஊறுகாய் ரூ.200. இப்ப மாங்காய் மட்டும் வாரத்துக்கு 5,000 - 10,000 ரூபாய்க்கு வாங்குறேன். நல்ல மாங் காவா இல்லாட்டி வாங்க மாட்டேன். நல்ல மாங்கா கிடைக்கறப்ப நிறைய வாங்கி ஸ்டாக் வெச்சுப்பேன். மாங் காய் வாங்கி, நறுக்கி, உப்புப் போட்டு, துணி சுத்தி பரண்ல ஊற வெச்சுடு வேன்’’ என்றவரிடம், அவர் ஊறுகாய் ருசியின் ரகசியம் பற்றிக் கேட்டோம்.

‘`எல்லாரும் இதைத்தான் கேட்கறா. மனசும் கையும் சுத்தமா இருக்குறது தான்...’’ என்று சிரித்த அலமேலு அம்மாள், ‘`நல்ல பெரிய மாங்காயா வாங்குவேன். மாங்கா விக்கறவாளே அதைக் கழுவி வெச்சுட்டுப் போய் டுவா. அதுக்கப்புறம் என் ஊறுகாயை யார் கண்ணுலயும் காட்ட மாட் டேன். யாரும் இல்லாதப்பதான் ஊறுகாய் போடுவேன். ஊறி நிக்கறப்ப, மாங்காயைப் பார்க்கவே அவ்வளவு ஜோரா இருக்கும். முதல் நாலு நாள் ஒரு வாளியில உப்புல மாங்காய் ஊறும். நாலு நாள் கழிச்சு, அந்தத் தண்ணியை மட்டும் வேற ஒரு வாளியில விடுவேன். அதுலேயே மிளகாய், கடுகுப் பொடி எல்லாத் தையும் கொட்டுவேன். நல்லா கொழம்பு போல ஆனவுடனே, அதுல மாங்காயைச் சேர்த்து மூடி வெச்சுடுவேன். தெனமும் அதைத் திறந்து பார்த்துக் கிளறிவிடுவேன்.

`உலகமெங்கும் போகுது என் ஊறுகாய்!’ - 86 வயது எனர்ஜி புயல்

வாடிக்கையாளர்கள் கேக்கு றப்போ, அதுக்கேத்தாப்ல ஊறுகாயை கீழ எடுத்துட்டு வந்து பேக் பண்ணு வேன். முன்ன எல்லா வேலையும் நான்தான் பார்ப்பேன். வயசாறதால யும், இப்போ முதல் அதிகமாயிட்ட தாலயும் எல்லா வேலையும் பார்க்க முடியறது இல்ல. அதனால பேக்கிங்கு மட்டும் கூட ஒருத்தர் உதவி பண்ணு வார். சராசரியா ஒரு நாளுக்கு 5 - 10 கிலோ வரைக்கும் ஊறுகாய் விக்குது. சரியான அட்ரஸ், போன் நம்பர் கொடுத்தா கொரியர் பண்ணுவேன். உறவினர் ஒருத்தர் அதுக்கு உதவறார். காலைல 5.30 மணிக்கு எழுந்துடுவேன். எல்லா வேலையும் நான்தான் பார்ப் பேன். டெல்லியில இருக்கற தங்கை கிட்ட அடிக்கடி போன் பேசுவேன். ராத்திரி 10.30 மணிக்குத் தூங்குவேன்’’ என்றவர்,

‘`கொரோனா ரெண்டு தவணை தடுப்பூசியும் போட்டுண்டேன். எனக்கு பெருசா வியாதி இல்லை. ஆனா, இப்ப கொஞ்ச நாளா தோள் பட்டை வலி இருக்கு. மருந்து சாப்ட றேன். சாதம் கொஞ்சமாவும், காய்கறி அதிகமாவும் சாப்டுவேன். எதுவும் பண்ணாம இருக்குறதுதான் பிணி. முடிஞ்ச வரை இந்த வேலையைச் செய்வோம்’’

- ஆச்சர்யப்படுத்தியது அந்த 86 வயது எனர்ஜி புயல்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism