Published:Updated:

“ஆசிட் என் ஆன்மாவைச் சிதைக்க முடியாது!”

ஹசீனா
பிரீமியம் ஸ்டோரி
ஹசீனா

கண்ணில் ஆசிட் பட்டதால பார்வைத்திறனும் இல்லை. என் உடலில் பெரும்பாலான பகுதிகள் ரொம்பவே மோசமா எரிஞ்சுடுச்சு.

“ஆசிட் என் ஆன்மாவைச் சிதைக்க முடியாது!”

கண்ணில் ஆசிட் பட்டதால பார்வைத்திறனும் இல்லை. என் உடலில் பெரும்பாலான பகுதிகள் ரொம்பவே மோசமா எரிஞ்சுடுச்சு.

Published:Updated:
ஹசீனா
பிரீமியம் ஸ்டோரி
ஹசீனா
ஹசீனா... ஒரு நடுத்தரக் குடும்பத்தின் இளவரசி. களையான முகம், பிறர்மீது அன்புகாட்டும் குணம். கூடவே, கனவுகளை வசப்படுத்தும் துடிப்புடன் களமாடிக்கொண்டிருந்த 20 வயதுப் பெண். ஒரு ‘மனித மிருக’த்தின் இரக்கமற்ற செயலும், ஒரு பாட்டில் ஆசிட்டும் ஹசீனாவின் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிட்டது. நூலிழையில் உயிர் பிழைத்தவருக்குப் பார்வை பறிபோனது. எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக்கூடாத அந்தத் துயரத்தை அசாத்திய தன்னம்பிக்கையுடன் கடந்துவந்திருக்கும் ஹசீனாவின் இன்றைய பாதை நம்பிக்கை வெளிச்சம். மெல்லிய புன்னகையுடன் அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் வலியும் வேதனையும் இழையோடுகிறது.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“பெங்களூரு வாழ் தமிழ்க் குடும்பம். ப்ளஸ் டூ முடிச்சுட்டு அஞ்சல்வழியில் பி.காம் சேர்ந்தேன். ஃபேஷன் டிசைனராவது என் கனவு. அதுக்கான கோர்ஸ் படிச்சுக்கிட்டே, ஒரு கம்ப்யூட்டர் சென்டர்ல வேலை செஞ்சேன். இந்தியன் ஏர்ஃபோர்ஸ்ல வேலையில் இருந்த ஜோசப் என்பவன், என்னைக் காதலிக்கிறதா தொந்தரவு கொடுத்தான். எனக்குப் பிடிக்கலை. அமைதியான முறையில் அங்கிருந்து விலகி, இன்னோர் இடத்துல வேலை செஞ்சேன். மீண்டும் தொந்தரவு கொடுத்தான். நான் பொருட்படுத்தலை. மனிதாபிமானமே இல்லாம ‘சேடிஸ்ட்’ மாதிரி நடந்துகிட்டான். ஒருநாள் வேலைக்குப் போயிட்டிருந்தேன். திடீர்னு வழிமறிச்சு என்மேல ஆசிட் வீசிட்டான். ரோட்டுல சரிஞ்சு விழுந்து வலியில் துடிச்சேன். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுவதற்குள் என் உடல்ல 70 சதவிகிதம் எரிஞ்சுடுச்சு. உயிர்பிழைக்கப் போராடினேன். ‘எப்படியாச்சும் என்னைக் காப்பாத்திடுங்க டாக்டர். எனக்கு நிறைய கனவுகளும் பொறுப்புகளும் இருக்கு’ன்னு கெஞ்சினேன்.

ஹசீனா
ஹசீனா

ஒரு வருஷம் படுக்கையில்தான் இருந்தேன். கண்ணில் ஆசிட் பட்டதால பார்வைத்திறனும் இல்லை. என் உடலில் பெரும்பாலான பகுதிகள் ரொம்பவே மோசமா எரிஞ்சுடுச்சு. மூக்கு, உதடு உட்பட உடலில் பல பாகங்களையும் மறுசீரமைப்பு செய்ய நிறைய ஆபரேஷன் செய்தாங்க. என் தோற்றமே விகாரமா இருந்துச்சு. ‘இனி இந்தப் பொண்ணு வாழ்றதும், இவளைக் கவனிச்சுக்கிறதும் சிரமம். கருணைக் கொலை செய்திடுங்க’ன்னு பெற்றோர்கிட்ட பலரும் சொன்னாங்க. ‘எங்க மகளை வாழ வைக்கிறதுதான் இனி எங்க ஒரே நோக்கம்’னு பெற்றோர் உறுதியா இருந்தாங்க. எந்தத் தப்பும் செய்யாத நான் ஏன் சாகணும்? உயிர் வாழ்வதுடன், இனி ஆசிட் வீச்சுக் குற்றம் நடக்காம இருக்கப் போராடணும்னு தீர்க்கமா முடிவெடுத்தேன்” - விவரிக்க முடியாத ரணமான வலிகளை எதிர்கொண்ட ஹசீனா, ஓராண்டு சிகிச்சைக்குப் பிறகு அபாயக் கட்டத்தைக் கடந்து வீடு திரும்பியிருக்கிறார்.

“டிஸ்சார்ஜ் ஆனாலும் மேல்சிகிச்சைகள் தொடர்ந்தன. காயம் ஏற்பட்ட ஒவ்வோர் இடத்திலும் தோல் பகுதியை நீக்குவாங்க. ஒரு மாசத்துக்குப் பிறகு, அந்த இடத்துல உடலின் மற்றொரு பகுதியிலிருந்து தோலை எடுத்து வெச்சு ஆபரேஷன் செய்வாங்க. பிறகு, பிசியோதெரபி பயிற்சி எடுத்துக்கணும். தோல் எடுக்கப்பட்ட ரெண்டு இடத்திலும் ஆறு மாதங்கள்வரை வலி இருக்கும். தவிர, வீட்டிலிருந்தபடியே சிகிச்சை, உணவுக் கட்டுப்பாடுன்னு நிறைய வேதனைகள். இப்படியே பத்து வருஷத்துல 35 ஆபரேஷன் நடந்துச்சு. ஆசிட் வீச்சுத் தழும்புகளைச் சரிசெய்ய நிரந்தரத் தீர்வு இல்லை. பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணுறதால லேசான முன்னேற்றம் மட்டுமே கிடைக்கும் என்பதை உணர்ந்து கடந்த பத்து வருஷமா எந்தச் சிகிச்சையும் நான் எடுத்துக்கிறதில்லை. யார் என்ன நினைச்சாலும் பரவாயில்லைன்னு தழும்புகளோடவே வாழ ஆரம்பிச்சுட்டேன்.

இதுக்கிடையே கண் சிகிச்சைக்காக இந்தியா முழுக்க நிறைய ஆஸ்பத்திரிகளுக்குப் போனோம். ‘ஒரு கண் பார்வையாவது கிடைக்கச் செய்ங்க’ன்னு டாக்டர்களின் கை பிடிச்சு வேண்டினேன். ஒருமுறை பஞ்சாப்ல சிகிச்சையின்போது எனக்குப் பார்வை திரும்புச்சு. அப்போதான் என் முகத்தைக் கண்ணாடியில பார்த்தேன். கண்ணீருக்குப் பதிலா, வீட்டுல முடங்கியிருக்காம சுய அடையாளத்தோடு இனி வாழ்ந்தே ஆகணும்னு எனக்குள் வெறிதான் ஏற்பட்டுச்சு. ஆனா, ரெண்டு வாரத்துலேயே பார்வைத்திறன் முழுமையாப் பறிபோயிடுச்சு. அந்தத் தருணத்துல என்மீது ஆசிட் வீசிய குற்றவாளிக்கு செசன்ஸ் கோர்ட்டில் 5 வருஷம் சிறைத்தண்டனை கிடைச்சுது. அதை எதிர்த்து அதிகபட்ச தண்டனை தரப்படணும்னு பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செஞ்சேன். ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுச்சு. மேலும், ஆசிட் வீச்சுக் குற்றங்களைத் தடுக்கவும், பாதிக்கப்படும் பெண்களுக்கு நிவாரணம் வழங்கப்படுவதுடன், இலவசமாக உயர்தர சிகிச்சையளிக்க பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் தனி வார்டு ஏற்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மீண்டும் உச்ச நீதிமன்றம் சென்றேன். உயர் நீதிமன்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது” என்று பெருமூச்சு விடும் ஹசீனா, இவற்றையெல்லாம் நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகே சாத்தியப்படுத்தி யிருக்கிறார்.

இத்தனைக்கும் நடுவே, ஹசீனா பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுக்குத் தயாராகி, 2010-ல் வெற்றியும் கண்டார். தற்போது மத்திய அரசுத் துறை ஒன்றில் தட்டச்சராகப் பணியாற்றுகிறார். தவிர, ஆசிட் வீச்சுக்கு எதிராகப் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்குகளில் பேசுவதுடன், பாதிக்கப் பட்ட பெண்கள் வீட்டில் முடங்கியிருக்காமல் வெளியுலகத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்பட ஊக்கம் கொடுப்பது, அதிகாரிகளைச் சந்தித்து ஆசிட் வீச்சுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுப்பது என 20 ஆண்டுகளாக இவரின் சேவைப் பணிகளும் நீள்கின்றன.

ஹசீனா
ஹசீனா

“சிறைத்தண்டனை முடிஞ்ச பிறகு குற்றவாளி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிடலாம். ஆனா, உயிர் வாழும்வரை என்னைப்போன்ற பெண்களுக்குப் போராட்ட வாழ்க்கைதானே! எங்களுக்கு நியாயமான, சரியான தீர்வை பிறரால் ஏற்படுத்த முடியுமா? என் வேதனையை ஆண் சமூகம் ஒரு நிமிஷம் யோசிச்சுப் பாருங்க. பெண்களை உங்க குடும்ப நபராகக்கூட நினைக்க வேண்டாம். ஆனா, சக மனுஷியா பார்க்கலாமே! என் நிலையைப் பார்த்தாவது, இனி எந்த ஆணும் எவ்விதச் சூழல்லயும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் ஈடுபட வேண்டாமே! இதைச் சின்ன வயசுல இருந்தே ஆண் குழந்தைகளுக்குப் பெற்றோர் அழுத்தமாகச் சொல்லிக் கொடுத்து வளர்க்கணும். இன்னைக்கு நம்பிக்கையுடன் நான் வாழ பலரின் ஊக்கம் இருந்தாலும், ‘CSAAAW’, ‘ஹியூமன் ரைட்ஸ் அண்டு லா நெட்வொர்க்’, ‘எனேபிள் இந்தியா’ ஆகிய அமைப்புகளின் பங்கு முக்கியமானது. அந்த விபத்துக்குப் பிறகு ஒருநாள்கூட என்னைப் பரிதாபமாகவோ, சுமையாவோ என் பெற்றோர் நினைக்காதது தான் எனக்குப் பெரிய கொடுப்பினை” – மென்மையான புன்னகையை உதிர்க்கும் ஹசீனா, தன்னம்பிக்கையின் மறு உருவமாக ஜொலிக்கிறார்!