Published:Updated:

மறுவாழ்வு பெற்ற கணவர்... எடுத்த சபதம் முடித்த மனைவி!

 பாக்கியலட்சுமி, பாஸ்கர், ராகுல்
பிரீமியம் ஸ்டோரி
News
பாக்கியலட்சுமி, பாஸ்கர், ராகுல்

- ஆந்திர தம்பதியின் நெகிழ்ச்சியான காதல் கதை

“ரொம்பவே பாதுகாப்பா இருந்தும்கூட, எனக்கு இவ்வளவு பெரிய பாதிப்பு எதனால நடந்துச்சுன்னு தெரியலை. ஆனாலும், நடந்ததெல்லாம் நல்ல துக்குதான்னு ஏத்துக்குற பக்குவம் கிடைச் சிருக்கு. என் புஜ்ஜி (மனைவியை அப்படித் தான் அழைக்கிறார்), வாழ்க்கை, மனிதர்கள் மேலயெல்லாம் எனக்கிருந்த அன்பு, இப்போ கடலளவுக்குக் கூடியிருக்கு. வாழ்க்கையில ஒவ்வொரு விநாடியிலும் சந்தோஷத்துக்கு மட்டுமே இடம் கொடுக்கணும்னு முடிவு பண்ணியிருக்கேன்” - நெகிழ்ந்து பேசுகிறார் மருத்துவர் பாஸ்கர்.

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த மருத் துவ தம்பதியான பாஸ்கர் - பாக்கியலட்சுமி, பணியிடம் மட்டுமன்றி மக்களின் வசிப்பிடங் களுக்கே சென்று மருத்துவச் சேவையுடன் மனிதநேயத்தையும் பகிர்ந்தவர்கள். கொரோனா இரண்டாவது அலையின்போது கோவிட் பாதிப்பால் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் போராடிய பாஸ்கரைக் காப்பாற்ற, அவர் பணியாற்றிய கிராமத்தைச் சேர்ந்த மக்கள் 20 லட்சம் ரூபாய் திரட்டிக் கொடுத்தது நாடு முழுக்க வைரலானது. ‘என் கணவரைக் குணப்படுத்தி, அவருடன்தான் வீடு திரும்பு வேன்’ என்ற தன் வைராக்கியத்தில் ஜெயித் திருக்கிறார் பாக்கியலட்சுமி. மறுவாழ்வு பெற்றிருக்கும் பாஸ்கர், தற்போது முழுமை யாகக் குணமாகிவிட்டார். கொரோனா இவர் களின் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டாலும், ‘எதையும் தாங்கும் இதயமாக’ இவர்களின் அன்பும் காதலும் மலையளவுக்குக் கூடியிருக்கிறது. வீடியோகாலில் தங்களின் புது வாழ்க்கைக் குறித்து பகிர்ந்தனர்.

“குண்டூர் மெடிக்கல் காலேஜ்ல ஒரே பேட்ச்சுல படிச்சோம். படிப்பு முடிஞ்சதும் ரெண்டு வீட்டார் சம்மதத்துடன் காதல் கல் யாணம் பண்ணிக்கிட்டோம். என் மனைவி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துலயும், நான் தனியார்லயும் வேலை செஞ்சோம். ஹெச்.ஐ.வி மெடிசின் பி.ஜி டிப்ளோமா முடிச்சுட்டு, ஹெச்.ஐ.வி-யால பாதிக்கப்பட்ட மக்களுக்கு வைத்தியம் பார்த்தது உட்பட பல இடங்கள்ல வேலை செஞ்ச நிலையில, 2019-ல் கரம் சேடுங்கிற கிராமத்திலிருக்கிற ஆரம்ப சுகாதார நிலையத்துல எனக்கு வேலை கிடைச்சது. ரேடியாலஜி சிறப்பு மருத்துவரான என் மனைவி, குண்டூர் மெடிக்கல் காலேஜ்ல உதவிப் பேராசிரியரா வேலை செய்றாங்க. முன்பு நாங்க வசிச்ச கரம்சேடு சுற்றுவட்டார மக்களைத் தேடிப் போயும் அவ்வப்போது சிகிச்சைகள் கொடுத்தோம். அதனால, அந்த பகுதியினர் எங்க மேல அன்பு வெச்சிருந்தாங்க” என்று சற்று இடைவெளிவிடுகிறார் பாஸ்கர்.

 பாக்கியலட்சுமி, பாஸ்கர், ராகுல்
பாக்கியலட்சுமி, பாஸ்கர், ராகுல்

கடந்த ஏப்ரல் மாதம், கொரோனா வார்டு களில் தன்னலமின்றி மருத்துவப் பணியாற்றி வந்த இவர்கள் இருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பாக்கியலட்சுமி விரைவாகக் குணமான நிலையில், நுரையீரல் தொற்றால் பாஸ்கரின் உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது. வலிமிகுந்த அந்த நினைவு களை பகிர்ந்தார் பாக்கியலட்சுமி.

“கோவிட் டைம்ல ரெண்டு பேருக்கும் தொடர்ச்சியா 12 மணி நேரம் வேலை இருந்துச்சு. பெரும்பாலான நாள்கள் இவர் ஹாஸ்பிட்டல்லயே தங்கிடுவார். அந்த இக்கட்டான நேரத்துல, என்னைப் போலவே இவரும் சீக்கிரமே குணமாகிடுவார்னுதான் நினைச்சேன். ஆனா, வென்டிலேட்டர் சப்போர்ட்ல சிகிச்சையிலேருந்த பாஸ்கரைக் காப்பாத்துறது கஷ்டம்னு டாக்டர்கள் கைவிரிச்சாங்க. வலியைத் தாங்கிக்க முடியாம தவிச்சவர், ‘என்னைக் கருணைக் கொலை பண்ணிடுங்க’ன்னு ஒரு பேப்பர்ல எழுதிக் காட்டினார். அதைப் பார்த்ததும் என் இதயமே நொறுங்கிப் போயிடுச்சு. முழுமையா குணப்படுத்தி, இவரை அழைச்சுகிட்டுத்தான் மறுபடியும் வீட்டுக்குப் போறதுனு உறுதியா இருந்தேன். அதனால, பல மாசம் லீவ் எடுத்துட்டு, கூடவே இருந்து இவரைக் கவனிச்சுகிட்டேன்.

நுரையீரல் முழுமையா செயலிழந்துட்டதால, இவரைக் காப்பாத்த ஒரு சதவிகிதம்கூட வாய்ப்பில்லைனு சொல்லிட் டாங்க. மேல் சிகிச்சைக்காகப் பல ஆஸ்பத்திரிகள்ல இவரை அனுமதிச்சோம். ஒவ்வொரு நாளும் ரெண்டு லட்சம் ரூபாய்க்கு மேல செலவாச்சு. எங்களோட அப்பார்ட்மென்ட்டை வித்தும் கூட, பொருளாதார ரீதியா சமாளிக்க முடியலை. பாஸ்கரின் உடல்நிலை பத்தி தெரிஞ்சுகிட்ட கரம்சேடு சுத்துவட்டார மக்கள், பணம் திரட்டி, ரெண்டே நாள்ல 20 லட்சம் ரூபாயைக் கொடுத் தாங்க. அந்த மக்களின் அன்பால நெகிழ்ந்த நேரத்துல, எங்க சீனியர், ஜூனியர், நண்பர்கள் பலரும் முடிஞ்ச பண உதவிகள் செய்யவே, இந்த விஷயம் நேஷனல் மீடியாக்கள்வரை வைரலாச்சு” என்பவர், கணவர் மற்றும் மகன் ராகுலைப் பார்த்துப் புன்னகைத்தவாறு ஆசுவாசமாகிறார்.

பாஸ்கரின் உடல்நிலை குறித்து அறிந்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, இவரின் மேல் சிகிச்சைக்கான 1.25 கோடி ரூபாய் செலவை அரசு ஏற்றுக்கொள்ளும் என அறிவித்தார். மூளைச்சாவு ஏற்பட்ட ஒருவரின் நுரையீரல் தானம் பெறப்பட்டு பாஸ்கருக்குப் பொருத்தப்பட்டது. அதன் பின்னரே அபாய கட்டத்திலிருந்து மீண்டிருக்கிறார் பாஸ்கர்.

“அப்பாவுக்கு உடம்பு சரியில்லைனு சொல்லியே மகனை சமாளிச்சேன். ஒருகட்டத் துல அவனுக்குச் சந்தேகம் வந்து, அப்பாவைப் பார்க்கணும்னு அடம்பிடிச்சான். அதனால ஒருமுறை பாஸ்கர் வீடியோகால்ல அவன் கிட்ட சைகையில பேசினார். நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை முடிஞ்ச பிறகு, மூணு மாசத்துக்கு எந்த அசைவும் இல்லாம படுக்கையிலேயேதான் இருந்தார். அதுக்கப் புறமாதான் வாய் திறந்து பேசவே ஆரம்பிச்சார். முதல் வார்த்தையா, ‘லவ் யூ புஜ்ஜி’ன்னு என்கிட்ட சொன்னப்போ, எனக்குப் பெரிசா ஜெயிச்சுட்ட உணர்வு.

30 கிலோ எடை குறைஞ்சு, பிறந்த குழந்தை மாதிரி, தன்னால எதுவுமே சுயமா செய்ய முடியாத நிலையில இருந்தார். செலவுகள் கட்டுப்படியாகாததால, டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டோம். இப்போ எல்லா சிகிச்சையும் முடிஞ்சுடுச்சு. நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால வீட்டுல ஓய்வில் இருக்கார். இன்னும் ஒருசில மாசங்கள்ல இவர் பழையபடி வேலைக்குப் போக ஆரம்பிச்சுடுவார்” என்கிற பாக்கியலட்சுமியின் முகத்தில் விவரிக்க முடியாத பரவசம்.

“காய்ச்சல், ஜலதோஷம்னு சாதாரண பிரச்னைகள்கூட எனக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். அதனால, கூடுதல் கவனமா இருப்பதோடு, வாழ்நாள் முழுக்கவும் எனக்குச் சிகிச்சைகள் தேவைப்படும். உதவி செய்த கிராம மக்கள் என் உறவுகளா மாறியிருக்காங்க. பாக்கிய லட்சுமி இடத்துல வேற யாராச்சும் இருந் திருந்தா, இந்த அளவுக்கு முயற்சி எடுத்திருப் பாங்களான்னு தெரியல. என் உயிரையே கொடுத்தாலும், புஜ்ஜியின் அன்புக்கு ஈடாகாது” என்று கண்களில் ஈரம் கசிய முடிக்கிறார் பாஸ்கர்.