Published:Updated:

தீராத விளையாட்டுப் பிள்ளை ஆரத்தி

ஆரத்தி
பிரீமியம் ஸ்டோரி
ஆரத்தி

வேர்ல்டு சாம்பியன்ஷிப், ஐஸ் ஸ்கேட்டிங், ஒலிம்பிக்ஸ், குழந்தையின்மை மருத்துவம்...

தீராத விளையாட்டுப் பிள்ளை ஆரத்தி

வேர்ல்டு சாம்பியன்ஷிப், ஐஸ் ஸ்கேட்டிங், ஒலிம்பிக்ஸ், குழந்தையின்மை மருத்துவம்...

Published:Updated:
ஆரத்தி
பிரீமியம் ஸ்டோரி
ஆரத்தி

24 மணி நேரம் போதாமல் ஓடிக்கொண்டிருப் பவர்களைக் `கால்களில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடுகிறார்கள்' என்போம். சென்னையைச் சேர்ந்த ஆரத்திக்கு அது 100 சதவிகிதம் பொருந்தும். மருத்துவராக, மருத்துவ மேற்படிப்பு மாணவியாக, ஸ்கேட்டிங் சாம்பியனாக... நிஜமாகவே கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டு பறந்துகொண்டிருக்கிறார் ஆரத்தி..

சமீபத்தில் சண்டிகர், மொஹாலியில் நடந்து முடிந்த 58-வது நேஷனல் ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் 500 மீட்டர், 1000 மீட்டர், 10 கிலோமீட்டர் போட்டிகள் இரண்டு ஆகியவற்றில் பங்கேற்று நான்கு தங்க மெடல்கள் ஜெயித்திருக் கிறார். அடுத்து தமிழ்நாடு டீமின் ரிலேயிலும் கோல்டு மெடல். செப்டம்பரில் கொலம்பியாவில் நடக்கவிருக்கும் வேர்ல்டு சாம்பியன்ஷிப்புக்கான ட்ரையலில் ஏழு ரேஸ்களில் தங்கம் வென்று, வேர்ல்டு சாம்பியன்ஷிப்புக்குத் தேர்வாகி சென்னை திரும்பியிருக்கிறார். இவரின் கணவர் சந்தீப் வாரியர், பிரபல கிரிக்கெட்டர். தற்போது நடந்துகொண்டிருக்கும் ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருப்பவர்.

தீராத விளையாட்டுப் பிள்ளை ஆரத்தி

வேகத்தின் காதலியான ஆரத்தியின் பேச்சிலும் அந்த வேகம் பிரதிபலிக்கிறது... ‘‘அம்மா மாலா ராஜ் டாக்டர், அப்பா கஸ்தூரி ராஜ் பிசினஸ் மேன். ரெண்டுபேருமே நானும் என் தங்கச்சியும் ஸ்போர்ட்ஸ் கத்துக்கணும்னு உறுதியா இருந்தாங்க. நான் குழந்தையா இருந்தபோது அம்மா என்னை டென்னிஸ், ஸ்விம்மிங் கிளாஸுக்கெல்லாம் கூட்டிட்டுப் போனாங்க. அதுல எல்லாம் எனக்கு ஆர்வமே வரலை. ஒருநாள் அம்மா என்னை அண்ணாநகர் டவர் பார்க்குக்கு விளையாடக் கூட்டிட்டுப் போயிருந் தாங்க. அங்கே குட்டிப் பசங்க நிறைய பேர் ஸ்கேட்டிங் பண்ணிட்டிருந்ததைப் பார்த்தேன். எனக்குப் பிடிச்சிருக்குனு அம்மாகிட்ட சொன் னேன். உடனே என்னை ஸ்கேட்டிங்ல சேர்த்து விட்டாங்க. அப்ப எனக்கு ஏழு வயசு. அடுத்த மூணே மாசத்துல ஒரு கிளப் மீட்ல நடந்த ஸ்கேட்டிங் போட்டியில நான் கோல்டும் சில்வரும் ஜெயிச்சேன். அப்படித் தான் என் ஸ்கேட்டிங் கரியர் ஆரம்பிச்சது...’’ சக்கர அறிமுகத்துடன் தொடர்கிறார்.

‘‘2001-ல ஸ்கேட்டிங் பண்ண ஆரம்பிச்ச நான், அடுத்த வருஷமே மாவட்ட அளவுலயும், மாநில அளவுலயும் நடந்த போட்டிகள்ல கோல்டு, சில்வர் மெடல்கள் ஜெயிச்சேன். அந்த வருஷம் நடந்த நேஷனல்ஸ்ல என்னால ஜெயிக்க முடியலை. நேஷனல்ஸ் ஜெயிக் கணும்ங்கிற என் கனவு நாலு வருஷங்கள் கழிச்சுதான் நிறைவேறுச்சு. நேஷனல்ஸ் ஜெயிக்கணும்ங்கிற கனவோடு தூங்கி, அதே கனவோடு எழுந்திருப்பேன். நேஷனல்ஸ்ல முதன்முறை எனக்கு வெண்கலப் பதக்கம் தான் கிடைச்சது. ஆனா, அடுத்த ஈவென்ட் லயே கோல்டு ஜெயிச்சேன்’’ என்பவர் ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் எக்ஸ்பெர்ட்.

ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் 9 ஈவென்ட்ஸ் இருக் கும். 300 மீட்டர், 500 மீட்டர், 1000 மீட்டர், 10 கிலோமீட்டர், மறுபடி டிராக்கில் 10 கிலோமீட்டர்... ரோடில் மறுபடி 100, 500 மீட்டர், 10, 15 கிலோமீட்டர். பிறகு மாரத்தான்... இதில் 10 கிலோமீட்டரை 17 நிமிடங் களிலும், மாரத்தானை ஒரு மணி நேரம் 10 நிமிடங்களிலும் முடிக்கலாமாம்.

‘‘க்வாடு, இன்லைன்னு ஸ்பீடு ஸ்கேட்டிங்ல ரெண்டு வகை இருக்கு. நான் க்வாடு ஸ்கேட்டிங்லதான் ஆரம்பிச் சேன். ஆனா இந்தியாவை ரெப்ரசென்ட் பண்ண ணும்னா இன்லைன் ஸ்கேட்டிங் பண்ணணும். க்வாடு ஸ்கேட்டிங்ல முன்னாடி ரெண்டு வீல், பின்னாடி ரெண்டு வீல்னு ஷூஸ்ல அட்டாச் பண்ணி யிருப்பாங்க. இன்லைன் ஸ்கேட்டிங்ல நாலு வீல்களும் ஒரே லைன்ல இருக்கும். வேகமும் அதிகம். பேலன்ஸ் பண்றதும் கொஞ்சம் கஷ்டம். நான் நேஷனல்ஸ்ல ஜெயிச்சதும் அப்பா என்னை இன்லைன் ஸ்கேட்டிங்ல மாத்திவிட்டார். பயங்கரமா பிராக்டிஸ் பண்ணி, அடுத்த வருஷமே கோல்டும் சில்வரும் ஜெயிச்சேன். அதுலேருந்து ஒவ்வொரு வருஷமும் நேஷனல்ஸ்ல மெடல் வாங்கத் தவறினதே இல்லை.

என் 12-வது வயசுல ஸ்விட்சர்லாந்து போயிருந்தேன். அங்கே நடந்த சர்வதேசப் போட்டியில கோல்டு ஜெயிச்சேன். அதுதான் என் கரியர்ல மிகப் பெரிய திருப்புமுனை. 2008-ல என் 14 வயசுல ஃபெடரேஷன் மூலமா இந்தியாவை ரெப்ரசென்ட் பண்ண ஆரம்பிச்சு, இன்னிவரைக்கும் ஏஷியன்ஸ் மற்றும் வேர்ல்டு சாம்பியஷிப்ல தொடர்ந்து விளையாடிட்டிருக் கேன். ஸ்விட்சர்லாந்துல முதன்முறையா ஐஸ் ஸ்கேட்டிங் பண்ணேன். ஐஸ் ஸ்கேட்டிங் என்பது பிளேடுல நின்றபடி ஐஸ் மேல பண்ற ஸ்கேட்டிங். ரிஸ்க் அதிகம். கீழே விழுந்தா பிளேடு அறுத்து, உடம்புல பலமான காயங்கள் பட வாய்ப்புகள் அதிகம்.

இந்தியாவில ஐஸ் ஸ்கேட்டிங் பண்ண இடமில்லை. அதனால கொஞ்ச நாள் கொரியாவுக்கும் ஜெர்மனிக்கும் போய் பயிற்சி எடுத்துட்டு, இந்தியாவை ரெப்ர சென்ட் பண்ணினேன்...’’ வெற்றிகளைப் பகிர்பவர், அதன் பின்னால் உள்ள வலிகளை யும் சொல்கிறார்.

தீராத விளையாட்டுப் பிள்ளை ஆரத்தி

‘‘தினமும் காலையில 4.30 மணிக்கு எழுந்திருக்கணும். உடனே பிராக்டிஸ். அப்புறம் ஸ்கூல், காலேஜ், சாயந்திரம் திரும்பி வந்ததும் மறுபடி பிராக்டிஸ், படிப்புனு என் வாழ்க்கையும் ஸ்கேட்டிங் ஸ்பீடுலயே போயிருக்கு. சாம்பியன் ஷிப்புக்கு முன்னாடி பிராக்டிஸ் பண்ணி, ஜெயிக்க முடியும்னா யார் வேணா ஜெயிச்சிடலாம். ஆனா, டிரெயினிங் என்பது தினம் சாப்பிடறது, தூங்கறது மாதிரி. ஒருநாள்கூட மிஸ் பண்ண முடியாது. அம்மாவைப் பார்த்துதான் நானும் மெடிசின் எடுத்தேன். ஆனா, மெடிக்கல் காலேஜ்ல சேர்ந்த பிறகு, ஒருபக்கம் படிப்பு, இன்னொரு பக்கம் ஸ்கேட்டிங்னு பிசியா இருந்த நாள்கள்ல ‘மெடிசின் எடுத்திருக்க வேண்டாமோ’னு யோசிச்சிருக் கேன். ஒவ்வொரு முறையும் யாராவது என்கரேஜ் பண்ணி என்னை அந்த மனநிலையி லேருந்து மீட்டிருக்காங்க. இப்போ திரும்பிப் பார்த்தா, இதைத் தவிர்த்து என்னால வேற எதையும் பண்ணியிருக்க முடியாதுனு தோணுது.

ஸ்கேட்டிங் சாம்பியன்னு சொன்னதுமே அது ரொம்ப ரிஸ்க்கானதாச்சே... நிறைய அடிபடுமே... டயர்டா ஆயிடுவீங்களேன்னு கேட்பாங்க. கீழே விழுந்து அடிபடாத நாளே இல்லை. ஸ்போர்ட்ஸ்ல அதெல்லாம் சகஜம். என்னதான் அடிபட்டாலும் ரத்தம் கொட்டினாலும் ஸ்கேட்டிங் பண்றபோது கிடைக்கிற சந்தோஷத்துக்கு முன்னாடி அதெல்லாம் ஒண்ணுமே இல்லை. நம்மூர்ல பொண்ணுங்களுக்கு படிப்புதான் முக்கியம், ஸ்போர்ட்ஸ் எல்லாம் வேணாம்னு நினைக் கிறாங்க. என் விஷயத்துல ஸ்போர்ட்ஸ்தான் என் படிப்புக்கும் ஹெல்ப் பண்ணியிருக்குனு சொல்வேன். டைம் மேனேஜ்மென்ட்ல தொடங்கி, கான்சென்ட்ரேஷன்வரை எனக்கு எல்லாத்தையும் ஸ்போர்ட்ஸ்தான் கத்துக் கொடுத்திருக்கு...’’ நெற்றியிலும் தாடையிலும் தெரியும் வீரத் தழும்புகளைத் தடவியபடி சிரிக்கும் ஆரத்திக்குப் படிப்பிலும் ஸ்போர்ட்ஸிலுமாகக் கனவுகள் இருக்கின்றன.

‘‘இப்போதைக்கு செப்டம்பர்ல நடக்கப் போற வேர்ல்டு சாம்பியன் ஷிப்லதான் என் கவனமெல்லாம் இருக்கு. ஐஸ் ஸ்கேட்டிங் எனக்கு ரொம்ப பிடிக்கும். மருத்துவப் படிப்புக்காக அதை நிறுத்தி வெச்சிருந்தேன். ஒலிம்பிக் ஸ்போர்ட்டான அதுல சாதிக்கணும் கிறதுதான் என் அடுத்த பெரிய இலக்கு. எம்.பி.

பி.எஸ் முடிச்சிட்டு இப்போ கிளினிகல் எம்பிரியாலஜி படிச்சிட்டிருக்கேன். இன்ஃபெர்ட்டிலிட்டி தொடர்பான அந்தத் துறைதான் மெடிசின்ல என் இலக்கு. இத்தனை வருஷங்களா படிப்பையும் ஸ்போர்ட்ஸையும் ரொம்ப அழகா பேலன்ஸ் பண்ணியிருக்கேன். இனியும் பண்ணுவேன்’’

- உரக்கச் சொல்பவரின் குரலில் உற்சாகமும் உறுதியும்.