கட்டுரைகள்
Published:Updated:

அலுவலகத்தில் ஆணாதிக்கம்; கேள்வி கேட்க வேண்டுமா, கடந்து செல்ல வேண்டுமா?

பெண் டைரி
பிரீமியம் ஸ்டோரி
News
பெண் டைரி

பெண் டைரி I ஒரு வாசகியின் கடிதம்

ஒரு பெரிய நகரத்தில், கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். இந்த ஹைடெக் பணிச்சூழலில்கூட இங்கு ஆண்களும் பெண்களும் சமமாக நடத்தப்படுவதில்லை. படிப்பை முடித்தும் பணியில் சேர்ந்த இளம்பெண்ணான என்னால், அதை எளிதில் கடந்துபோக முடியவில்லை.

எங்கள் அலுவலகத்தில் 75% ஆண்கள், 25% பெண்கள் பணிபுரிகிறோம். அலுவலக மீட்டிங்குகளில் ஆண்கள் சொல்லும் புதிய ஐடியாக்கள், கருத்துகள், கருத்து மாறுபாடுகளுக்கு இருக்கும் அதே மதிப்புடன் பெண்களின் வார்த்தைகள் எதிர்கொள்ளப்படுவதில்லை. பெண்கள் ஏதாவது சொல்ல ஆரம்பித்தாலே, ‘இவங்க என்ன புதுசா சொல்லிடப்போறாங்க’ என்ற நம்பிக்கையின்மையுடனும், `உங்களுக்கு இதைப் பற்றி என்ன தெரியும்?’ என்ற ஆணாதிக்க மனப்பான்மை யுடனும்தான் மீட்டிங் ஹால்கள் இருக்கின்றன. ‘முன்முடிவோட உங்க காதுகளை வெச்சுக்காதீங்க’ என்று ஒருமுறை நான் அமைதியாக, ஆனால் அழுத்தமாகச் சொன்னபோது... அந்த ஹாலில் பல ஆண்கள் என்னைக் கோபத்துடனும், பெண்கள் ஆச்சர்யத்துடனும் பார்த்தனர்.

அலுவலகத்தில் ஆணாதிக்கம்; 
கேள்வி கேட்க வேண்டுமா, 
கடந்து செல்ல வேண்டுமா?

கொடுமை என்னவென்றால், எங்களைப் போன்ற ஜூனியர் பெண்கள் மட்டுமல்ல, சீனியர் பெண்களுக்கும் இதே நிலைதான். சீனியர்கள் மட்டுமல்லாது சில நேரங்களில் அவர்களுக்குக் கீழ் பணிபுரியும் ஊழியர்களும்கூட, அவர்களை ஓர் அதிகாரியாக அல்லாமல், பெண்ணாகவே பார்க்கிறார்கள். அலுவல் தொடர்பான உரையாடல்களில், ‘எங்களுக்குத்தான் எல்லாம் தெரியும், உனக்குத் தெரியாது’ என்ற மேன்ஸ்ப்ளைனிங் (Mansplaining) மனநிலையுடன் பெண்களுக்கு வகுப்பெடுக்கிறார்கள் ஆண்கள்.

பணியமர்த்தப்படும்போது நிர்ணயிக்கப்படும் சம்பளம் ஒரே அளவில் இருந்தால்கூட, அடுத்தடுத்த நிலைகளுக்குச் செல்லும்போது பெண் ஊழியர்களைவிட ஆண் ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. புரொமோஷன்களிலும் ஆண்களின் பெயர்களே முதலில் பரிசீலிக்கப்படுகின்றன. ஓவர் டைம் வரை பெண்கள் எல்லா வேலைகளையும் ஆண்களுக்கு இணையாகப் பார்க்கும்போது, ஏன் இந்த நிலை?

சமீபத்தில் அலுவலகத்தில் பண்டிகை தினக் கொண்டாட்டங்களின்போது, ரங்கோலி போட, நிகழ்ச்சியின்போது அனைவருக்கும் ஸ்நாக்ஸ், டீ வழங்க போன்ற வேலைகளைச் செய்ய ஹெச்.ஆர் துறையில் சில ஜூனியர் பெண்களை அழைத்தார்கள். அவர்களில் நானும் ஒருத்தி. வீட்டில், இவற்றையெல்லாம் பெண்கள்தான் செய்யவேண்டும் என ஒதுக்கப்பட்ட வேலைகளின் அலுவல் வடிவமான, பணிச்சூழலில் பெண் ஊழியர்களைச் செய்யவைக்கும் இந்த ‘office housework’-களைச் செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. எனவே, ‘அலுவலகத்திலும் பெண்கள்தான் இந்த வேலைகளைச் செய்ய வேண்டுமா? புரொஃபஷனல் ரங்கோலி மேக்கர்ஸ் இருக்காங்க. 500, 1000 ரூபாய் கொடுத்தா அழகா கோலம் போடுவாங்க. அதேபோல, காபி, டீ கொடுக்கும் வேலைகளை ஆண்கள்கிட்ட கொடுத்துட்டு, டெக்கரேஷன், சேர் அரேஞ்மென்ட் போன்ற வேலைகளை எங்ககிட்ட கொடுங்க. அல்லது, எல்லா வேலைகளையும் ஆண்கள், பெண்களுக்குப் பகிர்ந்து கொடுக்கலாமே’ என்றெல்லாம் நான் பேச, அதை ஹெர்.ஆர் மேனேஜர் ரசிக்கவில்லை.

அலுவலகத்தில் ஆணாதிக்கம்; 
கேள்வி கேட்க வேண்டுமா, 
கடந்து செல்ல வேண்டுமா?

இப்போது, அலுவலகத்தில் ஆண்கள் பலரும் என்னை ஏதோ திமிர்பிடித்தவள் போல பார்க்கிறார்கள், நடத்துகிறார்கள். பெண்களில் பலர், ‘சின்னப் பொண்ணா இருந்தாலும் தைரியமா இருக்க...’ என்று பாராட்டி, என்னைச் செல்லத் தங்கையாக அரவணைத்தாலும், ஆணாதிக்கத்தின் ஏஜென்ட்களாக வாழும் சில பெண்கள், ‘தேவையில்லாம புரட்சி செய்யாத’ என்று முறைக்கத்தான் செய்கிறார்கள்.

நான் தொடர்ந்து கேள்வி கேட்க வேண்டுமா, கடந்து செல்லப் பழக வேண்டுமா?

(வாசகிக்கான உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் தெரிவிக்கலாம்.)