Published:Updated:

நம்ம முயற்சியைப் பார்த்து ஊர் சிரிக்கும் வெற்றிக்கு கை தட்டும்! டிரைவர் அன்பரசியின் நம்பிக்கைக் கதை

அரசு ஜீப் டிரைவர்
அரசு ஜீப் டிரைவர்

"நான் ஓட்டுற 'TN 320G486' ஜீப்தான் இப்போ என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட். ஜீப்புக்கு உயிர் இல்லைனாலும் எங்க உறவுக்கு உயிர் இருக்கு. அந்த ஜீப்தான் இப்போ என்னோட அடையாளமும் கூட...''

"பொண்ணுங்க விமானம் ஓட்டுற அளவுக்கு வளர்ந்தாலும், கிராமத்தில் இருக்கும் பொண்ணுகளுக்கு இன்னும் நிறைய கட்டுப்பாடுகள் இருக்கத்தான் செய்யுது. புடவை கட்டிகிட்டு இருந்த பொண்ணு திடீர்னு சுடிதாரை மாட்டிகிட்டு வந்து நின்னா, ஊரே கூடி நின்னு வேடிக்கைப் பார்க்கும். இதை அறியாமைனு சொன்னாலும், அதை உடைச்சு வெளியே வந்து திறமையை நிரூபிக்கிறதுதான் எங்களை மாதிரி கிராமத்துப் பொண்ணுங்களுக்கான சவாலே."

வார்த்தைகளில் கிராமத்துப் பெண்களின் யதார்த்த நிலையை  விவரித்துப் பேச ஆரம்பிக்கிறார் அன்பரசி. விழுப்புரம் மாவட்டம் கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர். `ஊரக வளர்ச்சித் துறையில்' அரசு ஜீப் டிரைவர்.

எப்படி ஆரம்பித்தது இந்த ஜீப் பயணம்... அவரிடமே பேசினோம்.

அரசு ஜீப் டிரைவர் அன்பரசி
அரசு ஜீப் டிரைவர் அன்பரசி

"ஆம்பளைங்க எந்த வேலைக்குனாலும் போலாம். பொம்பள புள்ளைங்களுக்கு இந்த வேலைதான் லாயக்குனு எல்லைக்கோடுகள் எல்லாம் நாமளே உருவாக்கினதுதானங்க. இந்த எல்லைகளைத் தாண்டிட்டா நாம தனித்துவமானவங்கதான். எனக்கு சொந்த ஊர் கம்பாடி. கட்டுப்பாடுகள் நிறைஞ்ச ஊரு. ஊருக்குள்ள ஆயிரம் கட்டுப்பாடுகள் இருந்தாலும், வீட்டுக்குள்ள நான் சுதந்திரமான பட்டாம் பூச்சியாதான் இருந்தேன். பொம்பள புள்ள தைரியமாத்தான் இருக்கணுங்கிறது எங்க அப்பாவோட ஆசை. அப்படிதான் என்னையும் வளர்த்தாங்க.

எங்க அப்பா டிரைவிங் ஸ்கூல் வெச்சிருந்தாங்க. எங்க ஊரை சுத்தி இருக்க கிராமத்து ஆளுங்க எல்லாம் எங்க அப்பாகிட்டதான் வந்து டிரைவிங் கத்துப்பாங்க. அதனால் சின்ன வயசிலேயே டிரைவிங் பழகணுங்கிற ஆசை எனக்கும் வந்துருச்சு. என்னோட பதிமூணு வயசில் பைக் கத்துக்கணும்னு அப்பாக்கிட்ட கேட்டேன். `பெரிய வண்டி பழகணும்னா பாவாடை சட்டையெல்லாம் சரிப்பட்டு வராது. தம்பிகளோட பேன்ட் சட்டை போட்டுக்கோ'னு அப்பா சொன்னாங்க.

இன்டர்வியூக்கு என் கணவர்கூட சும்மா வந்திருக்கேன்னு நினைச்சுகிட்டாங்க. ஆனால் `அன்பரசி வாங்க'னு என் பெயரைச் சொன்னதும் நான் எழுந்து நின்னேன். எல்லோரும் வித்தியாசமாக பார்த்தாங்க.
அன்பரசி.

நான் பேன்ட் சட்டை போட்டதுக்கு ஊரே விமர்சனம் பண்ணுச்சு. பொம்பளைப் புள்ளை இப்போ வண்டி ஓட்டி என்னத்த சாதிக்க போகுதுனு கூட கேட்டாங்க. கேலி கிண்டல்களுக்குப் பயந்து நான் பைக் கத்துகுற ஆசையை விட்டுறலாம்னு நினைச்சேன். `நம்ளோட முயற்சிக்குதான் ஊரு சிரிக்கும். வெற்றிக்கு கை தட்டும்' னு அப்பா என்னை ஊக்கப்படுத்தி வண்டியில் ஏத்துனாங்க.

சில காயங்கள், நிறைய விமர்சனங்களைத் தாண்டி ரெண்டு வாரத்திலேயே தனியா பைக் ஓட்ட ஆரம்பிச்சுட்டேன். கம்பீரமா நான் பைக் ஓட்டுறதப் பார்த்து எங்க ஊரு ஜனங்க ஆச்சர்யமா என்னை வேடிக்கைப் பார்த்தாங்க. என் சோட்டுகாரிகளுக்கு கூட பைக் ஓட்டுற ஆசை வந்துருச்சு. என்கிட்டவந்து வண்டி ஓட்ட சொல்லிக்குடுனு கேட்டாங்க. பைக் ஓட்டுறதில் எங்க ஊரு பொண்ணுங்களுக்கு நான்தான் ரோல் மாடல். பெருமையான விஷயம் தானே'' தன் ஜீப்பை சுத்தம் செய்துகொண்டே மீண்டும் தொடர்ந்தார்.

அரசு ஜீப் டிரைவர் அன்பரசி
அரசு ஜீப் டிரைவர் அன்பரசி

"சின்ன வயசிலேயே கார் ஓட்டவும் கத்துக்கிட்டேன். 18 வயசில் லைசென்ஸும் எடுத்துட்டேன். எங்க ஊரிலேயே லைசென்ஸ் எடுத்த முதல் பொண்ணு நான்தான். காலேஜ் படிக்கும்போது சில நாள் கெத்தா பைக்கில் போய் இறங்குவேன். பசங்க கூட ஆச்சர்யமா பார்ப்பாங்க. பி.ஏ.பி.எட் படிச்சு முடிச்சேன். படிப்பு முடிஞ்ச கையோட திருமணம் செய்துகொடுத்துட்டாங்க. கணவர் இன்ஜினீயர். காலையில் வேலைக்குப் போனா பொழுது போன பின்தான் வீட்டுக்கு வருவாரு. பகல் முழுக்க வீட்டில் சும்மா இருக்குறதுக்குப் பதிலா டீச்சர் வேலைக்குப் போகலாம்னு ஐடியா வந்துச்சு. எந்தெந்த ஸ்கூலில் ஆள் எடுக்கிறாங்கனு தினமும் பேப்பரில் பார்த்து தெரிஞ்சிட்டு அப்ளிகேஷன் போடுவேன். அப்போதுதான் ஊரக வளர்ச்சித் துறையில்`டிரைவர் பணிக்கு ஆட்கள் தேவை'னு ஒரு விளம்பரம் கண்ணில் பட்டுச்சு. அதுதான் மாற்றத்துக்கான ஆரம்பம்" என்று சொல்லும் அன்பரசி டிரைவர் வேலைக்குச் சேர்ந்தது பற்றி பேச ஆரம்பித்தார்.

"விளம்பரத்தைப் பார்த்துட்டு என் கணவர்கிட்ட சொன்னேன். உனக்கு சரியா வரும்னு தோணுச்சுனா அப்ளை பண்ணுனு சொன்னார். அப்ளை பண்ணி சில வாரத்துக்குப் பின் இன்டர்வியூ வெச்சாங்க. நான் என் கணவர்கூட போயிருந்தேன். அங்க வந்திருந்த எல்லாரும் நான் என் கணவர்கூட சும்மா வந்திருக்கேன்னு நினைச்சுகிட்டாங்க. ஆனால் 'அன்பரசி வாங்க'னு என் பெயரை சொன்னதும் நான் எழுந்து நின்னேன். எல்லோரும் வித்தியாசமாக பார்த்தாங்க. சிரிச்சாங்க. ஆனால், அத்தனை பேருடைய ஏளனப் பார்வைகளையும் மீறி நான் தேர்வு செய்யப்பட்டேன். இப்படிதான் நம்ம முயற்சிகளுக்கு இந்த ஊர் சிரிக்கும்... ஆனா, வெற்றிக்கு கை தட்டும்!

"நான் சம்பளத்துக்காக மட்டும் வேலைக்கு வரல. டிரைவிங்கை எனக்கான அடையாளமா பார்க்கிறேன்!"
அன்பரசி
`அமைச்சர்கள் முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வரை..!' - மத்தியப் பிரதேசத்தை உலுக்கிய 5 பெண்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலருக்கு ஜீப் ஓட்ட ஆரம்பிச்சேன். முதல் நாள் ஜீப்பில் ஏறி உட்காரும்போது கொஞ்சம் பதற்றமா இருந்துச்சு. ஜீப்பை ஓட்ட ஆரம்பிச்ச சில நிமிஷத்திலேயே பதற்றம் காணாமல் போயிருச்சு. உண்மையைச் சொல்லணும்னா, நான் ஓட்டுற 'TN 32 0G486' ஜீப் தான் இப்போ என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட். ஜீப்புக்கு உயிர் இல்லைனாலும் எங்க உறவுக்கு உயிர் இருக்கு. அந்த ஜீப் தான் இப்போ என்னோட அடையாளமும்கூட" என்று தன் ஜீப்பை வாஞ்சையாக தடவிக்கொடுத்தவாறே வழக்கமான பணிகள் பற்றி பேச ஆரம்பித்தார்.

"மாவட்ட ஊரக அலுவலர் விசிட் செய்ய நினைக்கும் ஊருக்கு அவங்களை ஜீப்பில் கூட்டிட்டு போயி, கூட்டிட்டு வரணும். அவ்வப்போது தலைமையிடமான விழுப்புரம் மற்றும் சென்னைக்கும் போக வேண்டியது இருக்கும். மீட்டிங், டிராபிக் போன்ற சில காரணத்தால் சரியான நேரத்துக்கு வீட்டுக்குப் போக முடியாது. நான் பதற்றமே இல்லாமல் நின்னாகூட சிலர், இந்த வேலைக்கு வந்து எதுக்கு கஷ்டப்படுறீங்க, எதாவது ஸ்கூலுக்கு டீச்சரா வேலைக்குப் போயிட்டு குடும்பம், குழந்தையினு நிம்மதியா வாழுங்கனு அட்வைஸ் பண்ணுவாங்க. 

அன்பரசி
அன்பரசி

இப்படி சில அட்வைஸ்களைக் கேட்கும்போது, நான் சம்பளத்துக்காக மட்டும் வேலைக்கு வரல. டிரைவிங்கை எனக்கான அடையாளமா பார்க்கிறேன்னு கத்தி சொல்லணும்னு தோணும். பொண்ணா பொறந்த காரணத்துக்காக எத்தனை பேருக்கு விளக்கம் கொடுக்கிறதுனு தெரியல. இதே அட்வைஸை நான் ஓர் ஆணை பார்த்து சொன்னா இந்தச் சமுதாயம் ஏத்துக்கும்மா சொல்லுங்க? ஆணுக்கும் பெண்ணுக்கும் கனவு, ஆசை, குடும்ப பொறுப்பு ஒன்னுதான் இருக்கும்னு இந்த சமுதாயம் எப்போ புரிஞ்சுக்கும்னு தெரியல.

ஏன் நேரத்துக்கு வரலைனு என் கணவர் ஒரு நாள்கூட என்னைக் கேள்வி கேட்டது கிடையாது. நான் வர லேட் ஆகும்னு போனில் சொல்லிட்டாபோதும். அம்மாவாக மாறி என்னோட குழந்தைகளைப் பார்த்துப்பாங்க. இந்த புரிந்துணர்வுதான் என்னோட வெற்றிக்கு அடித்தளமா இருக்கு.

அன்பரசி
அன்பரசி

மற்றவர்களின் விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும். சில கஷ்டங்களும் உண்டுதான். மழை நேரத்தில் வண்டி சகதியில் இறங்கிறும். அதை வெளியே எடுக்க ரொம்பவே போராடணும். சில நேரம் டயர் பஞ்சர் ஆயிருச்சுனா சில கிலோமீட்டர் தூரம் நடந்து போயி மெக்கானிக்கை கூட்டிட்டு வரணும். இரவு நேரம் பஞ்சர் ஆனால் இன்னும் சிரமம். இதையெல்லாம் தாண்டி, ஒரு பெண் டிரைவராக இருப்பதில் அலுவலர்களுக்கும் சில சிக்கல்கள்  இருக்கத்தான் செய்யும். ஆனால், அதையெல்லாம் மீறி எங்கள் துறை அலுவலர்கள் என்னைப் பெருமையாகத்தான் பார்க்கிறாங்க. கலெக்டர் சார் கூட கூப்பிட்டு பாராட்டுனாங்க. எல்லா துறையிலும் பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். பிரச்னைகளுக்குப் பயந்து வாழ ஆரம்பிச்சால் வீட்டுக்குள்ளயேதான் இருக்கணும். நமக்கான அடையாளம் நம்முடைய தைரியம்தானு துணிஞ்சு செயல்பட ஆரம்பிப்போம்" என்று தம்ஸ்அப் காட்டுகிறார் அன்பரசி.

பின் செல்ல