Published:Updated:

``நடராஜனுக்கு ஒரு பேட், பந்துகூட நாங்க வாங்கிக் கொடுத்ததில்ல!”

நடராஜன்
பிரீமியம் ஸ்டோரி
நடராஜன்

இந்திய அணி கிரிக்கெட் வீரரின் கிராமத்துப் பெற்றோர்

``நடராஜனுக்கு ஒரு பேட், பந்துகூட நாங்க வாங்கிக் கொடுத்ததில்ல!”

இந்திய அணி கிரிக்கெட் வீரரின் கிராமத்துப் பெற்றோர்

Published:Updated:
நடராஜன்
பிரீமியம் ஸ்டோரி
நடராஜன்

#Motivation

``ரேஷன் அரிசிகூட எங்க வீட்டுல சில நேரம் இருக்காது. இப்படி ஒரு வீட்டுல வளர்ந்த என் பையன் இன்னிக்கு இந்திய கிரிக்கெட் அணியில இடம்பிடிச்சிருக்கான். எங்க சந்தோஷத்தை வார்த்தையில சொல்லத் தெரியல'' - மகிழ்ச்சியுடன் நெகிழ்ச்சியும் சேர்ந்துகொள்கிறது சாந்தாவுக்கு. கிரிக்கெட் வீரர் நடராஜனின் அம்மா.

சேலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் கடந்த ஐ.பி.எல் 2020 மேட்ச்சுகளில் சிறப்பாக விளையாடி நட்சத்திர விளையாட்டு வீரராகக் கவனம்பெற்றார். ரசிகர்கள், இவர் இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்று விரும்பினர். தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ) நடராஜனை இந்திய கிரிக்கெட் அணியில் சேர்த்திருப்பதோடு, ஆஸ்திரேலியாவில் டி20 மேட்ச்சில் விளையாட அவரைத் தேர்வு செய்தது. முதலில் நடந்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் பரிதாபமாகத் தோற்றது இந்தியா. இந்தநிலையில், மூன்றாவது மற்றும் இறுதி ஒரு நாள் போட்டியில் அணியில் சேர்க்கப்பட்டார் நடராஜன். ஆஸ்திரேலியாவின் மிக முக்கியமான விக்கெட்டுகள் இரண்டை வீழ்த்தி வெற்றிக்கு அவர் வழிவகுக்க, நாடே நடராஜனைக் கொண்டாடியது. அதன் பின்னர் நடைபெற்ற டி20 போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவை வெற்றிபெறச் செய்தார். ஆட்ட நாயகன் விருது மயிரிழையில் மிஸ் ஆனது.

தாய், தங்கை, தந்தை
தாய், தங்கை, தந்தை

இந்த நிலையில், சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் வசித்து வரும் நடராஜனின் பெற்றோரை சந்தித்தோம்.நடராஜனின் அம்மா சாந்தா, ``என் வீட்டுக்காரர் தங்கராசு விசைத்தறி ஓட்டுற கூலித் தொழிலாளி. நடராஜன், திலகவதி, சக்தி, தமிழரசி, மேகலானு எங்களுக்கு ரெண்டு ஆம்பளப் புள்ளைங்க, மூணு பொம்பளப் புள்ளைங்க. அதிகாலையில விசைத்தறி வேலைக்குப் போற நானும் என் வீட்டுக்காரரும் ராத்திரி 7 மணிக்குத்தான் வீட்டுக்கு வருவோம். பள்ளிக்கூடம் போயிட்டு வந்து புள்ளைங்க எல்லாம் வீட்டுல இருக்குங்க. நடராஜன் மட்டும் இருக்க மாட்டான். கிரிக்கெட் விளையாடப் போயிட்டு, இருட்டுக் கட்டுனதுக்கு அப்புறம்தான் வீடு திரும்புவான். சனி, ஞாயிறுகூட கிரவுண்ட்லயேதான் கிடப்பான்'' என்றவர் சட்டென கலங்கி, பின் தொடர்ந்தார்.

``நாங்க நடராஜனுக்கு ஒரு பேட், பந்துகூட வாங்கிக் கொடுத்ததில்ல. வீட்டுல சாப்பாட்டுக்கே ரொம்பக் கஷ்டம். புள்ளைங்க வளர வளர விசைத்தறி கூலி போதல. அதனால தள்ளு வண்டி சில்லிசிக்கன் கடை போட்டு அதுலதான் குடும்பத்தை நடத்தினோம். `இடது கை வேகப்பந்து வீச்சாளர்'னு நடராஜனை இப்போ டி.வியில எல்லாம் சொல்றாங்க. ஆனா, அப்போ அவன் எப்படி கிரிக்கெட் விளையாடுவான்னுகூட எங்களுக்குத் தெரியாது. எங்க ஊரைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவர்தான் நடராஜனுக்குத் தேவையான எல்லா உதவிகளை யும் செஞ்சார். மொதமொதலா அவன் ஆடுனதை டி.வியில பார்த்தப்போ ஆனந்தக் கண்ணீரு வடிச்சேன். நாங்க வறுமையில கஷ்டப்பட்ட சூழல்ல நல்லது கெட்டதுக்குக்கூட போக வாய்ப்பில்லாம இருந்துச்சு. இப்ப சின்ன விசேஷம்னாலும் எல்லோரும் எங்கள அழைக் கிறாங்க. முகம் தெரியாதவங்க எல்லாம் போன் பண்ணி வாழ்த்தும்போது எப்படி நன்றி சொல்றதுனே தெரியல'' என்றார் அந்தக் கிராமத்துத் தாய்.

நடராஜனின் தங்கை தமிழரசி, ``எங்கண்ணனோட பௌலிங் ஸ்டைலை எல்லாரும் ரசிச்சு, பாராட்டிப் பேசும்போது எங்களுக்கெல்லாம் அவ்ளோ சந்தோஷமா இருக்கும். அவங்க உலகத்துலேயே பெஸ்ட் பௌலரா வரணும்'' என்றார் உற்சாகத்துடன்.

``நான் அசாருதீன் காலத்துல யிருந்து கிரிக்கெட் பார்க்கிறவன். நடராஜன் பௌலிங் பிரமாதமா போடுவான். அவன் இதுல நல்லா வரணும்னு தோணும். ஆனா, இந்தளவுக்கு வருவான்னு கனவுலகூட நெனச்சதில்ல'' என்றார் நடராஜனின் தந்தை தங்கராசு பெருமையுடன்.

ஊர் மைதானங்களில் ரன் எடுக்க ஓடிக்கொண்டிருக்கும் கிராமத்துச் சிறுவர்களின் கால் களுக்கு நடராஜன் தந்திருக்கும் நம்பிக்கை மிகப் பெரிது!

``நடராஜனுக்கு ஒரு பேட், பந்துகூட நாங்க வாங்கிக் கொடுத்ததில்ல!”

இன்னும் உச்சம் தொடுவார்!

நடராஜனின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஜெயபிரகாஷிடம் பேசினோம். ``கடுமையான உழைப்புதான், இன்னிக்கு நடராஜனை இந்த இடத்துக்குக் கொண்டுவந்திருக்கு. ஐ.பி.எல் 2017 சீஸனுக்கான ஏலத்துல, அதிக தொகைக்கு ஏலம் போன ரெண்டாவது இந்திய வீரர் நடராஜன். பஞ்சாப் அணி அவரை மூன்று கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தப்போ, எங்க ஊரை எல்லாரும் திரும்பிப் பார்த்தாங்க. அவரோட அர்ப்பணிப்புக்கும் உழைப்புக்கும் இன்னும் உச்சம் தொடுவார்'' என்றார் மனதார வாழ்த்தி.