Published:Updated:

கடன் இல்லை... கவலை இல்லை... லட்சங்களில் கலக்கும் நிஜ சுய உதவிக்குழுக்கள்!

சுய உதவிக்குழுக்கள்
பிரீமியம் ஸ்டோரி
சுய உதவிக்குழுக்கள்

ஆண்டுக்கு ஒரு குழுவுக்கு 50,000 ரூபாய் வட்டி வருகிறது என்றால், அதை குழுவிலுள்ள 20 நபர்களும் சமமாகப் பிரித்து கொள்வோம்

கடன் இல்லை... கவலை இல்லை... லட்சங்களில் கலக்கும் நிஜ சுய உதவிக்குழுக்கள்!

ஆண்டுக்கு ஒரு குழுவுக்கு 50,000 ரூபாய் வட்டி வருகிறது என்றால், அதை குழுவிலுள்ள 20 நபர்களும் சமமாகப் பிரித்து கொள்வோம்

Published:Updated:
சுய உதவிக்குழுக்கள்
பிரீமியம் ஸ்டோரி
சுய உதவிக்குழுக்கள்

கந்துவட்டி ஒழிப்பு, வறுமையை அகற்றுவது, சேமிப்புப் பழக்கத்தை உருவாக்குவது, சுயசார்புடன் பெண்களை இயங்க வைப்பது உள்ளிட்ட இலக்குகளுடன் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தமிழகத்தில் உருவாக்கப்பட்டன. ஆரம்பத்தில் அரசின் வழிகாட்டலில் பொதுத் துறை வங்கிகள் மூலம் கடன்பெற்று சிறப்பாக இயங்கி வந்த இக்குழுக்கள், காலப்போக்கில் என்.ஜி.ஓக்களிடமும், தனியார் வங்கிகள், மைக்ரோ ஃபைனான்ஸ் கும்பல்களிடமும் சிக்கி, அதன் அடிப்படை நோக்கமே அடிபட்டு வருகிறது.

அங்கீகரிக்கப்படாத குழுக்களில் சேர்ந்து அதிக வட்டிக்குக் கடன் வாங்குவது, ஒரு கடனை அடைக்க மற்றொரு குழுவில் சேர்ந்து கடன் பெற்று நெருக்கடிக்கு உள்ளாவது, ஆடம்பர செலவுகளுக்காக கடன் வாங்கி சிக்கிக்கொள்வது என, சுய உதவிக்குழுக் களால் சாமானியப் பெண்கள் பலர் பாதிக்கப் படுகிறார்கள். இந்த நிலையில், மதுரையில் இயங்கும் 32 சுய உதவிக்குழுவினர், தங்கள் சேமிப்பின் மூலம் சுயமாக குழுக்களை நடத்தி, ஒவ்வொரு குழுவிலும் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை இருப்பு வைத்து, குழுவிலுள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் சேமிப்பாக ரூபாய் ஐம்பதாயிரம், ஒரு லட்சம் என உருவாக்கி தன்னம்பிக்கையுடன் செயல் பட்டு வருகிறார்கள்.

கடன் இல்லை... கவலை இல்லை... லட்சங்களில் கலக்கும் நிஜ சுய உதவிக்குழுக்கள்!

ஒரு சுய உதவிக்குழு எப்படி இருக்க வேண் டும் என்பதற்கு உதாரணமாக இருக்கும் இந்தக் குழுக்களின் பெண்கள், ``இதுக்கெல்லாம் எங்களுக்கு வழிகாட்டுறது சிஸ்டர்தான்’’ என்று சிஸ்டர் எலிசபெத்தை கைக்காட்டு கிறார்கள். மதுரை, பழைய குயவர் பாளையம் பகுதியிலுள்ள புனித வளனார் சமூகப்பணி மையத்தை சேர்ந்த சிஸ்டர் எலிசபெத்திடம் பேசினோம்.

“நான் இங்கு பணிக்கு வந்து சில வருடங்கள் தான் ஆகிறது. 90-களில் இங்கு பணியாற்றிய மூத்த சிஸ்டர்தான் இந்தப் பகுதிகளில் இந்த மாற்றத்தை உருவாக்கியவர். மதுரையில் அனுப்பானடி, சிந்தாமணி, கீழ்மதுரை, சூசையப்பர்புரம், காமராஜர்புரம், கீரைத் துரை, மாகாளிப்பட்டி ஆகியவை ஏழை மக்கள் அதிகம் வாழும் பகுதி. உழைக்கும் பணத்தை ஆண்கள் பலர் குடித்து அழித்து வந்தனர். இதனால் பாதிக்கப்படும் பெண்கள் அவசரத்துக்கு கடன் வாங்கி வட்டி கட்ட முடியாமல் கஷ்டப்பட்டும், அவமானப்பட்டும் வந்தார்கள். அதிலும் கந்துவட்டி, நாள் வட்டி, வார வட்டி, மீட்டர் வட்டி, ரன் வட்டி என பல வகையான வட்டிக்கொடுமையால் சிக்கித் தவித்தார்கள். இவர்களை மீட்கவும், இந்தப் பகுதியில் கந்துவட்டியை ஒழிக்கவும், 20 வருடங்களுக்கு முன் மகளிர் சுய உதவிக் குழுக்களைஆரம்பித்தார் சிஸ்டர்.

ஒரு குழுவுக்கு 20 பேர். ஒவ்வொருவரும் மாதம் 200 ரூபாய், சந்தா பணம் 10 ரூபாய் செலுத்த வேண்டும். மாதம் 4,000 என, மூன்று மாதங்களுக்கு சேரும் 12,000 ரூபாயை அவசர மாகத் தேவைப்படும் இரு வருக்கோ, மூவருக்கோ பிரித்துக் கொடுத்து அவர்கள் கந்து வட்டிக் காரர்களிடம் செல்லாமல் தடுக்கப்பட்டது. வாங்கிய கடனை ஒரு சதவிகித வட்டியுடன் 10 மாதங் களில் திருப்பிச் செலுத்த வேண்டும். சிறிது சிறிதாக கட்டும்போது கடனும், குறையும் வட்டியும் குறையும். கடன் தேவை யில்லாத குழு உறுப் பினர்கள் சேமிப்பாகவும் வைத்திருக்கலாம். இப்படி செயல்பட ஆரம்பித்து, இன்று ஒவ்வொரு குழுவிலும் லட்சக்கணக்கில் ரொட்டேஷேன் ஆகி வருகிறது’’ என்றவர், குழுவின் கட்டுக்கோப்பான செயல்பாடுகள் பற்றி சொன்னபோது, ஆச்சர்யம் இன்னும் விரிந்தது.

``தொழில் செய்ய, பிள்ளைகளின் படிப்பு, திருமணம், மருத்துவ சிகிச்சை போன்ற முக்கியமான தேவைகளுக்கு மட்டும்தான் கடன் கொடுப்போம். மாதம்தோறும் வசூலிக்கும் பணத்தை எங்கள் வங்கிக் கணக்கில் வைத்திருப்போம். மற்ற சில சுய உதவிக்குழுக்கள் வங்கி அல்லது மைக்ரோ ஃபைனான்ஸ் மூலம் கடன் பெற்று அதிக வட்டியை அவர்களுக்குக் கட்டுவது, சில குழுக்களில் குழுத்தலைவிகளே கடன் எடுத்து அதை வெளியில் வட்டிக்கு விடுவது, மற்ற உறுப்பினர்களின் பெயரில் கடன் எடுப்பது, வசூலாகும் பணத்தை வங்கிக்குச் செலுத்தாமல் ஏமாற்றுவது எல்லாம் நடக்கிறது. ஆனால், எங்கள் குழுவில் கடன் வாங்கிய உறுப்பினர் திருப்பிச் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டால் அனைவரும் அமர்ந்து பேசி, அவருக்கு என்ன பிரச்னை, அதிலிருந்து அவரை எப்படி மீட்பது என்று ஆலோசித்து, மீண்டும் கடன் உதவி செய்வோம்.

எலிசபெத்
எலிசபெத்

ஆரம்பத்தில் நிறைய குழுக்கள் செயல்பட்டு வந்த நிலையில் சில குழுக்களின் செயல்பாடுகள் சரியில்லாததால் அவை கலைக்கப்பட்டு, மிகச்சரியாக செயல்படும் 32 குழுக்கள் மட்டுமே தொடர்ந்து இயங்கி வருகின்றன. இந்தக் குழுக்கள் ஒவ்வொன்றிலும் ரூபாய் 7 லட்சம், 9 லட்சம், 10 லட்சம் என லட்சக்கணக்கில் சேமிப்பு வைத்துள்ளனர்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கி யில்தான் குழுக்கள் வசூலிக்கிற பணத்தை டெபாசிட் செய்து வருகிறோம். எங்கள் வரவு, செலவை பார்த்து, ‘நாங்கள் லோன் தரு கிறோம்’ என்று வங்கி அதிகாரிகளே கேட்கிறார்கள்.

எங்களிடமே தேவையான பணம் இருக்கும்போது எதற்கு வங்கியில் கடன் வாங்கி, உறுப்பினர்களின் சேமிப்புக்கு சேருகின்ற வட்டியை வங்கிக்குக் கொடுக்க வேண்டும் என்பதால் மறுத்துவிட்டோம்’’ என்றார்.

பல சுய உதவிக்குழுக்களில், அவசர மற்றும் ஆடம்பரத் தேவைகளுக்கு வட்டி பற்றி கவலைப்படாமல் கடனை வாங்கி, அதை திருப்பிச் செலுத்த முடியாமல் சில பெண்கள் ஊரைவிட்டுச் செல்வது, வங்கி, மைக்ரோ ஃபைனான்ஸ் வசூல்காரர்களின் வசவுக்கு பயந்து சில பெண்கள் தற்கொலைவரை தள்ளப்படும் நிலையில், சுயசார்புடன் நிற்கும் இந்தப் பெண்கள் மிகுந்த நம்பிக்கை தருகிறார்கள்.

குழுவைச் சேர்ந்த பெண்கள், ``எங்கள் குழுக்களில் கடன் வாங்கும் உறுப்பினர்கள் அதை வீணாக்குவதில்லை. பிரவுசிங் சென்டர், இட்லிக்கடை, காய்கறி, மட்டன், சிக்கன் ஸ்டால், பியூட்டி பார்லர், ஜவுளி வியாபாரம், விவசாயம், டைலரிங், ஹோட்டல், ஷேர் ஆட்டோ என எல்லாப் பெண்களும் சுய தொழில் செய்கிறோம். குழுக்களின் கணக்கு களைப் பார்க்க சண்முகஜோதி என்பவரை நியமித்துள்ளோம். இவற்றையெல்லாம் கண் காணித்து எலிசெபத் சிஸ்டர் ஆலோசனை வழங்குவார்’’ என்றார் பெருமிதத்துடன்.

சண்முகஜோதி
சண்முகஜோதி

குழுத்தலைவி ரெக்ஸ்லின், ‘`கொடுத்த கடன் மூலம் கிடைக்கின்ற வட்டி, வங்கி இருப்பிலுள்ள பணத்துக்கு கிடைக்கிற வட்டியை ஆண்டுக் கொருமுறை குழு உறுப்பினர்கள் அனைவரும் பிரித்துக்கொள்வோம்.

ஆண்டுக்கு ஒரு குழுவுக்கு 50,000 ரூபாய் வட்டி வருகிறது என்றால், அதை குழுவிலுள்ள 20 நபர்களும் சமமாகப் பிரித்து கொள்வோம். சிலருக்கு அது தேவைப்படவில்லை எனில், அவர்களது சேமிப்பில் இருக்கும்’’ என்று விளக்கினார்.

உறுப்பினர் சுசீலா, ‘`நான் டைலர். இந்தக் குழுவில் சேர்ந்த பிறகுதான் பல பிரச்னைகளை தீர்க்க முடிந்தது. இங்கு கடன் பெற்றுத்தான் என் இரண்டு மகள்களை பி.இ, பி.எட் படிக்க வைத்துள்ளேன். எனக் கென்று சேமிப்பில் பணம் இருக்கிறது என்ற தெம்பால், எதையும் என்னால் தைரியமாக எதிர்கொள்ள முடிகிறது’’ என்றார்.

பொருளாதார சுயசார்பு மட்டுமல்ல, இந்தப் பெண்கள் சமூகப் பிரச்னைகள், பெண் ணுரிமை, குழந்தைகள் உரிமை, குடும்ப உறுப்பினர்களை குடியிலிருந்து மீட்டெடுப்பது எனப் பல சமூகப் பணிகளையும் செய்து வருகிறார்கள். இக்குழுக்களின் செயல்பாட்டை பார்த்து மாநகராட்சி நிர்வாகம் இவர்களுக்கு ஊக்கத்தொகை அளித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

சல்யூட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism