``பெண் ஆசிரியர்கள் புடவைதான் அணிந்து வர வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஒருவரின் ஆடைத் தேர்வு என்பது அவர்களது தனிப்பட்ட விஷயம், அதில் யாரும் தலையிட முடியாது" என கேரளாவின் உயர்கல்வித் துறை அமைச்சர் ஆர். பிந்து கூறியுள்ளார்.
பெரும்பாலும் ஆசிரியைகள் என்றால் புடவைதான் அவர்களுக்கான சீருடை என்று இங்கே பதிந்து போயுள்ளது. இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் ஆசிரியைகள் புடவையையே சீருடையாக உடுத்தி வருகின்றனர்.

கேரளாவிலும் இதே நடைமுறைதான் உள்ளது. பலருக்கு இது அசௌகர்யமாக இருந்தாலும், இந்தப் பழக்கத்தையே பின்பற்றி வருகின்றனர். சில இளம் பெண் ஆசிரியர்கள், இதனை எதிர்த்து தற்போது குரல் எழுப்பி வருகின்றனர்.
அதைத் தொடர்ந்து, கேரளாவின் உயர்கல்வித் துறை அமைச்சர் ஆர். பிந்து, ``கேரளாவில் பெண் ஆசிரியர்கள் புடவைதான் அணிந்து வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, ஆடை என்பது முழுக்க முழுக்கத் தனிமனிதர்களின் உரிமை. அதில் தலையிடவோ, தங்களின் கருத்தைத் தெரிவிக்கவோ, விமர்சிக்கவோ யாருக்கும் உரிமையில்லை. அப்படிச் செய்வது, கேரளாவில் நிலவும் முற்போக்கு மனநிலைக்கு எதிரானதாக இருக்கும்" என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், ``இது தொடர்பாக அரசு ஏற்கெனவே பலமுறை தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. கேரளாவில் எந்த வகையான கல்வி நிறுவனங்களில் பணிபுரிந்தாலும் ஆசிரியர்களுக்கு அவர்களின் வசதிக்கேற்ப ஆடை அணிவதற்கு முழு உரிமை உள்ளது. ஆனாலும் கேரளாவில் பல கல்வி நிலையங்கள், ஆசிரியர்கள் மீது புடவையைத் திணிக்கும் நடைமுறை சரியல்ல'' என்றும் தெரிவித்துள்ளார்.

பெண் ஆசிரியர்கள் புடவை அணிவது கட்டாயமில்லை என, உயர் கல்வித் துறை கேரள கல்வி நிலையங்களுக்குத் தனது சுற்றறிக்கை மூலமும் அறிவித்துள்ளது.
முன்னதாக, திருச்சூரில் உள்ள கேரள வர்மா கல்லூரியில் பேராசிரியையாக இருந்த அமைச்சர் ஆர். பிந்து, தான் கல்லூரிக்குப் பெரும்பாலும் சுடிதார் அணிந்தே சென்றதாகப் பகிர்ந்திருக்கிறார்.