Published:Updated:

``உழைக்கணும், சாதிக்கணும்னு நினைக்கிற திருநங்கைகள் இங்க வாங்க!”

மர்லிமா முரளிதரன்
பிரீமியம் ஸ்டோரி
மர்லிமா முரளிதரன்

- மர்லிமா முரளிதரன்

``உழைக்கணும், சாதிக்கணும்னு நினைக்கிற திருநங்கைகள் இங்க வாங்க!”

- மர்லிமா முரளிதரன்

Published:Updated:
மர்லிமா முரளிதரன்
பிரீமியம் ஸ்டோரி
மர்லிமா முரளிதரன்

“ஒரு குழந்தை திருநரா மாறும்போது, அதுல அதோட விருப்பமோ, தேர்வோ எதுவும் இல்ல. இயற்கையா உடலில் நடக்கும் நிகழ்வு. அதை புரிஞ்சுக்கிட்டு ஆண், பெண் பிள்ளைகளை போலவே திருநர் பிள்ளை களையும் பெற்றோர்கள் ஏத்துக்கிட்டா, சமூகமும் அவங்களை ஏத்துக்க அது வாய்ப்பை உண்டாக்கும். நாளைக்கு உங்களோட திருநர் பிள்ளையும் என்னைபோல முதல்வர்கிட்ட விருது வாங்கும் அளவுக்கு வாழ்ந்துகாட்டலாம்’’ - அமைதியும் அழுத்தமுமாகப் பேசுகிறார் மர்லிமா முரளிதரன்.

திருநர்களின் கஷ்டங்கள் முதல் உரிமைகள் வரை இன்று பரவலாகப் பேசப்படுகிறது. ஆனால், 25 ஆண்டுகளுக்கு முன்னரே தன்னை ஒரு திருநங்கையாக வெளிப்படுத்தி, அந்த அடையாளத்துடன் இந்த சமூகத்தில் ஜெயித்திருப்பது, நிச்சயம் ஒரு சாதனை. அப்படி ஒரு திருநங்கையான மர்லிமா, இன்று பல திருநங்கைகளின் வாழ்வில் ஒளியேற்றி வருகிறார். 2022-ம் ஆண்டுக்கான `சிறந்த திருநங்கை’ விருதினை சமீபத்தில் தமிழக அரசிடம் பெற்றிருப்பவரை சந்தித்தோம்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள அந்த வீட்டில் மாடுகளுக்குத் தண்ணீர் காட்டுவது, பால் கறப்பது, தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சுவது, கோழிகளுக்குத் தீவனமிடுவது என பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்த திருநங்கைகளிடம் உரையாடிக் கொண்டிருந்தார் மர்லிமா.

‘`எனக்கு இப்போ வயசு 53 ஆகுது. நான் பிறந்து, வளர்ந்தது எல்லாமே செஞ்சியிலதான். எங்க அப்பா, அம்மாவுக்கு மொத்தம் ஆறு பிள்ளைங்க. நான்தான் கடைக்குட்டி. அப்பாவும், அம்மாவும் டீச்சர் என்பதால எல்லாருமே நல்லா படிச்சோம். என்னோட 13-வது வயசுல, உடம்புல மாற்றங்களை உணர்ந்தேன். வீட்டுல என்னை புரிஞ்சுக் கிட்டாங்க, முழுமையா ஏத்துக்கிட்டாங்க. அதனால, என்னைச் சுற்றியிருந்த சமூகமும் என்னை ஏத்துக்கிச்சு. 1990-ல சிவில் இன்ஜினீயரிங் முடிச்சேன். கல்லூரியிலும் திருநங்கை என்பதால எந்த புறக்கணிப்பை யும் நான் சந்திக்கல. சொல்லப்போனா, சிறப் பான ஃப்ரெண்ட்ஸ் மூணு பேர் கிடைச்சாங்க.

 தமிழகத்தின் சிறந்த திருநங்கை - 2022 விருது
தமிழகத்தின் சிறந்த திருநங்கை - 2022 விருது

படிப்பு முடிஞ்சதும் ஒரு தனியார் நிறுவனத்துல ரெண்டு வருஷங்கள் வேலை பார்த்தேன். அப்போவெல்லாம் ஊருக்கு நாலு இன்ஜினீயர்ஸ் இருந்தாலே அதிகம்தான். லீவு நாள்கள்ல ஒருமுறை வீட்டுக்குப் போயிருந்தப்போ ஒருத்தர், `பில்டிங் அப்ரூவல் பிளான் போட்டு தர்றீங்களா?’னு கேட்டாரு. அதுக்கு 300 ரூபாய் ஃபீஸ் கொடுத்தாரு. அடுத்த 10 நாள்ல, நிறைய பேர் பிளான் போட்டு தரச் சொல்லி வந்தாங்க. அதுக்கு அப்புறம் நான் வேலைக்குப் போகல; பிளான் போட்டுக் கொடுத்து வீட்டிலேயே தொழிலையே ஆரம்பிச்சேன்.

1998-ல ஆபீஸ் திறந்தேன். ஏற்றம், இறக்கம்னு தொழிலில் காலூன்ற 12 வருஷமாச்சு. அதுக்கு அப்புறம் வாடிக்கையாளர்கள் வட்டம் ஸ்திரமாகிடுச்சு. இப்போ என்கிட்ட மூன்று இன்ஜினீயர்ஸ், 150 பணியாட்கள் வரை வேலை செய்யுறாங்க. என்னுடைய 27 வருஷ அனுபவத்துல, செஞ்சி சுற்று வட்டாரத்துல இதுவரைக்கும் 10,000-க்கும் மேல கட்டட பிளான் போட்டு கொடுத்திருப்பேன்.

150-க்கும் மேற்பட்ட கட்டடங்களை நானே கட்டி கொடுத்திருக்கேன். இப்போகூட ஆறு இடத்தில் கட்டட வேலை நடந்துட்டு இருக்கு’’ என்கிறார் பிளான்களை காட்டியபடி.

``உழைக்கணும், சாதிக்கணும்னு 
நினைக்கிற திருநங்கைகள் இங்க வாங்க!”

``நான் நல்லாயிருந்தா போதும்னு என்னால இருக்க முடியல. சக திருநங்கைகளுக்காக நான் இருக்கணும்னு நினைச்சேன். இப்போ பல திருநங்கைகள் தைரியமா வெளிய வர்றாங்க, வேலை பார்க்கிறாங்க, சம்பாதிக் கிறாங்க. ஆனா, 20 வருஷத்துக்கு முன்னாடி வீட்டைவிட்டு வெளியேற்றப்படுற திருநங்கை களுக்கு தங்க இடம் இருக்காது, அவமானங்கள் துரத்தும். அவங்களுக்கு எல்லாம் மருத்துவ உதவி, துணிமணி எடுத்துக் கொடுக்கிறது, அத்தியாவசிய பொருள்கள் வாங்கிக் கொடுக்குறதுனு முடிஞ்சதை செஞ்சுட்டு வந்தேன்.

நாலு வருஷத்துக்கு முன்னாடி, திருநங்கைகளுக்கு உதவுறதுனு இல்லாம, அவங்களுக்காக எப்பவும் நான் இருக்கணும்னு தோணுச்சு. யாசகம், பாலியல் தொழிலைத் தேர்ந்தெடுக்காம, குடும்பங்களால் கைவிடப் பட்டாலும் நான் உழைச்சு சாப்பிடணும், சாதிக்கணும்னு எண்ணம் கொண்ட சுமார் 90 திருநங்கைகளுக்கு இப்போ ஆதரவளிச்சுட்டு வர்றேன்.

ஒன்பது திருநங்கைகள், என்கூட என் வீட்டிலேயே வசிக்கிறாங்க. ஒவ்வொருவருக்கும் தேவையானதை செய்து கொடுக்கிறேன். மூன்று திருநங்கைகளுக்கு தலா இரண்டு பசு மாடுகள் வாங்கிக் கொடுத்து, கொட்டகை அமைச்சுக் கொடுத்தேன். ஒருத்தருக்கு ஜூஸ் கடை வெச்சுக் கொடுத்தேன். சிலருக்கு ஆடுகளும், கோழிகளும், ஷெல்டரும் வாங்கித் தந்திருக்கேன். சமீபத்துல ஒருத்தருக்கு கருவாட்டுக் கடை வெச்சுக்கொடுத்தேன்.

நான் படிக்கவெச்ச சிலர் இப்போ வேலைக்குப் போயிட்டு இருக்காங்க. எல்லா உதவிகளுமே என் சொந்தப் பணத்தில் பண்ணுவதுதான். ஒவ்வொரு திருநங்கைக்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்போது எனக்குக் கிடைக்கிற ஆத்ம திருப்திக்கு இணையில்ல’’ என்றவர், விருது பற்றி பகிர்ந்தார்.

``உழைக்கணும், சாதிக்கணும்னு 
நினைக்கிற திருநங்கைகள் இங்க வாங்க!”

“தமிழகத்தின் சிறந்த திருநங்கை - 2022 விருதுக்கு விண்ணப்பிக்க, அரசு உதவி பெறாமல் தானா முன்னேறி இருக்கணும், குறைஞ்சது ஐந்து திருநங்கைகளின் முன்னேற்றத்துக்கு உதவியா இருந்திருக் கணும்னு சில வரையறைகள் இருந்தது. அதெல்லாம் எனக்குப் பொருந்தியதால விண்ணப்பிச்சேன். முதலமைச்சர் கையால் விருதை வாங்கினப்போ, நான் வாழ்ந்த வாழ்க்கைக்கான அங்கீகாரமாவும், என்னைப் போன்ற திருநங்கைகளுக்கான நம்பிக்கை யாவும் அது ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தது’’ என்றவர்,

``பெற்றோர்கள் திருநர் பிள்ளைகளை ஏத்துக்கோங்க. பெற்றோர்களால் கைவிடப் பட்டு, உழைச்சு மரியாதையா வாழணும், சாதிக்கணும்னு நினைக்கிற திருநங்கைகள் என்கிட்ட வாங்க. வாழ்ந்து காட்டுவோம்’’

- தாயாகவும், வழிகாட்டியாகவும் அழைக்கிறார் மர்லிமா முரளிதரன்.

``உழைக்கணும், சாதிக்கணும்னு 
நினைக்கிற திருநங்கைகள் இங்க வாங்க!”

திருநம்பி - திருநங்கை

பாலியல் மாறுபாடுகள் காரணமாக ஆண், பெண் அல்லாதவர்களை `திருநர்’ என்று பொதுவான சொல்லால் அழைக்கிறார்கள். இவர்களில் ஆணாக உணர்பவர்களை `திருநம்பி’ என்றும், பெண்ணாக உணர்பவர்களை `திருநங்கை’ என்றும் அழைக்கிறார்கள்.