Published:Updated:

“வாழ்க்கையைப் புரிஞ்சுகிட்டவங்களுக்கு வசந்தம் பிறக்கும்!” - நம்பிக்கை வெளிச்சம் ஷாஹினா

ஷாஹினா
பிரீமியம் ஸ்டோரி
ஷாஹினா

“ஏழு வயசுல ஸ்கூல் போக ஆரம்பிச்சேன். என் முகத்தைப் பார்த்தாலே ஃபிரெண்ட்ஸ் பலரும் பயந்து ஓடினாங்க. என்கூட பேசுறதையும் பழகுற தையும் பலரும் தவிர்த்தாங்க

“வாழ்க்கையைப் புரிஞ்சுகிட்டவங்களுக்கு வசந்தம் பிறக்கும்!” - நம்பிக்கை வெளிச்சம் ஷாஹினா

“ஏழு வயசுல ஸ்கூல் போக ஆரம்பிச்சேன். என் முகத்தைப் பார்த்தாலே ஃபிரெண்ட்ஸ் பலரும் பயந்து ஓடினாங்க. என்கூட பேசுறதையும் பழகுற தையும் பலரும் தவிர்த்தாங்க

Published:Updated:
ஷாஹினா
பிரீமியம் ஸ்டோரி
ஷாஹினா

“நம்ம வாழ்க்கை எந்த வழியில திசை மாறினாலும், வீட்டுக்குள்ள மட்டும் முடங்கிடவே கூடாது. அந்த முடிவு, நம் நிம்மதியை பாதிக்கிறதோடு, பலருக்கும் தவறான வழிகாட்டுதலா மாற வாய்ப்பிருக்கு. அதை உணர்ந்த நான், ஒவ்வோர் அடியையும் நம்பிக்கை யுடன் எடுத்து வெச்சேன். டாக்டரா இந்தச் சமூகத்துல தலைநிமிர்ந்து நடக்கிறேன்” - தன் உத்வேகத்தை நமக்கும் கடத்தி, தன்னம்பிக்கைப் பேச்சைக் கேட்கும் உணர்வுக்கு நம்மை அழைத்துச் சென்றார் ஷாஹினா.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஷாஹினா, ஐந்து வயதில் ஏற்பட்ட தீ விபத்தால் பள்ளிக்காலம் வரை மன அழுத்தத் தில் தவித்திருக்கிறார். தன்னம்பிக்கையைத் துடுப்பாக்கி, ஹோமியோபதி மருத்துவராகி, இன்று பலருக்கும் நம்பிக்கையூட்டுகிறார். கல்யாணக்களையில் இரட்டிப்பாகும் ஷாஹினாவின் உற்சாகம், நம்மையும் தொற்றிக் கொள்கிறது.

“வாழ்க்கையைப் புரிஞ்சுகிட்டவங்களுக்கு வசந்தம் பிறக்கும்!” - நம்பிக்கை வெளிச்சம் ஷாஹினா

“ஒருநாள் நைட் பவர் கட் ஆனதால, மண்ணெண்ணெய் விளக்கு ஏத்திவெச்சு குடும்பமா கதை பேசிட்டிருந்தோம். யதேச் சையா கைதவறி, அந்த விளக்கு என் மேல விழுந்திடுச்சு. மளமளனு என் உடல்ல தீ பரவிடுச்சு. எர்ணாகுளம் கவர்ன் மென்ட் ஆஸ்பத்திரியில என்னைச் சேர்த்தாங்க. 70 சதவிகிதத்துக்கும் மேல தீக் காயம் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில 50 நாள்கள் சிகிச்சையில இருத்தேன். அப்புறமா, கோட்டயம் மெடிக்கல் காலேஜ்ல மேல்சிகிச்சைக் காகச் சேர்க்கப்பட்டேன். மூணு மாசத்துக்குப் பிறகுதான், ஆபத்தான கட்டத்திலிருந்து மீண்டேன்” கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த அந்த விபத்தால், ஓராண்டுக்கும் மேல் வீட்டிலிருந்தபடியே ஷாஹினா சிகிச்சை பெற் றிருக்கிறார்.

“ஏழு வயசுல ஸ்கூல் போக ஆரம்பிச்சேன். என் முகத்தைப் பார்த்தாலே ஃபிரெண்ட்ஸ் பலரும் பயந்து ஓடினாங்க. என்கூட பேசுறதையும் பழகுற தையும் பலரும் தவிர்த்தாங்க. அப்போ நான் எதிர்கொண்ட மனவேதனைகள் ரொம்பவே அதிகம். டீச்சர்ஸோட சப்போர்ட்டால நல்லா படிச்சேன்.

தீ விபத்தால என் வலது மற்றும் இடது கையில சேர்த்து மொத்தமா அஞ்சு விரல்கள் பாதியளவும், வலதுகை சுட்டுவிரல் முழுமை யாவும் நீக்கப்பட்டுச்சு. இடதுகையில எழுதப் பழகினேன். சின்னதா உணவகம் நடத்திட்டி ருந்த எங்கப்பா, தன் சக்திக்கு மீறி, நாலு பெண் பிள்ளைகளையும் சுதந்திரமா வளர்த்ததோடு, எனக்கான சிகிச்சைகளுக்கும் மெனக்கெட் டார்.

தீக்காய தழும்புகளைச் சரிபடுத்த, ஸ்கூல் முடிக்கிறதுக்குள்ள பலமுறை எனக்கு பிளாஸ்டிக் சர்ஜரி நடந்துச்சு. அந்த வலி வேதனைகள் ஒரு பக்கம். இன்னொரு பக்கம், வெளியிடங்கள்ல பலரும் என்னை வித்தியாசமா பார்ப்பாங்க. அதனாலேயே மத்தவங்களோடு பழக சங்கடப்பட்டு, வெளி யிடங்களுக்குப் போறதைக் குறைச்சுகிட்டேன். அவசியத்துக்கு வெளியே போனாலும், முகத்தை முழுசா மறைச்சுப்பேன். கண்ணாடி பார்க்கிறதையும் தவிர்த்தேன். இப்படியே ப்ளஸ் டூ முடிக்கிறவரை ஒரு குறுகிய வட்டத்துக் குள்ளேயே இருந்து, டிப்ரெஷன்லேருந்து மீள முடியாமலும் சிரமப் பட்டேன்” - கடினமான சூழலைப் பகிர்ந்த ஷாஹினா, அதிலிருந்து மீண்டு வந்தது தன்னம்பிக்கை மாற்றத்துக் கான அழகு.

“மெடிக்கல் நுழைவுத் தேர்வுல நல்ல மார்க் வாங்கினேன். ஆனா, ஊசி போடுறது, ஆபரேஷன் பண்றதெல்லாம் எனக்கு சிரமமானதுனு சொல்லி, எம்.பி.பி.எஸ் சீட் தர மறுத்தாங்க. தெரபி வேலைகளைச் செய்ய முடியாதுனு ஆயுர்வேதா கோர்ஸையும் கொடுக்கலை. கடைசியா ஹோமியோபதி மெடிசின் படிக்கதான் வாய்ப்பு கிடைச்சது.

“வாழ்க்கையைப் புரிஞ்சுகிட்டவங்களுக்கு வசந்தம் பிறக்கும்!” - நம்பிக்கை வெளிச்சம் ஷாஹினா

காலேஜ்ல என்னை முழுமையா புரிஞ்சுகிட்ட நண்பர்கள் கிடைச்சாங்க. என் மீதான சமூகத்தோட பார்வை, மத்தவங் களோட அனுதாப பேச்சையெல்லாம் நிராகரிக்க ஆரம்பிச்சேன். வெளியுலகத்தோடு ஒன்றி செயல்பட ஆரம்பிச்சதுடன், என் வாழ்க்கை மத்தவங்களுக்கு முன்னுதாரணமா அமையணும்ங்கிற இலக்குடன் பயணிச்சேன்” தாழ்வுமனப்பான்மையைத் தூக்கிப்போட்ட பிறகு, ஷாஹினாவுக்கு நல்வாழ்க்கை உதயமானது.

மருத்துவப் படிப்பை முடித்ததும், தனியார் மருத்துவமனையில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார் இவர். 2017-ல் ஷாஹினாவுக்கு அரசுப் பணி கிடைத்தது. கோட்டயம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் மூன்று ஆண்டுகள் பணியாற்றியவர், எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள ஹோமியோபதி அரசு மருத்துவமனை ஒன்றில் மருத்துவ அதிகாரியாக ஓராண்டாகப் பணியாற்றிவருகிறார். நோயாளிகளுக்கான மருத்துவ ஆலோசனை களுடன், மருத்துவமனை நிர்வாகப் பணிகளையும் கவனித்துக் கொள்கிறார் ஷாஹினா.

“என் லைஃப், டிப்ரெஷன்ல இருந்து மீண்டு வர்றது, சமூக மாற்றத்துக்கான விஷயம்னு என் மனசுக்குத் தோணுற விஷயங்களை சோஷியல் மீடியாவுல அப்பப்போ எழுதுவேன். அதுல சில பதிவுகள் வைரலாகும். நடிகை பார்வதி நடிச்ச ‘உயரே’ மலையாளப் படத்தோட கதையுடன், என் வாழ்க்கையில ஒன்றிப் போன சில விஷயங்களைக் குறிப்பிட்டு ஒரு பதிவு எழுதினேன். அதைப் படிச்சுட்டு, மலையாள நடிகர் டோவினோ தாமஸ், என்னை நேர்ல கூப்பிட்டுப் பாராட்டினார். அப்படித்தான் போன வருஷம் விஷ்ணு சந்தோஷ்ங்கிற மலையாள போட்டோ கிராபர் என்னை அணுகினார். தீ விபத்தால பாதிக்கப்பட்டவங்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துற வகையில போட்டோஷூட் பண்ணலாம்னு முடிவு பண்ணி, அதுக்கு நானே மாடலா இருந்தேன்.

‘தோற்றத்தைவிட தன்னம்பிக்கைதான் அழகானது’னு உணர்த்துற வகையில தாமரைக்குளத்துல நான் இருக்கிற அந்த போட்டோஷூட் கேரளாவுல பிரபலமா பேசப்பட்டுச்சு. அதன்பிறகு, எனக்கான ஆயுர்வேத சிகிச்சைக்கான செலவுகளை நடிகர் மம்மூட்டி சார் ஏத்துகிட்டார்.

மாடலிங், போட்டோஷூட் வாய்ப்புகள் நிறையவே வருது. கவர்ன்மென்ட் வேலையில இருக்கிறதாலயும், நேரமின்மையாலும் தவிர்த்துடு றேன்” என்பவர், தன்னம்பிக்கைப் பேச்சாளராக வும் செயல்படுகிறார்.

“ ‘இவ வாழ்க்கை என்னாகுமோ?’ன்னு வேதனைப்பட்ட என் குடும்பத்தினரை, சொந்தக் கால்ல நின்னு ஜெயிச்சு பெருமிதப்படுத்தியதுல எனக்கு அளவுகடந்த சந்தோஷம். அதேபோல, என்ன பிரச்னை வந்தாலும் தளராம, வைராக்கியத்துடன் போராடி ஜெயிக்கிற மன உறுதி வந்துட்டாலே, எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்கலாம்” - மெசேஜ் சொல்கிறார்.

“பிசினஸ்மேன் ஒருத்தர், என்னை முழுசா புரிஞ்சுகிட்டு வாழ்க்கைத்துணையா ஏத்துக்கிறதா நம்பிக்கை கொடுத்தார். நிறைய பேசினோம். ஒருத்தரை ஒருத்தருக்குப் பிடிச்சுப்போச்சு. சீக்கிரமே எங்களுக்குக் கெட்டிமேளம் கொட்டப் போகுது”

- கல்யாண சேதி சொல்லி அக மகிழ்ச்சியுடன் முடிக்கிறார் ஷாஹினா.