Published:Updated:

எந்த நிமிடமும் வாழ்க்கை மாறலாம்... பக்கவாதத்தை வென்ற பாசிட்டிவ் மனுஷி சுதா

சுதா

பீரியட்ஸ் டைம்ல ப்ளீடிங்கை கட்டுப்படுத்தறது உடலோட இயல்பு. அதுக்காக நம்ம உடம்புல பிளேட்லெட்ஸ்னு சொல்லப்படற தட்டணுக்கள் தயாராகும்.

எந்த நிமிடமும் வாழ்க்கை மாறலாம்... பக்கவாதத்தை வென்ற பாசிட்டிவ் மனுஷி சுதா

பீரியட்ஸ் டைம்ல ப்ளீடிங்கை கட்டுப்படுத்தறது உடலோட இயல்பு. அதுக்காக நம்ம உடம்புல பிளேட்லெட்ஸ்னு சொல்லப்படற தட்டணுக்கள் தயாராகும்.

Published:Updated:
சுதா

வாழ்வில் நல்லது நடக்கும்போது தோன்றாத ஓர் எண்ணம் அல்லது நடக்கும்போது பலருக்கும் தோன்றுவதுண்டு. ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கணும்..?’ என்பதே அந்த எண்ணம்.

யாராலும் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத ஒரு பாதிப்புக்குள்ளாகி, மரணத்தின் விளிம்புவரை சென்ற நிலையிலும் ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயா?’ என்று புன்னகையோடு மீண்டு வந்திருக்கிறார் சிங்கப்பெண் ஒருவர். கிட்டத்தட்ட அவருக்கு இது மறுபிறவி. ஆனாலும் விதியின் மீதோ, வேறெதுவின் மீதோ கோபமோ, விரக்தியோ கொள்ளாத அவரது நன்னம்பிக்கை நமக்கெல்லாம் ஆகச்சிறந்த பாடம்.

ஜெயேந்திராவுக்கு அறிமுகம் அவசியமில்லை. கியூப் சினிமாஸின் இணை நிறுவனர். ‘180’ மற்றும் ‘நா நுவ்வே’ படங்களின் இயக்குநர். 500-க்கும் மேலான விளம்பரப் படங்களை இயக்கியவர். கடந்த வருடம் ஓடிடியில் வெளிவந்த ‘நவரசா’ வெப் சீரிஸின் இணைத் தயாரிப்பாளர். ஹெச். ஆர் ஹெட்டாக வேலைபார்த்துக் கொண்டிருந்த மனைவி சுதா, கனடாவில் படித்துக்கொண்டிருந்த மகன் என இவரது வாழ்க்கை இனிமை யாகப் பயணித்துக் கொண்டிருந்தது. ஒரே நாளில் அந்த வாழ்க்கை தலைகுப்புற தடம் புரண்டிருக்கிறது.

‘`2014-ம் வருஷம் நவம்பர் மாசம் 26-ம் தேதி... வழக்கமான நாளாதான் ஆரம் பிச்சது. அன்னிக்கு காலையில சுதா கண்ல ஏதோ உறுத்தற மாதிரி இருக்கிறதா சொன் னாங்க. டாக்டரை பார்க்கலாமானு கேட்டபோது, `அதெல்லாம் ஒண்ணுமிருக்காது'ன்னு சொல்லிட்டு, ரெண்டு பேரும் வெளியே கிளம்பினோம். நியூஸ்பேப்பர் இன்டர்வியூ கொடுக்கிறதுக்காக என்னை டிராப் பண்ணிட்டு அவங்க பார்லர் போயிருந்தாங்க. பார்லர் உள்ளே நுழைஞ்சதுமே சுதா மயங்கி விழுந் திருக்காங்க... சுயநினைவும் போயிருச்சு. எனக்குத் தகவல் வந்ததும் சுதாவைக் கூட்டிட்டு ஆஸ்பத்திரிக்குப் போனேன். அங்கே அவங்களுக்கு ஸ்ட்ரோக் வந்திருக்கிறதை உறுதிப்படுத்தினாங்க...’’ அடுத்த நான்கு நாள்களில் 50-வது பிறந்தநாளைக் கொண்டாடவிருந்த சுதாவுக்கு, வருடங்களோ, மாதங்களோ நினைவில்லாமல் போன சம்பவத்தின் தொடக்கத்துடன் பேசுகிறார் கணவர் ஜெயேந்திரா.

சிகிச்சையின்போது சுதா...
சிகிச்சையின்போது சுதா...

‘`சுதாவுக்கு சுகர், பிபி, கொலஸ்ட்ரால்னு எந்தப் பிரச்னையும் இல்லை. அவங்களை மாதிரி ஆரோக்கியமான நபருக்கு எப்படி ஸ்ட்ரோக் வந்திருக்கும்ங்கிற கேள்வி எனக்கும் இருந்தது. அவங்க பீரியட்ஸ் பிரச்னைக்காக எடுத்துக்கிட்ட மாத்திரையோட விளைவுதான் இதுன்னு பிறகுதான் தெரிஞ்சது. இத்தனைக்கும் வெறும் மூணே நாள்தான் அவங்க அந்த மாத்திரைகளை எடுத்துக்கிட்டாங்க.

பீரியட்ஸ் டைம்ல ப்ளீடிங்கை கட்டுப்படுத்தறது உடலோட இயல்பு. அதுக்காக நம்ம உடம்புல பிளேட்லெட்ஸ்னு சொல்லப்படற தட்டணுக்கள் தயாராகும். தட்டணுக்கள்தான் ரத்தத்தை உறைய வைக்கிற வேலையைச் செய்யும். பீரியட்ஸ் தொடர்பான பிரச்னைகள் உள்ள சில பெண்களின் உடம்புல தட்டணுக்களின் எண்ணிக்கை அதிகமா இருக்கும். பீரியட்ஸின்போது அதிக ப்ளீடிங்கை கட்டுப்படுத்த பெரும்பாலும் குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரைகளைத்தான் டாக்டர்ஸ் பரிந்துரைப்பாங்க. தட்டணுக்கள் அதிகமா இருக்குற ஒருத்தர், இந்த மாத்திரைகளை எடுக்கும்போது, மூளைக்குப் போகுற ரத்தக்குழாய்ல அடைப்பு ஏற்பட வாய்ப்பு இருக்குன்னு தெரிஞ்சது. சுதாவுக்கு மூளைக்கு ரத்தத்தைக் கொண்டு போகும் பிரதான ரத்தக்குழாயான கரோட்டிடு ஆர்ட்டரில 100 சதவிகித அடைப்பு ஏற்பட்டு, இடது பக்க மூளைக்குப் போற ரத்த ஓட்டம் நின்னுடுச்சு....’’ பல பெண்களும் சர்வ சாதாரணமாக உபயோகிக்கும் பீரியட்ஸ் மாத்திரையின் பின்னணியில் மறைந்திருக்கும் பயங்கரம் உணர்த்தித் தொடர்கிறார் ஜெயேந்திரா...

‘`வலதுகை பழக்கமுள்ள ஒருத்தருக்கு அவங்களுடைய பேச்சு மையம், மூளையோட இடது பக்கத்துல இருக்கும். இடதுபக்க மூளையில ரத்த ஓட்டம் தடைப்பட்டு சுதா வுக்கு பேச்சு மையமும் சேர்ந்து பாதிக்கப் பட்டது. பேச்சு மையம் பாதிக்கப்பட்டதன் விளைவா சுதாவுக்கு ‘அஃபேஷியா’ (Aphasia)ங்கிற ஒரு பிரச்னை வந்தது. அஃபேஷியா பாதிப்பு ஏற்படறவங்க மொழியை இழந்துடுவாங்க. அதுவரைக்கும் அவங்களுக்குத் தெரிஞ்ச வார்த்தைகள், எழுத்துகள், பேச்சு எல்லாமே மறந்துடும். சைகை மொழிகூட மறந்துடும். பசி, தாகம்னு அடிப்படை உணர்வுகளைக்கூட சொல்லத் தெரியாது. மத்தவங்க சொல்றதையும் புரிஞ்சுக்க முடியாது. பக்கவாத சிகிச்சையின் ஒரு பகுதியா, மூளையோட அழுத்தம் குறை யறதுக்காக சுதாவுக்கு மண்டையின் ஒரு பகுதியை அகற்றி, அதை அவங்க வயித்துக் குள்ள வச்சிருந்தாங்க. பத்து வாரங்கள் கழிச்சுதான் மறுபடி மண்டையில பொருத் தினாங்க. ஸ்ட்ரோக் வந்ததால சுதாவுக்கு வலது கையையும் வலது காலையும் இயக்க முடியலை. அதாவது மூளையால உடம்போட வலது பக்க இயக்கத்தை உணர முடியாத நிலை.

அஃபேஷியா பாதிப்புக்கு மருந்து, மாத்திரைகளோ, ஆபரேஷனோ கிடையாது. கை, கால் இயக்கத்துக்கு பிசியோதெரபியும், பேச்சை திரும்பவைக்க ஸ்பீச் தெரபியும் மட்டும்தான் உதவும். அமெரிக்கா, சிகாகோ வுலதான் இதுக்கான பெஸ்ட் தெரபி கொடுக்கறாங்கனு தெரிஞ்சு, சுதாவை அங்கே கூட்டிட்டுப் போனேன். ஏழு வருஷங்களா அந்த தெரபி தொடர்ந்திட்டிருக்கு.

சுதாவுக்கு ஸ்ட்ரோக் வந்தபோது, 24 மணி நேரமும் அவங்களைப் பார்த்துக்க ஒரு நர்ஸ் இருந்தாங்க. நர்ஸ் கூடவே இருந்தாங்கன்னா தனக்கு ஏதோ உடம்பு சரியில்லைங்கிற எண்ணம் சுதாவுக்கு வந்துடக் கூடாதுன்னு பத்தே நாள்ல நர்ஸை அனுப்பிட்டோம்.

எந்த நிமிடமும் வாழ்க்கை மாறலாம்... பக்கவாதத்தை வென்ற பாசிட்டிவ் மனுஷி சுதா

குடும்ப உறுப்பினர்கள், கனடாவுல பி.ஹெச்டி படிச்சிட்டிருந்த எங்க மகன்னு எல்லாரும் கூட இருந்தாங்க. அந்த சப்போர்ட் சுதாவுக்கு பெரிய அளவுல ஹெல்ப் பண்ணுச்சு. கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் நானும் வீட்டுலதான் இருந்தேன்.

வாழ்க்கையில எந்தத் தருணத்துல எது முக்கியம்னு முடிவெடுக்கிறது நம்ம கைலதான் இருக்கு. அப்போ அவங்ககூட இருக்கிறதுதான் முக்கியம்னு பட்டது. எந்த உணர்வையும் வெளிப்படுத்த முடியாத நிலையிலேருந்து இன்னிக்கு எழுத்துக்கூட்டிப் படிக்கிறது, பேசறதுனு சுதா ரொம்பவே இம்ப்ரூவ் ஆகியிருக்காங்க. `நேச்சர் சோர்ஸ்' என்ற பெயர்ல, காற்றிலிருந்து சுத்தமான குடிநீர் தயாரிக்கிற பிசினஸ் பண்றாங்க’’ - கணவர் பேசப்பேச, சுதாவின் முகத்தில் பெருமிதம் பூரிக்கிறது. எழுத்துக்கூட்டி, பேசிப் பழகும் குழந்தையின் குதூகலத்துடன் இடையிடையே உரையாடுகிறார் சுதா.

‘`வாழ்க்கையில எதுவும் நம்ம கையில இல்லை. இப்படி ஏதாவது நடந்துடுச்சுன்னா ஏன் நடந்தது, எப்படி நடந்தது, எனக்கு ஏன் நடந்ததுன்னு கேள்வி கேட்கறதைவிட்டுட்டு, அதுலேருந்து எப்படி வெளியில வரலாம், அதுக்கு என்ன செய்யலாம்னு யோசிக்கிறது தான் சரி... ஏன்னா.... வாழ்க்கை நிலையற்றது’’

நிதர்சனம் உணர்த்தி முடிக்கிறார் ஜெயேந்திரா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism