Published:Updated:

முயற்சி உடையாள் - 6 - விளையாட்டாக ஜெயிக்கலாம் விளையாட்டில்...

அனிதா பால்துரை
பிரீமியம் ஸ்டோரி
News
அனிதா பால்துரை

வாகைசூட வழிகாட்டுகிறார் `பத்மஸ்ரீ’ அனிதா பால்துரை

விளையாட்டு என்பது ஆண்களுக்கான துறை என்ற மாயையை உடைத்து, பல பெண்கள் இன்று அந்தத் துறையில் அழுத்தமான தடம் பதித்து வருகிறார்கள். எனினும் பெண்ணின் திறமையைப் பின்னுக் குத் தள்ளும்வகையில் அவளது உடை முதல் குடும்பம் வரையிலான அனைத்து விஷயங் களையும் விமர்சிக்கும் பிற்போக்குத்தனம் தொடரவே செய்கிறது. தன்னம்பிக்கை இருந் தால் எத்தகைய தடைகளையும் தகர்த்து விளையாட்டுத்துறையிலும் வெற்றிக்கொடி நாட்டலாம். அதற்கான வழிகாட்டுதல்களை வழங்குகிறார் இந்திய மகளிர் தேசிய கூடைப் பந்து வீராங்கனையும் இந்திய கூடைப்பந்து அணியின் தலைவருமான `பத்மஸ்ரீ' அனிதா பால்துரை.

மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி!

‘` `விளையாட்டுத்துறையில இருக்குற பெண்களுக்கு உடல்வாகு ஆண்களைப் போல மாறிடும்', ‘உடம்புல வெட்கம், கூச்சமெல்லாம் போயிரும்’, ‘குழந்தை பெத்துக்கிறதுல சிக்கல் வரலாம்’ என்றெல்லாம் ஏகப் பட்ட மூட நம்பிக்கைகள் உலவு கின்றன. இதையெல்லாம் கவனத் தில் எடுத்துக் கொள்ளாதீர்கள். விளையாட்டுத்துறைக்கு வருபவர்கள் வசதிக்காக ஷார்ட்ஸ் அணிய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. காவல்துறை, மருத்துவத் துறையில் உள்ளவர்களுக்கு சீருடை இருப்பது போன்று விளையாட்டுத்துறையில் உள்ளவர்களுக்கு ஷார்ட்ஸ்... அவ்வளவுதான்.

அனிதா பால்துரை
அனிதா பால்துரை

20 வருடங்களுக்கு முன் நான் ஷார்ட்ஸ் அணிந்து மைதானத்தில் நின்றபோது, நிறைய விமர்சனங்களை எதிர்கொண்டேன். ஆனால் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. உடலுக்கு வேலை கொடுப்பதால் தசைகள் வலுவடை கின்றன. அதனால் உடல்வாகில் மாற்றங்கள் வரலாமே தவிர, பெண் தன்மையில் மாற்றங்கள் வராது. எனவே விமர்சனங்களை எண்ணிக் குழம்பாமல் உங்கள் லட்சியத்தில் தெளிவாக இருந்தால் வெற்றி நிச்சயம்.

விளையாட்டுக்கு நேரம் ஒதுக்குங்கள்!

பொதுவாக பள்ளி, கல்லூரிகளில் விளை யாட்டு வகுப்புக்காக உள்ள நேரத்தை, பிற பாட ஆசிரியர்கள் எடுத்துக் கொள்வார்கள். இதற்காக பள்ளியிலோ, கல்லூரியிலோ நீங்கள் தனி ஆளாகப் போராட முடியாது. அதற்காக விளையாட்டை கைவிடத் தேவையில்லை. விளையாட்டுதான் எதிர்காலம் என்று தீர் மானித்துவிட்டால், காலையிலும், மாலை யிலும் அதற்காக நேரம் ஒதுக்குங்கள். சில வீடுகளில் படிப்பு மட்டும்தான் எதிர்காலம் என்று நினைக்கலாம். உங்கள் ஆசையை வீட்டாருக்குப் புரியவையுங்கள். நான் இந்தச் சூழலை எதிர்கொண்டபோது விளையாட்டுதான் என் எதிர் காலம், நிச்சயம் சாதிப்பேன் என்ற நம்பிக்கையை பெற்றோருக்கு கொடுத்தேன். கூடுதல் நேரம் உழைத் தேன். அடுத்தடுத்த வெற்றிகள் கைகூடின.

வயது கடந்தும் சாதிக்கலாம்!

நான் என் 12-வது வயதில் விளையாட்டுப் பயணத்தைத் தொடங்கினேன். இப்போது எனக்கு 37 வயது. இப்போதும் விளையாட்டில் என்னுடைய சாதனைகள் தொடர்கின்றன. எனவே, விளையாட்டுக்கு வயது ஒரு தடை யில்லை. வயது மூப்பு ஏற்பட்டு இதற்கு மேல் விளையாட முடியாது என்று நீங்கள் எண்ணும் போது, அந்தத் துறையில் பயிற்சியாளராவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. எனவே குறுகிய காலம் ஈடுபடப்போகும் விளையாட்டுத் துறைக்கு இவ்வளவு முயற்சிகள் தேவையா என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தால் எந்த வயதிலும் சாதிக்கலாம்.

தாய்மை தடையல்ல!

குழந்தை பெற்றுக்கொண்டால் விளையாட முடியாது என்ற எண்ணம் நிறைய பெண் களுக்கு இருக்கிறது. அந்த எண்ணத்தில் திருமணத்துக்குப் பின் விளையாட்டுக்கு முழுக்குப்போட்டு விடுவார்கள். மகப்பேறு காலத்தில் எல்லா துறை பெண்களுக்கும் தேவைப்படுவதைப் போன்ற பிரேக், விளை யாட்டுத்துறை பெண்களுக்கும் அவசியம். குழந்தை பிறந்த பிறகு பொறுப்புகள் அதிகமாவ தாலேயே பெரும்பாலான பெண்கள் விளை யாட்டுத்துறையில் இருந்து விலகுகிறார்கள். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்போது டயட் இருக்க முடியாது. ஆனால், மருத்துவரின் ஆலோசனைகள் பெற்று சின்ன சின்ன உடற் பயிற்சிகள் செய்து உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள முடியும். நான் என் மகன் பிறந்த இரண்டாவது மாதத்தில் இருந்து உடற்பயிற்சிகள் செய்ய ஆரம்பித்தேன். மீண்டும் விளையாட நினைத்தபோது, என் குடும்பம் எனக்கு பக்கபலமாக இருந்தது. குடும்பம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு உங்கள் கனவும், லட்சியமும் முக்கியம்.

பள்ளிகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்!

நகரங்களில் இன்று விளையாட்டுப் பயிற்சிகள் வணிக ரீதியாக மாறிவிட்டன. அதிக கட்டணம் செலுத்தி குறிப்பிட்ட பயிற்சி யாளரிடம் பயிற்சி பெற்றால்தான் சாதிக்க முடியும் என்றில்லை. ஒலிம்பிக் போட்டிகளில் இருக்கும் பல பிரிவுகளுக்கு பள்ளிகளிலேயே பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

நான் என் பள்ளியில்தான் பயிற்சி பெற்றேன். பள்ளியின் மூலம்தான் மாவட்ட அளவிலான, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினேன். அதுதான் தேசிய அளவில், உலக அளவில் எனக்கான அடையாளத்தை உருவாக்கியது. வேறு வழியில்லாமல் தனியார் விளையாட்டுப் பயிற்சி நிறுவனங்களை அணுகுகிறீர்கள் என்றாலும் பயிற்சியாளரின் சான்றிதழ் மற்றும் தகுதி போன்றவற்றை எல்லாம் செக் செய்து அதன் பின் சேரலாம். விளையாட்டுத் துறையில் இருப்பவர்கள் பயிற்சிக்காகப் பயன்படுத்தும் ஷூ தொடங்கி, ஆடை, பாதுகாப்பு உபகரணங்கள் வரை அதிக பணம் செலவழிக்க வேண்டுமா என்ற கேள்வி வரலாம்.

ஆரம்ப காலத்தில் நம் வசதிக்கு ஏற்ற அடிப்படையான பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். முடியாத சூழலில் பள்ளிகளில் உதவி கேட்கலாம். நீங்கள் ஒருமுறை உங்கள் திறமையை நிரூபித்துவிட்டால் அதன்பின் ஸ்பான்ஸர்களின் உதவிகள் கிடைக்கும். மாநில, தேசிய அளவிலான போட்டிகளுக்குச் செல்லும்போது அரசாங்கமே உங்களுக்கான பயிற்சியாளர்களை நியமிப்பார்கள். சலுகை களை வழங்குவார்கள்.

உணவில் கவனம்!

விளையாட்டுத்துறையில் இருப்பவர்கள் எப்போதும் எனர்ஜியோடு இருக்க வேண்டும். அதற்காக விலை அதிகமான புரோட்டீன் பவுடர்கள், எனர்ஜி பானங்களையெல்லாம் அருந்த வேண்டும் என்ற அவசியமில்லை. நம்முடைய பாரம்பர்ய உணவுகளான களி, கூழ், சத்துமாவு உருண்டைகள், முளைகட்டிய பயறுகளிலேயே நமக்குத் தேவையான சத்து களைப் பெற முடியும். விளையாட்டில் ஈடுபட ஃபிட்டாக இருக்க வேண்டுமே தவிர ஒல்லியாக இருக்க வேண்டும் என்பது கிடையாது. எந்தக் காரணத்துக்காகவும் பயிற்சிகளுக்கும், வொர்க் அவுட்டுக்கும் ஓய்வு கொடுக்கக் கூடாது. இவ்வளவுதான் சாப்பிட வேண்டும், இப்படித் தான் சாப்பிட வேண்டும் என்ற வரைமுறை களோ, டயட் பரிந்துரைகளோ இல்லாமல், உங்கள் உடலுக்குத் தேவைப்படும், ஆரோக்கிய மான உணவுகளைச் சாப்பிடுங்கள். நீங்கள் செய்யும் உடற்பயிற்சிகள் அந்த கலோரிகளை எரித்துவிடும்.

பாகுபாடு பயம் தேவையில்லை!

பொதுவாக பள்ளிகளில், உடற்பயிற்சி ஆசிரியர்கள்தான் குறிப்பிட்ட மாணவ, மாணவிகளை விளையாட்டுப் பிரிவுகளுக்குத் தேர்வு செய்வார்கள். இதில் ஆசிரியருக்கோ, அல்லது பயிற்சியாளருக்கோ வேண்டியவர்கள் தேர்வு செய்யப்படும் சூழல் வரலாம். அதை உடைக்கும்விதமாக `கேலோ இந்தியா திட்டம்' செயல்படுகிறது (கேலோ இந்தியா திட்டம் என்பது நாடு முழுவதும் உள்ள இளம் வீரர் , வீராங்கனைகளைக் கண்டறிந்து , அவர்களை சர்வதேச அளவில் ஜொலிக்கும் வீரர்களாக மாற்றுவதே). அதன் மூலம் திறமையானவர்கள் எளிதில் அடையாளம் காணப்படுவார்கள். மேலும் சாதி ரீதியான அரசாங்க இட ஒதுக் கீடுகள் எந்த விளையாட்டிலும் கிடையாது. எனவே எல்லாருக்கும் பொதுவான வாய்ப்பு களே தரப்படுகின்றன. திறமையும், கடின பயிற்சியும் இருந்தால் யாரும் சாதிக்கலாம்.

முயற்சி உடையாள் - 6 - விளையாட்டாக ஜெயிக்கலாம் விளையாட்டில்...

ஒற்றுமையே வெற்றிக்கான வழி!

எப்போதும் நீங்கள் தனித்துத் தெரிய வேண்டும் என்று எண்ணாமல், குழுவாக வெற்றி பெற வேண்டும் என்று எண்ணுங்கள். முடிந்தவரை உங்களை பாசிட்டிவ்வாக வைத்துக்கொள்ளுங்கள். நிறைய விளையாடி உங்களுக்கு அனுபவம் இருந்தாலும், பயிற்சி யாளர்களின் வழிகாட்டுதலை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும். உங்களின் ஆக்ரோஷம் விளையாட்டில் இருக்க வேண்டுமே தவிர, எதிர் அணியின் மீது அல்ல. விளையாட்டு முடிந்ததும், எதிர் அணியில் இருப்பவர்களை உங்களின் நண்பர்களாகப் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டில் இருப்பவர் களுக்கு உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு மன ஆரோக்கிய மும் முக்கியம்.

மனம் தளராதீர்கள்!

தேசிய அளவிலான போட்டிகளில் விளை யாடிய பின்பும் கூட நமக்கான அங்கீகாரம் எளிதில் கிடைத்துவிடாது. மக்கள் மனதில் இடம்பெற நிறைய போராட வேண்டியிருக்கும். எல்லா துறைகளிலும் பாலியல் அத்துமீறல்கள் நடக்கின்றன. தற்போது பெண்களுக்கு, அரசாங்கமே பெண் பயிற்சியாளர்களை நியமிக்கிறது. ஆண் பயிற்சியாளர்களின் கீழ் நீங்கள் பயிற்சிபெறும் சூழலில் தைரியமாக இருங்கள். அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் அடுத்தடுத்த வாய்ப்புகள் வரும் என்பதை யெல்லாம் எண்ணி ஏமாற வேண்டாம்.

பாலியல் அத்துமீறல்களுக்கு உள்ளானால், குற்றம் செய்தவர் யாராக இருந்தாலும், வெளியில் சொல்லத் தயங்காதீர்கள். கோச் மீது பழி சொன்னால் , அடுத்து யாரும் பயிற்சி வழங்க முன்வர மாட்டார்கள் என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். உங்கள் திறமைதான் உங்களுக்கான நிரந்தர அடையாளம்.

- சாதிப்போம்...