Published:Updated:

காலைப் பறித்த புற்றுநோய்... சபதத்தில் வென்ற செவிலியர் கீர்த்தனா

கீர்த்தனா
பிரீமியம் ஸ்டோரி
News
கீர்த்தனா

எதிர்காலக் கனவுகளோடு வாழ்ந் திட்டிருந்த நேரம். இடது கால்ல அடிக்கடி வலி வந்திட்டிருந்தது. நாளாக ஆக வலி அதிகமாச்சு.

“வாழ்க்கை இழப்பை நோக்கி என்னைத் தள்ளினபோதெல்லாம், நம்பிக்கைதான் என்னை மீட்டெடுத்திருக்கு. புற்றுநோய்க்கு என் கால்களை இரையா கொடுத்தேனே தவிர நம்பிக்கையை அல்ல” - உற்சாகமாகப் பேசும் கீர்த்தனா, மதுரை யைச் சேர்ந்தவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் புற்றுநோய் பாதிப்பில் இடது காலை இழந்த கீர்த்தனா, தற்போது மதுரையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா வார்டில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார்.

“நான் பிறந்த கொஞ்ச நாள்லயே, கர்ப்பப்பைவாய் புற்றுநோய் வந்து என் அம்மா இறந்துட்டாங்க. அப்பா ஆட்டோ டிரைவர். சின்ன வயசிலிருந்தே எனக்கு எல்லாமுமாக இருந்தவங்க தாத்தா - பாட்டியும் அத்தையும்தான். பத்தாவது படிச்சிட்டிருந்தபோது அப்பாவும் தவறிட்டார். ‘படிப்பு மட்டும்தான் கடைசி வரை உனக்குத் துணையா வரும். நீ என்ன படிக்க நினைக்கிறியோ படி. நான் படிக்க வைக்கிறேன்’னு நம்பிக்கை தந்தாங்க அத்தை. அம்மா இறந்த காரணத்தைக் கேட்டதுலேருந்தே எனக்கு மருத்துவத்துறை சார்ந்து படிக்கணும்னு ஆசை. ப்ளஸ் ஒன்ல நர்சிங் குரூப் எடுத்துப் படிச்சேன். பிறகு டிப்ளோமா இன் நர்சிங் படிப்புல சேர்ந்தேன்.

எதிர்காலக் கனவுகளோடு வாழ்ந் திட்டிருந்த நேரம். இடது கால்ல அடிக்கடி வலி வந்திட்டிருந்தது. நாளாக ஆக வலி அதிகமாச்சு. கால் கருத்துப்போய், துர் நாற்றத்துடன் கூடிய கசிவு வெளிவர ஆரம்பிச்சது. டெஸ்ட் எடுத்துப் பார்த்துட்டு புற்றுநோய் தாக்கம் இருக்குறதா சொன்னாங்க டாக்டர்ஸ். ‘புற்றுநோய் கட்டி சின்னதா இருப்பதால ஆபரேஷன் பண்ணி எடுத்துட்டா சரியாயிடும்’ னு சொன்னாங்க. கடன் வாங்கி ஆபரேஷன் பண்ணோம். எல்லாம் சரியா யிடுச்சுனு நினைச்சப்ப, மறுபடியும் கால்வலி. புதுசா இன்னொரு கட்டி உருவாகியிருந்தது. அதையும் ஆபரேஷன் பண்ணி எடுத்தோம். அடுத்த மூணு மாசத்துல புற்றுநோய் செல்கள் கால் முழுக்க பரவினதால இடது காலையே எடுக்கணும்னு சொல்லிட்டாங்க. நொறுங்கிப் போயிட்டேன்” - கண்கள் கலங்கி அமைதி யாகிறார் கீர்த்தனா.

காலைப் பறித்த புற்றுநோய்... சபதத்தில் வென்ற செவிலியர் கீர்த்தனா

“என் வாழ்க்கையே முடிஞ்சுபோச்சுனு நினைச்சேன். வயசான தாத்தா - பாட்டியை கஷ்டப்படுத்துறோம்னு தோணுச்சு. நான் தைரியமா இருந்தாதான் அவங்க இயல்பா இருப்பாங்கன்னு என்னை தைரியப்படுத்திக்க ஆரம்பிச்சேன். மாற்றுத்திறனாளிகளின் சாதனை வீடியோக்களை பார்க்க ஆரம்பிச் சேன்.

ஆபரேஷன் முடிஞ்சு வந்ததும் என்னைப் பார்த்து ஆள் ஆளுக்குப் பரிதாபப்பட்டாங்க. எனக்குனு ஓர் அடையாளத்தை உருவாக்கி. எல்லாரையும் என்னை திரும்பிப் பார்க்க வைப்பேன்னு வைராக்கியத்தை வளர்த்துக் கிட்டேன். ரெண்டு மாச ஓய்வுக்குப் பிறகு ஒரு கால்லயே நடந்து பழகினேன். எனக்கு செயற்கைக் கால் பொருத்த ஏற்பாடு பண்ணாங்க அத்தை. ஆனா, ஏழு கிலோ எடை யுள்ள அதைத் தூக்கிட்டு நடந்தா தாங்க முடியாத முதுகுவலி வந்து துடிப்பேன். இப்ப பா.ஜ.க-வில் இருக்கிற, அப்ப தி.மு.க-வில் இருந்த திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் எடை குறைவான செயற்கைக்கால் பொருத்த உதவி செய்தார். அந்தக் காலோடு நடக்க ஆரம்பிச்சேன். அந்த நேரம்தான் கொரோனா தீவிரமா பரவ ஆரம்பிச்சது. அரசாங்கத்துல தற்காலிக செவிலியர்களை வேலைக்கு எடுத்தாங்க. நான் டிரெயினிங் எடுத்துக் கிட்ட அரசு மருத்துவமனையில வேலைக்கான விண்ணப்பம் கொடுத்திருந் தேன். மாற்றுத்திறனாளிங்கிறதால வேலை கிடைக்காம, தனியார் மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்தேன். கொரோனா பரவ ஆரம்பிச்ச புதுசுல கொரோனா வார்டுக்குள் போகவே எல்லாரும் பயந்தாங்க. நான் தைரியமா கொரோனா வார்டு வேலையைக் கேட்டு வாங்கினேன்.

அந்த வார்டுல யாருமே என் குறையைப் பார்க்கல. எல்லாரும் என் தைரியத்தைப் பாராட்டினாங்க. என் மேல பதிஞ்சிருந்த பரிதாபப் பார்வை மாறிடுச்சு. இப்போ நானும் ஒரு முன்களப் பணியாளர்’’

- பெருமையோடு விடைபெறுகிறார் கீர்த்தனா.