Published:Updated:

``என்னிக்கோ வரப்போற சாவை நினைச்சு தினம் தினம் சாக வேண்டியதில்லை!’’

‘மெனுராணி’ செல்லம்
பிரீமியம் ஸ்டோரி
‘மெனுராணி’ செல்லம்

76 வயதில் கேன்சரை வென்ற ‘மெனுராணி’ செல்லம்

``என்னிக்கோ வரப்போற சாவை நினைச்சு தினம் தினம் சாக வேண்டியதில்லை!’’

76 வயதில் கேன்சரை வென்ற ‘மெனுராணி’ செல்லம்

Published:Updated:
‘மெனுராணி’ செல்லம்
பிரீமியம் ஸ்டோரி
‘மெனுராணி’ செல்லம்

படம்: பிரியன்.ச

‘‘என் வாழ்க்கையில எத்தனையோ சமையல் போட்டிகளுக்கு நடுவரா இருந்திருக்கேன்... எத்தனையோ உணவுகளை டேஸ்ட் பார்த்திருக்கேன்... அப்படிப்பட்ட எனக்கு எதிர்பார்க்காத ஒரு சவால் வந்தது. ஒரு ஸ்பூன் தண்ணீரை நான் விழுங்கணும். அப்படி விழுங்க முடியலைனா வாழ்நாள் முழுக்க என்னால எதையும் சாப்பிட முடியாது... டியூப் வழியாதான் சாப்பாடு உள்ளே போகும்னு சொன்னா எப்படியிருக்கும்... அந்தச் சவால்ல நான் ஜெயிச்சதை இப்பவும் என்னால நம்ப முடியலை...’’ பகீர் அனுபவத்துடன் ஆரம் பிக்கிறார் ‘மெனுராணி’ செல்லம்.

பிரபல சமையற்கலை நிபுணர். சமையற் கலையில் 50 ஆண்டுக்கால அனுபவங்களுடன், 76 வயதில் அடியெடுத்து வைத்தவருக்கு திடீர் சோதனை. அத்தனையிலிருந்தும் மீண்டு மறு பிறவி எடுத்திருப்பவரின் பாசிட்டிவிட்டி பிரமிக்க வைக்கிறது.

‘‘2020-ம் வருஷம் செப்டம்பர் மாசம். இந்தியாவுல கொரோனா உச்சத்துல இருந்த நேரம். இங்கே தனியா இருக்க வேண்டாம்னு அமெரிக்காவுல என் மகள்கள் வீட்டுக்குப் போனேன். முதல் நாலஞ்சு மாசங்களுக்கு சமையல் வீடியோ, யூடியூப், ரெசிப்பீஸ், டிப்ஸ் கொடுக்கிறதுனு பிசியா இருந்தேன். ஜனவரி மாசம், திடீர்னு எனக்கு வாய்ல புண் வந்தது. இதுக்கு முன் னாடியும் எனக்கு அடிக்கடி வாய்ப்புண் வந்திருக்கு. மணத்தக்காளி, மாசிக்காய் வைத்தியம்னு வழக்கமான கைவைத்தியங்கள் மூலமாவே குணப்படுத்திடு வேன். ஆனா, இந்தத் தடவை அப்படி கட்டுப் படல. அப்பதான் வேற ஏதோ பிரச்னைனு தோணுச்சி. அதனால டாக் டரை பார்த்தோம். அவர் டெஸ்ட் பண்ணிட்டு இது வாய்ல வரக்கூடிய ஓரல் கேன்சரா இருக்கலாம்னு சந்தேகப்பட்டார். பயாப்சி செய்து பார்த்துட்டு அதை உறுதிப்படுத்தினார்.

சிகிச்சையின்போது...
சிகிச்சையின்போது...

பல்லுக்கும் கன்னத்துக் கும் இடையில கேன்சர் கட்டி. அதைக் கேட்டதும் நம்பறதுக்கு சிரமமா இருந்ததே தவிர, அதை நினைச்சு நான் உடைஞ்சு போகவோ, அழவோ இல்லை. ஏன்னா, என் ரெண்டு பிரசவங்களுக்கும், சமீபத்துல நடந்த மூட்டு ஆபரேஷனுக்கும் தவிர ஹாஸ் பிட்டலுக்கே போகாத ஆள் நான். எங்க வீட்டுல தலைவலி, காய்ச்சலுக்கான மாத் திரைகள்கூட இருந்ததில்லை. அப்படிப்பட்ட எனக்குதான் கேன்சர்.

ஏகப்பட்ட டெஸ்ட், கன்சல்ட்டேஷனுக்கு பிறகு ஜூன் மாசம் 15-ம் தேதி, அமெரிக்காவின் டாப் 10 ஹாஸ்பிட்டல்ஸ்ல ஒன்றான பார்ன்ஸ்-ஜூயிஷ்ல கிட்டத்தட்ட 8 மணி நேர சர்ஜரி நடந்தது. ஆபரேஷன் முடிஞ்ச அடுத்த ரெண்டு மணி நேரத்துல எனக்கு நினைவு வந்திருச்சு. ‘அன்பே சிவம்’ படம் கமல் மாதிரி என் முகம் மாறியிருக்குமோனு பயந்தேன். ஆனா, அப்படி எதுவுமே நடக்கலை. கடவுள் மேல நான் வெச்சிருந்த நம்பிக்கையும் எனக்காக பிரார்த்தனை பண்ணவங்களுடைய அன்பும் என்னைக் காப்பாத்திடுச்சு. `வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு'ங்கிற மாதிரி இன்னும் உற்சாகத் தோட, தெம்போட இந்தியா வந்திருக்கேன்...’’ எக்ஸ்ட்ரா லோடடு எனர்ஜியோடு பேசுகிறார் செல்லம்.

முதுமையை மட்டுமல்ல, அதில் வரும் நோயை ஏற்றுக்கொள்ள்ளவும் அசாத்திய தைரியம் வேண்டும். அது செல்லத் துக்கு நிறையவே இருக்கிறது.

‘‘ 76 வயசுல எனக்கு ஏன் இப்படி வந்ததுனு புலம்பறதுல அர்த்த மில்லைனு தெரிஞ்சது. ‘நீங்க சிகரெட் பிடிப்பீங் களா, குடிப்பீங்களா, புகை யிலை போடுவீங்களா’ன் னெல்லாம் டாக்டர்ஸ் கேட்டாங்க. அந்தப் பழக்கங்கள் உள்ளவங் களுக்குத்தான் வாய்ல கேன்சர் வரும். அப்படி எதுவுமே இல்லாத எனக்கு ஏன் வந்ததுங்கிறது டாக்டர்ஸுக்கே வியப்பாதான் இருந்தது. வரணும்ங்கிறது என் கர்மா, வந்தது... அவ்வளவுதான்.

சிகிச்சையின்போது...
சிகிச்சையின்போது...

சர்ஜரிக்கு முன்னாடியே எல்லா பல்லையும் எடுத்துட்டாங்க. அதையும் டேக் இட் ஈஸினு எடுத்துக்கிட்டேன். கால்லேருந்து சதை எடுத்து கன்னத்துல வெச்சுத் தச்சிருக்காங்க. சர்ஜரி முடிஞ்ச மூணாவது நாளே எழுந்து நடக்க ஆரம்பிச்சிட்டேன். ‘எந்திரன்’ பட ரஜினி மாதிரி உடம்பு முழுக்க டியூபோடு நட மாடிட்டிருந்தேன். அந்த நிலைமையிலதான் அடுத்த சோதனை வந்தது. என்னால விழுங்க முடியுமானு டெஸ்ட் பண்ணாங்க. முதல்ல ஒரு டீஸ்பூன் தண்ணீர், அடுத்து ஜூஸ், அடுத்து ஐஸ்க்ரீம்னு ஒவ்வொண்ணா கொடுத்து விழுங்கச் சொன்னாங்க. அதை விழுங்கிட்டா ஓகே. இல்லைனா ஆயுள் முழுக்க டியூப் வழியாதான் சாப்பாடு கொடுக்க வேண்டியிருக்கும்னு சொன்னாங்க. சமையல் போட்டிகள்ல நடுவரா இருந்து ஒவ்வோர் உணவையும் டேஸ்ட் பார்த்து மார்க் போட்டதெல்லாம் நினைவுக்கு வர, கடவுள் மேல நம்பிக்கைவெச்சு ஒவ் வொண்ணா விழுங்கினேன்.

என் தைரியத்தைப் பார்த்துட்டு அமெரிக்க டாக்டர்ஸ் மிரண்டுட்டாங்க. ‘உங்களுக்கு நடந்தது மெடிக்கல் மிராக்கிள்... நீங்க அமேஸிங் லேடி’ன்னு பாராட்டினாங்க. வாழ்க்கையில எப்போதும் எந்த விஷயத்துக் கும் கலங்கி, அழுது நின்னு எனக்குப் பழக்கமில்லை. இதுவும் கடந்துபோகும்னு எடுத்துப்பேன். இந்த முறையும் அப்படித் தான்’’ என்பவரிடம் நமக்கெல்லாம் சொல்வ தற்கு முக்கியமான மெசேஜ் ஒன்று இருக்கிறது.

‘மெனுராணி’ செல்லம்
‘மெனுராணி’ செல்லம்

‘‘இருமல்னா மிளகுப் பால் குடிக்கிறது, வாய்ப்புண்ணுன்னா மணத்தக்காளிக் கீரை சாப்பிடறதுனு கைவைத்தியம் பண்ற பழக்கம் பலருக்கும் இருக்கும். கைவைத்தியம் பண்றதுல தப்பில்லை, ஆனா, ஒரு வாரத்துல சரியாக லைனா டாக்டரை பார்க்கிறதுதான் சரி. தலைவலிக்கு வெயில்ல போயிட்டு வந்தது லேருந்து, மூளை பாதிப்பு வரை எது வேணா காரணமா இருக்கலாம். ஆனா அந்தக் காரணத்தை டாக்டர் உறுதிப்படுத்தட்டுமே. அதையும் மீறி ஏதோ நோய் வந்திருச்சா... எனக்கேன் வரணும்... என்னாகப் போகு தோன்னு கலங்கி நிற்கத் தேவையே இல்லை. இன்னிக்கு மருத்துவ விஞ்ஞானம் ரொம்பவே வளர்ந்திருக்கு. எப்பேர்ப்பட்ட பிரச்னை களையும் சரிசெய்ய முடியுது. என்னிக்கோ வரப்போற சாவை நினைச்சு தினம் தினம் சாக வேண்டியதில்லை. ஒவ்வொரு விடியலை யும் உங்களுக்கான போனஸா நினைச்சு வாழ்க்கையை சந்தோஷமா, அர்த்தமுள்ளதா வாழுங்க’’ - உதாரண மனுஷியாக உற்சாகம் ஏற்றுகிறார்.

'‘மெனுராணி’ செல்லம் அவர்களின் முழு பேட்டியை https://bit.ly/3yjzSWX இந்த லிங்க்கில் பார்க்கலாம்.