Published:Updated:

``தாய்மையைப் புனிதப்படுத்தாதீங்க ப்ளீஸ்!” - அம்மாக்கள் பேசுகிறார்கள்

அன்னையர் தினம்
பிரீமியம் ஸ்டோரி
அன்னையர் தினம்

அன்னையர் தினம் சிறப்புப் பகிர்வு

``தாய்மையைப் புனிதப்படுத்தாதீங்க ப்ளீஸ்!” - அம்மாக்கள் பேசுகிறார்கள்

அன்னையர் தினம் சிறப்புப் பகிர்வு

Published:Updated:
அன்னையர் தினம்
பிரீமியம் ஸ்டோரி
அன்னையர் தினம்

- வெ.கௌசல்யா

‘அம்மா என்பவள் தியாகத்தின் மறு உருவம். தனக்கென விருப்பு, வெறுப்புகள் இல்லாமல். எப்போதும் தன் குழந்தைகளுக்காகவே வாழ்பவள்’ என்றெல்லாம் தாய்மையைப் புனிதப் படுத்தி வைத்துள்ளது இந்த சமூகம். இதிலிருந்து மாறினால், அவள் தாய்மை கேள்விக்கு உள்ளாக்கப்படும். பல அம்மாக்கள், தங்கள் தாய்மை புனிதப்படுத்தப்படுவதை ரசித்து அதற்கு தங்களை விலையாகக் கொடுக்க, மற்ற அம்மாக்களோ,

‘நம்மள நல்ல அம்மா இல்லைனு சொல்லிடுவாங்களோ’ என்று அஞ்சி தியாகத் தாய்களாக வாழ்கிறார்கள். ஆனால் சில அம்மாக்கள், அம்மா என்ற பொறுப்பையும் தாண்டி இந்த வாழ்க்கையில் வாழ பல விஷயங்கள் உள்ளன என்பதை உணர்ந்து, உணவு, ஃபிட்னஸ் முதல் வேலை, இரண்டாம் திருமண முடிவு வரை தங்களின் நியாயமான விருப்பங்களையும் தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்கிறார்கள். அவர்களில் சிலர் இங்கே...

``தாய்மையைப் புனிதப்படுத்தாதீங்க ப்ளீஸ்!” - அம்மாக்கள் பேசுகிறார்கள்

``பையன் தாலி எடுத்துக் கொடுத்தான்!” - சுபாசினி ராஜேந்திரன், ஆங்கிலப் பேராசிரியர், மதுரை

‘`பொதுவா சிங்கிள் மதர் திருமண முடிவெடுக்கும்போது, ‘அதான் பிள்ளை இருக்குல, அதை வளர்த்துட்டு வாழ்ந்துட்டுப் போகாம இனி இன்னொரு கல்யாணமெல்லாம் எதுக்கு?’னுதான் பெரும்பாலும் சொல்லும் இந்த சமூகம். வேலைக்குப் போய் என் பையனை வளர்த்துட்டு இருந்த நான், ஒரு கட்டத்துல மறுமண முடிவெடுத்தேன். அதுக்கு என் பையனோட சம்மதம் மட்டும்தான் எனக்கு முக்கியமா இருந்தது. எங்க கல்யாணத்தப்போ, என் பையன்தான் தாலி எடுத்துக் கொடுத்தான். அப்பவும் சரி, கல்யாணத்துக்கு அப்புறமும் சரி... பேசுறவங்க பேசிக்கிட்டேதான் இருப்பாங்க. நான் நல்ல அம்மான்னு என் பையன் சொன்னா போதும், வேற யாரும் சொல்லத் தேவை யில்லையே? என் கணவர், பையனோட மெச்சூரிட்டியால நாங்க மூணு பேரும் இப்போ சந்தோஷமா இருக்கோம். வேற என்ன வேணும் ஒரு நல்ல அம்மாவுக்கு?!’’

``தாய்மையைப் புனிதப்படுத்தாதீங்க ப்ளீஸ்!” - அம்மாக்கள் பேசுகிறார்கள்

``சமைத்தவுடன் ருசித்து சாப்பிடுவோம்!” - அர்ச்சனா, ஆசிரியை, பெங்களூரு

‘`பொதுவா அம்மாக்கள், தங்களுக்குப் பிடிச்சதுனு வீட்டுல எதுவும் சமைக்கிறதில்ல. வீட்டுல மத்தவங்களுக்குப் பிடிச்சதுக்குத்தான் முன்னுரிமை கொடுத்து சமைப்பாங்க. அதேபோல, பிள்ளைகள் மிச்சம் வைக்கிறதை சாப்பிடுற தையும் இங்க தாய்மைனு ரொமான்டிசைஸ் பண்ணி வெச்சிருக்காங்க. என்னைப் பொருத்தவரைக்கும், வீட்டுல கணவருக்கும் மகனுக்கும் பிடிக்கிறதை சமைக்கிறது போல, எனக்குப் பிடிச்சதுக்கும் முக்கியத்துவம் செஞ்சு சமைச்சு சாப்பிடுவேன். வீட்டுல இருக்குறவங்களுக்குப் பிடிச்சதை செஞ்சு கொடுத்து பாராட்டு வாங்குறதுல இங்க பல பெண்களுக்கும் விருப்பம் இருக்கும். ஆனா, அவங் களுக்குப் பிடிச்சதை மட்டுமே சமைக்குறோம்னு ஆகும் போது ஒருகட்டத்துல பாசம், அன்பு எல்லாம் போய் சலிப்புதான் மிஞ்சும். அதுவே, நமக்குப் பிடிச்சதையும் செஞ்சு சாப்பிடும்போது உற்சாகமா இருக்கும். அதேபோல, அம்மாக்கள் என்றாலே, வீட்டுல எல்லாரும் சாப்பிட்டதுக்கு அப்புறம்தான் சாப்பிடுவேன்னு இருக்க வேண்டியதில்ல. நான் எனக்குப் பசிச்சா உடனே சாப்பிட்டுருவேன். இனி சமையல் குறிப்புகள்ல, ‘சமைத்தவுடன் பரிமாறவும்’னு சொல்லாம, ‘சமைத்தவுடன் ருசித்து சாப்பிடவும்’னு எழுதுவோம்.’’

``தாய்மையைப் புனிதப்படுத்தாதீங்க ப்ளீஸ்!” - அம்மாக்கள் பேசுகிறார்கள்

``உங்களைவிட என் குழந்தை மேல எனக்குத்தானே அக்கறை?!” - ராஜாத்தி கமலக்கண்ணன்,யூடியூபர், திண்டுக்கல்

‘`நான் திண்டுக்கல் பக்கத்துல இருக்க செம்மடைபட்டிங்கிற கிராமத்துல இருக்கேன். எனக்கு ரெண்டு பெண் குழந்தைங்க. தினமும் வீட்டு வேலை, அலுவலக வேலை, குடும்பம்னே இருக்குற பெண்கள், ரெண்டு நாள் குழந்தை களை விட்டுட்டு எங்காவது ட்ரிப் போயிட்டு வந்தா, ‘பிள்ளைகளை விட்டுட்டு ஊர் சுத்துறா’னு பேசுவாங்க. நான் யூடியூபர் என்பதால, தோழிகளோட டூர் போகும் வீடியோக்களை என் சேனல்ல போடுவேன். அப்போ எல்லாம், ‘குழந்தைகளை வீட்ல விட்டுட்டு ஃபிரெண்ட்ஸ் கூட டூர் போற நீயெல்லாம் ஒரு அம்மாவா?’னு அவ்ளோ கேவலமா கமென்ட்ஸ் போடுவாங்க. அவங்ககிட்ட எல்லாம் கேக்குறேன்... என் குழந்தைங்க மேலே உங்களுக்கு இருக்குற அக்கறையைவிட பல மடங்கு அதிகமா ஒரு அம்மாவா எனக்கு இருக்காதா? அவங்க பத்திரமா இருக் குறதுக்கான எல்லா ஏற்பாடும் பண்ணி வெச்சுட்டுப் போக மாட்டேனா? அவங்களை எங்கே, எப்போ கூட அழைச்சுட்டுப் போகணும்னு எனக்குத் தெரியாதா? அம்மாக்கள் பிள்ளைகளை விட்டுட்டு டூர், ட்ரிப் எல்லாம் போகவே கூடாதா? கூடாதுங்கறதுதான் உங்களோட பதில்னா… அப்படித்தான் போவோம்!”

``தாய்மையைப் புனிதப்படுத்தாதீங்க ப்ளீஸ்!” - அம்மாக்கள் பேசுகிறார்கள்

``குழந்தையா, வேலையானு கேட்டாங்க!’’ - வினோதினி, வங்கி ஊழியர், கரூர்

‘`குழந்தை பிறந்ததும், சில மாதங்கள்ல அதை வீட்டுல, `டே கேர்'லனு விட்டுட்டு வேலைக்குப் போற பெண்கள், ‘குழந்தையைவிட உனக்கு வேலைதான் முக்கியமா?’ என்ற கேள்வியைக் கடக்காம இருக்கவே முடியாது. என் 22 வயசுல, என் கணவர் ஒரு விபத்துல இறந்துட்டார். அப்போ என் குழந்தைக்கு ஒன்றரை வயசுதான். குழந்தைக்காக நான் வேலைக்குப் போகணும்னு கேட்டப்போ, கைப்புள்ளையை வெச்சுக்கிட்டு வேலைக்குப் போறதானு சொன்னாங்க. குழந்தையா, வேலையாங்கிற கேள்விகள் என்னை நெருக்கினாலும், என் முடிவுல நான் பின்வாங்கல. 12-வது முடிச்சிருந்த நான், வங்கியில பியூன் வேலையில சேர்ந்தேன். வீட்டுக்காரர் செத்ததும், புள்ளையையும் விட்டுட்டு வேலைக்குக் கிளம்பிட்டானு எனக்கு முன்னாடியும் பின்னாடியும் எத்தனை பேச்சுகள்! ‘உங்ககிட்ட நல்ல அம்மானு சர்டிஃபிகேட் வாங்குறதைவிட, என் மகளுக்கும் எனக்கும் சம்பாதிக்குறதுதான் எனக்கு முக்கியம்’னு மனசுல நெனச்சுட்டு, வேலைக்குப் போயிட்டே தொடர்ந்து படிச்சேன். அதனாலதான், பியூன் வேலையில இருந்து இப்போ வங்கி அலுவலர் பணி வரை வந்துருக்கேன். வீடு வாங்கியிருக்கேன். ஒருவேளை அன்னிக்கு என்னை குற்றம் சொன்ன குரல்களுக்கு எல்லாம் நான் குழம்பிப்போய் பின்வாங்கியிருந்தா, இன்னிக்கு என் மகளுக்கு இந்தப் படிப்பையும், நிம்மதி யான வாழ்க்கையையும் கொடுத்திருக்க முடியாது.’’

``தாய்மையைப் புனிதப்படுத்தாதீங்க ப்ளீஸ்!” - அம்மாக்கள் பேசுகிறார்கள்

``கீப் ஃபிட் மம்மீஸ்!’’ - அபிநயா, சைக்காலஜிஸ்ட், திருப்பூர்

‘`எனக்கு 38 வயசாகுது. என் பையனுக்கு 15 வயசு. நான் ஃபிட்னஸ்ல இப்போவரை ரொம்ப அக்கறையா இருக்கிற ஆளு. பொதுவா, பெண்கள் குழந்தை பிறந்த துக்கு அப்புறம், தங்களோட எடையை மெயின்டெய்ன் செய்றதுல ஆர்வம் காட்டுறதில்லை. அல்லது அதுக்கான நேரத்தை வீடுகள் அவங்களுக்குக் கொடுக்கிறதில்ல. அதையும் மீறி சில பெண்கள் யோகா, வொர்க்அவுட், ஜிம்னு கிளம்பும்போது, ‘புள்ளை பெத்துட்ட... இனி என்ன அழகிப் போட்டிக்கா போகப்போற?’ங்கிற டயலாக்கை நிச்சயம் கேட்க நேரிடும். கூடவே, ‘பிள்ளையை பார்த்துக்கிறதைவிட்டுட்டு, இதெல்லாம் முக்கியமா?’னு அவளோட அம்மா ரோலையும் ஜட்ஜ் செய்வாங்க. நான் அதுக்கெல்லாம் செவி கொடுக்கிறதே இல்ல. ஒரு அம்மாவா என் கடமைகளை நான் எப்படி செய்றேனோ, அதே மாதிரி ஒரு தனிமனுஷியா எனக்கானஅக்கறையை யும் நான் கொடுத்துக்குவேன். என் வேலை, குடும்பம், பிள்ளை இதோட சேர்த்து தினமும் ஜிம் போறது, யோகா பயிற்சியை மேற்கொள்வதும் என் தினசரினு ஆக்கிக்கிட்டேன். ஃபிட்னஸ் என்பது உடம்பு சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் இல்ல; ஆரோக்கியம்,கான்ஃபிடன்ஸ்னு இதன் பலன்கள் பல. நாளைக்கு நம்ம பிள்ளைகளும் சமுதாயத்தோட புனிதப் பட்டங்களுக்காகத் தங்களை தியாகம் செய்யாமல் இருக்க, இன்னிக்கு நாம அவங்களுக்கு முன்மாதிரியா இருப்போம்!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism