Published:Updated:

மாடித்தோட்ட மகசூல்... மனசுக்கு சந்தோஷம், உடலுக்கு ஆரோக்கியம்!

என் இல்லம் பசுமை இல்லம்

பிரீமியம் ஸ்டோரி
“என்னோட மாடித்தோட்டம் எனக்கு சொர்க்கம் மாதிரி. இந்த இடத்துக்கு வந்துட்டா எல்லா கஷ்டமும் மன அழுத்தமும் மறந்து போயிரும்.

இங்கே இருக்கும் ஒவ்வொரு செடியும் என்னோட குழந்தை மாதிரி” - வாஞ்சையுடன் செடிகளை வருடிக்கொண்டே பேச ஆரம்பிக்கிறார் மாலினி. கடந்த நான்கு வருடங்களாக சென்னை, திருவான்மியூரில் உள்ள தன் வீட்டில் மாடித்தோட்டம் வைத்துப் பராமரித்து வரும் மாலினி, தன் அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“நாலு செடிகளுடன் ஆரம்பிச்ச தோட்டம் இது. இப்போ இடம் முழுக்க பச்சை நிறத்தில் பரவியிருக்கு. வெண்டை, உருளை, கேரட், முட்டைகோஸ், வாழை, செம்பருத்தி, ரோஜா, துளசி, தூதுவளை என எல்லா வகை யான செடிகளையும் கலந்து வெச்சிருக்கேன். ஆசையா வளர்க்கிற செடியில் ஒரு பூப் பூத்தாலும் ஏதோ சாதிச்ச மாதிரி உணர்வு இருக்கும். பூச்செடிகளுக்காகத்தான் தோட்டம் ஆரம்பிச்சேன். ஆனா, தோட்டம் கொடுத்த சந்தோஷம் இன்னிக்கு எல்லா வகையான செடிகளையும் பராமரிக்கிறேன்.

மாலினி
மாலினி

ஆரம்பத்தில் தோட்டம் பராமரிக்கிறதில் நிறைய சந்தேகங்கள் இருந்தது. ஏற்கெனவே தோட்டம் வெச்சிருக்கிறவங்ககிட்ட கேட்டுதான் ஒவ்வொரு செடியும் வளர்க்க ஆரம்பிச்சேன். முழுக்க முழுக்க இயற்கை உரங்கள் பயன்படுத்தறதால ஆரோக்கியமான காய்கறிகள் கிடைக்குது. செலவும் மிச்சமாகுது. சில செடிகள் எல்லா மாதமும் பயனளிக்கும். சில செடிகள் அந்தந்த சீசனுக்குத்தான் பயன்படும். பொதுவா ஜூலை மாதம்தான் (ஆடிப்பட்டம்) எல்லா காய்களுக்கு விதை நடவு இருக்கும்'' என்ற மாலினி சுரைக்காய்ச் செடி வளர்ப்பு பற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்ட தகவல்கள் பாடமாக இங்கே...

மாடித்தோட்ட மகசூல்... மனசுக்கு சந்தோஷம், உடலுக்கு ஆரோக்கியம்!

சீசனுக்கு பெஸ்ட்

கொடி படரும் அளவு இடம் இருக்கிறது என்பவர்கள் சுரைக்காயைத் தேர்வு செய்யலாம். சுரைக்காய் வளர்க்க நல்ல அகலமான பை அல்லது தொட்டியைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். செடி வளர்க்கப்போகும் தொட்டியில் தென்னங்கழிவு, மண்புழு உரம், செம்மண் ஆகியவற்றை 2:3:1 என்ற விகிதத்தில் கலவையை நிரப்புங்கள். மூன்று இன்ச் அளவுக்குக் குழிதோண்டி சுரைக்காய் விதைகளை விதையுங்கள். சுரைக்காய் விதைகளை முதல் நாள் இரவே பஞ்சகவ்யாவில் ஊறவைத்து விதைத்தால் விதையின் முளைப்புத் திறன் நன்றாக இருக்கும். ஒரு தொட்டிக்கு அதிகபட்சம் இரண்டு விதைகளை விதைக்கலாம். நான்கு பேர் உள்ள குடும்பத்துக்கு இரண்டு தொட்டிகளே போதுமானதாக இருக்கும்.

12 நாளில் செடி துளிர்விட ஆரம்பிக்கும். 10 நாளுக்கு ஒருமுறை செடிக்கு மண்புழு உரம், காய்கறிக் கழிவுகள் என ஏதேனும் ஓர் இயற்கை உரம் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

செடியிலிருந்து சுருள் சுருளாகக் கொடி படர ஆரம்பிக்கும்போது, செடியின் வேரை பாதிக்காதவண்ணம் செடியின் அருகே ஒரு குச்சியை ஊன்றி சுரைக்காய் கொடியைப் பந்தலில் ஏற்றிவிட வேண்டும். சுரைக்காயைச் சிலர் தரையில் படரவிடுவார்கள். தரையில் படர்ந்தால் காயின் வளர்ச்சி குறைவாகவே இருக்கும். காய் அழுகிவிடுவதற்கும் வாய்ப்புண்டு.

40-ம் நாளில் செடியில் பூப்பூக்கத் தொடங்கும். இந்த நேரத்தில் 10 மில்லி பஞ்சகவ்யாவை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடியின் மீது ஸ்பிரே செய்யுங்கள். பூக்கள் உதிர்ந்துகொண்டே இருக்கிறது எனில், பயன்படுத்திக் காயவைத்த டீத்தூள், காய்கறிக் கழிவுகள், உலர் சாணம் போன்றவற்றை உரமாக இடலாம்.

60-வது நாளில் காய்க்கத் தொடங்கிவிடும். காய்கள் செழித்து வந்ததும் அறுவடை செய்து கொள்ளலாம். ஜூலையில் நட்டுவைத்த செடி, அக்டோபர் மாதம் வரை பயன்தரும். நன்கு விளைந்து பருத்த காயைச் செடியிலேயே முற்றவிட்டு அதில் இருக்கும் விதைகளை எடுத்துக் காயவைத்து சாம்பலில் கலந்துவைத்தால், அடுத்த போகத்துக்கு தாய் விதையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மாடித்தோட்ட மகசூல்... மனசுக்கு சந்தோஷம், உடலுக்கு ஆரோக்கியம்!

அழகுக்குச் செம்பருத்தி

செழுமையான இலைகள் கொண்ட செம்பருத்தியை வாங்கிக்கொள்ளுங்கள். செம்பருத்திச் செடி வளர்க்க மண் தரை சிறப் பானதாக இருக்கும். மாடித் தோட்டத்தில் வளர்க்க விரும்புபவர்கள் அகலமான தொட்டி யைத் தேர்வு செய்து கொள்ளவும்.

நர்சரியிலிருந்து வாங்கிவந்த செம்பருத்தி செடியை மூன்று நாள்கள் கழித்து உங்கள் வீட்டில் நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் தொட்டிக்கு மாற்றுங்கள். மண்புழு உரம், அமுதக் கரைசல் குறிப்பிட்ட சில நர்சரிகளில் கிடைக்கின்றன. அவற்றுடன் நாமே மட்கவைக்க காய்கறிக் கழிவு களை வாரம் ஒருமுறை கொடுத்துக்கொண்டே இருந்தால்தான் பூக்கள் அதிகமாகப் பூக்கும்.

மாடித்தோட்ட மகசூல்... மனசுக்கு சந்தோஷம், உடலுக்கு ஆரோக்கியம்!

செம்பருத்தி செடி, மாவுப்பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகக்கூடியது. வாரம் ஒருமுறை வேப்பெண் ணெயைத் தண்ணீரில் கலந்து செடிகளுக்குத் தெளிப்பதன் மூலம் மாவுப்பூச்சித் தாக்குதலைத் தடுக்க முடியும்.

டிப்ஸ்

வீட்டுத் தோட்டம் அமைக்கும் போது பூக்கள், காய்கறிகள், மூலிகைகள் என கலந்து தோட்டத்தை வடிவமையுங்கள். அப்போதுதான் எளிதாக மகரந்தச் சேர்க்கை நடைபெறும். குறைந்த அளவு செடிகள்தான் உள்ளன, அதற்கு அதிக நேரம் செலவழித்து பஞ்சகவ்யா தயாரிக்க முடியாது என்று நினைப்பவர்கள், வாழைப்பழத் தோலை தண்ணீரில் ஊற வைத்து அந்தத் தண்ணீரை தினமும் செடிகளுக்கு ஸ்பிரே செய்ய செடிகள் செழித்து வளரும். அல்லது பெருங்காயத் துண்டுகளை அரைத்து தண்ணீரில் கலந்தும் ஸ்பிரே செய்யலாம். செடி வளர்க்கும் தொட்டிகளில் நிரப்பும் மண் கலவையை தயார்செய்தவுடன் தொட்டிகளில் நிரப்பி, விதை களை விதைக்கக் கூடாது. மண் கலவையைத் தயார் செய்து ஒரு வார காலம் அப்படியே வைத்துவிட வேண்டும். அதன்பிறகுதான் விதைக்க வேண்டும். அப்போதுதான், மண் கலவையின் முழுப்பயனும் செடிகளுக்குக் கிடைக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு