Published:Updated:

``நைட்டுல கரடி வந்து கதவைத் தட்டும்!'' - `ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்' பிரபாதேவியின் கதை

பிரபாதேவி
News
பிரபாதேவி

``ஒரு கான்ஸ்டபிளை அனுப்பி என்னை ஸ்டேஷனுக்கு வரச்சொன்னார். மனசுக்குள்ள என்னவோ ஏதோன்னு ஒரு பயம் இருந்தாலும், அவரைப் போய்ப் பார்த்தேன்.''

இது ஆடி மாசம் என்பதால், சின்னச் சின்ன அம்மன் கோயில்களில்கூட கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கிறது. வில்லிவாக்கம் பகுதியில் இருக்கிற பாலியம்மன் கோயிலும் பக்தைகளால் நிறைந்து வழிந்துகொண்டிருக்கிறது. ஒரு பக்கம் பொங்கல் வைக்கும் பெண்கள், இன்னொரு பக்கம் அம்மன் தரிசனத்துக்காக இடுப்பில் ஒன்று, கையில் ஒன்று என குழந்தைகளுடன் வரிசையில் நிற்கும் பெண்கள் என பாலியம்மன் கோயில் வெகு சத்தமாக இருந்தது. அந்தச் சத்தத்துக்கு நடுவே "ஹேண்ட் பேகை முன்னாடி வையுங்க; குழந்தைகள் கால்ல இருக்கிற கொலுசுப் பத்திரம். இல்லன்னா நான் கழட்டிட்டுப் போயிடுவேன்'' என ஒரு வயதான பெண் குரல் ஓங்கி ஒலிக்கிறது.

தாறுமாறா நின்னுக்கிட்டிருந்த லேடீஸை `வரிசையில நில்லுங்கம்மா'ன்னு சொல்லிக்கிட்டிருந்தேன். சிலர் அதைக் கேட்டாங்க. சிலர் என்னை மரியாதைக் குறைச்சலா பேசினாங்க.''

உடனே வரிசையில் நிற்கிற பக்தைகள், தங்கள் தோள்களில் தொங்கிக் கொண்டிருக்கிற ஹேண்ட் பேக்குகளை நெஞ்சுபக்கமாக இழுத்து வைத்துக்கொள்கிறார்கள். குழந்தைகளுடன் நிற்பவர்கள், சின்னத் திடுக்கிடலுடன் குழந்தைகளின் கால்களில் இருக்கிற கொலுசு, நகை ஆகியவற்றை சரிபார்த்துக்கொள்கிறார்கள். எல்லாம் பத்திரமாக இருக்கிறது என்பது உறுதியானதும், தங்களை திருடர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக உஷார் செய்த அந்த வயதானப் பெண்மணியை அத்தனைபேரும் நன்றியுடன் பார்க்கிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அந்தப் பெண்மணியின் பெயர் பிரபாதேவி. வயது 75. தமிழ்நாட்டின் முதல் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் இவர்தான். பாலியம்மன் கோயிலில் பாதுகாப்புப் பணி முடிந்து, வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தவருடன் நானும் இணைந்துகொண்டேன்.

"எனக்குப் பூர்வீகம் மராட்டி. என் அத்தைப் பையன் இங்கே சென்னையில ரயில்வேயில வேலைபார்த்துக்கிட்டிருந்தார். அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு சென்னை அயனாவரத்துல குடிவந்தேன். ரெண்டு பெண் குழந்தைங்க, ஒரு பையன்னு அழகான குடும்பம். மாமியார், மாமனார்னு எல்லோரும் கூட்டுக் குடும்பமா அன்பா இருந்தோம்.

காக்கிப்புடவையுடன் காவல்பணியில்...
காக்கிப்புடவையுடன் காவல்பணியில்...

என் பையன் பொறந்த புதுசுல, அதாவது 1960-கள்ல, குடும்பத்தோட ராமேஸ்வரம் கோயிலுக்குப் போயிருந்தோம். எனக்கு ஆன்மிகத்துல ஈடுபாடு அதிகம்கிறதால, என் கணவர்கிட்டே, `என்னை இந்தக் கோயில்லேயே விட்டுட்டுப் போயிடுங்களேன். நான் இங்கேயே ஏதாவது சேவை பண்ணிக்கிட்டு இருந்துடறேனே'ன்னு சொன்னேன்.

என் கேள்வியில இருந்த சீரியஸ்னெஸ்ஸைப் பார்த்துப் பதறிப்போன என் கணவர், `நான் உயிரோட இருக்கிறவரைக்கும் இந்தப் பேச்சே பேசாத' அப்படின்னுட்டார். அவர் அன்னிக்கு சொன்னது அப்படியே பலிக்கப் போகுதுன்னு நான் கொஞ்சம்கூட நினைக்கலைம்மா'' என்கிற பிரபாதேவியின் கண்கள் மெல்ல கலங்க ஆரம்பிக்கிறது. அவர் கண்ணீரை நாம் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக தலையைக் குனிந்து, கண்ணீர்த்துளிகளை தரையில் சிந்த விடுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"பிள்ளைகள் எல்லாம் வளர்ந்து ஆளானாங்க. மூணு பேருக்கும் கல்யாணம், காட்சி, பேரன், பேத்தின்னு எல்லா சந்தோஷங்களையும் அனுபவிச்சுக்கிட்டிருந்தேன். வயசானது காரணமோ, விதி காரணமோ, என் மாமனார், மாமியார், என் கணவர்னு எல்லாரும் வரிசையா என்னைவிட்டுப் போக ஆரம்பிச்சாங்க. அயனாவரம் சுடுகாடு இருக்கிற பக்கம் திரும்பிப்பார்க்கக்கூட பயம் வந்த காலம்மா அது.

பிரபாதேவி
பிரபாதேவி

அந்த ஊர்ல தொடர்ந்து இருக்கப்பிடிக்காம, அங்கிருந்து வில்லிவாக்கத்துக்கு வந்து தனியா வீடெடுத்து தங்கிட்டேன். இந்த ஏரியாவுக்கு நான் வந்ததுக்குக் காரணம் இங்கே எந்தப்பக்கம் திரும்பினாலும், கோயிலா இருக்கும். ஒரு தடவை வில்லிவாக்கம் சிவன் கோயிலுக்குப் போயிருந்தேன். தாறுமாறா நின்னுக்கிட்டிருந்த லேடீஸை `வரிசையில நில்லுங்கம்மா'ன்னு சொல்லிக்கிட்டிருந்தேன். சிலர் அதைக் கேட்டாங்க. சிலர் என்னை மரியாதைக் குறைச்சலா பேசுனாங்க. அதை நான் பெருசா எடுத்துக்கலை.

அப்போ, வில்லிவாக்கம் ஸ்டேஷன்ல அமரவர்மன் அப்படிங்கிறவர் இன்ஸ்பெக்டரா இருந்தார். நான் எல்லாரையும் வரிசையில நில்லுங்கம்மான்னு சொன்னதையும் சிலர் என்னை மரியாதைக்குறைவா பேசினதையும் அவர் பார்த்திருக்கார். இது எனக்குத் தெரியாது. ஒரு கான்ஸ்டபிளை அனுப்பி என்னை ஸ்டேஷனுக்கு வரச்சொன்னார். மனசுக்குள்ள என்னவோ ஏதோன்னு ஒரு பயம் இருந்தாலும், அவரைப் போய்ப்பார்த்தேன்.

கரடிங்க, அதோட குட்டிங்களோட வந்து, நாங்க தங்கியிருக்கிற குடில்களோட கதவைத் தட்டும்; ஜன்னலைப் பிறாண்டும்.
பிரபாதேவி

'ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸா வேலைபார்க்கிறீங்களாம்மா'ன்னு கேட்டார். தினமும் நிறைய கோயில்களுக்குப் போகலாமேன்னு நானும் உடனே `ஓகே' சொல்லிட்டேன். காக்கிப்புடவை, ஐடி கார்டுனு கொடுத்தாங்க. சந்தோஷமா களத்துல இறங்கிட்டேன். 17 வருஷமா பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் வேலையில இருக்கேன். நான்தான் இதுல ஃபர்ஸ்ட் லேடிங்கிறதால என் ஐடி கார்டுல சீரியல் நம்பர் ஒண்ணுன்னுப் போட்டிருக்குப் பாருங்க'' என்கிற அந்த முதியப் பெண்மணியின் குரலில் ஒரு குழந்தையின் உற்சாகம் பொங்கி வழிகிறது.

கோயில்களில் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் வேலைபார்ப்பது அத்தனை சுலபம் கிடையாது. பண்டிகை, விசேஷங்களின்போது அலைமோதுகிற கூட்டத்தில் யார் பக்தர், யார் திருட வந்தவர்கள் என்றே தெரியாது. அவர்களை அடையாளம் தெரிந்தாலும் பொதுமக்களிடம் நேரிடையாக சொல்ல முடியாது. மீறிச் சொன்னால், பாதுகாப்புக்குப் போனவருக்கே பாதுகாப்பு இல்லாமல் போய்விடலாம். அதனால், பிக்பாக்கெட் திருடன் பேருந்தில் ஏறிவிட்டால், `பர்ஸ் பத்திரம்; பேக் பத்திரம்' என்று நடத்துனர் பயணிகளை மறைமுகமாக எச்சரிப்பார் பாருங்கள். அப்படித்தான் நாசுக்காக பொதுமக்களை எச்சரிக்க வேண்டும். பிரபாதேவியும் இந்த முறையில்தான் பக்தர்களை பாதுகாத்து வருகிறார்.

"எங்க மராட்டிக் குடும்பங்கள்ல பெண்கள், எந்நேரமும் தலைக்கு முக்காடுப் போட்டுக்கிட்டுத்தான் இருக்கணும். கால் கட்டைவிரல்கூட வெளியே தெரியக் கூடாது.''
பிரபாதேவி

``வேலூர் தங்கக்கோயில்ல ஆரம்பிச்சு, ஷீரடி, திருப்பதி, காசி, கேதார் நாத், பத்ரிநாத்னு எல்லாக் கோயில்கள்லேயும் சர்வீஸ் பண்ணியிருக்கேன். இதுல திருப்பதியில, ஜபாலி ஆஞ்சநேயர் கோயில் அனுபவம்தான் ரொம்ப இன்ட்ரஸ்டிங்'' என்பவர் மராட்டி, தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என ஐந்துமொழிகள் பேசுகிறார்.

ஜபாலி ஆஞ்சநேயர் கோயிலுக்கு வருஷா வருஷம் போவேன். அந்தக் கோயில் இருக்கிறதே கிட்டத்தட்ட காட்டுக்குள்ளதான். கரடி, சிறுத்தை, விதவிதமான பாம்புங்க எல்லாம் இருக்கும். நைட்டுல தூங்கும்போது கரடிங்க, அதோட குட்டிங்களோட வந்து, நாங்க தங்கியிருக்கிற குடில்களோட கதவைத் தட்டும்; ஜன்னலைப் பிறாண்டும். அங்கே டாய்லெட் எல்லாம் கிடையாது. திறந்தவெளிதான். அதனால, இருட்டோட எழுந்திருச்சு வெளியே போவோம். கை பேலன்ஸுக்கு பக்கத்துல இருக்கிற குச்சியைப் பிடிச்சா அது வழு வழுன்னு நெளியும். அலறிட்டு கீழே போட்டா நாகமும் சாரையும் பின்னிட்டுக் கிடக்கும்'' என்று சொல்பவரின் குரலில் துளியும் பயமில்லை.

கணவரின் புகைப்படத்துடன்
கணவரின் புகைப்படத்துடன்

இதைத் தவிர, முதியோர்களுக்கு பென்ஷன் வாங்கித் தருவது, விதவைகளுக்கு உதவித்தொகை வாங்கித் தருவது, பிரிந்த கணவன் - மனைவிக்கு கவுன்சலிங் தந்து சேர்த்துவைப்பது என பொதுச்சேவையும் செய்துவருகிறார் பிரபாதேவி.

"எங்க மராட்டிக் குடும்பங்கள்ல பெண்கள், எந்நேரமும் தலைக்கு முக்காடுப் போட்டுக்கிட்டுத்தான் இருக்கணும். கால் கட்டைவிரல்கூட வெளியே தெரியக் கூடாது. அப்படிப்பட்டக் குடும்பத்துல பிறந்த நான், இன்னிக்கு பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸாக இருக்கிறதை கடவுள் கொடுத்த பரிசாத்தான் நினைக்கிறேன்'' - கம்பீரமாகச் சிரிக்கிறார் பிரபாதேவி.