
நம்பிக்கை நாயகிகள்
ஆறாத காயங்களுக்கும் மன வேதனைகளுக்கும் மருந்திட, அதற்குத் தீர்வு தர, அக்காயங்களை உணர்ந்தவர்களால் மட்டுமே முடியும். அப்படியோர் உன்னதமான பணியைச் செய்துவருகிறார் சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் தீக்காயத் தடுப்புப் பிரிவில் ஊட்டச்சத்து அலுவலராகப் பணியாற்றும் அம்பிகா. இவருடைய வாழ்க்கையே ரணங்களால் ஆனதுதான். திருமணம் ஏமாற்றத்தைக் கொடுக்க, தீக்குளித்து மரணத்தின் விளிம்புவரை சென்று உயிர் பிழைத்தவர். இன்று, பிற பெண்கள் தன்னைப்போன்று தவறான முடிவெடுக்காமல் இருக்க, அவர்கள்மீது மனிதநேயத்துடன் அன்பு செலுத்துகிறார். உடலின் பெரும்பாலான பகுதிகளிலும் தீக்காயத் தழும்புகள் இருந்தாலும், அம்பிகாவின் கன்னக்குழிச் சிரிப்பு எல்லோரின் மனத்தையும் குளிர்விக்கிறது.
``வறுமைக்குப் பஞ்சமில்லாத குடும்பத்தில் பிறந்தேன். எட்டாம் வகுப்புக்கு மேல படிப்பு வரலை. அதோட நிறுத்திட்டு புக் பைண்டிங் நிறுவனத்துல வேலைக்குப் போனேன். என்னுடன் வேலை செய்தவர் காதலிக்கிறதா சொன்னார். ஒருகட்டத்துல காதலை ஏத்துக்கிட்டேன். வீட்டு எதிர்ப்பை மீறி அவரைக் கல்யாணம் செய்துகிட்டேன். எல்லாம் ஆறு மாசம்தான். குடிப்பழக்கம் உட்பட அவரோட உண்மையான சுயரூபங்கள் ஒவ்வொண்ணா வெளியே வர ஆரம்பிச்சது. அவர் என்னை அடிக்கிறதும் கெட்ட வார்த்தைகளால் திட்டுறதும் வாடிக்கை. அதைவிடக் கொடுமை, அடிக்கடி என்னையும் குழந்தைகளையும் வீட்டைவிட்டு வெளியே தள்ளிடுவார். விடியும் வரை வீட்டு வாசலிலேயே உட்கார்ந்திருப்போம். பெற்றோர் வீட்டிலும் ஆதரவு இல்லை. அதனால அவரைதான் நம்பியிருந்தோம். வீட்டுச்செலவுக்குக் காசும் தரமாட்டார்.
ஒருநாள் என்னை அவர் அடிச்சதுல தலையில இருந்து ரத்தம் கொட்டுச்சு. அழுகை, விரக்தி எல்லாம் சேர்ந்து என்னைத் தற்கொலை எண்ணத்துக்கு தள்ளுச்சு. என்மேல மண்ணெண்ணெய் ஊத்தி தீ வெச்சுக்கிட்டேன். உடல் முழுக்க பரவின நெருப்பு முகத்துக்கு வந்தப்பதான் எனக்குச் சுயநினைவே வந்தது. கதறின என்னை அக்கம்பத்தினர் ஆஸ்பத்திரியில் சேர்த்தாங்க” என்கிற அம்பிகா மெளனமாகிறார்.

தொடர் சிகிச்சை காரணமாக அம்பிகாவை உயிரோடு மீட்டிருக்கிறார்கள் மருத்துவர்கள். ஆனாலும், தீக்காயத் தழும்புகள் வடுவாக மாற உடலளவிலும் மனதளவிலும் ஏராளமான வலிகளை எதிர்கொண்டிருக்கிறார் இவர்.
“சிகிச்சையில் இருக்கும்போதே கணவர்மீது காவல்நிலையத்தில் புகார் செய்தோம். கைது செய்யப்பட்டவர் உடனே ஜாமீன்ல வெளியே வந்துட்டார். நான் தனியா வசிக்க ஆரம்பிச்சேன்.
பி.சி.வி.சி என்ற தன்னார்வ அமைப்பின் மூலம் மருத்துவ சிகிச்சை மற்றும் தன்னம்பிக்கைப் பயிற்சி உட்பட பல்வேறு உதவிகள் எனக்குக் கிடைச்சுது. தழும்புகளின் வீரியம் குறைய ஆபரேஷன் செய்துகிட்டாலும், முழுமையான பலன் கிடைக்கலை. இருப்பினும், பள்ளியில் படிக்கும் என்னுடைய ரெண்டு மகள்களின் எதிர்காலத்துக்காக நம்பிக்கையுடன் வாழ முடிவெடுத்தேன்” - புன்னகையுடன் கூறும் அம்பிகாவின் வாழ்வில் அதன் பிறகே மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தற்கொலை முடிவைத் தேர்வு செய்யாதீங்க; பிரச்னைக்கான தீர்வைத் தேடுங்க...
சென்னையைச் சேர்ந்த `பி.சி.வி.சி' என்ற அமைப்பு, தீக்காயம் உட்பட குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழிகாட்டுதல், சிகிச்சைக்கான உதவி, தங்குமிட வசதி, வேலை வாய்ப்பு, சட்ட ஆலோசனைகள் உட்பட பல வழிகளிலும் அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு உதவுகிறது. மேலும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் தீக்காயப் பிரிவில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காகச் சேவை நோக்கில் உதவிவரும் இந்த அமைப்பின், நோயாளிகள் நல உதவியாளராகப் பணியில் சேர்ந்த அம்பிகா, தற்போது ஊட்டச்சத்து அலுவலராகப் பணியாற்றுகிறார். இதற்காக, கணினி மற்றும் ஆங்கிலப் பயிற்சிகளுடன் தனக்கான பணித்திறனையும் வளர்த்துக்கொண்டிருக்கிறார்.
“எதிர்பாராத விபத்துகளைத் தவிர, குடும்பப் பிரச்னையால்தான் நிறைய பெண்கள் தீக்குளிக்கும் முடிவை எடுக்கிறாங்க. இங்கு சிகிச்சைக்கு வரும் பெண்கள் பெரும்பாலும் ஏழ்மையானவர்கள்'' என்கிறவர், பலத்த தீக்காயம் கொண்ட பெண்கள் வாழ்க்கையின் மீதான பிடிப்பை கைவிடாமல் இருக்கத் தினந்தோறும் தன்னம்பிக்கையூட்டுவதுடன், அவர்களை நடனமாட வைத்து உற்சாகப்படுத்துகிறார். பள்ளி, கல்லூரிகளிலும், குடிசைப் பகுதிகளிலும் மாணவர்களுக்கும் மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
“சிகிச்சைக்குப் பிறகு, உடல் வளர்ச்சிக்கு ஏற்ப தீக்காயத் தழும்புகளும் வளரும். வாழ்நாள் முழுக்க அது அவமானத்தையும் வலியையும் உண்டாக்கும். இயல்பா எங்கேயும் போக முடியாத தவிப்பையும் தாழ்வுமனப்பான்மையையும் தழும்புகள் உண்டாக்கும். அந்த வலிகளை இப்போவரை எதிர்கொள்ளும் சொந்த அனுபவத்தில் சொல்றேன்... எந்த சூழ்நிலையிலும் தீக்குளிப்பு உட்பட தற்கொலை முடிவுகளைத் தேர்வு செய்யாதீங்க; பிரச்னைக்கான தீர்வைத் தேடுங்க. நான் இதை அனுபவத்தின் மூலம் தாமதமாக உணர்ந்தாலும், இப்போ ரொம்பவே நம்பிக்கையுடன் வாழ்றேன். என்னை மாதிரி உணர்ச்சிவசப்பட்டு யாரும் தப்பான முடிவெடுத்திடாம இருக்க என்னாலான பணிகளைச் செய்றேன்” என்கிற அம்பிகாவின் முகத்தில் தன்னம்பிக்கை பிரகாசிக்கிறது.