Published:Updated:

மேடை முகம்: வாய்ப்புகள் ஏராளம்... வாருங்கள் உங்கள் ஸ்டைலில்!

`யெம்.சி' த்வானி ராவ்
பிரீமியம் ஸ்டோரி
News
`யெம்.சி' த்வானி ராவ்

வெற்றிக்கதை பகிர்கிறார் `யெம்.சி' த்வானி ராவ்

யிரத்துக்கும் அதிகமான நிகழ்ச்சிகள்... ஐபிஎம், சோனி, சாம்சங், அமேசான், ஹெச்பி என முன்னணி நிறுவனங்கள் விரும்பும் முதல் சாய்ஸ்... எப்போதும் ‘தி மோஸ்ட் வான்ட்டட்’ லிஸ்ட்டில் முதலிடம். சென்னையைச் சேர்ந்த பிரபலமான யெம்.சி, அதாவது ‘மாஸ்டர் ஆஃப் செரிமனி’ த்வனி ராவின் பெருமை பேச இன்னும் இப்படிப் பல விஷயங்கள்...

பிசினஸ் மாநாடு, விருது விழா, புராடக்ட் லான்ச், திருமணங்கள் என எந்த நிகழ்ச்சியையும் தன் பேச்சாலும் தனித்தன்மையாலும் கலகலப்பாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றும் திறமையாளர் த்வனி. பெயரிலும் தோற்றத்திலும் அந்நியப்பட்டாலும், த்வனியின் நாக்கில் தமிழ், ஆங்கிலம், கன்னடம், ஹிந்தி என மொழிகள் தாண்டவமாடுகின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

``எம்.சிக்கான முதலும் முக்கியமுமான தகுதியே அவங்களுடைய மொழிதான். எந்த மொழி என்பது பிரச்னையில்லை. உங்களுக்குத் தெரிஞ்ச மொழியில் பிரமாதமான ஆளுமை இருக்கணும். நிகழ்ச்சியில் பங்கேற்கும் மக்களை உங்கள் மொழி ஆளுமையால் ஈர்க்கத் தெரிஞ்சிருக்கணும். அந்த நிகழ்ச்சியோடு ஒன்றிணைக்கிற உரையாடலும் ரொம்ப முக்கியம். ஒட்டுமொத்த நிகழ்ச்சியையும் தொய்வில்லாம நகர்த்திட்டுப் போகும் பொறுப்பு யெம்.சியினுடையது. நிகழ்ச்சிக்கு உயிர்கொடுத்து, அதை சுவாரஸ்யமா மாத்தற முக்கிய முகம் யெம்.சி. பிரெசென்ஸ் ஆஃப் மைண்டும், சில இடங்களில் சுயமா சிந்தித்துப் பேசும் திறனும் இருந்தால் நீங்க இன்னும் ஸ்பெஷல்னு அர்த்தம்’’ - யெம்.சிக்கான அடிப்படைத் தகுதிகளை அடிக்கோடிட்டபடி அழகாகப் பேசுகிறார் த்வனி.

மேடை முகம்: வாய்ப்புகள் ஏராளம்... வாருங்கள் உங்கள் ஸ்டைலில்!

‘`நாலு வயசுல முதல் முதலா மேடை ஏறி, மைக் முன்னாடி நின்னு பேசினேன். அந்த வயசுலேயே அந்த அனுபவம் பிடிச்சிருந்தது. என்னுடைய குழந்தைப்பருவம் முழுவதும் இப்படி நிறைய மேடை நிகழ்ச்சிகளில் பேசியிருக்கேன். இன்னிக்கு சென்னையின் நம்பர் ஒன் யெம்.சியா இருக்கேன்னா, அதுக்குக் காரணம் சின்ன வயசுல எனக்குக் கிடைச்ச அந்த அனுபவங்கள்தாம்’’ - தன்னம்பிக்கையுடன் சொல்லும் த்வனி, கெமிக்கல் இன்ஜினீயரிங்கில் பி.டெக் முடித்தவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``ஸ்கூல் படிப்பை முடிச்சதும் ஈவென்ட் கம்பெனிகளோடு வேலை பார்த்திட்டிருந்தேன். அப்போதான் சென்னையில யெம்.சிக்களுக்கான தேவை எக்கச்சக்கமா இருக்குங்கிறது தெரியவந்தது. யெம்.சி என்ற வார்த்தையே அப்போ எனக்குப் புதுசு. மேடையில் தைரியமா பேசத் தெரியணும், ஆடியன்ஸோடு சரளமா உரையாடணும், அதுதான் யெம்.சியின் வேலைன்னு சொன்னாங்க. ‘அட.... அதைத்தானே சின்னவயசுலேருந்து பண்ணிட்டிருக்கேன்’னு அதையே என் கரியராகவும் மாத்திக்கிட்டேன்’’ - சரியான நேரத்தில் மிகச் சரியான முடிவெடுத் தவர், இதுவரை ஆயிரத்துக்கும் மேலான நிகழ்ச்சிகளுக்கு யெம்.சியாக இருந்திருக்கிறார்.

‘`சென்னையின் ஒரு பெரிய மாலில் டிடெர்ஜென்ட் புராடக்ட் புரொமோஷன்தான் நான் யெம்.சியா தொகுத்து வழங்கின முதல் நிகழ்ச்சி. பிடிச்ச விஷயத்தைச் செய்தால் வரவேற்பும் வருமானமும் கிடைக்கும் என்பதே ஆச்சர்யமா இருந்தது. அதே வருஷம் சென்னையின் ஸ்டார் ஹோட்டலில் நடந்த நியூ இயர் பார்ட்டிக்கு யெம்.சியா இருந்தேன். நிகழ்ச்சி முடிஞ்சதும் மொத்தக் கூட்டமும் என்னைத் தேடிவந்து கைகொடுத்து, பாராட்டு மழையில் நனையவெச்சது. எனக்கு ஐந்து மடங்கு அதிக வருமானம் கிடைச்சது. கூட்டத்திலிருக்கிறவங்க எந்த வயதுக்காரங்களா இருந்தாலும் அவங்களை என்னால என்டர்டெயின் பண்ண முடியும்னு என்மேலயே எனக்கு அபாரமான நம்பிக்கையை ஏற்படுத்தின அனுபவம் அது’’ - இன்றும் த்வனியிடம் அதே எனர்ஜி!

மேடை முகம்: வாய்ப்புகள் ஏராளம்... வாருங்கள் உங்கள் ஸ்டைலில்!

மேடை பயமில்லாத, மொழி ஆளுமையும் கூட்டத்தைக் கையாளும் திறனும் உள்ளவர்களுக்கு இந்தத் துறையில் வாய்ப்புகள் கொட்டிக்கிடப்பதைச் சுட்டிக்காட்டும் த்வனி, அந்தத் தகுதி உள்ளோரை யெம்.சி அவதாரம் எடுக்க அழைக்கிறார்.

‘`இன்னிக்கு சென்னையில் தினமும் நூற்றுக்கணக்கான கார்ப்பரேட் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. புதிய திறமைகளுக்கு வரவேற்பு இருக்கு. ஆர்வமுள்ள ஒவ்வொருத்தருக்கும் இங்கே வாய்ப்புகள் இருக்கு. அதனால இந்தத் துறையில் போட்டிகளே இருக்காதுன்னு நினைக்க வேண்டாம். எல்லாத் துறைகளைப் போலவும் இதிலும் எக்கச்சக்கமான போட்டியாளர்கள் இருக்காங்க. முன்னணி இடத்துல இருக்கும் எனக்கும் அந்தச் சவால் இருக்கு. எனக்கு இணையான அனுபவமும் திறமையும் உள்ள யெம்.சிகள் இருக்காங்க. போட்டியில நாம தாக்குப்பிடிக்க மாட்டோம்னு நினைக்காம, தாக்குப்பிடிக்க என்ன செய்யலாம்னு யோசிக்கணும். இந்தத் துறையில் வேற யாரும் என்கூடப் போட்டி போட முடியாத அளவுக்கு எனக்குன்னு தனிப்பட்ட ஸ்டைல் இருக்கு. அதுதான் எனக்கான அடையாளம். அப்படியொரு தனித்தன்மையை வளர்த்துக்கிட்டா சுலபமா ஜெயிக்கலாம்’’ - சொந்த அனுபவத்தையே உதாரணமாகச் சொல்பவர், வருங்கால யெம்.சிக்களுக்காக ‘ஹவ் டு பிகம் அன் யெம்.சி’ என்ற புத்தகம் எழுதியிருக்கிறார்.

‘`நான் இந்தத் துறைக்கு வந்தபோது எனக்கு ஆலோசனைகள் சொல்லி வழி நடத்த யாருமில்லை. தவறுகள் செய்துதான் ஒவ்வொண்ணையும் கத்துக்கிட்டேன். என்னைப் போல யெம்.சியாக நினைக்கிறவங்களுக்கு அந்தக் கஷ்டம் இருக்கக் கூடாதுன்னு நினைச்சு எழுதின புத்தகம் இது. யெம்.சி என்பவர் யார், யெம்.சியாவது எப்படி, மேடை பயத்தை விரட்டுவது எப்படி, கூட்டத்தைச் சமாளிப்பது எப்படி, எந்தெந்த நிகழ்ச்சிகளுக்கு எப்படிப்பட்ட திறமை தேவை, யெம்.சி தன்னை எப்படி மார்க்கெட் செய்துகொள்ள வேண்டும், தனக்கான கட்டணத்தை எப்படி நிர்ணயிப்பது என ஏ டு இஸட் தகவல்கள் இந்தப் புத்தகத்தில் உண்டு’’ - வழிகாட்டுபவர், வளர்ந்து வரும் இளம் யெம்.சிக்களுக்கு மென்ட்டாராகவும் இருக்கிறார்.

‘`அடுத்த தலைமுறை யெம்.சிக்களுக்கு ஆன்லைன் கோர்ஸ்’’ - திட்டம் சொல்லும் த்வனியின் அந்த முயற்சியும் வெற்றி பெறட்டும்!