Published:Updated:

“இன்பமும் துன்பமும் வரும், போகும், வரும்... ரிப்பீட்டு...” - புற்றுநோயைப் புறந்தள்ளிய ஜெயஸ்ரீ முரளி

ஜெயஸ்ரீ முரளி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயஸ்ரீ முரளி

கொஞ்சநாளாவே மார்பகத்துல கட்டி இருக்குற மாதிரி ஓர் உணர்வு இருந்தது. 2018-ம் வருஷம், தீபாவளிக்கு முதல்நாள் சாயந்திரம் மகப்பேறு மருத்துவரை சந்திக்கப் போனேன்

சென்னையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ முரளிக்கு ஆசிரியர், கதைசொல்லி, தமிழ் ஆர்வலர் என பன்முகங்கள். அனைத்தை யும் பின்னுக்குத் தள்ளும் படி ‘போராளி’ என்ற அடையாளமும் அவருக்கு உண்டு. மரணத்தின் விளிம்புவரை சென்று திரும்பியவரின் தன்னம்பிக்கை, யாரையும் வாழ்க்கையைக் காதலிக்கச் சொல்லும்.

வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட சோகம், வார்த்தைகளில் பிரதிபலித்துவிடாதபடி, அவருடனான ஒருமணி நேர உரையாடலில் பாசிட்டிவிட்டி தொற்றிக்கொள்கிறது நம்மையும்.

‘`திருநெல்வேலியில பிறந்து, வளர்ந்த நான் கல்யாணத்துக்குப் பிறகு சென்னை வந்தேன். மகளை ஸ்கூல்ல சேர்க்கற வயசு வந்ததும், அவளை ரெகுலர் ஸ்கூல்ல சேர்க்க வேண் டாம்னு முடிவு பண்ணினோம். போட்டி, பிரஷருக்குள்ள சிக்காம, படிப்புங்கிறதை குழந்தை சந்தோஷமான அனுபவமா ஃபீல் பண்ணணும்னு தேடினபோது மான்டிசரி கல்வி பத்தி தெரியவந்தது. மான்டிசரி ஸ்கூல்ல சேர்த்தபோது அங்கேயே மான்டிசரி டீச்சர்ஸுக்கான டிரெயினிங்கும் நடந்தது. ரெண்டாவது குழந்தை பிறந்து 18 மாசங்கள் கழிச்சு நானும் அங்கேயே 6 முதல் 12 வயசு குழந்தைகளுக்கான மான்டிசரி பயிற்சியில சேர்ந்தேன். பயிற்சி முடிச்சதும் அதே பள்ளிக் கூடத்துல டீச்சரா வேலைக்குச் சேர்ந்தேன். அங்கேயே பத்து வருஷங்கள் வேலை பார்த்தேன்...’’ சுருக்கமான அறிமுகம் சொல்லும் ஜெயஸ்ரீயின் உலகு மழலைகள் சூழ மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருந்தது. அது அப்படியே தொடர்ந்திருக்கலாம். ஆனால், விதி வேறுவிதமாக யோசித்திருக்கிறது.

“இன்பமும் துன்பமும் வரும், போகும், வரும்... ரிப்பீட்டு...” - புற்றுநோயைப் புறந்தள்ளிய ஜெயஸ்ரீ முரளி

``கொஞ்சநாளாவே மார்பகத்துல கட்டி இருக்குற மாதிரி ஓர் உணர்வு இருந்தது. 2018-ம் வருஷம், தீபாவளிக்கு முதல்நாள் சாயந்திரம் மகப்பேறு மருத்துவரை சந்திக்கப் போனேன். அவங்க உடனடியா சர்ஜரி பண்ணி, பயாப்சிக்கு அனுப்பணும்னு சொன் னாங்க. ‘நான் சாதாரண மகப்பேறு மருத்துவர் தான். ஆனா, பிரெஸ்ட் சர்ஜன் வெச்சு இந்த சர்ஜரியை பண்றேன்’னு அந்த டாக்டர் சொன்னாங்க.

சர்ஜரிக்கான எல்லா ஏற்பாடுகளும் ரெடியாயிடுச்சு. எனக்கும் மயக்க மருந்து கொடுத்துட்டாங்க. மயக்கநிலையில இருந்த என்கிட்ட அந்த நேரத்துலதான் ‘கட்டி எங்கம்மா இருக்கு’ன்னு கேட்டாங்க. மயக்கத்துல இருந்ததால என்னால சரியான இடத்தைக் காட்ட முடியலை. அதனால கட்டி இருந்த இடத்தைவிட்டு, வேற இடத்துல திசுவை எடுத்து டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல கேன்சர் இல்லைன்னு வந்திருச்சு. பத்து நாள் கழிச்சு ரெவ்யூவுக்கு போனபோது அந்த டாக்டர்கிட்ட, ‘நீங்க வேற இடத்துல சர்ஜரி பண்ணியிருக்கீங்க. அந்தக் கட்டி இன்னும் அப்படியேதான் இருக்கு’ன்னு சொன்னேன். அது அவங்களுடைய தவறுனு தெரிஞ்சாலும் அவங்க ஏத்துக்கலை. ‘இது புதுசா வந்த கட்டியா இருக்கலாம், இன்னொரு வாட்டி சர்ஜரி பண்ண வேண்டியிருக்கும்’னு சொன் னாங்க. நான் விட்டா போதும்னு ஓடி வந்துட் டேன். அப்புறம் ஒரு தோழி சொன்னதன்பேர்ல புற்றுநோய் மருத்துவர் செல்வி ராதா கிருஷ்ணனை சந்திச்சேன்.

‘முதல்ல அந்தக் கட்டிக்குள்ள ஊசியைச் செலுத்தி, திசுவை எடுத்து அப்புறம்தான் பயாப்சிக்கு அனுப்பணும். அதுக்கு முன்னாடி சர்ஜரி பண்ணா, கேன்சர் செல்கள் மத்த இடங்களுக்கும் பரவிடும். நல்லவேளையா அந்தக் கட்டி யில அவங்க கை வைக்கலை’னு சொல்லி ட்ரீட்மென்ட்டை ஆரம்பிச்சாங்க. வெற்றிகரமா ஆபரேஷன் முடிஞ்சது. கீமோதெரபியும் ரேடியேஷனும் எடுத்துக்கிட்டேன். ஏழு மாசத்துல எல்லாம் முடிஞ்சு, நான் நல்லபடியா தேறி வந்துட்டேன்...’’ மருத்துவ அலட்சியத்திலிருந்து மீண்டவருக்கு, புற்றுநோய் உறுதியான தருணம் முதல் சிகிச்சை முடியும்வரை யிலான நாள்வரை பல சவால்கள்...

``மூணாவது ஸ்டேஜ் கேன்சர்னு உறுதியானதும் நான் டாக்டர்கிட்ட கேட்ட கேள்வி, ‘நான் எத்தனை நாள் உயிரோட இருப்பேன்... என் பிள்ளைங் களுக்கு நான் என்ன பதில் சொல்றது’ங் கிறதுதான். ‘இந்த உலகத்துல யாருக்கும் எதுவும் நிரந்தரமில்லை.. அதனால நீங்க எதையும் யோசிக்க வேண்டாம். இதைவிட பெரிய விஷயங்கள்லேருந்து மீண்டவங்க இருக்காங்க’ன்னு சொன் னாங்க. ‘உங்க பிள்ளைங்களைக் கூப்பிட்டு உட்காரவெச்சு எதையும் மறைக்காமப் பேசுங்க. நிச்சயம் புரிஞ்சுப்பாங்க’ன்னாங்க. விஷயத் தைச் சொன்னதும் என் மூத்த மகள் ரெண்டு நாள் என்கிட்ட முகம் கொடுத்தே பேசலை. மூணாவது நாள் அவளே வந்து, ‘அம்மா நான் கூகுள் பண்ணிப் பார்த்துட் டேன். இது பெரிய பிரச்னையே இல்லை. மீண்டு வந்துடுவீங்க’ன்னா. சின்னவ ரொம்ப அழுதா. தலைமுடியை ஷேவ் பண்ண வேண்டியிருக் கும்னு சொன்னதை அவளால தாங்கிக்க முடியலை. அவங்க ரெண்டு பேருக்காகவே நான் ஸ்ட்ராங்கா இருக்கணும்னு முடிவெடுத் தேன். பதினஞ்சு நாள்களுக்கொரு முறை கீமோதெரபி எடுக்கணும். ஒருமுறை கீமோ பண்ணினா தலையிலேருந்து கால்வரை ஊசியால குத்தற மாதிரி வலிக்கும். புண்ணா யிடும். யூரின் போற இடத்துல கொப்புளங்கள் இருக்கும். வாய் சிவந்துடும். உடம்பு இந்த வலியை அனுபவிக்குது. அதோட சேர்ந்து மனசும் அதை அனுபவிக்க வேண்டாம்னு புரிஞ்சுக்க ஆரம்பிச்சேன். அழத் தோணினா மொத்தமா அழுது முடிச்சிட்டு வெளியே வந்துடு வேன்.

இது என் வாழ்க்கையில வரணும்னு இருக்கு. அனுபவிச்சு தான் ஆகணும்னு வலியைப் புரிஞ்சுக்க ஆரம்பிச்சேன். வலி இல்லாத நாள்கள்ல நிறைய படிக்கவும், என்னை நானே சுய ஆய்வு பண்ணிக்கவும் முடிஞ்சது. மொத்தத்துல அந்த ஏழு மாசங் கள்ல எனக்கான நேரம் நிறைய கிடைச்சது. மீண்டு வரணும்ங்கிறது மட்டும்தான் நோக்கமா இருந்தது...’’ நினைத்தபடியே மீண்டு வந்தவர், வாழ்க்கையை முன்னைவிடவும் அழகாக்கும் முயற்சிகளை யோசித் திருக்கிறார்.

‘`இது எனக்கு ரெண்டாவது வாய்ப்பு. அந்த வாய்ப்பை யாருக்குப் பயனுள்ளதா மாத்தப் போறேன்னு யோசிச்சேன். குழந்தைகளோடு வேலைசெய்யுறது எனக்கு ரொம்ப பிடிக்கும். மறுபடி என் மான்டிசரி வேலைக்குப் போனேன். குறிப்பிட்ட எண்ணிக்கையில உள்ள குழந்தைகளோடு வொர்க் பண்ணாம, பெரிய கூட்டத்தோட வேலை செய்யணும்னு ஆசை வந்தது. எனக்குத் தமிழ் ஆர்வம் அதிகம். இயல், இசை, நாடகம் வாயிலா தமிழை குழந்தைகளுக்குக் கொண்டுபோய் சேர்க்கணும்னு நினைச்சேன். முதல்கட்டமா ‘பொன்னியின் செல்வன்’ நாவலை குழந்தைகளுக்கு யூடியூப்ல வாசிக்க ஆரம்பிச்சேன். `குழந்தைகளுக்கு பொன்னியின் செல்வன் புரியுமா'னு கேட்டவங்க, இந்த முயற்சியைப் பார்த்துட்டு ஆச்சர்யப்படறாங்க. குழந்தைங்க அவ்வளவு அழகா உள்வாங்கிக் கிறதையும், மொழியைக் கத்துக்கிறதையும் பார்க்க முடியுது. அடுத்து பாரதியார் பாடல்கள், ஔவையார், கம்பர், திருமூலர் பாடல்களை எடுத்து இசையோடு சொல்லிக் கொடுக்கணும்னு ஒரு திட்டமும் இருக்கு. தமிழ்ல குழந்தைகளுக்கான அறிவியல் புத்தகங்கள் பெருசா இல்லை. அதுக்கான ஒரு புத்தகம் எழுதற முயற்சியும் போயிட்டிருக்கு.

மற்ற மொழிகளை எல்லாம் தேடிப் போய் கத்துக்கிற பிள்ளைங்க, தமிழ் கத்துக்கிறதுல ஆர்வமில்லாம இருக்காங்களோ... இதே நிலை நீடிச்சா பேச்சுலகூட தமிழ் இல்லாமப் போயிடுமோன்ற பயம் வந்தது. கண்ணுக்கு முன்னாடி தமிழ் மொழி அழியறதைப் பொறுத் துக்க முடியாமதான் இந்த முயற்சி களை எல்லாம் பண்ணிட்டிருக் கேன்...’’ எனும் ஜெயஸ்ரீயின் இரண் டாவது வாழ்க்கையை இனிதாக்கிய தில் குடும்பத்தாருக்கும் பங்குண்டு.

‘`கணவர் முரளிசுந்தரம் பிசினஸ் மேன். ஹேப்பினெஸ் கோச்சும்கூட. வாழ்க்கையில எப்படி சந்தோஷமா இருக்குறதுன்னு சொல்லிக் கொடுக் கிறதுதான் அவர் வேலை. அந்த சந்தோஷம் எங்க வீட்டுக்குள்ளேயும் எப்போதும் பிரதிபலிக்கும்.

மூத்த மகள் சஞ்சனா முதல் வருஷம் பிஏ படிக்கிறா. கன்டென்ட் ரைட்டிங் பிசினஸும் ஆரம்பிச் சிருக்கா. ரெண்டாவது மகள் சஹானா ஒன்பதாவது படிக்கிறா. என் ஹெல்த், கணவருடைய வேலை தொடர்பான சவால்கள்னு வாழ்க்கையில எத்தனையோ பிரச்னைகளைப் பார்த்துட்டோம். ஆனா வாழ்க்கை இப்படித்தான் கூட்டிட்டுப் போகுதுன்னா அதையும் பார்த்துடலாம்னு சந்தோஷமா ஏத்துக்கிட்டோம். முடிஞ்ச அளவுக்கு அந்த பாசிட்டிவிட்டியை மத்த வங்களுக்கும் கடத்த விரும்பறேன்’’ என்கிறார் நமக்கும் கடத்தியபடியே..!