Published:Updated:

பெண் குழந்தைகள் புகார் அளிக்க மாவட்டம்தோறும் வாட்ஸ்அப் எண்கள்; அமைச்சர் வெளியிட்ட தகவல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பெண் குழந்தைகள் பாதுகாப்பு கையேடு வெளியிட்ட  கீதாஜீவன்
பெண் குழந்தைகள் பாதுகாப்பு கையேடு வெளியிட்ட கீதாஜீவன்

தூத்துக்குடியில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து புகார் அளிக்க தனி வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்திய தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், விரைவில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனி வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, திருச்சிலுவை ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய கையேட்டை சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அறிமுகம் செய்து அதை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கீதாஜீவன்
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கீதாஜீவன்

தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண் குழந்தைகள் மற்றும் இளம்பெண்களுக்கு மன ரீதியான, உடல் ரீதியான பாலியல் தொந்தரவுகள் குறித்து புகார் அளிப்பதற்காக 63748 10811 என்ற தனி வாட்ஸ்அப் எண்ணையும் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், ``தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்காகப் பதிவு செய்யப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பெண்கள் குழந்தைகள் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். தங்களுக்கு ஏதாவது பிரச்னைகள் ஏற்படுகிறது என்றால், அது குறித்துப் புகார் அளிக்க 1098 என்ற எண் இருக்கிறது. அதே போல, பள்ளி மாணவர்களின் பிரச்னைகளைத் தீர்க்க, 14417 என்ற எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் கீதாஜீவன்
அமைச்சர் கீதாஜீவன்

அதில் புகார் அளிக்கும் பெண்களின் பெயர், பெற்றோர் பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ரகசியமாகக் காக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண் குழந்தைகள் மற்றும் இளம்பெண்கள் தங்களுக்கு ஏற்படும் மன ரீதியான, உடல் ரீதியான பாலியல் தொந்தரவு குறித்து புகார் அளிப்பதற்காக 63748 10811 என்ற தனி வாட்ஸ்அப் எண் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதே போல, ஒவ்வொரு மாவட்டத்திலும் 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண் குழந்தைகள் மற்றும் இளம்பெண்கள், தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து புகார் அளிப்பதற்கு தனித்தனி வாட்ஸ்அப் எண்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இந்த எண்களில், அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் தங்களுக்கு ஏதாவது பாலியல் ரீதியாகவோ மனரீதியாகவோ துன்புறுத்தல் ஏற்பட்டால் புகார் அளிக்கலாம்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவிகள்
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவிகள்

அந்தப் புகார்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும். மேலும், பள்ளியில் பயிலும் மாணவிகள், தங்களுடைய பிரச்னைகளை ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் ஒளிவுமறைவில்லாமல் தெரிவிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தற்கொலை போன்ற விபரீதமான முடிவுகளை எடுக்கக் கூடாது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு