Published:Updated:

“கனவைத் துரத்தினால் கைக்குள் வரும்!”

இந்துப்ரியா
பிரீமியம் ஸ்டோரி
இந்துப்ரியா

- சிஎம்டிஏ-வின் முதல் பெண் வாகன ஓட்டுநர் இந்துப்ரியா

“கனவைத் துரத்தினால் கைக்குள் வரும்!”

- சிஎம்டிஏ-வின் முதல் பெண் வாகன ஓட்டுநர் இந்துப்ரியா

Published:Updated:
இந்துப்ரியா
பிரீமியம் ஸ்டோரி
இந்துப்ரியா

பரபரப்பான சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும வளாகம். மின்னல் வேகத்தில் நம்மைக் கடந்து செல்கிறது தமிழ்நாடு அரசு சின்னம் ஒட்டப்பட்ட மஹிந்திரா பொலிரோ. வண்டியை ஓட்டிவந்தவர் இந்துப்ரியா. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் முதல் பெண் ஓட்டுநரான இந்துவின் வாழ்க்கை சுவாரஸ்யங்கள் நிறைந்ததாக இருக்கிறது.

“எனக்கு சொந்த ஊர் சென்னையில உள்ள கொடுங்கையூர். வீட்டுக்கு ஒரே பொண்ணு. எப்போதும் நான் பாதுகாப்பா இருக்கணும்னு நினைக்கிற குடும்பம். அடம்பண்ணிதான் சைக்கிள் ஓட்டவே கத்துக்கிட்டேன். எனக்கு 18 வயசு ஆனபோது, எங்க அப்பா டூவீலர் வாங்கினார்.

அம்மா, அப்பா வீட்ல இல்லாத ஒருநாள் வண்டியை எடுத்துட்டுப் போய் ஓட்டினதுல கீழே விழுந்து கை கால் முட்டியெல்லாம் அடிபட்டது. ரோட்ல இருந்தவங்க ‘பொம்பளப்புள்ள பார்த்து ஓட்டுமா’னு சொன்னாங்க. வீட்டுலயும் பயங்கரமா திட்டினாங்க. ஒரு வாரம் கழிச்சு மறுபடி வண்டியை எடுத்தேன். ‘கை கால் உடைஞ்சுருச்சுன்னா யாரும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க’னு வீட்டுல தடுத்தாங்க. ஆனா, நான் வண்டி ஓட்டறதுல உறுதியா இருந்தேன். மறுபடியும் கீழே விழுந்து அடிபட்டது. ஆனாலும் ஒருவழியா ஒரே நாள்ல ஓட்டக் கத்துக்கிட்டேன். அம்மா முன்னாடி வண்டி ஓட்டிக் காட்டினேன். அவங்களுக்கு அவ்வளவு சந்தோஷம்'' - ஆரம்பம் சொல்லும் இந்துப்ரியா, கார் டிரைவரான அனுபவம் சொன்னார்...

“கனவைத் துரத்தினால் கைக்குள் வரும்!”

“19 வயசுல கல்யாணமாச்சு. கணவர் டிரைவர். அவர்தான் எனக்கு கார் ஓட்ட கத்துக்கொடுத்தார். குழந்தை ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சபிறகு, ‘நான் வேலைக்குப் போக லாம்னு நினைக்கிறேன்’னு சொன்னேன். ‘பத்தாவது படிச்ச உனக்கு என்ன வேலை கிடைக்கும்’னு கேட்டார். ‘எனக்குதான் கார் ஓட்டத் தெரியுமே... எங்கேயாவது டிரைவர் வேலைக்குப் போறேன்’னு சொன்னேன். ‘பொம்பளப்புள்ள கார் ஓட்டுறது சரி. ஆனா இன்னொருத்தருக்கு டிரைவரா போற தெல்லாம் சரியா வராது’ன்னார்.

கஷ்டப்பட்டு கணவரை சம்மதிக்க வெச்சு ஒரு தனியார் நிறுவனத்துல டிரைவரா வேலைக்குச் சேர்ந்தேன். பத்து வருஷம் வேலை பார்த்த பிறகு அரசாங்க வேலைக்கு முயற்சி பண்ணினேன். கும்மிடிப்பூண்டியில உள்ள அரசு சாலைப் போக்குவரத்து நிறுவனத்துல ஹெவி வெஹிக்கிள்ஸ்னு சொல்லக்கூடிய கன ரக வாகனங்களுக்கான பயிற்சி வகுப்புல சேர்ந்தேன். 25 பேர் கொண்ட பேட்ச்ல நான் மட்டும்தான் பொண்ணு.

சிஎம்டிஏ-வுல டிரைவர் வேலைக்கு ஆள் எடுக்கும் தகவல் தெரிஞ்சு, அப்ளை பண்ணி னேன். தேர்வு எழுதி பாஸ் பண்ணி, இதோ வேலையில சேர்ந்துட்டேன். கனவைத் துரத் தினா அது நிச்சயம் நம்ம கைக்குள் வரும்”

- விரட்டிய கனவு வசப்பட்ட மகிழ்ச்சியோடு விடைகொடுக்கிறார் இந்து.

*****

 அனுஷல் மிஸ்ரா
அனுஷல் மிஸ்ரா

``அவர்கள் சாதிக்கட்டும்... நாம் துணை நிற்போம்!''

- சிஎம்டிஏ உறுப்பினர், செயலர் அனுஷல் மிஸ்ரா ஐ.ஏ.எஸ்

“சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் ஓட்டுநர் பிரிவில் உள்ள பணிக்கு, பெண்களுக்கு தனி இட ஒதுக்கீடு உண்டு. ஆனால், இதுவரை பெண்கள் அதற்கு விண்ணப்பித்ததே இல்லை. முதல்முறையாக இந்துப்ரியா விண்ணப்பித்து தேர்ச்சியும் பெற்றார். அவருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இது பல பெண்களுக்கு உத்வேகமாக இருக்கும். பெண்கள் முன்னேற்றத்துக்கான முன்னெடுப்பாக எங்களது அலுவலகத்திலேயே ‘துளிர் அகம்’ என்ற டே கேர் மையம் தொடங்கி, இரண்டு பெண்களை நியமித்திருக்கிறோம். ஏற்றத்தாழ்வுகள் இன்றி எந்தப் பணி நிலையில் உள்ளவர்களும் தங்கள் குழந்தைக்காக துளிர் அகத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். தவிர, தாய்மார்கள் பாலூட்டும் அறையையும் இங்கே தொடங்கி இருக்கிறோம். அலுவலக வேலை முடிந்து பெண்கள் வீடு திரும்ப தாமதமாகும் சூழலில் அருகில் உள்ள ரயில் நிலையங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்ல வாகன வசதியும் செய்து கொடுத்திருக்கிறோம். பெண்கள் சாதிக்கட்டும், நாம் அவர்களுக்குத் துணை நிற்போம்.”