Published:Updated:

பிளாட்ஃபார்ம் டு பி.காம்... தன்னம்பிக்கைத் தாய் சுமதிக்கு சல்யூட்!

சுமதி
பிரீமியம் ஸ்டோரி
News
சுமதி

இங்க குடில் போடக் கூடாதுனு போலீஸ்காரங்க ரெண்டு , மூணு முறை கலைச்சுப் போட்டுட்டுப் போயிட்டாங்க. ஆனாலும், கெஞ்சி கூத்தாடி திரும்பவும் குடில் போட்டுப் பேன்.

சென்னை பாரிமுனையில் ஒரு சாலையோரம்... ஓங்கி உயர்ந்த ஆலமரத்தின் அடியில், சில கட்டைகள் செருகப்பட்டு, அவற்றின் மீது சிமென்ட் சாக்குகள் சுற்றப்பட்டு இருக்கிறது சுமதியின் வீடு. நான்கடி நீளம், நான்கடி அகலம் உள்ள அந்த வீட்டின் வெளியே தையல் மெஷினில் துணி களைத் தைத்துக்கொண்டிருந்தார் சுமதி.

சென்னையைச் சேர்ந்த சுமதிக்கு மூன்று தலைமுறையாக நடைபாதைதான் வீடு. வெளியூரில் வாழ்க்கைப்பட்டுப்போன சுமதி, தன் கணவரின் இறப்புக்குப் பின், தன் இரண்டு குழந்தைகளுடன் மீண்டும் சென்னையில் குடியேறியுள்ளார். ஒற்றை மனுஷியாய் தன் உழைப்பின் மூலம் தன் குழந்தைகளின் வாழ்க்கையைப் பிரகாசமாக்கி வருகிறார் சுமதி.

``வாழ்க்கையில் என்னென்னமோ நடந்து போச்சு. கணவர் இறந்ததுக்கு அப்புறம், சொந்த பந்தம் யாரும் உதவி செய்யல. அம்மா, அப்பாவும் தவறிட்டாங்க. வேற வழியில்லாம, குழந்தைகளைக் கூட்டிக்கிட்டு பத்து வருஷத்துக்கு முன்னாடி இந்த பிளாட் ஃபார்முக்கு வந்துட்டேன். சின்ன வயசுல எங்ககூட பிளாட்ஃபார்ம்ல வாழ்ந்தவங்க, எனக்கு உதவினாங்க. குழந்தைகளைப் படிக்க வைக்கணும், கெளரவமா வாழணும்னு ஆசைப்பட்டேன்.

குழந்தைகளை வளர்த்து ஆளாக்குறதுல நிறைய போராட்டங்கள் இருந்துச்சு. பிளாட்ஃபார்ம்ல இருக்கோம். பாதுகாப்பு கிடையாது. அதனால பல நாள்கள் ராத்திரி தூங்காம உட்கார்ந்து பிள்ளைகளைப் பார்த்துட்டே இருப்பேன். வீட்டு வேலை செய்ய ஆரம்பிச்சேன். அதுல கிடைச்ச வருமானத்துல, இந்தக் குடிசையை ரெடி பண்ணேன். டாய்லெட், டிவி, கரன்ட்டுனு எந்த அடிப்படை வசதியும் கிடையாது. காலைக் கடன்களுக்கு பொது பாத்ரூமை யூஸ் பண்ணிப் போம். மாசாந்தர தொந்தரவு வரும்போதுதான் ரொம்ப கஷ்டம். அவசரத்துக்கு நாப்கின்கூட மாத்த முடியாது...” சொல்லும்போதே கண்கள் குளமாகின்றன சுமதிக்கு.

பிளாட்ஃபார்ம் டு பி.காம்... தன்னம்பிக்கைத் தாய் சுமதிக்கு சல்யூட்!

சில நிமிட அமைதிக்குப் பின் மீண்டும் தொடர்ந்தார். ``இங்க குடில் போடக் கூடாதுனு போலீஸ்காரங்க ரெண்டு , மூணு முறை கலைச்சுப் போட்டுட்டுப் போயிட்டாங்க. ஆனாலும், கெஞ்சி கூத்தாடி திரும்பவும் குடில் போட்டுப் பேன். நான் வீட்டு வேலை பார்த்த இடத்துல முதலாளி அம்மா, துணி தெச்சுட்டே இருப்பாங்க. எனக்கும் தையல் சொல்லிக் கொடுத்தாங்க. நான் கஷ்டப்படுறேன்னு இந்த மெஷினையும் வாங்கிக் கொடுத்தாங்க. என்னோட குடிலுக்கு வெளிய மெஷின் வெச்சு தைக்க ஆரம்பிச்சேன். கிழிஞ்ச துணிகளைத் தைக்க தான் நிறைய பேர் தேடி வருவாங்க. மெள்ள மெள்ள பிளவுஸ் தைக்க ஆர்டர் கொடுக்க ஆரம்பிச்சாங்க. பிளாட் ஃபார்ம்ல உட்கார்ந்திருக்குறதால எங்களைப் போலவே எங்க திறமைக்கும் மரியாதை இல்ல.

பகல்ல வீட்டு வேலை, ராத்திரியில துணி தைக்கிறதுனு புள்ளைகளைப் படிக்க வைக்க ராப்பகலா உழைக்க ஆரம்பிச்சேன். ஒரு கட்டத்துக்கு மேல என்னால் ரெண்டையும் சமாளிக்க முடியலைனு முழு நேரமும் தைக்க ஆரம்பிச்சுட்டேன். இந்த வருமானத்துலதான் என் மகளை பி.காம் வரை படிக்க வெச்சுருக்கேன். பையன் இன்டீரியர் டிசைனிங் படிச்சுருக்கான். ரெண்டு பேரும் இப்போ வேலைக்குப் போக ஆரம்பிச்சுருக்காங்க. இன்னும் கொஞ்ச நாள்ல சிமென்ட் வீட்டுக்குப் போயிடலாம்னு சொல் லிட்டே இருக்காங்க. மூணு தலைமுறையா, பிளாட்ஃபார்ம்ல வாழ்ந்த நாங்க இப்போ வாடகை வீட்டுக்குப் போகப்போறோம்’’

- வழியனுப்புகிற சுமதியின் முகத்தில் எதிர் கால நம்பிக்கை.