லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
Published:Updated:

டயர்களே என் சிறகுகள்! - ட்ரக் டிரைவர் டெலிசா

ட்ரக் டிரைவர் டெலிசா
பிரீமியம் ஸ்டோரி
News
ட்ரக் டிரைவர் டெலிசா

ஏழாம் வகுப்புப் படிக்கும்போது பைக்கும், ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது காரும் ஓட்டப் பழகிவிட்டேன். அப்பா அடிக்கடி வீட்டுக்கு டேங்கர் லாரி கொண்டு வருவார்.

ஊரடங்குக் காலகட்டம். கேரளாவில் ஓர் இளம் பெண் டேங்கர் ட்ரக்கை ஓட்டிக் கொண்டு செல்வதைப் பார்த்து போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். அடுத்த சோதனைச் சாவடியிலேயே லாரி நிறுத்தப்பட்டு, அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். ஆனால், தனது கனரக வாகன உரிமம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் காண்பித்து அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் அந்தப் பெண். வியந்துபோன அதிகாரிகள் அந்தப் பெண் குறித்து ஊடகங்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அந்தப் பெண்ணைத்தான் இப்போது கேரளாவே கொண்டாடி வருகிறது.

டயர்களே என் சிறகுகள்! - ட்ரக் டிரைவர் டெலிசா

திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வய தான டெலிசாதான் இந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர். எம்.காம் படித்து வரும் முதுகலை மாணவி. 12,000 லிட்டர் பெட்ரோல் - டீசலை எர்ணாகுளம் பகுதியில் இருந்து,145 கி.மீ பயணித்து மலப்புரத்தில் வெற்றிகரமாக இறக்கிவிட்டு வீடு திரும்பியதுதான் டெலிசா வின் சமீபத்திய டாஸ்க்.

டெலிசாவிடம் பேசினோம். “திருச்சூர் கந்தஸ்ஸன்கடவு பகுதியில்தான் எங்கள் வீடு இருக்கிறது. அம்மா, அப்பா, மூன்று பெண் பிள்ளைகள். இதுதான் எங்கள் குடும்பம். என் அப்பா டேவிஸ், 40 ஆண்டுகளுக்கு மேலாக கனரக வாகனங்களை இயக்கி வருகிறார். எனக்கும் சிறு வயதில் இருந்தே வாகனங்கள் மீது ஆர்வம் அதிகம். அந்த ஆர்வம், டிரைவிங் மீது எனக்குப் பெரிய கனவாகவே மாறி விட்டது’’ என்பவர், அதற்கான பயிற்சிகளிலும் பள்ளிக்காலத்திலேயே இறங்கிவிட்டார்.

‘`ஏழாம் வகுப்புப் படிக்கும்போது பைக்கும், ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது காரும் ஓட்டப் பழகிவிட்டேன். அப்பா அடிக்கடி வீட்டுக்கு டேங்கர் லாரி கொண்டு வருவார். பத்தாம் வகுப்புப் படிக்கும்போது, இரவு நேரங் களில் அப்பா உதவியுடன், லோடுகள் இறக்கி வைக்கப்பட்ட லாரிகளை ஓட்டிப் பழகினேன். விடுமுறை நாள்களில் அப்பாவோடு லாரியின் பயணிப்பேன். நேராக உள்ள சாலைகளில் மட்டும் லாரி ஓட்ட அப்பா வாய்ப்புக் கொடுப்பார். ஆரம்பத்தில் இருந்தே அப்பா என்னுடைய டிரைவிங் ஆர்வத்துக்கு பக்க பலமாக இருந்தார். 18 வயதில் பைக், காருக்கு லைசென்ஸ் வாங்கிவிட்டேன். 20 வயதில் கனரக வாகனங்களுக்கான லைசென்ஸ் வாங்கிவிட்டேன்.

கனரக வாகனங்களுக்கான லைசென்ஸ் இருந்தாலும், பெட்ரோல் - டீசல் போன்ற அபாயகரமான பொருள்களை எடுத்துச் செல்ல, தனியாக `பேட்ச்' (Badge) எடுக்க வேண்டும். அதற்கு இரண்டு நாள்கள் வகுப்பு உள்ளது. அதில் கலந்துகொண்டு அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொண்டேன். இதற்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சியடைந் தேன். அப்போதே நான் டேங்கர் லாரி ஓட்டத் தகுதியான ஆள்தான். ஆனால், கல்லூரி இறுதியாண்டு என்பதால், அதில் அதிக செயல் பாடு காட்ட நேரம் கிடைக்கவில்லை. இப்போது லாக்டெளன் என்பதால், எனக்கு மாலை நேரத்தில்தான் ஆன்லைன் வகுப்பு. அதனால், பகல் பொழுதில் லாரி ஓட்டுகிறேன்” என்றவரிடம், இப்போதைய டேங்கர் லாரி ட்ரிப் குறித்துக் கேட்டோம்.

டயர்களே என் சிறகுகள்! - ட்ரக் டிரைவர் டெலிசா

“எர்ணாகுளம் டு மலப்புரம் 145 கி.மீ போக, வர (ரிட்டர்ன் ட்ரிப்) சுமார் 300 கி.மீ தூரம் பயணம். இந்த ட்ரிப்பில் அப்பா உடன் இருந்தார். சிறிது தூரத்துக்கு பெட்ரோல் - டீசல் லோடு வாகனத்தை இயக்கிய அனுபவம் உண்டு. ஆனாலும், அந்த வாகனத்தை இயக்கும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். 60 கி.மீ வேகத்துக்கு மேல் செல்லக் கூடாது. சிறிது கவனம் சிதறினாலும், அது அசம்பாவிதத்தில் முடிந்தால், பெட்ரோல், டீசல் முழுவதும் வெளியில் கொட்டி அனைத்து இடங்களுக்கும் பரவிவிடும். மேலும், வளைவுகளில் செல்லும்போதும், ஓவர்டேக் செய்யும்போதும் மிகுந்த எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும். பின்னால் வரும் வாகனங்கள் மீதும் கவனம் வேண்டும். தவறி பின்னால் வரும் வாகனங்கள், லாரி மீது இடித்துவிட்டால் தீப்பற்றிவிடும்’’ என்றவர், இந்தப் பொறுப்புகளை எல்லாம் திறம்படக் கையாண்டிருக்கிறார்.

‘`என்னை 15 வயதில் இருந்து தெரியும் என்பதால் ஹெச்.பி நிறுவனத்தினர் என் மீது நம்பிக்கை வைத்து, அந்தப் பொறுப்பை கொடுத்துவிட்டனர். ட்ரிப்பில் என்னென்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்பதை அறிவுறுத்தினர். நான்கு மணி நேரப் பயணத்தில் சேர வேண்டிய இடத்துக்குச் சென்றுவிட்டோம். திரும்பிவரும்போது இரண்டரை மணிநேரத்தில் எர்ணாகுளம் வந்துவிட்டேன். என் அம்மா ட்ரீசா, ‘டேங்கர் ட்ரக்கை ஓட்ட வேண்டாம், போகாதே’ என்று பயந்து கொண்டேயிருந்தார். இந்த ட்ரிப் வெற்றிகரமாக முடிந்ததில், அம்மா தான் எல்லோரையும் விட அதிக சந்தோஷத்தில் இருக்கிறார். பள்ளி, கல்லூரி, குடும்பம், அதிகாரிகள் என்று நிறைய இடங்களில் இருந்து பாராட்டுகின்றனர்’’ என்ற டெலிசா,

‘`கேரளாவில் எத்தனை பேரிடம் கனரக வாகனங்களுக்கான லைசென்ஸ் இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் பேட்ச் லைசென்ஸைப் புதுப்பித்துக் கொண்டேயிருக்க வேண்டும். கேரளாவில், என்னைத் தவிர எந்தப் பெண்ணும் இதைச் செய்ததில்லை என்று சொல்லி அதிகாரிகள் பாராட்டுகின்றனர். கல்வி முக்கியம் தான். அதேபோல டிரைவிங்கும் எனக்கு முக்கியம். வால்வோ பஸ்ஸுக்கான லைசென்ஸ் எடுத்து, பயணிகளுடன் அதை இயக்க வேண்டும் என்பது என் கனவு. இன்னொரு பக்கம், படிப்பையும் தொடர்வேன். எவ்வளவு படித்தாலும், டிரைவிங்கை விட மாட்டேன்” என்கிறார் உற்சாகமாக.

டெலிசாவின் சிறகுகள்... டயர்கள்!