கட்டுரைகள்
Published:Updated:

கண்ணை மறைத்த பாசம், சொத்தை எழுதி வாங்கிய அண்ணன், மீட்க என்ன வழி?

பெண் டைரி
பிரீமியம் ஸ்டோரி
News
பெண் டைரி

பெண் டைரி I ஒரு வாசகியின் கடிதம்

இரண்டு அண்ணன்களுடன் நான் என வீட்டில் மூன்று பிள்ளைகள். அப்பா விவசாயி. மூத்த அண்ணனுக்குப் படிப்பு வரவில்லை. எனவே, அவரை வெளிநாட்டுக்கு அனுப்பினார் அப்பா. நானும் இளைய அண்ணனும் படிப்பை முடித்து, வேலையில் சேர்ந்தோம். மூத்த அண்ணனும் வெளிநாட்டிலிருந்து திரும்பினார்.

உடன்பிறந்தவர்கள் மூவரும் பல வருடங்களுக்குப் பின்னர் இணைந்தபோது, நாங்கள் இருவரும் படித்திருக்கிறோம், ஆனால் தான் படிக்கவில்லையே என்ற தாழ்வு மனப்பான்மை மூத்த அண்ணனுக்கு ஏற்பட்டது. எனவே, எங்களிடமிருந்து விலகி இருக்க ஆரம்பித்தார். அப்பா உடனடியாக, அவர் வெளிநாட்டிலிருந்து அனுப்பி இங்கு சேமிக்கப்பட்ட பணத்தையெல்லாம் அவரிடம் ஒப்படைத்து, அவரை ஒரு தொழிலைத் தொடங்கவைத்துத் தன்னம்பிக்கை ஏற்படச் செய்தார். தொடர்ந்து, என் திருமணத்தையும், அண்ணன்களின் திருமணத்தையும் அடுத்தடுத்து அப்பா தன் செலவிலேயே நடத்தினார்.

கண்ணை மறைத்த பாசம், சொத்தை எழுதி வாங்கிய அண்ணன், மீட்க என்ன வழி?

அண்ணன்களும், நானும் எங்கள் வேலை, குடும்பம் என்று நிம்மதியாக வாழத் தொடங்கினோம். மூத்த அண்ணனின் தொழில் மிகவும் நன்றாகச் சென்றதால், வீடு, கார் என்று சடசடவென முன்னேறினார். நானும் சின்ன அண்ணனும் மாதச் சம்பளத்தில் இருந்தோம். எங்களைவிட அவர் மூன்று மடங்கு வசதியாக இருந்தார். கூடவே, பணம் அதிகம் வந்த பிறகு எங்களிடமிருந்து அவர் விலகுவதை உணர முடிந்தது.

பொதுவாக, எங்கள் வீட்டில் என்ன விசேஷம் என்றாலும் மூத்த அண்ணனுக்குத்தான் முதல் மரியாதை, முதல் அன்பு. ஆனால், அவர் தன் வீட்டு விசேஷங்களில் எங்களை பத்தோடு பதினொன்றாக நிற்கவைத்தார். தன் ஸ்டேட்டஸில் உள்ள நண்பர்கள் குடும்பத்துக்கு எங்களைவிட அதிக முக்கியத்துவம் கொடுத்தார். நாங்கள் இதுவரை அண்ணனிடம் எந்த உதவியும் கேட்டுச் சென்றதில்லை. ஆனால், என் இளைய அண்ணன் ஓர் எதிர்பாராத விபத்தில் சிக்கி அறுவை சிகிச்சைக்கு மூன்று லட்சம் தேவைப்பட்டபோது, மூத்தவர் உதவவில்லை. பின்னர், எங்கள் அப்பாதான் அந்தத் தொகையைக் கட்டினார்.

இந்நிலையில், மூத்த அண்ணனின் தொழிலில் திடீர் நஷ்டம். நஷ்டகாலத்தில் மேலும் மேலும் கடன் வாங்கித் தொழிலில் முதலீடு செய்ததால், கடனாளியாகவும் நின்றார்.

இதற்கிடையில் அப்பா இறந்துவிட, அப்பாவின் சொத்துகள் பிரிக்கப்படாமல் இருந்தன. என் அம்மாவிடம் மூத்த அண்ணன், தன் பங்குச் சொத்துடன், என் பங்கு, இளைய அண்ணனின் பங்கு, அம்மாவின் பங்கு என அனைத்தையும் சேர்த்துக் கேட்டார். கடனை அடைக்கவும், புதிய தொழிலைத் தொடங்கவும் தன் பங்குச் சொத்து மட்டுமே போதாது என்றார். ‘என் பங்குச் சொத்தை வித்து நான் கடனை அடைச்சிடுறேன். ஆனா மறுபடியும் தொழில் தொடங்க, உங்க பங்குச் சொத்தை எல்லாம் என் பேருக்கு எழுதிக் கொடுங்க. வங்கி அடமானக் கடனுக்கு அது தேவைப்படுது. சீக்கிரமே தொழில்ல விட்டதையெல்லாம் எடுத்துடுவேன். அப்போ முதல் வேலையா உங்க சொத்தையெல்லாம் மீட்டுக் கொடுத்துடுவேன்’ என்று சொல்லி, வந்து அழுத்தம் கொடுத்தார், அழுதார்.

கண்ணை மறைத்த பாசம், சொத்தை எழுதி வாங்கிய அண்ணன், மீட்க என்ன வழி?

‘என்னதான் அவர் நம்மை சில காலம் புறக்கணித்திருந்தாலும், நம்ம அண்ணன்தானே’ என்று நானும், ‘நம்ம புள்ளை பாவம்’ என்று அம்மாவும், அண்ணனுக்கு எங்கள் பங்குகளையும் சேர்த்து எழுதிக்கொடுத்தோம். ஆனால், இளைய அண்ணன் தன் பங்கைக் கொடுக்க மறுத்துத் தன் பெயரிலேயே எழுதிக்கொண்டதுடன், ‘சொந்தத் தம்பி ஆஸ்பிட்டல்ல கிடந்தப்போகூட பார்க்க வராதவர், பணம்தான் அவருக்கு முக்கியம்’ என்று எச்சரித்தார். அவர் சொன்னதுபோலவே, மூன்று வருடங்களாகியும், பல முறை கேட்டும், எங்கள் சொத்தை எங்களுக்குத் திருப்பி எழுதித் தரவில்லை அண்ணன். இவ்வளவுக்கும், அவர் சொன்னதுபோலவே மீண்டும் தொழிலில் முன்னுக்கு வந்துவிட்டார். நன்றாகச் சம்பாதிக்கிறார்.

எங்கள் வீட்டின் கட்டுமானச் செலவுக்கு இப்போது எங்களுக்குப் பணம் தேவைப்படுகிறது. ‘அவர் மேல கேஸ் போட்டு சொத்தை வாங்குங்க மாப்பிள்ள’ என்று, சின்ன அண்ணன் கோபத்தில் என் கணவரைத் தூண்டிவிடுகிறார். உறவு முக்கியமா? அண்ணன்மீது வழக்கு போடுவதுதான் வழியா?

(வாசகிக்கான உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் தெரிவிக்கலாம்.)