Published:Updated:

முதல் பெண்கள்: மரிய லூர்தம்மாள் சைமன்

மரிய லூர்தம்மாள் சைமன்
பிரீமியம் ஸ்டோரி
மரிய லூர்தம்மாள் சைமன்

தமிழகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அமைச்சர்; மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் அமைச்சர்; முதல் கிறிஸ்துவப் பெண் அமைச்சர்.

முதல் பெண்கள்: மரிய லூர்தம்மாள் சைமன்

தமிழகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அமைச்சர்; மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் அமைச்சர்; முதல் கிறிஸ்துவப் பெண் அமைச்சர்.

Published:Updated:
மரிய லூர்தம்மாள் சைமன்
பிரீமியம் ஸ்டோரி
மரிய லூர்தம்மாள் சைமன்

``அவரைப் பார்க்க யார் வீட்டுக்கு வந்தாலும் கனிவுடன் உபசரிப்பவர்; யார் உதவி என்று வந்து நின்றாலும் தயங்காமல் உதவுபவர்” என்று மரிய லூர்தம்மாள் பற்றிக் கூறுகிறார் எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலரும், வழக்கறிஞருமான ஜோ தமிழ்ச்செல்வன். `உள்ளாட்சி மற்றும் மீன்வளத்துறை மந்திரி லூர்தம்மாள் சைமன்’ என்ற நூலை எழுதியவர் இவர்.

1911 செப்டம்பர் 26 அன்று கன்னியாகுமரி மாவட்டம் மேலமணக்குடி கிராமத்தில் மைக்கிள் அலெக்சாண்டர் - பார்பரம்மாள் தம்பதிக்கு மகளாகப் பிறந்தார் லூர்தம்மாள். சிறு வயதிலேயே தாய் பார்பரம்மாள் இறந்துபோக, மாற்றாந்தாய் அன்னம்மாளிடம் வளர்ந்தார் லூர்தம்மாள். உப்பு மற்றும் கருவாடு ஏற்றுமதி செய்து வந்தார் தந்தை அலெக்சாண்டர். நாகர்கோவிலின் தூய ஜோசப் கான்வென்ட் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வி பயின்றார் லூர்தம்மாள். தமிழ், மலையாளம், ஆங்கிலம் என்று மூன்று மொழிகளிலும் சரளமாக எழுதவும் பேசவும் கற்றுக்கொண்டார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குளச்சல் கிராமத்தைச் சேர்ந்த அலெக்சாண்டர் மனுவேல் சைமனுடன் லூர்தம்மாளுக்குத் திருமணம் ஆனது. பாரசீகத்தில் சில ஆண்டுகள் அலெக்சாண்டர் சைமன் வேலை செய்ததால், அவரது வேலை நிமித்தம் கணவருடன் அங்கு சென்று வாழ்ந்தார் லூர்தம்மாள். தம்பதிக்கு ஐந்து ஆண் குழந்தைகள் பிறந்தனர். பெண் குழந்தை இல்லாத ஏக்கத்தைப் போக்க தம்பதி சைமனின் தம்பி மகள் ஃபிலோமினாவைத் தத்தெடுத்து சொந்த மகளாக வளர்த்துவந்தனர்.

இந்தியா திரும்பிய சைமன், நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் எம்.எஸ்.எம் பிரஸ் என்ற அச்சு நிறுவனத்தைத் தொடங்கி நடத்திவந்தார். பெயருக்குத்தான் அச்சு நிறுவனம்... அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூடும் இடமாகிப் போனது அந்த பிரஸ்! நேசமணி, சிதம்பரநாதன், ஏ.ஜே.ஜான், நூர் முகம்மது என்று நட்பு வட்டம் பெருக, திருவிதாங்கூர் காங்கிரஸில் உறுப்பினரானார் சைமன். தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் கிட்ட, முறையே 1952 மற்றும் 1954-ம் ஆண்டுத் தேர்தல்களில் வென்று திருவிதாங்கூர் கொச்சி அவையிலும், தமிழக சட்டமன்றத்திலும் உறுப்பினரானார் சைமன். சைமனின் அரசியல் பயணத்தை உடனிருந்து உள்வாங்கிக்கொண்டிருந்தார் லூர்தம்மாள்.

ஒய்.எம்.சி.ஏ மற்றும் லீஜன் ஆஃப் மேரி அமைப்புகளின் செயலாளர், கஸ்தூரி பாய் மாதர் சங்கத்தின் உறுப்பினர், ரோட்டரி மற்றும் லயன்ஸ் சங்கங்களில் உறுப்பினர், காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர் சங்கத்தின் தலைவர் என்று பல பரிமாணங்களில் சமூகப் பணியாற்றிய லூர்தம்மாள், ராமன்புதூரில் மகளிர் சங்கம் ஒன்றையும் புதிதாக நிறுவினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

லூர்தம்மாளின் அரசியல் நுழைவு மிக சுவாரஸ்யமானது. கணவர் சைமனின் நெருங்கிய தோழர் ஏ.ஜே.ஜான் கேரள காங்கிரஸின் முன்னாள் அமைச்சர் மற்றும் தமிழக ஆளுநர் பதவியில் இருந்தவர். 1957-ம் ஆண்டு, தமிழகத்தின் தேர்தல் அறிவிப்புகள் வர, தகுதியான பெண் வேட்பாளர் ஒருவரை நிறுத்த பெரும் ஆர்வம்கொண்டிருந்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் காமராஜர். அப்போது காமராஜருக்கு ஏ.ஜே.ஜானால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார் லூர்தம்மாள். அவரின் கூரிய அறிவுத்திறன் மற்றும் மொழிப்புலமை இரண்டும் காமராஜரை வெகுவாகக் கவர, குளச்சல் தொகுதியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வென்றார் லூர்தம்மாள்.

ஏழு அமைச்சர்கள்கொண்ட அமைச்சர் குழுவின் பட்டியலை ஆளுநர் ஜானிடம் அளித்தார் காமராஜர். அதில் இடம்பெற்றிருந்த ஒரே பெண் - லூர்தம்மாள் சைமன். அவருக்கு ஒதுக்கப்பட்ட அமைச்சகம் - அவர் மனதுக்கு மிகவும் இணக்கமான உள்ளாட்சி மற்றும் மீன்வளத்துறைகள். புதிதாகத் தமிழகத்தில் இணைந்த குமரி மாவட்டம், கத்தோலிக்க கிறிஸ்துவ சிறுபான்மை சமூகம், படித்த, அரசியல் தெரிந்த பெண், ஏற்கெனவே சமூகம் சார்ந்து இயங்குபவர், மீனவ முக்குவர்சமூகப் பெண் என்று லூர்தம்மாளின் பின்புலத்தை நன்றாகவே அறிந்து இந்த வாய்ப்பை அளித்தார் காமராஜர். ஜோதி வெங்கடாசலத்துக்குப் பிறகு தமிழகத்தின் பெண் அமைச்சராக... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அமைச்சராக 1957 ஏப்ரல் 13 அன்று பதவியேற்றுக்கொண்டார் லூர்தம்மாள். அந்தப் பதவியில் 1962 மார்ச் 1 வரை நீடித்தார்.

லூர்தம்மாள் செய்த பணிகளில் மிக முக்கியமானவையாகக் கருதப்படுபவை சென்னை மாநகராட்சியை நிர்வகிக்க ஏதுவாக வட மற்றும் தென்சென்னைப் பிரிவுகளாகப் பிரித்ததும், உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்துக்காக வெள்ளை அறிக்கை சமர்ப்பித்ததும்தாம். மீனவ சமுதாய நலனுக்காகவும் எண்ணற்ற திட்டங்களைக் கொண்டுவந்தார்.

முதல் பெண்கள்: மரிய லூர்தம்மாள் சைமன்

திருவல்லிக்கேணி பகுதியில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க வேண்டும் என்ற பெரும்பான்மை கருத்துக்கு மறுப்பு தெரிவித்த லூர்தம்மாள், `வடசென்னைப் பகுதியே அதிகம் வளர்ச்சியைக் காணவேண்டிய பகுதி. தென்சென்னை ஏற்கெனவே விரிவடைந்து விட்டது' என்று சொல்லி ராயபுரத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைய முழு முயற்சி எடுத்தார். காமராஜர் கொண்டுவந்த இலவச மதிய உணவுத் திட்டத்தை `கேர்’ என்ற அமெரிக்க நிறுவனத்தின் உதவியுடன் பிற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தக் காரணமானார்; இதன் மூலம் 14 லட்சம் பள்ளிக் குழந்தைகள் பயனடைந்தனர்.

மீனவர் நலனுக்கென 1957-ம் ஆண்டு, இந்திய - நார்வே நாடுகளின் கூட்டு முயற்சியாக மன்னார் வளைகுடா பகுதியில் ஆழ்கடல் மீன்பிடி ஆய்வகம், குருசடை, தூத்துக்குடி, எண்ணூர், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் கடல்வாழ் உயிரின மையங்கள் போன்றவை இவரது சீரிய முயற்சியால் அமைக்கப்பட்டன. சென்னை, பவானிசாகர், மணிமுத்தாறு, கன்னியாகுமரிப் பகுதிகளில் நன்னீர் உயிரின ஆய்வு மையங்கள் அமைக்கப்பட்டன. வெகு வேகமாகச் செல்லக்கூடிய `பாப்லோ’ வகைப் படகுகளைத் தமிழக மீனவர்களுக்கு அறிமுகப்படுத்தினார் லூர்தம்மாள். தனி மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் 24 மணி நேரமும் அமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் பணியாற்றினார். ரெயின்போ ட்ரவுட் என்ற நன்னீர் மீன் வகையை உதகைப் பகுதியின் ஏரிகளில் அறிமுகம் செய்தார். இந்த மீன் முட்டைகள் காஷ்மீரிலிருந்து தருவிக்கப்பட்டவை!

இவை தவிர, வறட்சிக் காலத்தில் உவர்நீர் குட்டைகளில் வளர்க்கக்கூடிய ஜிலேபி வகை கெண்டை மீன்களை ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்து தமிழகத்தில் அறிமுகம் செய்தார். வறட்சிக் காலத்தில் மீனவர்கள் /விவசாயிகள் குட்டைகள் அமைத்து வளர்க்க இந்த வகை மீன்கள் கைகொடுத்தன. இந்த மீன் வகையை `லூர்தம்மாள் மீன்' என்றே இன்றும் சொல்வோருண்டு! மீனவர் கூட்டுறவுச் சங்கங்கள் இவரது காலத்தில்தான் வலுப்பெற்றன. லூர்தம்மாள் தயாரித்து அளித்த உள்ளாட்சி அமைப்பு வெள்ளை அறிக்கை காரணமாகவே செயலற்றுக் கிடந்த பல பஞ்சாயத்துகளில் தேர்தல்கள் நடத்தப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகள் பலப்படுத்தப்பட்டன.

இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டக் கால முடிவில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பஞ்சாயத்து அமைப்பது என்ற குறிக்கோளை முன்வைத்தார் லூர்தம்மாள். பிளாக்குகளின் கீழ் பஞ்சாயத்துகளைக் கொண்டுவருவது, இந்தக் கமிட்டிகளுக்குத் தேவையான நிதி, தொழில்நுட்ப வசதிகள் போன்றவற்றைச் செய்து தர வழிவகுத்தது லூர்தம்மாளின் வெள்ளை அறிக்கை. 1958-ம் ஆண்டு, மதராஸ் பஞ்சாயத்து சட்டம் லூர்தம்மாளின் பெருமுயற்சியால் கொண்டுவரப்பட்டது.

அன்றைய பிரதமர் நேருவின் மகள் இந்திரா காந்தியுடன் லூர்தம்மாளுக்கு ஆரோக்கியமான நட்பு இருந்தது. ராஜேந்திர பிரசாத், நேரு, காமராஜர், கக்கன், பக்தவத்சலம் என்று காங்கிரஸ் தலைவர்களின் செல்லப்பிள்ளையாகவே வலம் வந்தார் லூர்தம்மாள்.

படம் வரைதல், பூத்தையல், அழகுற எழுதுதல், கோலமிடுதல் என்று பொறுமை தேவைப்படும் கலைகள் எல்லாவற்றிலும் மிளிர்ந்தார். பாடும் திறமையும் அவருக்கு உண்டு. 1962-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டவர் சாதிரீதியான ஓட்டுப் பிரிப்பால் தோல்வியைத் தழுவினார். கணவர் அலெக்சாண்டர் அத்துடன் தன் அரசியல் வாழ்க்கையை முடித்துக்கொண்டார். லூர்தம்மாளோ மனம் தளரவில்லை. மீனவ சமுதாயம் முன்னெடுத்த அத்தனை போராட்டங்களிலும் முன் நின்றார்.

1982-ம் ஆண்டு நடைபெற்ற மண்டைக்காடு கலவரத்துக்குப் பின் மீனவர் சமூக மக்களுடன் மூன்று நாள்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டார் லூர்தம்மாள். அதே ஆண்டு அலெக்சாண்டர் சைமன் இறந்துபோக, மகன்கள் ஆதரவில் வாழ்ந்தார். 1992-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு விபத்தில் இடுப்பெலும்பு உடைந்து போக, அதன் பின் வீல்சேர் வாழ்க்கைக்குப் பழகிக்கொண்டார்.

அரசு மருத்துவமனையில் தன் இறுதிக் காலத்தைக் கழித்தார் லூர்தம்மாள்.

1997-ம் ஆண்டு தமிழக அரசு சட்டமன்ற வைர விழா கொண்டாடியபோது லூர்தம்மாளை அழைத்து விருது வழங்கி கௌரவப்படுத்தினார் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி. தன் இறுதி நாள்களைத் தனிமையிலும் வலியிலும் கழித்த லூர்தம்மாள், 2002 மே 4 அன்று சென்னை அண்ணா நகரில் காலமானார்.

“என் நண்பன் சங்கரநாராயணன் அருப்புக் கோட்டையைச் சேர்ந்த ஓர் அந்தணர். ஆனால், அவனை வளர்த்தெடுத்து ஆளாக்கியவர் லூர்தம்மாள். ஒரு கிறிஸ்துவ பிற்படுத்தப்பட்ட பெண்ணின் வீட்டில் அன்பும் பாசமும் கொட்டி அந்தணர் ஒருவரை தன் பிள்ளை போல வளர்த்தெடுத்து அவனுக்கு ரூர்கேலா நகரின் இரும்பு ஆலை ஒன்றில் வேலையும் வாங்கித் தந்து பார்த்துக்கொண்டவர் லூர்தம்மாள். அன்பும் அரவணைப்பும் கொண்ட அந்தப் பெண்ணைப் பற்றி இறந்துபோன என் நண்பன் பேசாத நாளில்லை” என்று குரல் கம்ம சொல்கிறார் ஓவியரும் எழுத்தாளருமான மனோகர் தேவதாஸ்.

தமிழகம் இழந்தும், மறந்தும் போன தாயுள்ளம் லூர்தம்மாளினுடையது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism