
குழந்தையை வெளியில் எடுத்தாக வேண்டிய அவசர சூழ்நிலை இருந்ததால், டாக்டர் சுபர்ணா சென்னின் வீடியோ கால் ஆலோசனையின்படி சுனில் பிரசவம் பார்க்க ஆரம்பித்தார்.
'நண்பன்' படத்தில் நடிகர் விஜய், நாயகியின் சகோதரிக்கு பிரசவம் பார்ப்பது போன்ற ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும். மருத்துவரான நாயகியின் அறிவுரைகளை வீடியோ கால் வழியாகக் கேட்டுக்கொண்டே விஜய் வெற்றிகரமாக பிரசவம் பார்ப்பார். அதுபோன்ற ஒரு சம்பவம் நிஜத்திலும் நடந்துள்ளது.
வடக்கு டெல்லி ரயில்வே பிரிவு மருத்துவமனையைச் சேர்ந்த லேப் டெக்னீஷியனான சுனில் பிரஜாபதி என்பவர் ஓடும் ரயிலில் நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவம் பார்த்து அசத்தியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை அன்று சம்பர்கிராந்தி கோவிட்-19 சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் டெல்லியில் இருந்து மதுரா மாவட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அந்த ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த சுனில், தனது மாலை உணவை உண்பதற்காக டிபன் பாக்ஸைத் திறந்திருக்கிறார். அப்போது பக்கத்து கூபேயில் இருந்து கிரண் என்கிற பெண்ணின் அழுகை சத்தம் அவருக்குக் கேட்டிருக்கிறது. அந்தப் பெண் தன் சகோதரர் மற்றும் சிறிய பெண் குழந்தையுடன் அதில் பயணம் செய்திருக்கிறார்.
அவரது அழுகையைப் பார்த்த சுனில் அந்தப் பெண்ணின் அருகில் சென்று அவருக்கு ஏதேனும் உதவி தேவைப்படுகிறதா என்று கேட்டிருக்கிறார். ஆனால், தனக்கு ஏற்பட்டுள்ள வலி பிரசவ வலியா அல்லது ரயில் நிலையத்தை அடைவதற்காக மேற்கொண்ட பேருந்து பயணத்தின் ஜெர்க்கால் ஏற்பட்ட வயிற்று வலியா என்பது அந்தப் பெண்ணுக்கே தெரியவில்லை.
இருந்தாலும் அந்த கோச்சில் எந்த ஒரு பெண்ணும் இல்லாததால் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று நினைத்த சுனில், உடனடியாகத் தனது உயர் அதிகாரியான கண் மருத்துவர் டாக்டர் சுபர்ணா சென்னுக்கு தகவல் கொடுத்திருக்கிறார். சுபர்ணா சென்னும் ஆக்ரா மற்றும் குவாலியர் ரயில் நிலையங்களில் மருத்துவப் பணியாளர்களைத் தயார் நிலையில் இருக்க வைத்திருக்கிறார். ஆனால், அரை மணி நேரத்துக்குள்ளாகவே மறுபடியும் கிரண் வலியால் துடிக்க ஆரம்பிக்க, அவரது பிளாங்கெட் முழுவதும் ரத்தத்தால் நனைய ஆரம்பித்திருக்கிறது.
கிரணுக்கு பிரசவ வலி எடுத்துவிட்டதை உணர்ந்த சுனில் உடனடியாக அந்த கோச்சின் டிடிஇ-க்கு தகவல் தெரிவித்ததோடு டாக்டர் சுபர்ணா சென்னை வீடியோ காலில் அழைத்தார். வேறு எந்த வழியும் இல்லை, குழந்தையை வெளியில் எடுத்தே ஆக வேண்டும் என்கின்ற அவசரமான சூழ்நிலை இருந்ததால் டாக்டர் சுபர்ணா சென்னின் வீடியோ கால் ஆலோசனையின்படி கிரணுக்கு சுனில் பிரசவம் பார்க்க ஆரம்பித்தார்.

அந்த கோச்சில் பயணித்த பயணி ஒருவரிடமிருந்து, பயன்படுத்தப்படாத சுத்தமான பிளேட் (Blade) சுனிலுக்குக் கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் சால்வை ஒன்றிலிருந்து நூல் சரம் ஒன்றையும் எடுத்துக்கொண்டு, இவற்றின் உதவியோடு வீடியோ கால் வழியாகப் பேசிய மருத்துவரின் ஆலோசனைப்படி கிரணுக்கு வெற்றிகரமாக பிரசவம் பார்த்து ஆண் குழந்தையை வெளியே எடுத்திருக்கிறார் சுனில்.
பின்னர் ரயில் மதுராவை அடைந்ததும் மதுரா மாவட்ட மருத்துவமனையில் கிரண் மேல் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். ``வலியால் துடித்த அந்தப் பெண்ணைப் பார்த்தவுடன் எனக்கு வேதனை தாங்கவில்லை. எப்படியாவது அந்தப் பெண்ணைக் காப்பாற்றிவிட வேண்டும் என்று முடிவெடுத்தேன். வீடியோ கால் வழியாக மருத்துவர் சொன்ன வழிமுறைகளை, இதயம் படபடக்கப் பின்பற்றினேன். குழந்தை நல்லபடியாக இந்தப் பூமிக்கு வந்ததும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை” என்று ஆனந்த கண்ணீருடன் சொல்லியிருக்கிறார் சுனில்.
தனது சமயோசித அறிவைப் பயன்படுத்தி தாய் சேய் இருவரையும் காப்பாற்றிய சுனிலுக்கு இந்தியா முழுவதிலுமிருந்தும் பாராட்டுகள் குவிகிறது.
வெல்டன் சுனில்!