லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

அடுத்தடுத்த இழப்புகள்... மருத்துவத்துறை சவால்கள்!

டாக்டர் சுபாஷினி  வெங்கடேஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
டாக்டர் சுபாஷினி வெங்கடேஷ்

வலிகளை வென்று வலிமை பகிரும் டாக்டர் சுபாஷினி வெங்கடேஷ்

படங்கள்: ச.விக்னேஷ்

‘`இழப்புங்கிறது மனித வாழ்க்கையில தவிர்க்க முடியாதது. யார் வேணா குடும்பத்துல யாரை வேணா இழந்திருக்கலாம். குடும்பத்தாருக்குள்ள ஒருத்தருக்கொருத்தர் ஆறுதல் சொல்லிப்பாங்க. ஆனா சிலர் அந்த இழப்புலேருந்து மீண்டுவர முடியாம தவிக்க லாம். அப்படிப்பட்டவங்களுக்கானதுதான் பிரீவ்மென்ட் கவுன்சலிங்... அதாவது இழப்பு லேருந்து மீட்கும் ஆற்றுப்படுத்தல்னு சொல்ல லாம். வெளிநாடுகள்ல பிரபலமா இருக்கிற பிரீவ்மென்ட் கவுன்சலிங், இந்தியாவுல, குறிப்பா சென்னையில பெருசா இல்லை... சம்பந்தப்பட்டவங்களை அந்த இழப்புலே ருந்தும் அது கொடுத்த வலியிலேருந்தும் மீட்டெடுக்கிறது ரொம்பவே அவசியமான துன்னு நினைக்கிறேன். அதனாலதான் இழப்புலேருந்து மீள முடியாத ஏழை மக்களுக்கு பிரீவ்மென்ட் கவுன்சலிங்கை இலவசமா செய்யறேன்.’’

புதிய தகவல் சொல்லிப் பேச ஆரம்பிக்கிறார் டாக்டர் சுபாஷினி வெங்கடேஷ். அப்போலோ மருத்துவமனையின் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த் துறையின் மெடிக்கல் டைரக்டரான இவரும், இழப்புகளிலிருந்து மீண்டவர்தான். அந்த அனுபவம்தான் அவரது இந்தப் புதுமையான முன்னெடுப்பின் பின்னணியும்கூட. வலிமை யால் வலிகளை வென்ற சுபாஷினியின் கதை, விரக்தியின் விளிம்பில் நிற்போரையும் நிச்சயம் மாற்றி யோசிக்க வைக்கும்.

அடுத்தடுத்த இழப்புகள்... மருத்துவத்துறை சவால்கள்!

‘`திண்டுக்கல் பக்கத்துல உள்ள சின்ன கிராமத்துல பிறந்தேன். கொடைக்கானல்ல ஸ்கூலிங்கும், கீழ்ப்பாக்கம் மெடிக்கல் காலேஜ்ல மெடிசினும் படிச்சேன். கல்யாண மாச்சு... முதல் கர்ப்பம் குறைப் பிரசவ மாயிடுச்சு. பிறந்த ஆண் குழந்தை, ஆறே மணி நேரத்துல இறந்துடுச்சு. ஒருத்தரோட இழப்புக்கு அடுத்தவங்க எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கறாங்கன்றது அப்பதான் எனக்குப் புரிஞ்சது. நம்மைச் சார்ந்தவங்க, நம்மகூட இருக்கிறவங்களுக்கு அந்த வலி புரியும். ஆனா, அந்த இழப்புக்கு சம்பந்தமே இல்லாதவங்க அதைப் பார்க்கற விதமே வேற மாதிரி இருந்தது. ஒருத்தர் ஓர் இழப்பைச் சந்திக்கிறாங்கன்னா மத்தவங்க அவங்கமேல இன்னுமே கரிசனத்தோடு இருக்கலாம். இழப்புங்கிறதை ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமா அணுகுவாங்க. எல்லாரும் அதை ஒரே மாதிரி அணுகணும்னு நினைக்கக் கூடாது...’’ உயிருக்குள் சுமந்த உயிரின் இழப்பு தந்த வலி பகிர்பவர், அதையடுத்து குழந்தைகள் நல மருத்துவத்தைத் தேர்ந்தெடுக்க முடிவெடுத் திருக்கிறார்.

‘`என் குழந்தையோட இறப்புக்குப் பிறகு இங்கிலாந்துல பச்சிளம்குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவுல வேலை பார்த்தேன். ஆனா அந்தத் துறையில உள்ள சவால்கள் கொஞ்சமல்ல. அப்படியோர் அனுபவம் எனக்கும் வந்தது. உயிருக்குப் போராடிட்டிருந்த ஒரு குழந்தையை லைஃப் சப்போர்ட்ல வெச்சிருந்தாங்க. அதுக்கு மேல அந்தக் குழந்தை பிழைக்க வாய்ப்பில்லைனு முடிவு பண்ணி, லைஃப் சப்போர்ட்டை அகற்றச் சொன்னாங்க. ‘ஓர் உயிரைப் பறிக்க நான் யாரு’ங்கிற கேள்வி எனக்கு வந்தது. என்னு டைய அந்த எண்ணத்தை நான் சொன்னபோது என் சீஃப் அதுக்கு மதிப்பு கொடுத்தார். அந்தக் குழந்தை அபாயகட்டத்தைத் தாண்டி பிழைச்சிடுச்சு. ஆனாலும் அந்தச் சம்பவத்துக் குப் பிறகு இந்தத் துறை எனக்குத் தேவையா, இதுல என்னால தாக்குப் பிடிக்க முடியுமான்ற கேள்விகள் வரவே, நான் பச்சிளம் குழந்தைகள் மருத்துவத்தை விட்டுட்டு, ஜெனரல் பிராக் டிஸுக்கு மாறினேன்...’’ விருப்பத்தை மாற்றிக்கொண்ட பிறகும் வாழ்வின் சவால்கள் சுபாஷினியை விடுவதாக இல்லை.

அடுத்தடுத்த இழப்புகள்... மருத்துவத்துறை சவால்கள்!

‘`இங்கிலாந்துல இருந்தபோது ரெண்டாவது பையன் பிறந்தான். எங்க வீடு 13-வது மாடியில இருந்தது. சுட்டியான என் பையன் அங்கே வளர்றது பாதுகாப்பா இருக்காதுன்னு எங்கம்மா அவனை இந்தியாவுக்குக் கூட்டிட்டுப் போயிட்டாங்க. அந்த நிலையில எனக்கு மூணாவதா பெண் குழந்தை பிறந்தாள். மறுபடி இந்தியா வுக்கு வந்தோம். முதல் குழந்தையோட இழப்புலேருந்தே நான் முழுமையா மீளாத நேரத்துலதான் என் வாழ்க்கை யின் உச்சகட்ட துயரம் நடந்தது...’’ துயரம் தொண்டையை அடைக்கிறது சுபாஷினிக்கு. அடுத்து அவர் சொல்லப் போகும் பயங்கரம் உணர்த்துகிறது அவரது சில நொடி மௌனம்.

‘’இந்தியாவுக்கு வந்து அஞ்சு வருஷங்கள்ல என் ரெண்டாவது மகனை ஒரு ஆக்ஸிடன்ட்டுல இழந் துட்டேன். அப்போ அவனுக்கு 18 வயசு. என் மகளும் மகனும் ரொம்ப க்ளோஸ். அவளுக்கு அவன் அண் ணனா மட்டுமில்லாம, ஃபிரெண்டா, கைடா, எல்லாமா இருந்தவன். என் மகளுடைய டென்த் எக்ஸாம்ஸுக்கு சரியா 30 நாள் முன்னாடி மகன் தவறிட்டான். அதையும் கடந்து ஒருவழியா எக்ஸாம் எழுதிட்டா. அவகூடவே இருந்தேன்.

சில மாசங்கள்ல நான் என் மருத்துவ வேலையைப் பார்க்க ஆரம்பிச்சேன்னாலும் ஆரம்பத்துல ஒருவித மெமரிலாஸால அவதிப்பட்டேன். எதிர்ல பேஷன்ட் உட்கார்ந்திருப்பாங்க. ப்ரிஸ்கிரிப்ஷன்ல எழுத கைவைப்பேன். மருந்து பெயர் மறந்துடும். பேஷன்ட் என்னை வித்தியாசமா பார்ப்பாங்க. பேச்சை மாத்தி அந்தச் சூழலை இலகுவாக்கி, ஒருவழியா மருந்து பெயரை நினைவுபடுத்தி எழுதி அனுப்புவேன். கடினமான நாள்கள் அவை...’’ சுபாஷினி பேசப்பேச நமக்கு நெஞ்சம் கலங்குகிறது.

‘`எங்களாலயே இதையெல்லாம் நினைக்க முடியலை...நீ எப்படி இவ்ளோ தைரியமா இருக்கே...’ன்னு நிறைய பேர் என்கிட்ட கேட்பாங்க. குழந்தை பிறக்கும்போது அதுதான் தன் தாயைத் தேர்ந்தெடுக்குதுன்னு இந்து புராணம் சொல்லுது. நான் இழந்த ரெண்டு குழந்தைங்களுமே என்னை தங்களோட அம்மாவா தேர்ந்தெடுத்ததுல எனக்கு சந்தோஷம்தான். நான் ரொம்பவே பிரைவேட்டான நபர். என் சொந்த விஷயங்களை யார்கூடவும் பகிர்ந்துக்க மாட்டேன். என் அனுபவம் சிலருக்காவது தெளிவைக் கொடுக்கும்னுதான் முதல்முறையா என் லைஃப் பத்திப் பேசறேன். துக்கம் நடக்குற வீடுகள்ல உள்ள ஒவ்வொருத்தருக்கும் நான் சொல்ல நினைக்கிறது இதுதான்... உங்களைவிட்டுப் பிரிஞ்சு போன அந்த நபர், நீங்க சந்தோஷமா, நிம்மதியா இருக்கணும்னு தானே ஆசைப்படுவாங்க. அப்போ அப்படி இருக்கறதுதானே அவங்களுக்கு நீங்க செய்யுற மரியாதை...’’ மலர்ந்த முகம் மாறாமலிருப்பதன் காரணம் சொல்கிற சுபாஷினி, பதின்மவயது பிள்ளைகள் பலருக்கும் மென்ட்டராக, ஆலோசகராக இருக்கிறார்.

‘` `படிக்க மாட்டேங்கிறான், போதை மருந்து யூஸ் பண்றான், எப்போதும் வீடியோ கேம்ஸ் விளையாட றான்’’னெல்லாம் சொல்லி பிள்ளைங்களை என்கிட்ட கூட்டிட்டு வருவாங்க. பெற்றோர்கூட சரியான உறவுமுறை இல்லாம, பேச்சுவார்த்தை இல்லாத எத்தனையோ பிள்ளைங்க என்னைத் தேடி வருவாங்க. அவங்களுக்கெல்லாம் கவுன்சலிங் பண்ணி, மாற்றத் தைப் பார்க்கிறது எனக்கு ரொம்ப பிடிக்கும்...’’ அத்தனை குழந்தைகளிலும் தன் குழந்தைகளைக் காணப் பழகிக் கொண்டிருக்கிறது சுபாஷினியின் தாயுள்ளம்.