Published:Updated:

வாழ்க்கையே போர்க்களம்... வாழ்ந்துதான் பார்க்கணும்! - ‘போராளி’ லதா

லதா
பிரீமியம் ஸ்டோரி
லதா

மக்களின் தோழர்

வாழ்க்கையே போர்க்களம்... வாழ்ந்துதான் பார்க்கணும்! - ‘போராளி’ லதா

மக்களின் தோழர்

Published:Updated:
லதா
பிரீமியம் ஸ்டோரி
லதா
‘அத்திப்பூ அரசியல்வாதி!’ - 2010-ம் ஆண்டின் ‘டாப் 10 மனிதர்’களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்ட லதாவுக்கு ஆனந்த விகடன் சூட்டிய மகுடம். சாதிய அடக்குமுறை எதிர்ப்புப் போராட்டங்கள், எளிய மக்களுக்கான உரிமைப் போராட்டங்கள், பாதிக்கப்படும் ஏழைகளைக் காப்பாற்றுவதற்கான போராட்டங்கள்... இப்படி லதாவின் வாழ்க்கைப் பக்கத்தைத் திறந்தால், பக்கத்துக்குப் பக்கம் போராட்டங்களே! பொதுவாக, பெண்களுக்கு வாழ்க்கையே போராட்டம்தான். இப்படிப்பட்ட சூழலில், போராட்டத்தையே வாழ்க்கையாக்கிக்கொள்வதற்கு இரும்பு மனது வேண்டும். அது, லதாவிடம் கூடுதலாகவே இருக்கிறது என்பதற்கு உதாரணம்... காங்கியனூர் போராட்டம்!
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வேலூரில் வசிக்கும் லதா, சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அவர் தலைமையில் 2009-ம் ஆண்டு செப்டம்பரில் விழுப்புரம் மாவட்டம், காங்கியனூர் திரௌபதி அம்மன் கோயிலில் தீண்டாமைக்கு எதிராக ஆலய நுழைவுப் போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்திய போலீஸ், தடியடி நடத்தியது. லதாவின் வயிற்றில் காவலர் ஒருவர் பூட்ஸ் காலால் உதைக்க, கர்ப்பப்பையில் சிதைவு ஏற்பட்டு, உதிரப் போக்கில் மயங்கிச் சரிந்தார். அதிர்வலைகளை ஏற்படுத்திய அந்த விவகாரம், சில வாரங்களில் நீர்த்துப்போனது. ஆனால், லதாவின் போராட்டக்கனல் இன்றளவும் தணியவில்லை.

“குடியாத்தத்தில் எங்களுடையது விவசாயக் கூலித் தொழிலாளர் குடும்பம். பி.ஏ முடித்ததும் சாதி மறுப்புத் திருமணம். மாமனார், கம்யூனிஸ்ட் கட்சியில்தான் இருந்தார். பீடித் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடி சிறை சென்றவர். எளிய மக்களின் நியாயமான உரிமைகளுக்குப் போராடி நானும் பலமுறை சிறை சென்றிருக்கிறேன். ‘பெண் அரசியல் களத்துக்குப் போகக் கூடாது’ எனக் குடும்பத்தினர் ஒருநாளும் தடை போட்டதில்லை. 2006 – 2011 வரை குடியாத்தம் சட்ட மன்ற உறுப்பினராக மக்கள் பணி செய்தேன்.

‘பட்டியலின மக்களை மீட்டெடுக்க வேண்டும்’ எனத் தொடர் முழக்கமிடும் அதே சூழலில், சொந்தக் கட்சியிலேயே ‘பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்’ என்பதால் பல நேரங்களில் பாகுபாடுகளை எதிர்கொண்ட நான், ஒருகட்டத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன். கம்யூனிஸ்ட் கட்சியின் சித்தாந்தமும் மக்கள் பணியும்தான் எனக்கான ஆக்ஸிஜன். அது இன்றி என்னால் உயிர்வாழ முடியாது என்பதால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தேன்” என்று சொல்லும் லதாவின் முகத்தில் மத்தாப்பூப் புன்னகை.

“அனைவருக்கும் சம உரிமை, அடிப்படை உரிமைகள் கிடைத்தால் மட்டுமே நமக்குக் கிடைத்த சுதந்திரத்துக்கு உண்மையான அர்த்தம் கிடைக்கும். அதை ஆட்சியாளர்கள் முழுமையாக உணர்வதேயில்லை. எனவேதான் தொடர்ந்து போராடுகிறோம்.

லதா
லதா

வேலூர் மாவட்டத்திலேயே பின்தங்கிய நிலையில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. குறிப்பாக, அடிப்படைக் கல்வி, சுகாதார வசதிகள்கூட கிடைக்காமல் அணைக்கட்டு மற்றும் குடியாத்தம் தொகுதிகளில் அரசமத்தூர், ஜார்தான்கொல்லை உட்பட ஏராளமான மலைக்கிராமங்கள் இன்றும் மோசமான நிலையில்தான் இருக்கின்றன. அந்த சாமான்ய மக்கள் ரேஷன் பொருள்கள் வாங்ககூட பல கிலோமீட்டர் காட்டுப்பாதையில் நடக்க வேண்டும். இவற்றுடன், பஞ்சமி நிலங்கள் ரியல் எஸ்டேட் மனைகளாக மாற்றப்படுவதை எதிர்த்து, ‘பஞ்சமி நிலங்கள் பஞ்சமருக்கே’ என்ற முழக்கத்துடன் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்குத் தொடர்ந்து போராடுகிறோம். அதிகாரிகளிடம் முறையிடுவது, தொடர் போராட்டங்கள் மூலம்தான் மக்களுக்கான கோரிக்கைகளை ஓரளவாவது நிறைவேற்ற முடிகிறது. அதுவும் பெண்ணாக இருந்து அரசியலில் செயல்படுவது பெரிய சவால்தான். இதையெல்லாம் பார்த்தால் மக்களுக்கு மாற்றமும் ஏற்றமும் கிடைக்காது’’ என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொள்ளும் லதா,

“கணியம்பாடி ஒன்றியத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி குளிக்கும்போது வீடியோ எடுத்து மூன்று இளைஞர்கள் மிரட்டியுள்ளனர். மனமுடைந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். கடந்த ஜூனில் நடந்த இந்தச் சம்பவம் மீடியாவில்கூட பெரிதாக வெளியாகவில்லை. நாங்கள் தொடர்ந்து போராடியதால், தவறு செய்தவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. ஆனால், இன்று வரையிலும் அந்தக் குடும்பத்துக்கு அரசின் எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. அதற்கான போராட்டம் தொடர்கிறது” என்று சொல்லும் லதா, ஒரு நிமிடம் நிறுத்தினார்.

‘‘காங்கியனூர் நிகழ்வு என் அரசியல் வாழ்க்கையில் மறக்க முடியாத சுவடு. காவலர் ஒருவர் என்னை பூட்ஸ் காலால் வயிற்றில் உதைத்தார். வலியில் துடித்த என்னை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இரண்டு மாதங்களுக்குப் பிறகுதான் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என மனித உரிமைகள் ஆணையமும் அப்போது சொன்னது. ஆனால், ஒன்றுமே நடக்கவில்லை. நீதியும் கிடைக்கவில்லை. அதன் பிறகுதான் என் போராட்டங்களை அதிகப்படுத்தினேன். கடைசி மூச்சு உள்ளவரை மக்களுக்கான பணிகளையும் போராட்டங்களையும் தொடர்வேன்” - அந்த வலி, கூடுதல் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியிருப்பது, லதாவின் வார்த்தைகளில் தெறிக்கிறது!