Published:Updated:

சுழற்றி அடித்த வறுமை, விதியை வென்று காட்டிய சத்தியபாமா...

சத்தியபாமா
பிரீமியம் ஸ்டோரி
சத்தியபாமா

வைரல் போட்டோகிராபரின் வைராக்கிய கதை!

சுழற்றி அடித்த வறுமை, விதியை வென்று காட்டிய சத்தியபாமா...

வைரல் போட்டோகிராபரின் வைராக்கிய கதை!

Published:Updated:
சத்தியபாமா
பிரீமியம் ஸ்டோரி
சத்தியபாமா

விசேஷ நிகழ்ச்சி ஒன்றில், ஒற்றைக் கையால் கேமராவை விறுவிறுவென ‘க்ளிக்’கியபடியே மொத்த கூட்டத்தையும் தன் வசப்படுத்திய போட்டோகிராபர் பெண் ஒருவர், சமீபத்தில் சமூக வலை தளங்களில் வைரல் ஆனார். ‘யார் அவர்?’ என்று தேடி, சேலம் மாவட்டம் நாச்சினம் பட்டி கிராமத்தில் அவரைக் கண்டடைந் தோம்.

பெயர் சத்தியபாமா. ஆனால், ‘போட்டோகாரம்மா’ என்ற பெயர்தான் அந்த ஊரில் இவருக்கான முதல் அடை யாளம். சிறிய வீடுதான். ஆனால், வாழ்க் கைக்கான நம்பிக்கையும் மனிதர்கள் மீதான பெருமதிப்பும் நிறைந்திருக்கிறது.

“ஒரு விசேஷ நிகழ்ச்சியில வழக்கம்போல போட்டோ பிடிச்சுக்கிட்டிருந்தேன். சேலத்தைச் சேர்ந்த விக்னேஷ்ங்கிற தம்பி என்னை வீடியோ பிடிச்சு நெட்டுல போட்டுவிட்டது, வைரஸ் (வைரலானதைத்தான் அப்படிச் சொல்கிறார்) ஆகிடுச்சு. ‘ஃபேமஸாகிட்டியே போட்டோ காரம்மா...’னு பலரும் சொல்றதைக் கேட் கிறப்போ, சந்தோஷத்துல...” ஆனந்தக் கண்ணீரில் சத்தியபாமா வுக்கு வார்த்தைகள் தடுமாறுகின்றன.

சுழற்றி அடித்த வறுமை, விதியை வென்று காட்டிய சத்தியபாமா...

மதுரை மாவட்டம் சோழவந்தான் கிராமம் தான் இவரின் பூர்வீகம். 1989-ல் திருமணமான தும் நாச்சினம்பட்டிக்கு வந்திருக் கிறார். கணவர் புகைப்படக் காரர். ஸ்டூடியோ வேலையுடன், சந்தேகத்துக்குரிய மரணம், சர்ச்சைக்குரிய மரணம், கொலை உள்பட காவல்துறையினர் கையாளும் வழக்குகளில் தொடர்புடைய சடலங்களைப் புகைப்படம் எடுத்துக் கொடுக்கும் வேலையையும் செய்துவந்துள்ளார். ஒரு கட்டத்தில், உடல்நலமின்றி வீட்டில் முடங்கியுள்ளார் கணவர். இதனால், அதுவரை வெளியுலகம் பார்த்திடாத சத்தியபாமா, குடும்ப பாரத்தைச் சுமக்க கேமராவை கையில் எடுத்திருக்கிறார்.

“ஒருமுறை தெரட்டி (பூப்புனித நீராட்டு விழா) ஆர்டருக்கு என் வூட்டுக் காரர் அட்வான்ஸ் வாங்கியிருந்தார். அன்னிக்குனு பார்த்து அவருக்கு உடம்பு சரியில்லை. அந்த நிகழ்ச்சிக் காரங்க வீட்டுக்கு வந்து சத்தம்போடவே, அரைகுறை அனுபவத்தை வெச்சு, கேமராவைத் தூக்கிகிட்டு போட்டோ எடுக்கப் போனேன்.

மறுநாளே எங்க வீட்டுக்கு வந்த போலீஸ்காரங்க, சடலத்தைப் போட்டோ எடுக்கணும்னு என் வூட்டுக் காரரைக் கூப்பிட்டாங்க. அன்னிக்கும் அவருக்கு பதிலா நானே போனேன். கிணத்துக்குள்ளாற கயித்தைக் கட்டி இறங்கி, நீர்ல மிதந்த சடலத்தைப் பயமில்லாம போட்டோ பிடிச்சேன்.

ஒருகட்டத்துல என் வூட்டுக்காரருக்கு ஒடம்பு ரொம்பவே முடியாம போயிடுச்சு. முறையா போட்டோ எடுக்கக் கத்துகிட்டு, எல்லா நிகழ்வுக் கும் போட்டோ எடுக்கப் போனேன். அப்போ விசேஷ ஆர்டர் கம்மியாதான் வரும். அதனால, போலீஸ்காரங்க எப்ப வந்து கூப்பிட்டாலும், சட்டுனு கிளம்பிடுவேன். சேலம் மாவட்டத்துல போலீஸ்காரங்களுக்கான க்ரைம் போட்டோகிராபர்னு முறையா யாருமே அதுவரைக்கும் இல்லை. அந்த வேலையை முதன்முதல்ல நான்தான் செஞ்சேன். சிதறிய உடல் பாகங்களா கட்டும், போலீஸ்காரங்க பக்கத்துல வரவே தயங்குற புழுப்பிடிச்சுப்போன உடம்பாகட்டும்... எல்லாவிதமான சடலங் களையும் படம் பிடிச்சிருக்கேன்.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட சின்னப் பொண்ணுங் களை போட்டோ பிடிக்கிறப்போதான் மனசு பதறும். மத்தபடி இந்த வேலையால நான் பயப்பட்டதில்லை. வேலை முடிஞ்சதும் சேலத்துக்குப் போய் பிரின்ட் எடுத்துட்டுவந்து, போலீஸ் ஸ்டேஷன்ல உடனடியா கொடுத்துடு வேன்.

ஒருமுறை போஸ்ட்மார்ட்டம் ரூம்ல தலை தனியா உடம்பு தனியா அழுகிப்போயிருந்த சடலத்தை போட்டோ எடுத்துட்டு வீட்டுக்கு வந்ததும், தூக்கமில்லாம மனசு உறைஞ்சு போச்சு. நம்ம தலையெழுத்து இப்படியாகிடுச்சேன்னு அழுதேன். ஆனா, அந்த வேலையில கிடைச்ச 100, 200 ரூவாயை வெச்சுத்தான் அன்னாட பிழைப்பை ஓட்ட ணும்ங்கிற நிலை இருந்ததால, வேற வழியில்லாம மனசைப் பக்குவப்படுத்திக் கிட்டேன்...” கஷ்ட ஜீவனத்துக்காகக் கையிலெடுத்த போட்டோகிராபி தொழிலால், சுற்றத்தாரின் ஏளன பேச்சுகளையெல்லாம் தாங்கிக்கொண்ட சத்தியபாமா, 2009-ல் கணவர் மறைந்த பத்து நாள்களிலேயே மீண்டும் கேமராவைத் தூக்கியிருக்கிறார்.

“கையில பணமில்லாம தவிச்ச அந்த நேரத்துல வந்த வளைகாப்பு ஆர்டர்ல வேலை செஞ்சேன். ‘புருஷனுக்கான காரியத்தைக்கூட முழுசா முடிக்காம, காசுக்கு அலையுறா பாரு’ன்னு சிலர் பேசினாங்க. மனுஷங்க மனசுக்குள்ளாற இருக்கிற எதிர் மறை எண்ணங்களைவிட பெரிய தீட்டு வேறெதுவுமில்லைனு அப்பதான் உணர்ந்தேன்.

என் பையனை வளர்க்க, ஒவ்வொரு நாளும் நான் பட்ட கஷ்டமும் வேதனையும் சொல்லி மாளாது. இந்த நிலைமை என்னிக்காச்சும் நல்லபடியா மாறும்னு நம்பிக்கை யோடு நகர்ந்தேன்.

 வைரல் போட்டோ... -  குடும்பத்தினருடன்...
வைரல் போட்டோ... - குடும்பத்தினருடன்...

க்ரைம் போட்டோகிராபி தவிர, உள்ளூர், வெளியூர்னு விசேஷ நிகழ்ச்சிகள் ஒண்ணு விடாம ஓடியாடி வேலை செஞ்சேன். என் மகன் மணிகண்டனை கேட்டரிங் கோர்ஸ் படிக்க வெச்சேன். கொஞ்ச காலம் வேலைக்குப் போனவன், ஒருகட்டத்துல என்கூட இதே தொழிலுக்கு வந்துட்டான். ஆரம் பத்துல அவனும் சடலங்களை போட்டோஸ் எடுத்தான். இப்பல் லாம் சொந்த கேமராவுலயும் போன்லயும் போலீஸ்காரங்களே போட்டோ புடிச்சுக்கிறதால, க்ரைம் போட்டோஸ் எடுக்க எங்களைக் கூப்பிடுறதில்லை” எனும் சத்தியபாமா, தன் கணவர் ஆரம்பித்த ஸ்டூடியோவை இன்று வரை நடத்திவருகிறார்.

“விசேஷங்கள்ல ஒரு கையில போட்டோஸ் எடுத்தபடி, ‘உட் காருங்க; நகருங்க...’னு இன்னொரு கையில கூட்டத்தினர்கிட்ட சிக்னல் கொடுப்பேன். அதுவே பழக்கமாகி, ஒரே கையால போட் டோஸ் எடுக்கிறதை வழக்கப் படுத்திக்கிட்டேன்...” வெள்ளந்தி யான சிரிப்புடன் தனது டிரேடு மார்க் அடையாளம் சொல்பவருக்கு வயது 53.

“ ‘விடியற்காலையில முகூர்த்தம். உடனே வாங்க’ன்னு நடுசாமத்துல கூப்பிட்டாலும், கட்டின புடவையோடு கிளம்பிடுவேன். ஸ்டில் போட்டோகிராபியை மட்டும் நான் கவனிச்சுக்க, வீடியோ உட்பட எல்லா வேலை களையும் என் பையன் செய்வான். இப்போ எங்க நிலைமை ஓரளவுக்குப் பரவாயில்ல. மருமவ, பேத்தினு சந்தோஷமா இருக்கோம். ஆனா, ஒரே வருத்தம்தாம்ப்பா.. இப்ப வரைக்கும் வாடகை வீட்டுலதான் இருக்கோம்.

கொஞ்சம் செளகர்யமா சொந்த வீட்டுல வாழணும்ங் கிறது என் வாழ்நாள் கனவு. கடையை இன்னும் கொஞ்சம் டெவலப் பண்ணலாம்ங்கிற ஆசையும் இருக்கு. இருந்தாலும், யார் தயவையும் நம்பியிருக்காம, சுயமரியாதையோடு வாழுறதே பெருமைதான்...” முந்தானையால் கண்ணீரைத் துடைத்தவாறே அமைதி யாகிறார் சத்தியபாமா.

முழுமையாக அறிந்திடாத தன் அம்மாவின் போராட்ட வாழ்க்கையை அறிந்து நெகிழ்ச்சியுடன் சத்தியபாமாவைக் கட்டியணைக்கிறார் மணிகண்டன்...

“அம்மா இவ்ளோ கஷ்டப்பட்டிருக்காங்கன்னு நினைக்கிறப்போ, சொல்ல வார்த்தைகளே வர மாட்டேங்குது. ‘நீ வேலை செஞ்சது போதும்மா’னு சொன்னா கேட்க மாட்டேங்கிறாங்க. நான் பட்ட கஷ்டங்களை, நம்ம வீட்டுல யாரும் படக்கூடாதுனு இப்பவும் துடிப்போடு உழைக்கிறாங்க. அந்த ஓட்டம்தான், இப்போ எங்களையும் நாலு பேருக்குத் தெரியப் படுத்தியிருக்கு” என்கிறார் நெகிழ்ச்சியாக.

சத்தியபாமாவின் முகத்தில் விரிந்த பெருமிதம், அவரின் குடும்பத்தினரை மகிழ்விக்க, அவர்களின் குடும்ப புகைப்படத்துக்கு உயிரோட்டம் கூட்டியது.